"நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று.........

திருத்தம் பொன்.சரவணன்
 

"நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே; சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
"
 

குறுந்தொகையில் மூன்றாவதாக வரும் இப்பாடலில் எழுத்துப் பிழையோ சொற்பிழையோ இல்லை. பொருளில் தான் பிழை உள்ளது. அது என்ன என்று காணும் முன்னர் இப்பாடலுக்கு தற்போதைய உரைநூல்கள் கூறும் கருத்து என்ன என்று காண்போம்.

''மலைச்சாரலில் உள்ள கரிய கோல்களைக் கொண்ட குறிஞ்சிப் பூக்களால் பெரிய தேனிறால்களைக் கட்டும் மலைநாட்டுத் தலைவனுடன் நான் கொண்டுள்ள காதலானது நிலத்தை விட மிகவும் பெரியது; வானத்தைவிட மிகவும் உயர்ந்தது; கடல்நீரைவிட அளவற்றது ஆகும்.'' - இதுவே உரைநூல்கள் கூறும் கருத்து ஆகும். தலைவனிடத்து காதல் கொண்ட தலைவி தனது காதலின் சிறப்பினைப் பற்றி தனது தோழியிடம் கூறுவதாக அமைந்துள்ள செய்யுள் இது. இப்பொருளில் பிழை இருக்கிறது. அதைப் பற்றிக் கீழே காணலாம்.

பழந்தமிழர் மரபு குறித்து நாம் நன்கு அறிவோம். அதிலும் பழந்தமிழ்ப் பெண்டிரின் காதல் மரபுகள் அகத்திணை நூல்கள் முழுக்க முழுக்க பரவிக் கிடக்கின்றன. தன்னுடைய காதலின் சிறப்பினைப் பற்றி எந்த பழந்தமிழ்ப் பெண்ணும் பெருமையாக பேசமாட்டாள் என்பது இந்த நூல்களில் காணக்கிடைக்கின்ற உண்மை ஆகும். உயர்வாகக் கூறவேண்டும் என்று விரும்பினால் தலைவனின் குண நலன்களைப் பற்றியோ தலைவனது நாட்டுவளம் குறித்தோ தான் பேசுவாள். அகத்திணை நூல்களை ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை தெளிவாகப் புரியும். அத்துடன் 'இழைக்கும்' என்ற சொல்லுக்கு 'கட்டும்' என்று தவறாகப் பொருள் கொண்டுள்ளனர். இழைத்தல் என்றால் இளகச்செய்தல் அதாவது நெகிழ்வித்தல் என்பதே பொருள். இங்கே தேன்கூட்டினை நெகிழ்வித்தல் என்பது கூட்டை குத்திவிட்டு தேனைப் பாய்ந்தோடச் செய்தல் ஆகும்.

இப்படி இருக்க மேற்கண்ட பாடலில் தலைவி தனது காதலைப் பற்றி இவ்வளவு உயர்வாகக் கூறியிருப்பதாக பொருள் கொள்வது தவறாகும் அல்லவா?. அப்படி என்றால் தலைவி எந்தப் பொருளில் கூறியிருப்பாள்?. நிச்சயம் தலைவனது நாட்டுவளம் குறித்துத் தான் ஏனென்றால் தலைவனது குணநலன்களைக் குறிக்கும் சொற்கள் எவையும் இந்தப் பாடலில் பயிலவில்லை. இனி இப்பாடலில் பயின்றுவரும் நாட்டுவளம் பற்றிய செய்திகள் எவை என்று பார்ப்போம்.

'சாரல்', 'கருங்கோல் குறிஞ்சிப் பூ', 'பெருந்தேன்' ஆகியன. ஒப்பாக வரும் பிற பொருட்கள் 'நிலம்', 'வானம்', 'நீர்' ஆகியவை ஆகும். இம் மூன்று பொருட்களையும் நாட்டுவளம் குறித்த மூன்று சொற்களுடன் நிரல்நிறை முறைப்படி இணைத்துப் பார்த்தால் கீழ்க்காணும் பொருள் கிடைக்கும்.


'
'நிலத்தைவிட மிகப் பெரியது சாரல்;
வானத்தைவிட மிக உயரமானது குறிஞ்சிப் பூவின் கருங்கோல்;
நீரைவிட மிக அளவற்றது பெருந்தேன்.'
'


இப்போது மிகச் சரியாகப் பொருள் பொருந்துகிறது அல்லவா?. சாரல் ஒரு நிலப்பகுதி என்பதால் அதன் பெருமைக்கு பூமியுடன் ஒப்பிட்டும், குறிஞ்சிப்பூவின் கோல் (தண்டு) நீளமானது என்பதால் அதன் பெருமைக்கு வானத்துடன் ஒப்பிட்டும், தேன் ஒரு நீர்ப்பொருள் என்பதால் அதன் பெருமைக்கு கடல்நீருடன் ஒப்பிட்டும் கூறப்பட்டுள்ளது.

இது உண்மை தான் ஏனென்றால் குறிஞ்சிப் பூக்களின் தண்டு மிகவும் நீளமாகத் தான் இருக்கும். இதை நீங்கள் நேரில் பார்த்தால் உணர்வீர்கள். இந்தத் தண்டு உயரமாக இருப்பதால் மலைக்குற மக்கள் இதனைக் கொண்டு மரத்தின் உச்சிக் கிளைகளில் உள்ள தேன்கூடுகளைக் குத்தி உடைப்பர். அப்படி உடைத்த தேன்கூடுகளில் இருந்து வழிந்து ஓடும் தேனின் அளவு கடல்நீரை விட அதிகமாய் இருக்கிறது என்று பெருமைப் படுகிறாள் ஒரு பெண். வழிந்து ஓடும் தேனே கடல்நீரைவிட அதிகம் என்று சொல்பவள் அந்த மலைச்சாரலை பூமியைவிட பெரியது என்று தானே சொல்வாள். இப்படித் தான் அந்த பழந்தமிழ்ப் பெண்ணும் தனது காதலனின் நாட்டுவளம் குறித்து பெருமையாகக் கூறுகிறாள்.

இனி மேற்காணும் பாடலுக்குச் சரியான பொருள் என்ன என்று நீங்களே ஊகித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆம் அது இது தான்.

''தோழீ! அவரது சாரல் பூமியைவிட மிகவும் பெரியது ஆகும்; அம்மலைச் சாரலில் பூத்துள்ள குறிஞ்சிப் பூக்களின் கரியநிறக் கோல்கள் வானத்தைவிட மிகவும் உயரமானவை; அக்கோல்களைக் கொண்டு குத்திக் குடைந்த பெரிய தேனிறால்களில் இருந்து வழிந்தோடும் தேனின் அளவோ கடல்நீரைவிட அதிகமானது ஆகும். இத்தகைய மலைநாட்டுக்குத் தலைவராகிய அவரே என் காதலர்.''




vaendhan@gmail.com