பெரியபுராணத்தில் வெளிப்படும் சமூகச் சிந்தனைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா


பெரியபுராணம் அறுபத்துமூவர் வரலாற்றைக் கூறும் நூல் என்றாலும் அவர்தம் வாழ்க்கைச் சரிதம் தமிழகச் சமுதாயவரலாறு, தமிழ்நாட்டு வரலாறு என்ற மூன்றையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. சேக்கிழார் மேற்கொண்டிருந்த அமைச்சர் பதவியும் அவருடைய வரலாற்று உணர்வும் அவரைச் சமுதாய வரலாறுபடைக்கும் ஆசிரியராகச் செய்துவிட்டன. அவர் பிறபுலவர்களைப் போல இருந்த இடத்தில் இருந்தபடியே பாடியவரல்லர். தமிழகம் முழுவதும் சுற்றித்திரிந்து அடியாhர் வரலாறுகளை எல்லாம் அறிந்து அக்காலச் சமுதாய வாழ்வைப் பதிவு செய்த வகையில் தோன்றியதே சமுதாய இலக்கியமாம் பெரியபுராணம் எனலாம்.

பெரியபுராணத்தில் அக்காலத் தமிழகத்தில் வாழ்ந்த அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும் இடம் பெறுகின்றனர். அந்தணர்(12), வணிகர்(6), வேளாளர்(13), ஆதிசைவர் (4), குயவர், வேடர், இடையர், ஏகாலியர், பரதவர், சாலியர், பாணர், பறையர், சாணார், மாமாத்தியர் ஆக அனைத்து வகுப்பினரின் பழக்கவழக்கங்களையும் நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் சேக்கிழார். சாதிப்பிரிவினை வலுவான இடத்தைப் பெற்றிருந்தது எனினும் சாதி வேற்றுமை கடந்த சமுதாயத்தைப் படைக்க விரும்பும் சேக்கிழார் நாயன்மார் வலராற்றின் வழி அதனைச் செயல்படுத்துகின்றார்.

ஐயர் என்ற சொல்லாட்சி

சாதி வேதியர் நடுவே அந்தணராகிய சம்பந்தர் தீண்டாத சாதியைச் சேர்ந்த பாணரை 'ஐயரே' என அழைத்தார். திருக்கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். உங்கள் இறைவர்க்கு இங்கு யாழ்வாசியுங்கள் என்றார். தாம் செல்லுமிடமெல்லாம் பாணரை உடன் அழைத்துச்சென்று தம் பாடலை யாழில் அமைத்து இசைமீட்டச் செய்தார். ஞானசம்பந்தர் யாழ் பாணரை வரவேற்றபோது

'அளவில்லா மகிழ்சியினார் தமை நோக்கி ஐயர்! நீர்
உளமகிழ இங்கணைந்த உறுதி உடையோம்.'
 திருஞானசம்பந்தர் புராணம் -133

என முதன் முதலில் அவரை விளித்துப் பேசும் முதல் வார்த்தை ஐயரே என்பதாகும். யாழ்பாணரது பிறந்த ஊராகிய திருஎருக்கத்தம் புலியூரில், உள்ளுர் மக்களிடையே பாணரின் பெருமையை உணர்த்த வேண்டி,

'ஐயர்! நீர் அவதரித்திட்ட இப்பகுதி அளவில் மாதவ முன்பு
செய்த வாறெனைச் சிறப்புரை அருளி'
திருஞானசம்பந்தர் புராணம் -179

என உயர்வுபடுத்துகின்றார். சம்பந்தர் பாடலை தம் யாழில் இட்டு வாசிக்க முடியாத பாணர் அதனை உடைக்க முற்படும்பொழுது 'தடுத்தருளி ஐயரே! உற்ற இசை அளவினால் நீர் ஆக்கிய இக்கருவியினைத் தாரும்' என சம்பந்தர் யாழை வாங்கிக்கொண்டு, 'ஐயர்! நீர் யாழிதனை முறிக்குமதென்' என வினவுகின்றார்.

திருநாளைப் போவார் புராணத்திலும் ஐயர் என்னும் சொல்லைத் தொடர்கிறார் சேக்கிழார். தில்லையில் வந்துத் தங்கிக் கூத்தனைச் சென்று காண இன்னல் தரும் இழிபிறவி இதுதடை என்றே துயிலும் அடியார்க்கு இறையருளால் தீமூட்டி அதில் புகுந்து புறப்படுமாறு ஏற்பாடு செய்த தில்லைவாழ் அந்தணர் நந்தனாரை வரவேண்டும் பொழுது,

'ஐயரே! அம்பலவர் அருளால் இப்பொழுதணைந்தோம்
வெய்ய அழல் அமைத்துமக்குத் தரவேண்டி'
திருநாளைப்போவார் நாயனார் புராணம் -30

எனப் பேசுமாறு செய்கிறார் சோழநாட்டு அமைச்சர் புரட்சியாளர் சேக்கிழார்.

வேடர் குலத்திலே தோன்றிய திண்ணனார்(கண்ணப்பர்) நாணுடன் மலையேறும் போது அவரை ஐயர் என வருணிக்கின்றார் சேக்கிழார்.

'நாணனும் அன்பும் முன்பு நளிர்வரை ஏறத்தாமும்
பேணு தத்துவங்கள் என்னும் பெருகுசோ பானம்ஏறி
ஆணையாம் சிவத்தைச் சார அணையவர் போல ஐயர்
நீணிலை மலையை ஏறி நேர்படச் செல்லும் போதில்'
கண்ணப்ப நாயனார் புராணம் -103

எந்த நொடியில் காளத்தி மலையைக் கண்டு அதன்மேல் ஏறத்தொடங்கினாரோ அந்த வினாடியே திண்ணனனர் சாதி இழிவு நீங்கி ஐயர் என்னும் விளிக்கு உரிமை உடையவராகிறார். இவ்வாறு யாழப்பாணர், நந்தனார், கண்ணப்பர் ஆகிய மூவர் வரலாற்றிலும் ஆறு இடங்களில் ஐயர் என்னும் சொல்லைக் கையாண்டு சாதி ஏற்றத் தாழ்வைச் சாடுகின்றார் சேக்கிழார்.

திருநீலநக்கர் இவர் முத்தீ வளர்க்கும் அந்தணர், சிவலிங்கத்தின் மேல் சிலந்தி விழுந்ததை மனைவியார் ஊதி வெருட்டினார். ஆனால் எச்சில் பட ஊதினார் என்பதற்காக மனைவியைத் தள்ளிவைக்கின்ற அளவு வைதிக நெறியில் நம்பிக்கை உடையவர். அவரது ஊராகிய திருச்சாத்தமங்கைக்கு சம்பந்தர் செல்கிறார். உடன் செல்லும் தொண்டர்கூட்டத்தில் ஒரே ஒரவர் மட்டும் மனவியுடன் வருகிறார். அவர்தான் யாழ்பபாணர் எனவே செல்லுமிடமெல்லாம் அவர்க்குத் தனியிடம் தேடித்தரவேண்ய பொறுப்பும் சம்பந்தருடையதாயிற்று. திருநீலநக்கரின் திருச்சாத்தமங்கையில் விருந்துண்டனர். திருநீலநக்கரைத் தனியே அழைத்துப் பாணர் தங்க ஓரிடம் தருக என வேண்டினார் சம்பந்தர். திருநீலநக்கர் தாம் அன்றாடம் முத்தீ வளர்க்கும் வேதிகையின் பக்கத்தில் பாணரும் அவர் மனைவியாரும் தங்க இடம் தந்தார் எனப் பாடுகின்றார்.

'நின்ற அன்பரை நீலகண்டப்பெரும் பாணர்க்கு
இன்று தங்கவோர் இடம்கொடுத் தருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச்
சென்று மற்றவர்க்கு இடம்கொடுத்தனர் திருமறையோர்'
திருநீலநக்கநாயனார் புராணம் -30

பிள்ளையாருடன் செல்லும் பாணனும் மனைவியும் போகுமிடமெல்லாம் எங்கே தங்கினர் எனக்கூறாத சேக்கிழார் கடுமையான வேள்வி செய்யும் திருநீலநக்கர் வீட்டில் இச்செய்தியை விரித்துக் கூறுகிறார். விதிமார்க்கத்தில் ஊன்றி நிற்கும் திருநீல நக்கரே பழைய தீண்டாமைக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்றால் மற்றவர் பற்றிக் கேட்கவேண்டியதே இல்லை. பிள்ளையார் பாணரை உடன் அழைத்துக்கொண்டு புரட்சி செய்தார் என்றால் அப்பாணரை மனைவியாhருடன் யாகவேதிகை பக்கத்தில் துயிலுமாறு செய்து சேக்கிழார் அப்புரட்சியைத் தொடர்கிறார்.

நமிநந்தி நாயனார் - சாதி வேறுபாடு கருதுபவர். ஆரூர்ப் பெருமான் வீதி உலாவின்போது மக்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து வணங்கிய சிறப்பைக் கூறுகிறார் சேக்கிழார். எல்லாக் குலத்தில் உள்ளோரும் விண்ணவர்தம் காவலனார் ஓலக்கம் கண்டு களிப்புற்றதனால் தம்பால் தீட்டு(இழிவு) வந்துள்ளது என நினைத்த நமிநந்தி நாயனார் கனவில் தோன்றிய இறைவன்

'ஞான மறையோய்! ஆரூரில் பிறந்தார் எல்லாம்
நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய்' 
நமிநந்தி நாயனார் புராணம் -27

எனக் கூறி மறைந்தார். திடுக்கிட்டு எழுந்த நாயனார் குளித்தல் முதலியன செய்யாமல் வழிபாடு முடித்துக்கொண்டு ஆரூர் சென்றபொழுது அங்குள்ளோர் அனைவரும் சிவவடிவாய்த் தெரிய இறைவனிடம் பிழைபொறுத்தருளவேண்டும் என வேண்டுகிறார். இங்ஙனம் பாத்திரங்கள் வாயிலாககச் சாதி வேற்றுமையைக் கண்டிக்கின்ற சேக்கிழாhர் அதற்குத் துணையாக பக்தியைக் கருவியாகக் கையாளுகின்றார்.

கொத்தடிமை


சுந்தரர் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டுவரையிலும் ஒரு சிலரை கொத்தடிமைகளாகக் கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது. போர்மேற்சென்ற மன்னர் தாம் வெற்றிகொண்ட நாட்டில் வாழும் மகளிரைச்; சிறைசெய்து கொணர்ந்து அடிமைகளாகப் பயன்படுத்தியமை கல்வெட்டுக்களால் அறியலாம். கொத்தடிமைகள் தாங்கள் மட்டும் அடிமைகளாக இல்லாமல் தம் சந்ததியினரும் அதே நிலையில் இருக்குமாறு செய்தனர். கிரேக்க ரோமானிய நாடுகளில் இம்முறை இருந்தமை அந்நாட்டு வரலாறுகள் மூலம் அறியலாம். சேக்கிழார் காலத்திலும் இம்முறை இருந்தமையினைக் கருத இடமுள்ளது. சுந்தரர் வரலாற்றில்

'ஆசில் அந்தணர்கள் வேறுஓர்
அந்தணர்க்கு அடிமையாதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம்
பித்தனோ மறையோய்'
தடுத்தாட்கொண்ட புராணம் - 40

என வினவுவதால் அந்தணர் அடிமையாதல் புதுமையே தவிர ஏனையோர் அடிமையாதல் இயல்பானது எனக் கருத இடமுள்ளது.

கலிய நாயனார் எண்ணெய் ஆட்டி தொண்டு செய்தார். வறுமையுற்றபோது கூலிக்கு எண்ணெய் ஆட்டி வி;ற்றுத் தொண்டு செய்தார். கூலிவேலை கி;டைக்காமல் போனதும் மனைவியை அடிமையாக விற்க மிகவும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.

'ஒப்பில்மனை விற்று எரிக்கும் உறுபொருளும் மாண்டதற்பின்
செப்பருஞ்சீர்; மனைவியாரை விற்பதற்குத் தேடுவார்
மனம் மகிழ்ந்து மனைவியார்தமைக் கொண்டு வளநகரில்
தனம் அளிப்பார் தமை எங்கும் கிடைக்காமல் தளர்வெய்தி'
கலியநாயனார் புராணம் -12

மனிதனை மனிதன் அடிமையாகக் கொள்வதையும் அடிமைகளாகச் சிலரை விற்பதையும் அன்றைய தமிழ்ச் சமுதாயம் ஏற்றுக் கொண்டிருந்தது என அறியமுடிகிறது. தாயுமானவரும் பராபரக் கண்ணியில் கொத்தடிமை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளளர்.

திருமணம் (சிவவேதியர்)

ஒவ்வொரு சமூகத்தினரும் அவ்வச் சமூக மரபிற்கேற்ப மணம் புரிந்தனர். ஆதிசைவராகிய சிவவேதியர் சுந்தரருக்கு மணம் பேச பெற்றோர் செல்லாமல் பிற பெரியோரை அனுப்பினர்.

'குலமுதல் அறிவின் மிக்கார் கோத்திரமுறையும் தேர்ந்தார்
நலமிகு முதியோர் சென்று மணம் பேசினர்.'
  தடுத்தாட்கொண்ட புராணம் -8

மணவினை குறித்த நாளோலையை மண மகன் வீட்டிலிருந்து பெண்வீட்டுக்கு எடுத்துச்சென்றனர். கலப்பு மணமும் அக்காலத்து நடைபெற்றது. சுந்தரர் பரத்தை குல பரவையாரை மணந்து கொள்கிறார்.

வைதீக வேதியர் திருமணமுறை


சம்பந்தர் திருமணம் பற்றிப் பேசும்போது அவரது தந்தையாரே ஏனைய வேதியருடன் மகள் பேசச் சென்றார்.

'மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன்ஏக
வருவாரும் பெருஞ்சுற்றம் மகிழ்சிறப்ப மகட்பேசத்
தருவார் தண்பணை நல்லூர் சார்கின்றார் தாதையார்'  
திருஞானசம்பந்தர் புராணம் 1163

இங்கும் மணவினை குறித்த நாளோலையை மணமகன் வீட்டிலிருந்து மணமகள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். எழுநாளாம் நன்னாளில் முளைப்பாலிகை அமைத்தனர். மணத்துக்கு சிலநள் முன்பாக உறவினர் அனைவரும் மணமகன் வீட்டில் கூடிவிட்டனர். திருமணத்துக்கு முதல்நாள் மணமகளுக்குக் காப்பு அணியப்பெற்றது. தீவளர்த்தல், அக்கினி வலம் வருதல் ஆகிய திருமணச் சடங்குகளை 100 பாடல்களுக்கு மேல் விரிவாக எடுத்துரைக்கிறார்.

திருநீறும்; அஞ்செழுத்தும் ஓதலும் முக்கிய இடம் பெறுகிறது.

'அழகினுக்கு அணியாம் வெண்ணீறு
அஞ்செழுத்து ஓதிச் சாத்தி'
திருஞானசம்பந்தர் புராணம் -1217

மகளைத் தாரைவார்த்துக் கொடுக்கிறார் தந்தை.

வணிகர் திருமணமுறை

மானம், அறம், வாய்மைப் பண்பு மிக்கவர் வணிகர். மணம் செய்யும் போது பெரும் பொருளைச் சீதனமாகப் பெற்றனர். காரைக்கால் வணிகர் தனதத்தன் மகள் புனிதவதி இல்லிகவாப்பருவம் அடைந்தபிறகு திருமணம் பேசினர். முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக எனப் பெரியோர் புனிதவதியின் தந்தை தனத்தனிடம் மணம் பேசினா.; மணமகனின் தந்தை பெண்கேட்கச் செல்லவில்லை. பரமதத்தன் பண்புமிக்கப் புனிதவதியை மனைவியாகப் பெற்றதைக் காட்டிலும் பெண்ணின் தந்தையார் சீதனமாகக் கொடுத்த பொருளிலேயே மகிழ்ந்தான்.

'மகள்கெடையின மகிழ்சிக்கும்
வரம்பில் தனம் கொடுத்ததன் பின்'
காரைக்கால் அம்மையார் புராணம் -13

'தளிரடி மென்னகை மயிலைத் தாதவிழத்தார் காளைக்குக்
களிமகிழ் சுற்றம் போற்றக் கலியாணம் செய்தார்கள்'
காரைக்கால் அம்மையார் புராணம் -11

என்பதால் மணமகள் மனநிலையை என்ன என்பது பற்றியாரும் கவலைப்படவில்லை. பெரிய இடத்துப் பெண் ஒரே மகளாதலின் மணமுடித்தபிறகு தனிவீடு அமைத்தனர். இதுதான் வணிகர் குல வழக்கம். சிலப்பதிகாரம் மனையறம் படுத்த காதையால் இதனை அறியலாம்.

தமிழக மக்கள் பொதுவாகக் காலையில் குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆனால் வாணிகம் செய்யும் வணிகர்கள் காலையிலேயே கடைதிறக்க வேண்டுமாதலால் மதிய உணவுக்கு வீட்டுக்கு வரும்போதுதான் குளிப்பர் என்பதை,

'மற்றவர்தாம் போயினபின் மனைப்தியாகிய வணிகன்
உற்றபெரும் பகலின்கண் ஓங்கியபேர் இல்எய்தி
பொற்புறமுன் நீராடிப் புகுந்தடிசில் புரிந்தயிலக்
கற்புடைய மடவாரும் கடப்பாட்டில் ஊட்டுவார்'
காரைக்கால் அம்மையார் புராணம் - 8

என்ற பாடலில் பதிவு செய்கிறார்.

வேளாண் திருமணமுறை


திலகவதியாருக்கு 12 வயது நிரம்பியபின் மணம் பேசினர். குணம் பேசி குலம்பேசி கலிப்பகையர் என்னும் போர்வீரரை நிச்சயித்தனர். இடையில் போரில் கலிப்பகையார் இறந்துபட திலகவதியார் அவரையே கணவராக வரித்தமையால் இறக்கத் துணிகிறார். பின் தம்பி திருநாவுக்கரசர் வேண்டலால் துறவு மேற்கொள்கிறார்.  கைம்மைநெறி அக்கால சமுதாய வழக்கமாக இருந்தது.

'தம்பியார் உளராக வேண்டும்என வைத்ததயா
உம்பர் உலகணையவுறு நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்hது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பார் மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்'

தம்பியோ சமணரானார். இறையிடம் முறையிட்டு தொண்டு வாழ்வில் தலைநின்றார் திலகவதி. அப்பருக்கு சூலைநோய் வந்தது. தமக்கைக்கு ஆளனுப்பி வருமாறு வேண்டினார். திலகவதியோ 'நன்றறியா அமண்பாழி நண்ணுகிலேன்' என உரைத்தார். பணபரை' மேம்பட்ட இவர்கள் தம் துன்பத்தை ஏக்கத்தை இறைவனிடம் முறையிட்டார்களே தவிர பிறரிடம் புலம்பி வெளிக்காட்டவில்லை.

சமயம்

மக்கள் தாம்; விரும்பும் சமயத்தைப் பின்பற்றும் உரிமை இருந்தது. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி ஆதலின் அரசனால் ஆதரிக்கப்படும் சமயம் மக்களிடையே செல்வாக்குப் பெற்றது. பல்லவ நாட்டில் மகேந்திர பல்லவன் காலத்தில் சமணம் செழித்தது. தரும சேனராகி சமணம் போற்றிய அப்பர் திலகவதியாரின் பக்தியால் சைவரானார். பொறாத சமணர் அரசன் துணை கொண்டு அப்பருக்குத் தீங்கிழைத்தனர். பொறுமையும், சகிப்புத்தன்மையும் மிக்க அப்பரால் பல்லவன் மனம் திருந்தினான்.

பாண்டிய நாட்டில் அரசனும் மக்களும் சமணம் போற்றினர். மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் சைவத்தைப் பின்பற்றினர். சம்பந்;தரை மதுரைக்கு வரவழைத்து அனல் வாதம் புனல்வாதம் செய்வித்தனர். சமணர் தோற்றனர். சம்பந்தரால் பாண்டியனும் மக்களும் மீண்டும் சைவத்துக்கு மாறினர். மேனாடுகளில் நிகழ்ந்தது போன்று சமயப்போர்கள் தமிழகத்தில் நிகழவில்லை. பிற சமயவாதிகளுடன் சொற்போர் மட்டுமே செய்தனர். மக்கள் ஓரளவு சமயத்தில் கவனம் செலுத்தினர். நாயன்மார்கள் பக்தியின் சிறப்பையும் திருவைந்தெழுத்தின் சிறப்பையும் வலியுறுத்தினார்களே தவிர சமயப்பிரச்சாரம் செய்து யாரையும் இந்தவழியில் வாருங்கள் என அழைக்கவில்லை. வற்புறுத்தவும் இல்லை.

சைவராக இருந்தவர் சமயம் மாறுதல் என்பதும், பிற சமண பௌத்தர்கள் சைவராக ஆவதும் அந்நாளில் இருந்துவந்த வழக்கம் தான். பிறசமயத்தவர் சைவராக மாற சைவர்கள் பெருமுயற்சி எதையும் செய்யவில்லை. சமண பௌத்தர் இங்கு வந்தபோது மக்கள் எளிதில் அச்சமயத்தில் சேர்ந்தனர். இதன் எதிராக சம்பந்தர் முதலியோர் வந்த போது அதே எளிமையுடன் சைவராக மாறினர். தமிழகத்தைப் பொறுத்தவரை மன்னர்க்கும் மக்களுக்கும் சமயத்தில் வலுவான பிடிப்போ, ஈடுபாடோ, வெறியோ இருந்ததாகத் தெரியவில்லை. தமிழ் மக்களின் அமைதியான போக்கிற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். இதனால் தான் 'பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை
இகழ்தல் அதனினும் இலமே'
என்ற கருத்து அன்றே தோன்றிவிட்டது.

நீதிமன்றங்கள்

சமுதாய மக்கள் நியாயத்திற்குப் பெரிதும் கட்டுப்பட்டு வாழ்ந்தனர். சுந்தரர் திருமணத்தின்போது இந்த சுந்தரர் வழிவழி எனக்கு அடிமை என்று எழுதிய ஓலையைக் கையில் வைத்துக் கொண்டு முன்பின் பார்;திராத கிழவர் வழக்குரைக்கின்றார். அதனைக் கேட்ட அனைவரும் வியந்தார்கள். சினந்தார்கள். தாங்கள் பலர். கிழவரோ ஒருவர். பொய் ஆவணம் தயாரிப்பவர் என்ற கூறி கிழவரை தங்கள் இடத்தை விட்டு விரட்டியிருக்கலாம். ஆனால் வாதியின் ஊராகிய வெண்ணெய் நல்லூரிலேயே சென்று உன் வழக்கைப் பேசலாம் என்கின்றனர். நாகரிகம் மிகுந்த இந்நாளில் கூட தம் ஊரில் நியாயம் கிட்டாது என்று நினைக்கும் வாதிகள் இன்று பிற மாநில நீதிமன்றங்கட்கு வழக்கை மாற்றிச் செல்வதும் உண்டு. திருவெண்ணெய் நல்லூர் வழக்கு மன்றத்தில் பஞ்சாயத்தார்கள்

'மறையவர் அடிமை ஆதல்
இந்நிலத்தில் இல்லை என் சொன்னாய்?

என முதலில் எதிர்த்தாலும் பின்

'ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார்
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்' தடுத்தாட்கொண்ட புராணம்
- 56

என விருப்பு வெறுப்பற்று நடுநிலையில் பேசுகின்றனர். ஆவணச் செய்தி உண்மையே எனக் கண்டறிந்து சட்டததைப் பெரிதாக மதித்து,

'நான்மறை முனிவனார்க்கு நம்பியாரூரார் தோற்றீர்
பான்மையின் ஏவல் செய்தல் கடன்'
தடுத்தாட்கொண்ட புராணம் - 63

என்று தீர்ப்பு வழங்கிய பண்பாட்டில் சிறந்த மக்கள் உள்ள சமுதாயத்தைப் பதிவு செய்திருக்கிறார் சேக்கிழார்.

சூதாடல்


பெருநகரங்களில் சூதாடும் மக்கள் இருந்தனர். சிறந்த சூதாட்டக்காரர் முதல் ஒன்றிரண்டு ஆட்டங்களில் வந்தவரை வெல்லவைத்து அடுத்தடுத்து வரும் ஆட்டங்களில் தாமே வெல்லவது என்பது அன்றும் பரவலாக இருந்தது. இதனை

'முற்சூது தாம்தோற்று முதற்பணையம் அவர்கொள்ளப்
பிற்சூது பலமுறையும் வென்று பெரும்பொருளாக்கிச்
சொற்சூதால் மறுத்தாரை சுரிகை உருவிக்குத்தி
நற்சூதல் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார்'
  மூர்க்க நாயனார் புராணம்-9

என மூர்க்க நாயனார் புராணத்;தால் அறியமுடிகின்றது. இவர்களை நம்பித்தான் சூதாடு கழகங்களும், பரிசுச் சீட்டுகளும், குதிரைப்பந்தயங்களும் நடைபெகின்றன. இன்றைய சமுதாயம் அற்றைய சமுதாயத்திலிருந்து பெரிதும் மாறிவிடவில்லை.

கையூட்டு


நாவரசரை அழைத்துவருக என ஆணையிடும் மகேந்திர பல்லவன்

'தெருள் கொண்டோர் இவர்சொன்ன
தீயோனைச் செறுவதற்குப்
பொருள் கொண்டு விடாது என்பால் கொடுவாரும்'
திருநாவுக்கரசர் புராணம் -90

என்பதால் பல்லவர் ஆட்சியில் கையூட்டு பெறுபவர் பலர் இருந்தனர் எனலாம். இச்செய்தி அற்றைநாள் ஆட்சியிலும் அரசு அலுவலரிடை இத்தகு பழக்கம் இருந்தமையினை அறிவிக்கிறது.

பெயர் சூட்டுவிழா


வேடர் குலநாதன் குற்றமே குணமா வாழ்வான். கொடுமையே தலைநின்றுள்ளான். வயதான பிறகு மகன் பிறக்கிறான். குழந்தையை முதன் முதலாகத் தந்தை தூக்குகிறான். திண்ணென்று கனமாக இருந்தமையால் திண்ணன் என இயல்பாகப் பெயர் சூட்டுகிறான் நாகன்.

சம்பந்தர் பிறந்தவுடன் 10 நாள் சூதகம் கழிந்தபிறகு ஏகப்பட்ட சடங்குகளுடன் தொட்டிலிலிட்டு சம்பந்தர் எனப் பெயர் சூட்டுகின்றனர் பெற்றோர்.

கற்றவர் கல்லாதவர் பிள்ளை வளர்க்கும் முறை

திண்ணன் மழலைப் பருவத்தில் பார்வை விலங்காகிய புலியின் திறந்த வாயைப் பொந்து என நினைத்து கையை நுழைத்தான். அதனைக் கண்டு பதற்றமடையாத தந்தை நாகன் பசுந்தழை கொண்டு பிள்ளையை அதட்ட கை ஓங்கினான். அடிக்கக் கூட இல்லை. அதுவே பொறுக்காத திண்ணன் ஓவென அழத்தொடங்கினான்.

'பொருபுலிப் பார்வைப் பேழ்வாய்;
முழையெனப் பொற்கை நீட்டப்
பரிவுழைத் தாதை கண்டு
பைந்தழைகைக் கொண்டோச்ச'
கண்ணப்ப நாயனார் புராணம் -23

குழந்தை உயிருக்கு ஆபத்தான பெருந்தவறு செய்தும் மீண்டும் அதுபோன்று நிகழாதிருக்கக் கடிய தண்டனை தந்து திருத்தியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. ஆனால் சம்பந்தர் சிவயதில் குளக்கரையில் அழுத போது ஞானப்பாலுண்ட நிலை கண்டு (பாலுக்குத் தீட்டில்லை) இச்சிறய தவறும் பினனர் நிகழக்கூடாது என கையில் கச்சியைக் கொண்டு கண்டித்தார் தந்தையார்.

'எச்சில் மயங்கிட உனக்கீது இட்டாரைக் காட்டென்று
கைச்சிறய தொருமாறு கொண்டோச்ச'
திருஞானசம்பந்தர் புராணம் -73

என தம் அந்தணர் சமுதாய மரபுக்கேற்பப் பிள்ளையைக் கண்டிக்கிறார்.

யாகநெறி போற்றல்

ஊர் தோறும் சென்று இறைவனை வழிபட வேண்டும் என்ற தம் கருத்தைக் கூறிய சம்பந்தரிடம் தந்தையார்,

'பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்றகுலத் தாதையாரும்
அருமையால் உம்மைப் பயந்த அதனாற் பிரிந்துறைதலாற்றேன்
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான்செயவேண்டும்
ஒருமையால் இன்னஞ்சிலநாள் உடனெய்துவேன் என்றுரைத்தார்.'


                                         திருஞானசம்பந்தர் புராணம் -280

என மகனுடன் இருப்பதைக்காட்டிலும் கடமை(யாகம்) செய்வதே முக்கியமானது என்கிறார் வைதீக வேதியர் சிவபாத இருதயர். மகன் காட்டும் அன்புநெறியைவிட யாக நெறியே விரும்புகிறார் தந்தையார்.

சமுதாயத் துயர் நீக்குதல்


சம்பந்தர் திருமருகல் தலத்திற்கு வந்திருந்தபோது வணிகன் ஒருவன் தான் மணந்துகொள்ளும் பெண்ணை அழைத்துக்கொண்டு வந்தான். இருளில் மடத்தில் தங்கியிருந்தபோது வணிகன் பாம்பு தீண்ட இறந்தான். அப்பெண் அழுது துயறுற்றபோது, வணிகனின் விடம் தீhத்து மணம் செய்து வைக்கிறார். திருப்பாச்சிலாச்சிரமம் சென்ற போது குறுநில மன்னனான கொல்லிமழவன் மகளுக்கு ஏற்பட்ட முயலகன் நோயைத் தீர்த்துவைத்தார். கொங்கு நாடு சென்றபோது மடத்தில் தங்கியிருந்த அடியார்களுக்கு பனியால் குளிர்க் காய்ச்சல் எற்பட அதனைப் போக்குகிறார். பழையாறை வடதளியில் உள்ள சிவன் கோயிலைச் சமணர் மூடிவைத்திருந்தனர். அதனால் பொதுமக்கள் வழிபாட்டிற்கு இடையூறு நேர்ந்தது. அப்பர் அவ்வூர் வந்த போது அதனை அறிந்து கதவு திறக்கப்படும் வரை உண்ணா நோன்பு மேற்கொண்டார். அதனைக் கேள்வியுற்ற சோழ மன்னன் கோயிலைத் திறக்கச்செய்து பொதுமக்கள் வழிபடச் செய்தான்.

வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி
யன்றிப் போகேன் என்று
எண்ண முடிக்கும் வாகீசர்தாம் இருந்தார்
அமுது செய்யாதே'
திருநாவுக்கரசர் புராணம் - 296

சுற்றுச்சூழல் சிந்தனை


நிலமாசுபாடு தவிர்க்க பசுவின் சாணம் கொண்டு நிலத்தை மெழுகினர். கோவில் பலரும் வந்து செல்லுமிடமாதலின், எளிதில் தூய்மைக் கெடும். 'ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டு' என்ற அப்பரின் அலகிடுதல், மெழுகிடுதலாகிய உழவாரப்பணியால் கோயில் தூய்மை பாதுகாக்கப்பட்டது. உயிர்காற்றைப் பெறத் தாவரங்கள் துணை செய்யும் என்ற அறிவியல் நிலையில் நந்தவனம் அமைத்து மலர்வழிபாடு செய்தல் மூலம் காற்றுமாசுபாடு குறைவுற்றது. திருமஞ்சன நிலையில் நீர்த்தூய்மை பேணப்பட்டது. நீhத்தூய்மையாகப் பெருமளவு நோய்களைத் தடுக்க முடிந்தது. விழாக்கள் மூலம் சமுதாய ஒற்றுமை நிலைபெற்றது. மேலும் பல தொழில் புரிவோhரும் பயன்பெற்றனர். சமுதாயத்தில் மகிழ்ச்சி பெருகியது.

செல்வச் செழிப்பும் வறியவர் வாழ்வும்


நாகப்பட்டினம் துறைமுக நகரம். அங்கு ஏற்றுமதி இறக்குமதி நடைபெறும். செல்வச் செழிப்பான நகரம். யானை, குதிரை, நவமணி, துகில், பவளம் நிரம்பிய கலங்களை அங்குக் காணலாம். பல தேய மக்களும் நிரம்பிவழிந்தனர். இங்கு வாழ்பவர் அதிபத்தநாயனார். இவர் பரதவர் வறியவர். நாகைவாழ் பரதவர்களின் எளிய வறிய வாழ்வையும் பதிவு செய்துள்ளார் சேக்கிழார்.

அன்பு நெறியும், தொண்டு நெறியும் சமுதாயம் செழிக்க ஊற்றுக்கண். அவ்விரண்டையும் உயர்நேர்கமாகக் கொண்டு சமுதாயத்தை வாழ்வித்த செயற்கரிய செய்த அடியார்களின் சிறப்பை விரித்துரைக்கும் சமுதாய இலக்கியம் பெரியபுராணம் என்றால் அது மிகையன்று.
 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை-641 035

 

 





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்