பாரதியும் பெண்விடுதலைச்சிந்தனையும்

முனைவர்.நா.அமுதாதேவி



முன்னுரை:

இந்திய விடுதலைப் போராட்டமும், மேற்கத்திய நாகரீக வளர்ச்சிநிலையும் கவிதைக்கு புதிய பாதையை வழிவகுத்துக் கொடுத்தது எனலாம். அவ்வகையால் புதிய கருத்துக்களை முன்னெடுத்து பல கவிஞர்கள் தோற்றம் பெற்றனர். பெண்விடுதலையை அவைக்கு அறிமுகம் செய்ததில் பாரதியின் பங்கு இன்றியமையாதது எனலாம். நிவேதிதையின் சந்திப்பிற்குப் பின்பு தன் சொல்லாலும் செயலாலும் பெண்விடுதலைக்கு வித்திட்டவர் பாரதி எனில் அது மிகையாது. பெண் சமுதாயத்தில் காட்சிப் பொருளாக மட்டும் அல்லாமல் சமுதாயக கட்டமைப்பில் பெண்களின் பங்கு எப்படி அவசியமாகின்றது என்பதனை உலகிற்கு எடுத்துரைத்தவர் பாரதி. பெண் விடுதலையை சமூக வெளிக்கு வெளியில் தேடுவதா இல்லை கட்டமைப்பிற்குள் தேடுவதா என்ற கேள்விக்குப் பதில் கொடுத்தவர் பாரதி. பாரதியின் பெண் விடுதலை குறித்த முற்போக்கு சிந்தனையை பின்வரும் கட்டுரையின் வாயிலாக் காணலாம்.

பாரதி – யார்?

பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தவர். எட்டையபுர மன்னன் இவரின் கவித்திறனைக் கண்டு பாரதி எனும் பட்டத்தினைச் சூட்டினார். சின்னசாமி அய்யருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர். பன் மொழிப்புலமை வாய்க்கப் பெற்றவர். இதழ் ஆசிரியராக, கவிஞராக, தமிழ் ஆசிரியராகத் தன்னைப் பல்வேறு நிலைகளில் வகைப்படுத்திக் கொண்டவர். விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல் கவிதைகளை இயற்றியதால் இவர் தேசியகவி என்றும் அழைக்கப்பட்டார்.

பெண்விடுதலை

'பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா' என்றும், பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை தீருதல் முயல்கொம்பே' என பெண் அடிமைத்தனம் ஒழிந்தால் தான் நாடு வளம் பெறும் என முற்போக்காகச் சிந்தித்தவர். பெண் நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, திமிர்ந்த ஞான செருக்கு, ஆகியவை பெண்ணுக்கு இருக்க வேண்டும். பெண் தன் சமுதாயக் கட்டுக்குள் இருந்து விலகிச் செல்லாமல் தன் உரிமைகளை நிலை நிறுத்திக் கொள்வதாற்காகப் போராடும் குணம் உடையவளாக இருக்கின்றாள். இத்தகைய சூழ்நிலையைப் பாரதியார் பல பாடல்களில் பதிவிட்டுள்ளார்.

பெண் தன் கட்டுக்களை விலகிக்கொண்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்புகிறாள். எனவே பெண் எப்பொழுதும் தனக்கான விடுதலைக்காகப் போராடி வருகின்றாள். தன் விடுதலை எப்படி, யாரல் கிடைக்கும் என தன் சுதந்திரத்திற்காக விருப்பம் கொண்டவளாக இருக்கின்றாள். பெண் விடுதலை என்பது தன் சமூகக்கட்டுக்களை விலக்கிக் கொண்டு சுயமாகச் சிந்தித்தல் எனக்கருதலாம். தன் சுயம் குறித்தும் விடுதலை குறித்தும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று பெண்விடுதலைக்கான விதையைச் சமுதாயத்தில் விதைத்தவர் பாரதியார்.

பாரதியாரின் பல் பாடல்களில் பெண்களின் எதிர்கால நலனும், பெண் சமுதாயத்தில் எப்படி கையாளப்பட வேண்டும் என்பதனையும், எதிர்காலப் பெண் எப்படியெல்லாம் புதுமைப் பெண்ணாக வாழ வேண்டும் என்றும் சிந்தித்துப் பல கவிதைகளைப் புனைந்தவர் பாரதியார்.

விடுதலை உணர்வு

பெண்கள் அனைவரும்; தம் விடுதலை குறித்து ஆர்வம் உடையவர்களாக காணப்படுகின்றனர். அடிமை வாழ்வில் இருந்து வெளியேறி, பல ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு இருந்த பெண்கள் அனைவரும் தம் விடுதலையை மிக ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். பெண் விடுதலை கூடாது என்று பலர் பல்வேறு வகையில் தடைகள் போட்டாலும் அவற்றை எல்லாம் எதிர்த்து பெண் சமுதாயத்தில் விடுதலை உணர்வுடன் வாழ வேண்டும் என்ற கொள்கையில் உறுதி கொண்டவர்களா இருந்து பெண் விடுதலைக்காகப் பாடுபடல் வேண்டும். இந்த உறுதியுடன் போராடும் பொழுது வெற்றி நிலையை அடையலாம்.

சக்தியானவள் ஆணையும், பெண்ணையும் இவ்வுலகில் சரிசமமாகப் படைத்தாள். இருவருக்கும் உரிமைகளை சமமாகவே பகிர்ந்து கொடுத்தாள். ஆனால் சில இடைப்பட்ட மனிதர்கள் இந்த பொது உடைமைச் சிந்தனைகளில் பிரிவினை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆணும் பெண்ணும், சரிநிகர் சமம் என்ற நிலையை மனதில் கொண்டு உறுதியுடன் செயல்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

பண்டைய கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களை பின்பற்றுவதனை விடுத்து நடைமுறைச் சூழலுக்கு எற்றவாறு பழக்கங்களை வகைப்படுத்திக் கொண்டு வாழ்தல் வேண்டும். ஆணுக்கு நிகராகப் பெண் பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவளாக இருக்கின்றாள் . தன்னிடம் உள்ள திறமையை அடையாளம் கண்டு நம் சமுதாயத்தில் பெண் உயர்நிலையை அடைய வேண்டும்.

ஆண்களின் துணையுடன் பெண்களின் உயர்நிலைக்காக என்றும் ஒன்றிணைந்து போராடுதல் வேண்டும். ஆண்கள் துணையுடன் தன் விடுதலைக்காகவும், தன் நாட்டு விடுதலைக்காகவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆண்- பெண் என்னும் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து தன் தாய் நாட்டை அடிமைப்படுத்திய நிலையில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள ஒன்றிணைந்து உழைந்திடல் வேண்டும்.

ஆணுக்குப் பெண் அடிமை என்னும் நிலையில் இருந்து விலகி புதிய பாதையைப் படைப்போம். பல புதிய நாகரீக வளர்ச்சி நிலையை அடைந்திருந்தாலும் நம் பழமைப் பண்பு மாறாமல் மரபினை மீறாமல் நடந்து கொள்ளுதல் வேண்டும். பிற நாட்டினர் (ஆங்கிலேயர்கள்) நம்மை அடிமை எனக் கருதி அடிமைகளாகவே வாழ வேண்டும் என்று கருதினர். வந்தேறிகளான அவர்கள் தம்மை முதல்வர்கள் போலக் கருதிக் கொண்டு நம்மை அடிமைகளாக மாற்றத் தொடங்கினர். கண்மூடித்தனமான அந்த அடிமை வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நம் அறிவினாலும், புதிய சிந்தனைகளாலும் நம் தாய் நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடைமைகளைச் சரிவர செய்ய வேண்டும்.

'.......... ஆண் பெண்ணிரண்டும்
ஒருநிகர்செய்து உரிமை சமைத்தாள்'

நம் நாட்டில் ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் வீரத்திறன் நிறைந்தவர்களாகவே வாழ்ந்துள்ளனர். எனவே பெண்மைக்குள் உள்ள வீரத்திறனை அடையாளம் கண்டு பெண்முன்னேற்றத்திற்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

நிறைவுரை:

பெண் விடுதலை குறித்து பாரதியார் தம் கவிதைகளில் பலவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் எனவும்;, பெண்மையை உயர்த்துவதற்காக எவ்வழிகளில் எல்லாம் போராடவேண்டும் என்பதனை எளிமையான வரிகளில் பாரதி படம்பிடித்துக் காட்டியுள்ளார். பெண் விடுதலை என்பது சமுதாயம் சார்ந்து பல மாற்றங்களையும் புரட்சிகளையும் முன் வைத்தது என்று கூறினால் அது மிகையாகாது.


முனைவர்.நா.அமுதாதேவி
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
கோவை


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்