.......

பாரதிதாசனின் வீரத்தமிழன் இராவணனின் மாண்புகள்

முனைவர் நா.அமுதாதேவி


முகவுரை:

பாரதியாரின் மீது தான் கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக் கொண்டவர். பல குறுங்காப்பியங்களையும், நாடகங்களையும் இயற்றியவர். தமிழ் மொழியின் சிறப்பினைப் பல கவிதைகளில் பதிவு செய்துள்ள சிறப்பிற்குரியவர். வீரத்தமிழன் என்னும் இக்கவிதையின் வாயிலாக நம் முன்னோர்களின் சிறப்பினையும், தமிழ் மொழியின் பெருமையையும் நமக்குச் சுட்டிக்காட்டியுள்ளார். நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் எனவும், நாம் இப்பொழுது எத்தகைய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதனையும் இக்கவிதையின் பொருண்மை பறைசாற்றுகின்றது.

இலங்கை வரை நம் தமிழர்களின் ஆட்சி எல்லை பறந்து விரிந்திருந்தது. எல்லாத்திசைகளிலும் தமிழர்களின் ஆட்சியைக்காண முடிந்தது. நம் நாடு எல்லா வளங்களையும் சிறப்புகளையும் பெற்று விளங்கியது. இந்நிலையைக் காணும் பொழுது நம் நாட்டின் பெருமையை எண்ணி உள்ளம் மகிழ்வில் பூரிப்படைகின்றது. நம் மன்னர்கள் மலை போல ஆற்றல் நிறைந்தவர்களாகவும், கொடை கொடுக்கும் தன்மை உடையவர்களாகவும் விளங்கியுள்ளனர். இத்தனை சிறப்பினையும், கொடைப் பண்பினையும் உடைய நம் நாட்டில் பல் பகை மன்னர்கள் நாட்டின் ஒருமைத் தன்மையை குலைக்க முயன்று பல சதி செய்து வருகின்றனர். இத்தகைய சூழ்ச்சியில் சிக்கிக் கொள்ளாமல் நாம் ஒற்றுமையுடன் செயல்படல் வேண்டும்.

விபூஷணனின் அண்ணன்:

இராவணனின் புகழை நாம் கடல்ம கடந்தும் இன்றளவும் பேசிக் கொண்டு இருக்கிறோம். விபூஷணனின் அண்ணன் இராவணன் என்று கூறி (இராமனிடம் அடைக்கலமாகச் சென்றவன் விபூஷணன்) இராவணனை உலகம் போற்றிக் கொண்டு இருக்கின்றது. விபூஷணனின் அண்ணன் என்று இவ்வையத்தார் சொல்லும் பொழுது அதை ஏற்றுக் கொள்ள அஞ்சியவன் இராவணன். ஏனெனில் இராவணனின் பண்பு நலன்களும் செயல்களும் தவறான வழியில் இருப்பதனை உணர்ந்து கொண்டு இராமனிடம் அடைக்கலம் சென்றவன் என்பதால் ஏற்றுக் கொள்ள அஞ்சினான்.


சூழ்ச்சியை விரும்பாதவன்:

யாழ் இசையால் வல்லவனாகிய இராவணன் போரில் இறக்க நேரிட்டாலும் சூழ்ச்சியை விரும்பாதவன் நான்கு வேதங்களும் கற்றவன் இவன் புகழை வாழ்த்துகின்றவர்களை தமிழர்கள் என்று கூறுவேன். இவன் புகழை கூற மறந்தவர்களையெல்லாம் தீயவர்கள் என்று கூறுவேன் என்கிறார்.

'........................... சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன்'


இராவணனின் புகழ்:

தமிழகத்தின் இழிநிலையில் இருந்து நாம்; மேன்மை அடைதல் வேண்டும். வலிமை இல்லாத உடல்களும் தமிழின் சிறப்பினைக் கேட்டு வளமை பெற வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சிகள், வஞ்சகம், பொறாமை, ஆகியவைகளைக் கண்டு அஞ்சி ஒடுங்காமல் எதிர்நின்று வீரச் செயல்கள் பலவும் செய்தல் வேண்டும். கடல் போல மொழியின் பெருமைகளை உலகம் யாவும் பரப்புதல் வேண்டும். கீழான செயல்கள் செய்வதனைக் கைவிட வேண்டும். இராவணனின் புகழை உலகம் அறியும் வகையில் எடுத்துச் சொல்லி வாழ்த்துதல் வேண்டும்.

'கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!'

முடிவுரை:

இராவணன் என்றவுடன் எதிர்மறை எண்ணங்களே நம்மைச் சூழ்ந்து கொள்கின்றது. அவ்வாறு இல்லாமல் அவனிடம் உள்ள சிறப்புக்களையும், ஆற்றலையும் உலகம் அறியும் வகையில் எடுத்துரைத்து. தமிழனின் பெருமையையும் தமிழ் மொழியின் பெருமையையும் பிறர் அறியும் வகையில் பரவச் செய்தல் ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.


 

முனைவர் நா.அமுதாதேவி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
கோவை-21


 






 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்