திரிகூடராசப்பக் கவிராயரின் மலை வளம்

முனைவர் நா.அமுதா தேவி    




முகவுரை:


இலக்கியங்கள் மனிதனுக்கு பல்வேறு வகையான வாழ்வியல் அனுபவங்களைத் தருகின்றது. அவ்வகையில் காலம் செல்லச் செல்ல இலக்கிய அனுபவம் என்பது இலக்கியச்சுவை ஆக மாறிவிடுகிறது. அவ்வகையில் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான குற்றாலக் குறவஞ்சி எனும் நூலில் ஆசிரியர் மலையும் மலை சார்ந்த பகுதியும் ஆன குற்றால மலையின் வளங்களையும் சிறப்புக்களையும் காட்சிப்படுத்தியுள்ளார். குறிஞ்சி நில மக்கள் தம் வாழ்வியலை எவ்வாறு வாழ்ந்துள்ளார்கள் என்பதனை மிகவும் சுவையான எளிமையான வார்த்தைகளால் வடிவமைத்துள்ளார்.


சிற்றிலக்கியங்கள்


அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு வகையான உறுதிப் பொருள்களில் ஒன்றும் பலவும் குறைந்து வருவது காப்பியமாகும். காப்பியம் என்றாலும் சிறுகாப்பியம் என்றாலும் ஒன்றே எனக்கூறி உலா, மடல், பிள்ளைத்தமிழ் போன்றவற்றையும் இவற்றில் அடக்கலாம் என்று கருதுகின்றனர் அறிஞர் பெருமக்கள். வடமொழியில் இக்காப்பியத்தை பிரபந்தம் என்றும் தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் அழைத்து வருகின்றனர்.


திரிகூடராசப்பக் கவிராயர்


திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் எனும் ஊரில் திரிகூடராசப்பக் கவிராயர் சைவ வேளாளர் குலத்தில் தோன்றினார். இவரின் ஊருக்கு அருகிலுள்ள சிற்றூரில் குடிகொண்டுள்ள இவரின் குலதெய்வமான அய்யனாரின் திருப்பெயரால் ராசப்பன் என பெயர் பெற்றார். கவிராயர் என்பது குறவஞ்சி நாடகம் பாடியதால் மதுரை மன்னரால் மகிழ்ந்து கொடுக்கப்பட்ட சிறப்புப் பட்டம் ஆகும். திரிகூடராசப்பக் கவிராயர் வடகரை அரசரான சின்னஞ்சாதேவரின் அவைக்களப் புலவராக விளங்கியவர். இவர் தாம் இயற்றிய குறவஞ்சி நூலினைத் திருக்குற்றால நாதரின் முன்பாக அரங்கேற்றம் செய்தார்.


குறவஞ்சி


சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான குறவஞ்சி என்னும் இந்நூல் குறிஞ்சி நில மக்களின் வாழ்வியலை சிறப்பாக எடுத்துரைக்கிறது. தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள தென்காசிக்கு அருகில் உள்ள குற்றாலம் எனும் ஊரினை சிறப்பித்து பல பாக்களை ஆசிரியர் இந்நூலில் பதிவிட்டுள்ளார். இந்நூலின் வாயிலாகக் குற்றால மலையின் சிறப்பினையும் குற்றாலநாதர் வரலாற்றினையும் அறிந்துகொள்ள முடிகின்றது. நாடகப் பாங்கிலும் இசை அமைப்பிலும் இந்நூல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பெண்களின் வாழ்வியல் முறையினையும் குறிஞ்சி நில மக்களின் பல்வேறு வகையான கருப்பொருள்களையும் பதிவிட்டு இருப்பது சிறப்பிற்கு உரியதாக இருக்கிறது . இன்றைய கால சூழலில் இயற்கையை தனிமனிதன் நேசிக்க வேண்டியதன் அவசியத்தையும் காலம் கடந்தும் இப்படியான இயற்கையோடு இணைந்த வாழ்வியலை நம் ஆன்றோர்கள் வாழ்ந்துவந்தனர் என்பதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பதில் இலக்கியங்கள் இன்றியமையாத இடத்தை பெற்றிருக்கிறது என்று கூறலாம்.


கதைக்கரு


சிவபெருமானின் திருவீதி உலா நான்மறைகள் ஓத வந்து கொண்டிருக்கின்றது. அப்பொழுது கதைத் தலைவியான வசந்தவல்லி என்பவள் இறைவனுடைய காட்சிப் பொலிவைக்கண்டு மையல் கொள்கிறாள். வசந்தவல்லியின் தோழி சிவபெருமானின் சிறப்புகளை எல்லாம் எடுத்துரைக்கிறாள். பின்பு காதல் வயப்பட்ட வசந்தவல்லி தன் தோழியை சிவபெருமானின் மீது தூதாக அனுப்புகிறாள். தோழி செல்லும் வழியில் குறப்பெண் ஒருத்தி எதிரில் வருகிறாள். அப்பெண்ணைக் குறி சொல்வதற்காக வசந்தவல்லியிடம் அழைத்து வருகிறாள். குறத்தி வசந்த வசந்தவல்லியின் கைரேகை பார்த்து அவள் குற்றாலநாதர் மீது காதல் கொண்டுள்ள நிலையை எடுத்துரைத்து அவள் காதல் ஈடேறும் எனக் குறி கூறுகிறாள். பின்பு குறி சொல்லிக் கொண்டிருக்கின்ற குறத்தியைத் தேடி குறவன் ஒருவன் வருகிறான். அவன் செய்தியை அறிந்து கொண்டு குற்றால த்தின் பல்வேறு வகையான சிறப்புகளை எடுத்துரைக்கிறான். பின்பு இருவரும் ஆடிப்பாடி மகிழ்ந்து மகிழ்வித்து பல்வேறு வகையான பரிசுப் பொருட்களை வாங்கிச் செல்வதாக இக்கதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறத்தி குறி சொல்லுகின்ற போதும் தன்னை அறிமுகம் செய்கின்ற பொழுதும் குற்றால மலையின் வளங்களைச் சுவைபட எடுத்துரைக்கிறாள்.


குறத்தி மலைவளம் கூறுதல்


வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளை ப்பர்
தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக் காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

ஆண் குரங்குகள் தன்னுடைய இணையான பெண் குரங்கிற்கு உண்பதற்குச் சுவையான கனிகளைக் கொடுத்து கொண்டிருக்கின்றன. இந்த குரங்கினங்கள் உண்டு கீழே சிந்தும் கனிகளுக்காக வானில் உள்ள தேவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வேடுவர்கள் வானில் உள்ள தேவர்களை அழைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சித்தர்கள் பூமிக்கு வந்து மனிதர்களின் உடல்பிணியைத் தீர்க்கக்கூடிய காயசித்தி என்று சொல்லக்கூடிய மூலிகைகளை விளைவித்து செல்வர். தேன் போன்ற சுவையுடைய நீர் குற்றால அருவி நீர். குற்றால அருவி நீரானது கடல்போல ஆர்ப்பரித்துக் கொண்டு வருகின்றது. இக்காட்சியை ஆசிரியர் எவ்வாறு காட்சிப்படுத்துகிறார் என்றால் வானிலிருந்து குற்றால அருவி யானது பூமிக்கு விழுவதைப் போல இருப்பதாகவும் சூரியன் தன்னுடைய பணிகளைச் செய்வதற்கு இந்த அருவிநீர் தடையாக இருப்பதாகவும் காட்சிப்படுத்துகிறார். சூரியனுடைய வாகனமான குதிரையின் கால்களும் குதிரைகள் பூட்டிய தேரின் சக்கரம் குற்றால அருவியின் நீர் தொடர்ந்து பயணிக்க இயலாமல் வழுக்குவதாகக் காட்சிப்படுத்தியுள்ளார் . வளைந்த சிறு பிறையைத் தன்னுடைய கூந்தலில் சூடி இருக்கின்ற சிறப்புக்குரியவர் வசிக்கின்ற மலை எங்களுடைய குற்றாலமலை என மலையின் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியுள்ளார்.


மலையில் வசிக்கின்ற உயிரினங்களான குரங்கினங்களின் வாழ்வியல் வாயிலாக மனிதன் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுகின்ற வாழ்வியல் முறையினையும் பகிர்ந்து உண்ணல் என்ற அறக்கோட்பானடயும் இப்பாடலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். மனிதனாகப் பிறந்தாலும் மக்களாக இருந்தாலும் அறம் பின்பற்றுதல் அவசியமான ஒன்று என்பதனையும் ஒவ்வொருவரும் பிறருக்கு பயனுள்ள வகையில் வாழ வேண்டும் என்பதனையும் இயற்கை சார்ந்த நிகழ்வுகளை எடுத்துரைத்து காட்சிப்படுத்தி உள்ள பங்கு போற்றுதலுக்கு உரியது. இன்று இயற்கையை மனிதன் பேரளவில் சிதைத்து வருவது உண்மையாகும். இனிவரும் காலங்களில் இலக்கியங்களில் இவ்வாறெல்லாம் இயற்கை போற்றப்பட்டுள்ளது என்பதனை எடுத்துக் கூறவும் நம்முடைய சான்றோர்கள் தம் வாழ்வினை இயற்கையுடன் எவ்வாறு ஒன்றிணைந்து வாழ்ந்துள்ளார்கள் என்பதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறவும் சிற்றிலக்கியங்கள் பயனுடையதாக இருக்கின்றது.


குறவர்களின்வாழ்வியல்


முழங்கு திரை புனல் அருவி கழங்கு என முத்தாடும்
முற்றமெங்கும் பறந்து பெண்கள் சிற்றிலை கொண்டு ஓடும்
கிழங்கு கிள்ளி தேனெடுத்து வளம் பாடி நடிப்போம்
கிம்புயின் கொம்பு ஒடித்து வேம்பு தினை இடிப்போம்
செழும் குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்


இப்பாடலில் குற்றால மலையின் வளங்களை மட்டுமல்லாது குறவர்களின் வாழ்வியலையும் அவர்களின் தொழில் சிறப்பையும் பொழுது போக்கையும் குறிப்பிகின்றது. பெண்களுக்குரிய சிறப்புப் பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்று சொல்லக்கூடிய பருவங்களில் ஒன்றான சிற்றில் பருவத்தில் பெண்கள் விளையாடுகின்ற விளையாட்டினை இப்பாடலில் நயம்பட சுட்டிக்காட்டியுள்ளார். பெண்கள் தம் வீட்டின் முன்பாக மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருப்பர். அச்சிறிய மணல் வீட்டினை அருவி நீரானது ஆர்ப்பரித்துக் கொண்டு அழித்துச் செல்வதாகக்காட்சிப்படுத்தியுள்ளார். மலையிலிருந்து கீழே வருகின்ற அந்த அருவி நீரானது எவ்வளவு வேகமாகக் கீழே இறங்கி வருகின்றது என்பதனை மிகவும் சுவைபடக் காட்சிப்படுத்தியுள்ளார். மலைவாழ் மக்கள் தாம் தொழிலையும் மலை வளங்களையும் ஒரே பாடலில் காட்டியுள்ளார். கிழங்கு எடுப்பது. தேன் எடுப்பதுஇ மலையின் வளங்களை நாடகமாக பிறருக்கு நடித்துக் காட்டுவது போன்ற தொழில் வளங்களையும் சுட்டியுள்ளார். தன் பசியைப் போக்குவதற்காக மலையில் இருக்கின்ற பொருட்களையே உணவாக எடுத்துக்கொள்ளும் பாங்கினையும் இப்பாடலில் எடுத்துக்காட்டியுள்ளார்.


உயிரினங்களின் செயல்பாடுகள்


நாகப் பாம்புகள் கக்கிய நாக மணிகள் மலையினுடைய பல இடங்களில் தன் ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்கின்றது. யானைக் கூட்டங்கள் நிலவினைத் தனக்கான உணவு என்று கருதி நிலவின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. வேடுவர்கள் திணைப் பயிரை விளைவிப்பதற்காக தூய்மை செய்கின்ற பொழுது அருகில் இருக்கின்ற குங்குமம் அகில் சந்தனம் போன்ற மரங்களின் வாசனையானது பல இடங்களுக்குப் பரவுகின்றது.மலை ஆடுகள் ஆங்காங்கு குதித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றது.


ஆடும் மரம் இனும் அணி கோடி வெயில் எரிக்கும்
அம்புலியே கவளம் என்று தும்பி வழிமறிக்கும்
.......................................................................
விந்தை அகில் குங்குமமும் சந்தனமும் நாறும்
காடு தோறும் ஓடி வரை ஆடு குதி பாயும்
....................................................
காகம் அணுகா மலை


இப்பாடலில் இதனைக் காட்சிப்படுத்தியுள்ளார்.



மலையின் அமைவிடம்:


கயிலை என்று போற்றப்படுகின்ற மலையின் தென்திசையில் இந்த திரிகூட மலை அமைந்திருக்கின்றது. பொன்னிறமாக இருக்கின்ற மகாமேரு மலை இதுவோ என்று சொல்லும்படியாக இம்மலை உயர்ந்து நிற்கின்றது. சிவன்மலை என்று சொல்லப்படுகின்ற மலைக்கு வடக்கு திசையில் குற்றால மலை அமைந்திருக்கின்றது. உலகில் இருக்கின்ற பல்வேறு மலைகளின் சிறப்புகளை ஒருங்கே பெற்றுள்ள சிறப்பிற்குரிய மலை எங்களுடைய திருக்குற்றால மலை ஆகும். வைரங்களும் மாணிக்கங்கள் விலை மதிக்க முடியாத பிற பொருள்களும் கிடைக்கும் மலை எங்களுடைய குற்றால மலையாகும். சூரியன் தன் கதிர்களை மலைகளின் வழியாக நுழைந்து தன்னுடைய ஒளியை உலகிற்குப் பரப்புகின்ற மலை குற்றால மலையாகும். திருப்பாற்கடலில் பாம்பின் மீது இருக்கின்ற பரமன் கண்விழித்து உலகம் முழுவதும் தேடினாலும் எங்களுடைய குற்றால மலை போல சிறப்பான மலையை எங்கும் காணமுடியாது. என்பதனை


கயிலை எனும் வடமலைக்கு தெற்குமலை அம்மே
கனக மகா மேரு மலை என நிற்கும் மலை அம்மே
வைரம் உடன் மாணிக்கம் விளையும் மலை அம்மே
வாணின் ரவி முழைகள் தெரறும் நுழையும் மலை அம்மே


இப்பாடலில் பல மலைகளின் பெயர்களையும் சிறப்புகளையும் எடுத்துரைத்து அவற்றிலிருந்து மாறுபட்ட சிறப்பினை உடையது குற்றாலமலை என்பதனை சுட்டிக்காட்டியிருக்கிறார்.


யாருக்கு உரியது


கொல்லிமலை எனக்கு பின் பிறந்த என்னுடைய தங்கையான செல்லி என்பவள் வசிக்கின்ற மலையாகும். அவருடைய கணவனுக்கு உரியமலை பழனிமலையாகும். என்னுடைய தந்தைக்கு உரிய மலை கதிரவன் படிந்து செல்லும் விந்திய மலையாகும். இமயமலை என்னுடைய சகோதரனுக்கு உரிய மலை ஆகும். என்னுடைய மாமியாருக்கு உரிய மலை சொல்லுவதற்கு அரிய சிறப்புகளை உடைய சுவாமிமலை ஆகும். என் தோழியின் மலை நாஞ்சில் நாட்டில் இருக்கக்கூடிய வேள்வி மலையாகும். மேகக் கூட்டங்களில் இடியென முழங்கும் ஓசைக்கு ஏற்ப மயில் இனங்கள் நடனம் புரிந்து கொண்டிருக்கின்ற மலை எங்கள் திரிகூட மலை. இதனை,


கொல்லிமலை எனக்கு இளைய செல்லி மலை அம்மே
கொழுநனனுக்கு காணி மலை பழனி மலை அம்மே
எல் உலவும் விந்தை மலை எந்த மலை அம்மே
இமயமலை என்னுடைய தமையன் மலை அம்மே


என்ற இப்பாடல் வரிகளில் காணமுடிகிறது.


குறவர்குல மக்களின் இயல்புகள்


குறவன் குறத்தி அல்லாது வேறொரு குலத்தில் நாங்கள் திருமண உறவினைச் செய்யமாட்டோம். குறவர் குலத்தைத் தவிர நாங்கள் வேறு ஒரு குலத்தில் பெண் கொடுக்க மாட்டோம் பெண் எடுக்க மாட்டோம். நாங்கள் ஒருவரை ஒருவர் உறவான பின் எத்தகைய சூழலிலும் உறவிலிருந்து அவர்களைக் கைவிட மாட்டோம். தினணப்புனம் காத்து கொடிய விலங்குகளில் இருந்து எம்மை பாதுகாத்த வேலவன் ஆகிய முருகனுக்கு எங்கள் குலப் பெண்ணையும் கொடுத்துப் பல்வேறு வகையான மலைகளையும் சீதனமாகக் கொடுத்தோம்.

பல திருமணங்களைச் செய்து கொண்டிருக்கின்ற காலச்சூழலில் தனது வாழ்வியல் சூழலை நன்கு ஏற்றுக் கொண்டிருக்கின்றஇ தனது மரபுகளைக் கற்றுக் கொண்டிருக்கின்ற உறவினைச் சார்ந்து இருப்பதும் சிறப்பிற்குரியது. மனிதன் இணக்கமாக வாழ்கின்ற போது அவனுக்கு கிடைக்கின்ற மகிழ்வோ அளவிட முடியாதது. விட்டுக் கொடுத்து வாழ்வதும் மரபுகளைக் கட்டிக் காப்பதும் உறவுகளைப் பேணிப் பாதுகாப்பதும் வலிமை தரக்கூடியது என்பதனை தன்னுடைய மலைவளம் வாயிலாக எடுத்துரைத்திருப்பது சிறப்பிற்குரியது.


நிறைவுரை:


நாட்டினுடைய சிறப்புகளை மட்டும் அல்ல அங்கு வசிக்கின்ற மக்களின் வாழ்வியல் நிலைப்பாடுகளையும் தொழில் வளங்களையும் அங்கே அமர்ந்திருக்கின்ற இறைவனுடைய சிறப்புகளையும் தன்னுடைய உறவுகளின் பெருமையையும் திறமையையும் எடுத்துரைத்திருப்பது சிறப்பிற்குரியது. ஆறு பாடல்களில் குற்றால மலையின் பல்வேறு வகையான கருப்பொருள்கள் எடுத்துக்கூறி நூல் முழுமைக்கும் சிறப்பு செய்திருப்பது அளவிடற்கரியது. இத்தகைய சிறப்பிற்குரிய சிற்றிலக்கியங்களை அவ்வப்பொழுது நாம் சுவைப்பதும் நலம் பயக்கும். உறவுகள் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதும் மரபு மாறாமல் உறவுகளைப் பேணிப் பாதுகாப்பதும் எவ்வளவு அவசியமான ஒன்று என்பதனை மிகத்தெளிவாக இந்நூலில் ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.





முனைவர் நா.அமுதா தேவி
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
கோவை.








 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்