தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்

முனைவர் நா.அமுதா தேவி    



முகவுரை:


கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி ஆக நம் தமிழ்மொழி விளங்கி வருகிறது. இயற்கையுடன் இயைந்த வாழ்வியலை நம் சான்றோர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதனை நம் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. இவ்வாறு இயற்கையோடு இயைந்த வாழ்வியலை நம் ஐந்து வகையான நிலப்பாகுபாடு முறைகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஒவ்வொரு இலக்கிய நூல்களிலும் தாம் கண்டுணர்ந்த அனுபவங்களைப் பாடல்களாகவும் இலக்கியங்களும் பதிவு செய்திருப்பது இன்னும் வியப்பிற்கு உரியதாக இருக்கிறது. அவ்வகையில் நம் பண்டைய இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்ற அறிவியல் பதிவுகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.


தமிழ் இலக்கியங்களில் அறிவியல்



மக்கள் தாம் வாழ்ந்த நிலப்பரப்பிற்கு ஏற்ப அறிவியலை வளர்த்து வந்துள்ளனர். திசைகள் அறிந்து வீசும் காற்றின் திசையைக் கணக்கிட்டு காற்றுக்கூட முறையாகப் பெயரிட்டுள்ளனர். ஒவ்வொரு திசையிலிருந்தும் வீசும் காற்றுக்கு ஏற்ப அதன் தன்மை மாறுபட்டு இருந்திருக்கிறது. எனவே தெற்கிலிருந்து வீசினால் தென்றல் எனவும் வடக்கிலிருந்து வீசினால் வாடைக்காற்று எனவும் கிழக்கிலிருந்து வீசினால் கொண்டல் எனவும் காற்றுகூட முறையாகப் பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.


திருக்குறளும் அறிவியலும்



திருக்குறளில் பல்வேறு வகையான குறள் பாக்கள் வகைப்படுத்தப்பட்டு இருப்பினும் அவற்றில் பல குறள் பாக்கள் நம் முன்னோர்களின் மதிநுட்பத்தை மிகத்தெளிவாக எடுத்துரைக்கின்றன. அறத்துப்பாலில் வான்சிறப்பு எனும் அதிகாரத்தில்


'நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் '



என்ற குறள் பா வாயிலாக கடல் நீர் ஆவியாகி மழையாகி பெய்கின்ற நிகழ்வினை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். இதுவே இன்று நாம் நம் கல்வி முறையில் பயிலும் வாட்டர் சைக்கிள். (எவாபொரேஷன் ) விஞ்ஞானத்தைக் கூட அறம் வாயிலாக சுட்டி உரைத்தது நம் இலக்கியங்களில் மிகப்பெரிய தலையாயப் பண்பாகும். அறிவியலை வாழ்வியலுடன் இணைத்துக் கூற தமிழால் மட்டுமே முடியும்.


தங்கம் உருவாகும் முறை



மண்ணிலிருந்து எடுக்கப்படும் பொன் முழுவதும் தூய்மையானது அல்ல அதில் இடம்பெற்றுள்ள வேண்டாத பொருள்களை அகற்றினால் மட்டுமே தூய்மையான பயன்பாட்டிற்கு உடைய நிலையில் தங்கம் கிடைக்கும். அவ்வாறு பயன்பாட்டிற்கு உரிய நிலையில் தங்கத்தை மாற்றுவதற்கு முக்கிய இடத்தைப் பெறுவது நெருப்பாகும். தங்கத்தை நெருப்பினால் உருக்கித் தேவையில்லாத கழிவுகளை நீக்கியதும் தங்கம் தன்னுடைய ஒளியைப் பெற்று விடுகிறது இதனை வள்ளுவர்


'சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோக்கில் பவருக்கு'



என்ற குறள்(267) பாக்களின் வாயிலாக எடுத்துரைத்துள்ளார்.


தொல்காப்பியமும் அறிவியலும்


தொல்காப்பியம் இடைச்சங்க காலத்தில் எழுந்த முதல் இலக்கண நூலாகும். தொல்காப்பியர் இந்நூலில் ஐம்பூதங்களின் தோற்றம் பற்றியும் உலகில் உள்ள ஆறறிவு உயிரினங்களின் வளர்ச்சி நிலைகள் குறித்தும் மரபியலில் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வுலகம் பஞ்சபூதங்களால் உருவானது என்பது ஓர் அறிவியல் உண்மையாகும். இவ்வுண்மையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காப்பியர் சுட்டிக்காட்டியுள்ளார்.


'நிலம், தீ,  நீர், வளி, விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல் நெறி
வழாமைத் திரிவு இல் சொல்லொடு'



என்ற மரபியல் நூற்பாவின் வாயிலாகச் சுட்டிக் காட்டி இருப்பது சிறப்பிற்கு உரியது.

தொல்காப்பியர் தாவரங்களின் உயிர்இஉணர்வுஇஅறிவு ஆகியவைகள் குறித்து தம்முடைய நூலில் சுட்டிக்காட்டியுள்ளார் இவற்றினை ஓரறிவுஉயிர் இஈரறிவுஉயிர் இமூவறிவுஉயிர் நான்கறிவு உயிர்,  ஐந்தறிவு உயிர், ஆறறிவு உயிர் என ஆறு வேறு வகையாக உலகில் இருக்கின்ற உயிரினங்களைப் பகுத்து தம்முடைய நூற்பாவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


'ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே'



என்ற நூற்பாவின் வாயிலாக உயிரினங்களின் பகுப்பு முறையினைமிகத்தெளிவாக(பொருள்571)சுட்டிக்காட்டியுள்ளார். எவ்விதமான ஆய்வுக் கூடங்களும் ஆய்வு உபகரணங்களும் இல்லாத நிலையிலும் உயிரினங்களை மிகத்துல்லியமாக உணர்வுகளுடன் பகுத்து இருப்பது என்பது மிகவும் வியப்பிற்கு உரியதாக உள்ளது .

வானிலிருந்து ஒளிவிடும் மின்னலின் வெளிச்சம் குறித்தும் கதிரவனின் சுடர் குறித்தும் வெள்ளி கோள்கள் குறித்தும் கோள்களின் நிலை எத்தகைய மாற்றத்தைத் தரும் என்பது குறித்தும் தன்னுடைய நூற்பாக்களில் சுட்டிக் காட்டி இருப்பது சிறப்பிற்கு உரியது.


'வயங்கு கதிர் விரிந்து வான் அகம் சுடர் வர
வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி'
 (23_24)


வெள்ளி கோள் வடக்கில் தோன்றினால் நல்ல மழை பொழியும் என்பதும் பஞ்சபூதங்கள் சூரியன் இயற்கை வளங்கள் மழை ஆகியவற்றை இலக்கண நூல்களின் வாயிலாகக் காட்சிப்படுத்தி இருப்பது மிகவும் வியப்பிற்கு உரியது.

நம் முன்னோர்களின் வாழ்வில் அனு முதல் அண்டம் வரை அறிவியல் எல்லா நிலைகளிலும் பரவியிருக்கிறது இலக்கியத்தினை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தன்னுடைய அனுபவங்களையும் அறிவியலையும் கலந்து படைப்பாகவே நல்கி இருக்கின்றனர். அன்றைய நம் சான்றோர்கள் கண்ட கனவுகளே இன்று பல நிலைகளில் நிஜங்கள் ஆக வலம் வருவதைக் காணமுடிகின்றது. இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலையின் ஆதாரத்தினை நாம் நம்முடைய சான்றோர்களின் வாயிலாகவே பெற்றிருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். நம்முடைய கோவில்களில் இருக்கின்ற சிற்பங்களில் கூட பல்வேறு வகையான நுட்பங்களைச் செதுக்கி வைத்திருக்கின்றனர். கருவில் இருக்கின்ற குழந்தையின் வளர்ச்சிநிலை முதல் மனிதனுடைய கரங்களில் இருக்கின்ற நரம்பின் அமைப்பு முறை சிற்பங்களில் வடிவமைத்திருக்கிறார்கள் என்று சொன்னால் நம் சான்றோர்கள் எப்படியான வாழ்வியல் முறையை வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதனை நாம் அறிய முடிகின்றது.


ஔவையும் அறிவியலும்


திருக்குறளின் பெருமையைக் கூறவந்த அவ்வையார் 'அணுவைப் பிளந்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்' என்ற தம் கருத்தினை அறிவியலுடன் தொடர்புபடுத்தி வடிவமைத்திருக்கிறார். அணு என்பது நம் கண்களுக்குப் புலப்படாத மிகச்சிறிய அளவிலான மூலக்கூறு ஆகும். ஆயினும் இதனைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் அவ்வையார் அதனை அறிந்து வைத்து தம்முடைய பாடலில் பதிவு செய்வது என்பது நம் முன்னோர்களின் அறிவியல் அறிவினைப் பறைசாற்றுகின்றது. பாரதியார் அணுக்களின் அசைவுகளைத் தன் படைப்புகளின் வாயிலாகச் சுட்டியுள்ளார்.

பரிபாடலும் நில அமைப்பு முறையும்

'கருவளர் வானத்திசையில் தோன்றி
ஒருவரி வாரா உவரி
ஒரு உரு வரி வாரா ஒன்றன்
ஊழியும் உந்து வளி கிளர்ந்த
உள முழ் ஊழியும்
    (பரிபாடல் 2_ 5_12)

இப்பாடலில் வானிலிருந்து காற்றும் காற்றிலிருந்து தீயும் தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் தோன்றிய நிலையைச் சுட்டியுள்ளார். இவை மட்டுமல்லாமல் பூமி சூரியனில் இருந்து பிரிந்து நெருப்புக் கோளமாக மாறியது எனவும் காலப்போக்கில் இந்நிலை குளிர்ந்து பனிப்படலம் ஆக மாறி நிலம் தோன்றியது என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.


மழை பெய்யும் முறை


'நிறைய கடல் முகம் துழாய் முகந்து ராய்
விரைந்து நிறைந்து நீர் தளும்பும் தன் பொறை
தவிர்ப்பு அசை விட '    
 (பரி 6.1_2)

என்ற பரிபாடலின் வரிகள் மேகக்கூட்டங்கள் கடல் நீரினை முகந்துகொண்டு மழை பெய்கின்ற நிகழ்வினைச் சுட்டிக்காட்டியுள்ளது.


பதிற்றுப்பத்தில் அறிவியல்


பதிற்றுப்பத்தின்(ஐந்தாம்பத்து)போர்களத்தில் வெட்டுண்ட வீரர்களின் உடலை சீர் செய்த மருத்துவர்களின் செயலைக் காட்சிப்படுத்தி இருக்கிறது.


'மீன்ரோர் கொட் பில் பனிக் கயம் மூழ்கி
சிறல் பெயர்ந்தன நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த உடு வாழ்வாழ் மார்பில்
மார்பின் வால்
    (பதிற்றுப்பத்து 42.2_6)


காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார் பாடல் போர்க்களத்தில் வீரன் ஒருவனுக்கு சிகிச்சை மேற்கொண்ட நிலையைச் (புறப்பாடல் 353)சுட்டிக்காட்டுகிறது.

வெட்டுண்டு கிழிந்த நிலையில் உள்ள உடல் தசையினைத் தைத்து மருந்திட்டு புண்ணின் மேல் பஞ்சு எண்ணெய் வைத்து சிகிச்சை செய்த நிலையைப் புறப்பாடல் எடுத்துரைக்கிறது. எவ்விதமான நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் இல்லாத காலகட்டத்திலும் நவீன சிகிச்சை முறைகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் ஆன்றோர்கள் கையாண்டு வந்துள்ளனர் என்பது பெருமையான செயலாகும்.


இயற்பியல் அறிவு


நம் ஆன்றோர்கள் அறிவியல் மருத்துவம் என்ற நிலையில் மட்டுமல்லாது இயற்பியலிலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர். சிவஞான முனிவர் அவர்கள் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் என்ற தம் நூலில் ஊசல் பருவத்தில் ஊசலாடும் நிகழ்வினை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊசல் கயிறு நீளமாக இருப்பின் மெதுவாக ஆடுகிறது எனவும் காதில் அணிந்து இருக்கின்ற குண்டலம் குறைவான நீளத்தில் இருப்பதால் விரைவாக ஆடுகிறது எனவும் கலிலியோவின் ஊசல் தத்துவத்தினை மிக எளிதாக இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

'ஊசலாட பங்கய மடமாதர் நோக்கி ( அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் ஊசல் பருவம்) என்ற வரிகள் ஊசல் தத்துவத்தினைச் சுட்டிக்காட்டுகிறது.


நிறைவுரை:


இத்தகைய பண்டைய இலக்கியங்களை நோக்கும்பொழுது எண்ணற்ற அறிவியல் உண்மைகளை அறிந்துகொள்ள முடிகின்றது. பல்வேறு வகையான சித்தர் பாடல்களின் வாயிலாகவும் நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாகவும் பல அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடப்பதை நாம் தேடி அறிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய ஆய்வுகளின் வாயிலாக வரும் தலைமுறையினர் தம்முடைய எதிர்காலத்திற்குத் தேவையான அறிவியல் அறிவினையும் அதற்கான தீர்வையும் நம் சான்றோர்கள் முன்கூட்டியே சுட்டிக்காட்டி இருப்பார்கள் என்பதனை தெள்ளத்தெளிவாக அறியமுடிகின்றது.

எவ்விதமான தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் தம்முடைய அறிவினை மட்டும் துணையாகக் கொண்டு இத்தகைய இலக்கியங்களைப் படைத்திருப்பது மிகவும் போற்றுதலுக்கு உரியதாக இருக்கிறது காலம் கடந்தும் இந்த அறிவியல் உண்மைகள் இன்று பல தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்துகிறது என்று சொன்னால் அது முற்றிலும் உண்மையே ஆகும்.





முனைவர் நா.அமுதா தேவி
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
கோவை.








 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்