தமிழ் இலக்கியங்களில் வேளாண்மை செய்திகள்

பேரா.த. மார்க்ரெட் மாலதி


ஆரிய மாயைக்கு எதிராகத் தமிழ் ஆர்வலர்கள் 'கடல்கொண்ட தென்னாடு' என்கிற வரலாற்றுப் புதினத்தை எழுதி அதனைத் தொன்மமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். நச்சினார்க்கினியரால் எழுத்தில் கொண்டுவரப்பட்ட தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் பற்றிய தொன்மத்தையும் ஐரோப்பியப் புவியியலாளர் முன்வைத்த லெமூரியக் கண்டக் கருதுகோளையும் இணைத்து மிக அருமையான வரலாற்றுப் புதினத்தைப் படைத்துவிட்ட தமிழ் ஆர்வலர்கள், அதனையே தமிழ்ச் சமூக வரலாறு எனவும் கூறத் தலைப்பட்டுவிட்டனர். தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் தொடர்பான தொன்மம் உண்மையில் தமிழ் மொழியின் செழுமைக்கு விடை கூறுவதாக இருக்கமுடியும்; ஆனால் தமிழ்ச் சங்கங்களை இந்துமாக் கடலில் தேடுவதாக நினைத்துக்கொண்டு, தமிழரின் வரலாற்றை அக்கடலுக்குள் புதைக்கின்ற பணியைச் செய்துவருகின்றனர். பிராமணர்கள் தமிழ்ச் சமூகத்திற்கும் இந்தியச் சமூகத்திற்கும் அந்நியமானவர் எனக் காட்டுவதற்காக, ஆரியர் வெளியிலிருந்து வந்து இந்தியாவிற்குள் குடியேறிய மக்கள் என்ற கருதுகோளைத் தமிழ் ஆர்வலர்கள் வலுவாகப் பிடித்துக்கொண்டனர். அறிவியல்பூர்வ ஆய்வுகள், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமுமே வந்தேறிகள் என்பதற்கான சான்றுகளைத் தரும்பொழுது அதனை அவர்களால் ஏற்க முடியவில்லை.

வேளாண்மை நுட்பம்:

அன்றைய இயற்கைச்சூழல், பருவகாலம் ஆகியவற்றிற்கு ஏற்ப நிலத்தை நன்கு உழுது தயார்செய்தலும், விதைகளைத் தேர்வு செய்வதில் உள்ள தெளிவும், பயிர்நுட்ப அறிவும், நீர்ப்பாசன நுட்பமும், வேளாண்மை காவல் பணியும், போன்ற அனைத்தையும் திணைகளின் அடிப்படையில் தமிழரின் வேளாண்மை நுட்பத்தை அறிந்து கொள்ளலாம்.

நிலப் பாகுப்பாடு:

விளை நிலங்களின் தன்மைக்கு ஏற்பவும் அதன் இயல்புக்கு ஏற்பவும் பெயர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை வன்புலம், மென்புலம்,புன்புலம், களர்நிலம் என்று பாகுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றின் குறிப்புகளை இலக்கியப் பாடல்களின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.

குறிஞ்சி, முல்லை ஆகிய இரண்டு நிலத்திலும் நீர் வளம் குறைந்து காணப்படுவதால் அந்நிலப்பகுதி கரடு, முரடான மண் வளத்தைக் கொண்டதாக காணப்படுகிறது. இந்நிலப் பகுதியினை வன்புலம் என்று அழைக்கின்றன.

''வன்புலக் காட்டுநாட் டதுவே'' (நற்,-59)
'வன்புல நாடன் வயமான் பிட்டன்' (புறம்,172-8)

மருத நிலத்தில் நீர் வளமும், மணற்பாங்கான தன்மையும் இயல்பும் உடையதாகக் காணப்படுவதால் பயிர் விளைச்சலுக்கு ஏற்றதாக உள்ளது. ஆகையால் இவற்றை மென்புலம் என்று அழைத்தனர்.

'மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே' (தொல், பொருள், கற்பியல் 142)

மேற்கண்ட சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் கீழோர் என்பதற்கு வேளாளர் என்றே பொருள் குறிப்பிடுகின்றனர். வேளாளரைக் கீழோராக ஏற்க மனம் ஒப்பாத மறைமலையடிகள் இச்சூத்திரத்திற்குப் புதிய வகை விளக்கம் அளித்துள்ளார்.

'மேலோராகிய அந்தணர், அரசர், வேளாளராகிய மூவர்க்குங் கூட்டிச் சொல்லிய வேள்விச் சடங்கு, ஏனைக் கீழோராகிய பதினெண் வகுப்பாருக்கும் உரித்தான காலமும் உண்டு என்பதாகும்', என்று தனது வேளாளர் நாகரிகம் என்ற நூலில் உரை கூறியுள்ளார். வேளாளர், கீழோராகச் சித்திரிக்கப்பட்டுள்ளதை மறைப்பதற்கு அடிகளார் வணிகரையும் (வைஸ்யர்) வேளாளரையும் ஒரே வர்ணமாக்கித் தனது புத்திக்கூர்மையை நிறுவுகின்றார். மேலும், கீழோர் என்று அவர் பட்டஞ் சூட்டிய பதினெண் குடியினரைப் பட்டியலும் இட்டுள்ளார்.

'இனி கொலைபுலை நீக்கமாட்டாராய் அறவொழுக்கத்திற் தாழ்ந்து நிற்போரான மற்றைத் தமிழ்க் குடிகளைத் தமது உழவுத் தொழிலுக்கும் தமக்கும் உதவியாகும் பல கைத்தொழில்களைப் புரியும்படி ஏவி அவர்களைப் பதினெண் வகுப்பினராகப் பிரித்து வைத்தவர்களும் வேளாளர்களேயாவர். அப்பதினெண் வகுப்பினராவர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கண்ணார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் என்பவரேயாவர். இப்பதினெண் வகுப்பினரும் தத்தமக்குரிய தொழில்களைச் செய்து கொண்டு வேளாளர் ஏவல் வழி நின்று...'

அடிகளார், தற்காலச் சமூக நிலைமைகளைத் தமக்குச் சாதகமாகக் கொண்டு இப்பட்டியலைக் கூறுகிறார். ஆனால், தொல்காப்பியம் இலக்கணப்படுத்தியுள்ள சங்க காலத் தமிழச் சமூகத்தில் சாதிகளின் படிநிலை இப்போதுள்ளவாறு காணப்படவில்லை. இன்று 'பார்ப்பானுக்கு முந்திய பறையோன்' எனக் கூறிக்கொள்ளும் பறையர் சாதியின் ஒரு கிளைச் சாதியாக உள்ள வள்ளுவர் சாதியினர் சங்க கால வாழ்வியலில் அறிவர் என்றும் கணியன் என்றும் அழைக்கப்பட்டுப் பார்ப்பாருக்கு நிகரான சாதியாக விளங்கியுள்ளனர். மருத்துவரும் நாவிதரும் ஒரே சாதியினராவர். சங்க காலத் தலைமக்களின் வாயில்களாக இருந்த பார்ப்பார் இம்மருத்துவரே. வட இந்தியாவில் 'வைத்யா' என்ற பட்டத்துடன் கூடிய பிராமணரும் தமிழ் மருத்துவரும் ஒத்த மரபினர் ஆவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பாண்டியனின் அமைச்சருமாகிய மாணிக்கவாசகரும், பல்லவ மன்னனின் போர்ப்படைத் தளபதியாக இருந்து வாதாபியை வெற்றிகொண்ட பரஞ்ஜோதி முனிவரும் மருத்துவ சாதியினரேயாவர். வேந்தர்களுக்கு மகற்கொடைக்குரியோராகிய இம்மரபினர் சங்ககால வாழ்வியலில் அமாத்தியர் பட்டம் பெற்ற மிக உயர்ந்த சாதியினராவர். தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார் என்ற ஐந்து பிரிவினரும் சேர்ந்த 'பஞ்ச கம்மாளர்' என்று அழைக்கப்படும் விஸ்வகர்மா சாதியினரும் ஒரு வகையான பிராமணர்களே. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சித்தூர் ஜில்லா நீதிமன்றத்தில் தாங்களே உண்மையான பிராமணர்கள் என்று இவர்கள் வழக்காடியது குறிப்பிடத்தக்கது. மட்பாண்டங்கள் செய்யும் குயவர் சாதியினர் சங்க காலத்தில் வேட்கோவர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். வேள்வி செய்யக்கூடிய தலைமக்கள் என்பது இதன் பொருள். சிவனையே எதிர்த்து வாதாடிய நக்கீரன், சங்கறுக்கும் சாதியைச் சேர்ந்தவர். இவர்களும் அறிவருக்கு (வள்ளுவர்) இணையான ஒரு பிராமண சாதியினராவர். இவர்களை 'வேளாப் பார்ப்பார்' எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

மொத்தத்தில், வெள்ளாளர்களுக்கான ஏவல் மரபினராக மறைமலையடிகள் பட்டியலிட்டுள்ள எந்த சாதியினரும் சங்க கால வாழ்வியலில் வேளாளரை விடத் தாழ்ந்த நிலையில் இருந்திருக்கவில்லை. இவ்வகையில் வேளாளரை உயர்த்திக் கூறுவதற்காக ஏற்றம் மிக்க பிற குடிகளைக் கீழோராகச் சித்திரிப்பது வேளாள மாயையின் வழிமுறையாக உள்ளது. தொல்காப்பியம் கூறும் நான்கு வர்ண சமூக அமைப்புப் பற்றி வே. கனகசபைப் பிள்ளை என்ற வரலாற்றறிஞர்(?) தனது 1800 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் என்ற புகழ்பெற்ற நூலில் கூறியுள்ள கீழ்க்கண்ட கருத்துகள் வேளாள மாயையின் உள்நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

'இதுதான் தமிழர்களைத் தங்கள் சாதியமைப்புக்குள் கொண்டுவர பிராமணர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரிய, வைசிய, சூத்திர சாதிகள் இல்லாததால் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. மேலும் இதுநாள் வரையிலும் தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்கிற ஒரு படையாச்சி அல்லது வைசியன் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டில் வெள்ளாளர்கள் உணவருந்தவோ, தண்ணீர் குடிக்கவோமாட்டார்கள்.'

இதிலிருந்து தெரிவதென்ன? கனகசபைப் பிள்ளை, மறைமலை அடிகள் போன்ற பெருமக்கள், தமிழ்ச் சமூகத்தில் நான்கு வருணப் பகுப்பு முறை இல்லை என நிறுவ முற்படுவது, வேளாளர் நாலாஞ் சாதியாகி விடக்கூடாது என்ற உயர்ந்த (கேவலமான) சாதி மறுப்புக் கொள்கையினால்தானேயன்றி வேறல்ல. தமிழ்ச் சமூகத்தில் நான்கு வருணப் பகுப்பு முறை உண்டென்று ஏற்றுக்கொண்டால், தமிழர் அனைவரும் சூத்திரராகிவிடுவர், அதுவும் மேற்சூத்திரராகிய வேளாளரையும்விட இழிந்த கீழ்ச்சூத்திரராகிவிடுவர் என இக்கனவான்கள் கதைக்கின்றனர். உண்மையில் நான்கு வருணப் பகுப்பு முறை தமிழகத்தில் உண்டு என ஏற்றுக்கொண்டால், வேளாளர் தவிர்த்த பிற அனைத்துத் தமிழ்க் குடிகளும் மேல் மூன்று வருணத்தில் அடங்கிவிடுவர். உண்மையில் மேல் மூவராகிய பிற தமிழ்க் குடிகளின் ஆணைவழி நிற்றல் வேளாளருக்கு விதிக்கப்பட்ட கடமையாகும். புறப்பொருள் வெண்பாமாலை, வேளாண் வாகையில் இதனைத் தெளிவுபடுத்துகிறது.

மேல் மூவரும் மனம் புகல
வாய்மையான் வழி யொழுகின்று (வாகைத் திணை 10 : 165)

கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகரம் நிகண்டு, வேளாளருக்குரிய தொழில்கள் என கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிடுகிறது.

வேளாளர் அறுதொழில் உழவு, பசுக்காவல்,
தெள்ளிதின்ன வாணிகம், குயிலுவம், காருகவினை, ஒள்ளியன
இருபிறப்பாளர்க்கு ஏவல் செயல்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிங்கல நிகண்டு, 'மேல் மூவரின் ஆணைவழி நிற்றல்' என்பதை வேளாளரின் முதன்மைத் தொழிலாகக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு பிற தமிழ்க் குடிகளின் ஏவல் வழி நின்றுவந்த வேளாளர், களப்பிரர் கால அரசியல் மாற்றத்திற்குப் பின்னர் படிப்படியாக சமூகப் பொருளாதாரத் தளங்களில் ஏற்றம் பெற்றுள்ளனர். இது குறித்து திண்ணை இணைய இதழில் பிரசுரிக்கப்பட்ட, 'நான்கு வருணக் கோட்பாடு - தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை' என்ற கட்டுரையிலும், புது விசை காலாண்டிதழில் பிரசுரிக்கப்பட்ட, 'நாடும் நாயன்மாரும் மூடுதிரை வில(ள)க்கம்'என்ற கட்டுரையிலும் இக்கட்டுரையாசிரியரால் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்றம் பெற்ற வேளாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் இன்னமும் தமிழ்ச் சமூக வரலாற்றை முடிந்த அளவு குழப்பிக் கொண்டு வருகின்றனர்.

வேளிரும் வேளாளரும்:

வேளிரே வேளாளர் என்று சொல் ஒப்புமையை ஒட்டி எழுந்த தவறான நம்பிக்கை தமிழக வரலாற்று ஆய்வாளரிடையே நிலவி வருகின்றது. இந்நம்பிக்கை பெரும்பாலான ஆய்வாளர்களுக்கு கேட்பதற்கு இனிதாகவும் எழுதுதற்குச் சுகமாகவும் இருப்பதால் இதனை விசாரணைக்கு உள்ளாக்க அவர்கள் ஒருபோதும் உடன்படுவதில்லை. சங்க காலத் தமிழ் வேந்தர்கள், மருத நிலத் தலைமக்களாவர். 'வேளாண்மையாகிய உழவுத் தொழில்' செய்துவந்த, மருதநிலக் குடிகளான வேளாளரிலிருந்தே வேந்தர்கள் தோன்றினர் என்பது இவர்களின் நம்பிக்கை. ஆனால் வேளிர்களை வேளாண்மையுடன் தொடர்புபடுத்த முடியாது என ஆர். பூங்குன்றன் பின்வருமாறு கூறுகிறார்:

'வேளாண்மைக்கும் வேளிர்க்குமிடையில் உள்ள தொடர்பு பல படிநிலைகளைக் கொண்டது. வேளிர்கள் உண்மையில் வேளாண்மையில் ஈடுபட்டது மிகவும் பிற்பட்ட வரலாறு. சங்க இலக்கியத்தில் வேளிருடைய ஊர்களில் நெல் விளைச்சல் மிகுந்திருந்தது என்று கூறுவது கொண்டு வேளிர்களை வேளாளர்களின் முன்னோர் என்று கருதுவது பொருத்தமுடையதாக இல்லை. வேளிர்கள் கால்நடை வளர்ப்பினராகவும் போர் மறவராகவும் இருந்துள்ளனர். சங்க இலக்கியத்தில் வேளிர்க்கும் கால்நடை வளர்ப்பிற்குமிடையில் உள்ள தொடர்பு பற்றிய சான்றுகள் குறைவாகவே கிடைக்கின்றன. ஆனால் வேளிர் பற்றிப் பின்னாளில் கூறப்படும் மரபுத்தோற்றக் கதை அவர்களின் தொழிலைச் சுட்டுகின்றது. வேளிர்கள் அனைவரும் தங்களை யாதவர்கள் என்று கூறிக்கொள்வது கால்நடை வளர்ப்புக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பினைச் சுட்டும்.' (தொல்குடி - வேளிர் - அரசியல், செங்கம் நடுகற்கள் - ஓர் ஆய்வு, பக். 93-94.)

துவாரகையை ஆண்ட கண்ணனின் வழி வந்தவரே வேளிர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பியப் பாயிர உரைக்குறிப்பும் புலப்படுத்துகின்றன. எனவே பூங்குன்றன் அவர்கள் கருதுவதுபோல் வேளிரை யது குலத்துடன் தொடர்புபடுத்தலாமேயன்றி வேளாண்மை செய்யும் குடியுடன் தொடர்புபடுத்த முடியாது. உண்மையில், நம் ஆய்வாளர்கள் கருதுவதுபோல் 'வேளாண்மை' எனுஞ்சொல் உழவுத் தொழிலைக் குறிப்பதல்ல.

வேளாண்மை - உபகாரம்:

தொல்காப்பியத்தில்தான் 'வேளாண்' என்ற சொல் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளதிகாரம் 105ஆம் சூத்திரத்தில் 'வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்' என்ற அடிக்கு, 'தலைவி உபகாரம் எதிர்ப்பட்ட விருப்பின் கண்ணும்' என இளம்பூரணர் உரை கூறியுள்ளார். இங்கு 'வேளாண்' என்ற சொல், 'உபகாரம்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளதிகாரம் 112ஆம் சூத்திரத்தில் கூறப்படும் 'வேளாண் பெருநெறி' என்பதற்கு விளக்கம் கூறும் இளம்பூரணர், 'வேளாண்மையாவது உபகாரம், பெருநெறியாவது உபகாரமாகிய பெருநெறி என்க' என்கிறார். ஆக, வேளாண்மை என்ற சொல், 'உபகாரம்' என்ற பொருளிலேயே தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கலித்தொகை 101ஆம் பாடலில் 'வேளாண்மை செய்தன கண்' என்ற வரிக்கு 'தலைவனைக் கண்டு என் கண்கள் உபசாரம் செய்தன' என்றே உரை கூறப்பட்டுள்ளது. 'வேளாண்மை' என்ற சொல்லிற்கு 'விருந்தோம்பல்' என்ற பொருளை நிகண்டுகள் அனைத்தும் கூறுகின்றன. வள்ளுவரும் 'வேளாண்மை' என்ற சொல்லை உபகாரம் எனும் பொருளிலேயே பயன்படுத்துகிறார்:

'இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு' (குறள் 81)

'விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு' என்பதற்கு 'விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு' என்று பரிமேலழகர் உரை கூறுகின்றார். பாரதி தீபம் நிகண்டு, 'வேளாண்மை' என்ற சொல்லுக்கு 'உபகாரமும் மெய்யுபசாரமும்' என்றே பொருள் கூறுகின்றது. எனவே வேளாண்மை என்ற சொல் உழவுத் தொழில் என்ற பொருளில் தொடக்க காலங்களில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என உறுதியாகச் சொல்ல முடிகிறது. வேளாண் மாந்தர்கள், மேல் மூன்று வர்ணத்தவர்க்கும் குற்றேவல் செய்து வந்ததுடன் உழவுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததினால் பிற்காலத்தில் உழவுத் தொழில், வேளாண்மை என்று கூறப்பட்டுவிட்டது.


உழவுத் தொழிலும் வேளாளரும்:


'வேளாண் மாந்தர்க்கு உழுதூணல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி' (தொல். பொருள். 628)

முதல் மூன்று வர்ணத்தவர்க்கும் உபகாரம் செய்ய விதிக்கப்பட்ட வேளாண் மாந்தருக்கு உழுதுண்டு வாழ்வதே வருவாய்க்கென அனுமதிக்கப்பட்ட தொழில் என்பதையே தொல்காப்பியம் இவ்வாறு உரைக்கிறது. 'சூத்திரர்' என்கிற நேர்ப் பொருளில் நிகண்டுகள் கூறும் வேளாளர், உழவுத் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டது எவ்வாறு என்பது விளக்கப்பட வேண்டிய ஒன்றாகும். வேளாளருடன் ஏர் (கலப்பை) தொடர்புபடுத்தப்படுவதால் உழவுத் தொழிலுக்கும் வேளாளருக்குமான தொடர்பு நிச்சயமாகிறது.


பேரா.த. மார்க்ரெட் மாலதி
உதவிப்பேராசிரியர்
பிஷப் அப்பாசாமி கல்வியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641 018.

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்