தமிழச்சியின் கவிதைகளில் பெண் மன நினைவுகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா

கவிதை நான் பயணப்படாத தளம். சிறுகதைகளிலும் புதினங்களிலும் இயல்பாக இலகுவாக பயணிப்பதுபோல், கவிதை கைவரவில்லை. மனம் இன்னும் அதற்குப் பக்குவப்படவில்லை என்று நினைக்கிறேன். தமிழச்சி தங்கபாண்டியனின் பல கவிதைகள் ஒரு சிறுகதைக்குரிய கருவை தாங்கியிருப்பதும், என் மனம் அதை சிறுகதையாய் மாற்ற முயற்சித்ததும், பின் அதை நான் கட்டியிழுத்து அடுத்த கவிதைக்கு இட்டுச்செல்வதும் என முதல் நான்கு நாட்கள் ஓடியேவிட்டது. தமிழச்சி, தன் மனதிற்குள் பல நாட்களாய் பொத்திவைத்து அடைகாத்ததை கவிதை முத்துக்களாய் ஒரு சில வரிகளில் படைப்பது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பரமற்று, எளிமையான வார்த்தைகளால் எல்லோரும் அனுகும்விதமாக, எல்லோருக்கும் புரியும் விதமாக இவரது கவிதைகள் உள்ளன. எப்படி எளிமையான சொற்களால் ஆனதோ, அதேமாதிரி எளிமையான மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள், வாழ்க்கைப்பாடுகள், சின்னச்சின்ன இழப்புகள் என இவர் கவிதைகளாலும், நாம், நம் அன்றாட வாழ்க்கையுடனும் எண்ணங்களுடனும் இணைத்துக்கொள்ளலாம்.

நவீன கவிதைகள் என்பவை மரபின் தன்மையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மக்களின் வழக்கு சொற்களுக்குள் எளிய உரையாய் தன்னை பரிணமித்துக் காட்டுபவை. அனுபவங்களை சிறு வரி வடிவங்களில் படிமங்களாக மாற்றும் வல்லமை நவீன கவிதைகளுக்கு உண்டு. வாசிப்பவனுக்கு உடனடி உரையை தருதலும் அதை கொண்டு அவனாலும் அதன் தொடர்ச்சியாய் கவிதை நெய்யும் ஆற்றலை பெற்றுவிட முடியும் என்னும் நம்பிக்கையைக் கொடுப்பதும் புதுக்கவிதைகள்தான். கவிதைப் படைப்புகளில் பெண்களின் படைப்புகள் கவனமாக அணுகத்தக்கவை. சிக்கலும், சிடுக்கும், மறைபொருளும், உட்பொருளும், அடர்த்தியும், உண்மையும் நெருக்கிக் கிடக்கும் கவிதைகளாகத் தங்கள் கவிதைகளைப் பெண்கள் படைத்துக்கொள்கிறார்கள். பெண்கவிதைகளில் வெளிப்படும் அனுபவ உண்மைகள் பெண்பார்வையில் உலகை விமர்சிக்கின்றன. இந்த விமர்சனங்கள் பெண் சார்ந்த உலகிற்குச் சார்பாகவும் ஆண் சார்ந்த உலகிற்கு எதிராகவும் கூட அமைந்திருக்கும். கவிதையின் நுண்பொருட்களை இதன்வழியாகப் பெண்கள் தொடமுடிகின்றது. எனவே கவிதையின் நுண்மையைவிட பெண் படைப்பின் நுண்மை என்பது தேர்ந்து அறிந்து கொள்ளத்தக்கதாகும்.

தான் வாழ்ந்து மகிழ்ந்து கிராமத்து அனுபவங்களை நகரப்பெருவெளி நெருக்கத்தில் எண்ணிப் பார்த்து கவிதை செய்யும் கவிதைக்காரராக பெண்கவிஞர்களுள் உலா வருபவர் தமிழச்சி. அவரின் படைப்புகளில் ஒருங்கிணைந்த பழைய இராமநாதபுர மாவட்டத்தின் நினைவுகள் குமிழுகின்றன. அந்த மண்ணின் மனிதர்கள், பண்பாடுகள், உணவு, உடை, உறையுள் என அத்தனையையும் அவரின் கவிதைகள் பதிவுசெய்கின்றன. கலர்பூந்தியும் கனகாம்பரமும் அவரின் இளமைக் கால வாழ்வின் இனிய பொருளாக அமைந்திருக்கின்றன. இவ்வகையில் அவரின் 'எஞ்சோட்டுப்பெண்' குறிக்கத்தக்க கவிதைத்தொகுப்பாகும்.

''எனதூர் வயல்காட்டு வரப்பில் கால் வழுக்கி விழுந்ததும், ஊருணியின் கரம்பை மண்ணில் உருவமில்லாப் பொம்மைகள் செய்ததும், மஞ்சனத்திப் பழங்களின் சுவையில் பற்களைக் கறையாக்கிக் கொண்டதும் நேர்த்திக்கடனுக்காய் நெருக்கமாய் கோர்த்திருக்கின்ற மணிகளாடும் முனியப்பா கோயிலின் முன்புறம் சிதறு தேங்காய் பொறுக்கியதும், ஊர் கூடும் தேர் முட்டியும், கிடை ஆடு அடையும் கரிசல் காடும் என்னுள் எப்பொழுதும் ஊறிக்கிடக்கனிற் உயிர்ப்பிம்பங்கள். அவை கவிதைக் கல் எறியப்படுகையில் ஆழ்மனத்திலிருந்து மேலழுப்பி வரி வடிவங்காட்டி விட்டு மறுபடி அடிமனதுள் உறையப் போய்விடும் பாதரசக் கண்ணாமூச்சிகள்' (தமிழச்சி,எஞ்சோட்டுப்பெண்,ப.31) என்ற இவரின் முன்னுரைப்பகுதி மண்சார்ந்த சிந்தனைகளின் வெளிப்பாடே இவரின் கவிதைகள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

தமிழச்சியின் கவிதைகளில் அடிநாதமாய் கிராமமும், அதன் ஆதரா சுருதியாய் மஞ்சணத்தி மரமும் இடம்பெறுகிறது. மஞ்சணத்தி மரத்தை தனது ஆதித்தாய் என்கிறார். அந்தக்கவிதையை இவ்வாறு நிறைவு செய்கிறார்.

என் ஆதித்தாயே, மஞ்சணத்தி.
முகவாயில் நரைமுளைத்து
பெருங்கிழவி ஆனபின்னும்
உன் அடிமடி தேடி நான் வருவேன்.
அப்போது,
என் தோல் நொய்ந்த பழம் பருவத்தை
உன் தொல் மரத்துச் சருகொன்றில்
பத்திரமாய்ப் பொதிந்துவை.
உள்ளிருக்கும் உயிர்ப் பூவை
என்றாவது
நின்று எடுத்துப்போவாள்
நிறைசூழ்கொண்ட இடைச்சி ஒருத்தி.

கவிஞருக்கு மஞ்சணத்தி போல் எனக்கு எங்கள் வீட்டுக்கிணறு. ஆனால், இன்று அந்தக்கிணறு இல்லை. கவிஞரின் விருப்பப்படியே ஆதித்தாயாய் அந்த மஞ்சணத்தி என்றுமிருக்கிறது. என் வாழ்த்துக்கள்.

மஞ்சணத்தி மரத்தைப்போலவே தமிழச்சிக்கு தாயுமாய் இருந்தவர் அவரது தந்தை. எப்பொழுதும் மகள்களுக்கு அப்பாக்கள் கதாநாயகர்கள்தான். கவிதையே தந்தையின் இழப்பை தமிழச்சிக்கு சிறிதளவு தேற்றுகிறது.

பிள்ளைக்கு தலைதுவட்டி
கதவடைத்து படுத்தபின்பு
கனவிலே வந்து போகும்
மழை நனைத்த என் முகம்
துடைத்த அப்பாவின்
'சார்லி சென்ட்' கைக்குட்டை.

ஒத்திகை, ஏக்கம், அழுகை ஆகிய கவிதைகளில் அந்த இழப்பின் வலி தெரிகிறது.

இரயிலடிக்கு வண்டியோடு
தன் மனதையும் அனுப்பிவைக்கும்
ஒரு மாலை நேரத்து
மாரடைப்பில் பாராமல் எனைப்பிரிந்த
என் அப்பாவைத் தவிர.

நெடிய கவிதைகள், சிறு கவிதைகள் என்ற வடிவங்களில் எழுதும் இவரின் கவிதைகளில் சிறு வடிவங்கள் கூர்மையும் தெளிவும் உடையனவாக விளங்குகின்றன. நெடுங்கவிதைகள் சிறுகவிதைகளின் கோர்ப்புகளாகவே அமைகின்றன. அல்லது ஒரு பாத்திரத்தின் குணக்கோர்வையாக அமைகின்றன. உள் மனதில் இவரின் கவிவடிவம் என்பது மிகச் சிறு வடிவமாக இருக்கிறது. அது வளர்கையில் அச்சிறு வடிவத்தின் வெற்றியின் அளவே பெருங்கவிதையின் நீட்சியிலும் கிடைக்கின்றது.

எஞ்சோட்டுப்பெண் என்ற கவிதைத் தொகுப்பு தன்னோடு உடனொத்து வாழும் பெண்ணின் வாழ்வினைச் சொல்வது என்ற நிலையில் தலைப்பினைப் பெற்றிருக்கிறது. தன்னோடு வளர்ந்த பெண்கள், அல்லது சமுதாயம் இவற்றின் திருப்ப நினைதலே இத்தொகுப்பாகும். இதில் பல போரட்டச் சிந்தனைகள் எழுப்பப் பெற்றுள்ளன.

'பெரியானும் பொன்னுச்சாமியும்
பஞ்சம் பிழைக்கப்
பட்டணத்தில் கொத்துவேலைக்குப்
போய்விட
நட்டுவைத்த நாற்பது தென்னைகளும்
பாளம் வெடித்துப் பிளந்த மண்ணில்
கும்பி கருகிப் பாளை சிறுத்து
வண்டு குடைந்த வற்றிய ஓட்டுடன்
அடுப்பெரிக்க மட்டையான
அவலம் மறக்க
பட்டைச் சாராயமும்
தொட்டுக்கொள்ள
ஊராட்சி முறை தொலைக்காட்சியில் புதுப்படமும்'

என்ற கவிதையில் விவசாய வாழ்வு தோற்றுப்போய் நகரத்திற்குக் குடிபெயரும் வேளாண் மக்களும், அவர்கள் பிரிவைக் கொண்டாடும் சாராய அபிமானிகளுமாக ஊர் வறுமை வயப்பட்டிருக்கும் நிலையைக் காட்டுகிறார் தமிழச்சி. விவசாய வாழ்வே போராட்ட வாழ்வு என்ற நிலைக்குத் தள்ளப்பெற்றிருக்கும் இழிநிலையில் இன்றைக்கு பெரிதும் உணர வேண்டிய கவிதையாக இது அமைகிறது. இக்கவிதையில் தொட்டுக்கொள்ளக் கூட ஒன்றும் இல்லை என்பது நாசுக்காகச் சொல்லப்பெற்றுள்ளது. இந்தச் சாராயத்தைக் குடிக்கும் பாத்திரம் யார் என்பது கவிதையில் வெளிப்படுத்தப்படவேயில்லை.

விவசாயிகளின் போராட்ட வாழ்வினைக் காட்டும் மற்றுமொரு கவிதை பின்வருமாறு.

''தன்மானம் அடகு வைத்துத்
தட்டு ஏந்தியபடி
தஞ்சாவூர் விவசாயி
சொல்லமுடியாது பிள்ளைகளிடம்
சோழநாடு சோறுடைத்து'

என்ற கவிதையில் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் தட்டேந்தித் தவிக்கும் விவசாயிகளின் வருத்தம் பதிவு செய்யப்பெற்றுள்ளது. சோழ நாடு சோறுடைத்து என்ற வழக்கு பொய்யாய்ப் போன உண்மையை இக்கவிதை எடுத்துச் சொல்கிறது.

போராட்ட மிக்க வாழ்வினை எதிர்கொள்வது என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறையில் அமையும் அனுபவமாகும். வேலை நிறத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத, இயலாத, முன்வராத ஒரு பெண் ஊழியரின் மனம் பின்வரும் கவிதையில் பதிவாகிறது. இந்தக் கவிதை அந்தாதியாகப் படிக்கப்படும்போது பெரிதும் கனம் பெறுகிறது.

'வீடு வாசல் சூழல்
வியாக்கியானம் பேசி
நான் வேலை நிறுத்தத்திலிருந்து
விலகிக் கொண்ட அன்று மட்டும்.....'

என்பது கவிதையின் முடிவு. கவிதையின் தலைப்பு அன்று மட்டும். எந்த நாள் என்ற புதிரைக் கடைசி சில வரிகளில் வைத்து அந்த நாளை விவரணை செய்கிறார் கவிஞர்.

இதில், ' நகரவாசி' என்பதில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. நகரமோ, கிராமமோ தனிப்பட்ட மனிதனின் பிரதிபலிப்பையே அது காட்டுகிறது. ஏனென்றால் எத்தனையோ நாட்கள், நான் பல விஷயங்களைப்பற்றி இப்படி யோசித்து தூக்கமிழந்ததுண்டு. கடைசியாக 'மோதிரம் என்றொரு போதிமரம்' கவிதை, காளிதாசனின் சகுந்தலையை தழுவி இயற்றியுள்ளார். பழமையான காவியத்திற்குள் சமுதாய நீதிக்கான கேள்விகளை உள்வைக்கிறார்.

'அடையாள மோதிரம் தொலைந்த
அவலத்தால் நிராகரிக்கப்பட்ட
அங்குதான் அவளுக்கு அறிவுறுத்தப்படுகிறது
அங்கீகாரமும் அடையாளமும் அவசியமென
எனும் வரிகளும்
இதயத்தைத் தொலைத்துவிட்டு
இன்னமும் அடையாளங்களைத்
தேடுகின்ற உன் அறியாமையினை
என்றாவது ஒரு நாள் எதிர்நின்று
நான் எள்ளி நகையாடவேண்டாமா?'

எனும் கேள்விகள் மூலம் சகுந்தலையை சமூகநீதிக்காக போராடும் பெண்ணாக மாற்றுகிறார்.

போராட்டங்கள் போராடுபவர்கள் இல்லாமல் முன்னெடுக்கப்படும் போது அவை வெற்றி இலக்கை மேலும் பறிகொடுத்துவிடுகின்றன. இவ்வகையில் தன் காலத்து விவசாய மக்களின் வறுமை நிலையை, போராட முன்வராத வலியற்ற நிலையைத் தம் கவிதைகளுக்குள் பதிவு செய்துள்ளார் தமிழச்சி. தமிழரின் வாழ்வில் ஏற்படும் தடங்கல்களுக்கு உரிய நிலையில் தீர்வு காண இவரின் கவிதைகள் வழிவகுக்கின்றன.

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை -
641 035

பேச
: 98424 95241.

 





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்