குறுந்தொகையில் தலைவியின் உவமைகள் 

முனைவர் பூ.மு.அன்புசிவா


றுந்தேனின் சுவையாய், கற்கும் தோறும் இனிக்கும் இயல்பினையுடையது குறுந்தொகை. சர்க்கரைப் பொங்கலைத் தட்டில் வைத்து அதை எந்தப்பகுதியிலிருந்து எடுத்துச் சுவைத்தாலும் இனிப்புச்சுவை குன்றாது இனிப்பைத் தருமல்லவா? அவ்வாறே குறுந்தொகை எனும் நறுந்தொகைப் பெட்டகத்தில் எல்லாப் பாடல்களும் இனிய சுவையினை நல்க வல்லதாய் அமைந்துள்ளது. பழங்கால மக்களின் வாழ்க்கை முறையையும் பண்பாடு, கலாச்சாரம் முதலிய கூறுகளையும் கண்ணாடி போல் தெளிவாகக் காட்டும் தன்மையது. வரலாற்றுக் குறிப்பேடாகவும், வாழ்வின் பெட்டகமாகவும் விளங்குவதோடு இயல்பான உவமைகளைக் கொண்டு அமைந்துள்ள பாங்கு எண்ணி மகிழத் தக்கதாகும். அவற்றுள் தலைவியின் நிலையை விளக்க ஆசிரியர்கள் கையாண்ட உவமைகளை எடுத்துரைப்பதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

உவமை - விளக்கம்|

கவிஞன் தான் விளக்க நினைத்த பொருளுக்கு அதனை ஒத்த இன்னொன்றினைக் கூறுவது உவமையாகும். கவிஞர்கள் மட்டுமல்ல நாம் அனைவருமே ஒரு பொருளை விளக்குமிடத்து, அதற்கு இணையான மற்றொரு பொருளை ஒப்பிடுதல் இயற்கை தானே.

உள்ளம் நிறையும் உவமைகள்

சங்க இலக்கியத்தில் உவமைகள் நிறைந்து காணப்படுகின்ற இலக்கியம் குறுந்தொகையாகும். நூற்றுக்கும் மேற்பட்ட உவமைகளால் இவ்விலக்கியம் சிறப்புகிறது. உவமைகளால் பாடலுக்கும் பெருமையும் சுவையும் இனிமையும் நிறைகிறது. குறுந்தொகைப் பாடல்கள் சிவலற்றைப் பாடிய ஆசிரியரின் பெயர் அறியப்படாத நிலையில் , பாடலில் காணப்படும் உவமைகளே அவர்களுக்குப் பெயராகியுள்ளது. இதன் மூலம் உவமைகளின் சிறப்பு நன்கு விளக்கப்படுகிறது. கயமனார்(9) , செம்புலப்பெயல் நீரார்(40), அணிலாடு மன்றிலார்(41), நெடுவெண்ணிலவினார்(47), மீனெறி தூண்டிலார்(54), விட்ட குதிரையார்(74), ஓரேருழவர்(131), கூவன் மைந்தன் (224), காலெறி கடிகையார்(267), ஓரிற்பிச்சையார்( 277), கல்பொரு நிறுநுரையார்(290), கள்ளிலாத் திரையனார்(293), குப்பைக் கோழியார(305), பதடி வைகலார்(323), கவைமகன்(324), வில்லக விரலினார்(370), கங்குல் வெள்ளத்தார்(387), குறியிறையார்(394) எனப் பதினெட்டிற்கும் மேற்பட்ட புலவர்கள் தங்களின் பாடல்களில் காணப்படும் உவமைகளைக் கொண்டு அழைக்கப்படும் சிறப்பை உணர முடிகிறது.

தலைவியின் நிலை

கூடு விட்டுக் கூடு பாய்தல் ஓர் அரிய வித்தை என்பர். அது கை கூடாத வித்தையாகவே இருந்து வருகின்றது. புலவர் பெருமக்களுக்கோ அது கை தேர்ந்த கலையாகவே இருக்கிறது எனலாம். புலவர்கள் கூடு விட்டுக் கூடு பாயாமலே மற்றவர்களின் உணர்ச்சிகளை உணர்ந்து விளக்க வல்லவர்களாக உள்ளனர். அவ்வகையில் சங்கப்புலவர்கள் குறுந்தொகையில் இடம்பெறும் தலைவியின் நிலையை நன்குணர்ந்து அவளின் இன்ப, துன்ப உணர்வுகளைச் செவ்வனே வெளிப்படுத்தியுள்ளனர். தலைவி குறித்துப் பார்க்குமிடத்து முதற்கண் அவளின் அழகுத் தோற்றத்தை ஆசிரியர்கள் எங்ஙனம் உவமை கூறிப் பாராட்டியுள்ளனர் என்பதைக் காணலாம்.

தலைவியின் அழகு பொதுவாக பெண்களின் அழகை வருணிக்காத கவிஞர்களே இல்லை எனலாம். குறுந்தொகையிலும் தலைவியின் அழகு பாடப்படுகிறது. மகளிர் கண் முதலியவற்றின் அழகை எடுத்துரைக்கும் புலவர்கள் அவற்றிற்கு அமைத்துள்ள ஒப்புமைகள் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன. இந்த உவமைகள் வழிவழியாக இலக்கியத்தில் நின்று வழங்கி வருவன எனினும், தொடக்கத்தில் உவமைப்படுத்திய பழங்காலப் புலவர்களின் கற்பனையில் நயம் மிகுந்திருப்பதைக் காணலாம்.கலைமானின் மார்பிலே தைக்குமாறு எய்து இரத்தத்தோடு பறித்த திரட்சியுள்ள செந்நிறமான அம்புகள் இரண்டு மாறுபட வைக்கப்பட்டாற் போன்றவை தலைவியின் மையுண்ட கண்கள் என்பதை,

'கலைநிறத்து அழுத்திக்
குருதியொடு பறித்த செங்கோல் வாளி
மாறுகொண் டன்ன உண்கண்' (குறுந்.272)
என்ற அடிகளின் மூலம் அறிய முடிகிறது.

தலைவியின் கருநிறக் கூந்தலை அடுத்து விளங்கும் சிறு நெற்றி, கரிய கடலில் தோன்றும் எட்டாம் பிறைத் திங்களைப் போல் உள்ளது என்பதை,

'மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்' (குறுந். 129)

என்ற அடிகள் விளக்குகின்றன.

தலைவியின் அழகின்மை

அழகுடைய தலைவி தலைவன் பிரிவால் அழகிழந்து காணப்படுகிறாள். இந்நிலையை விளக்குமிடத்து, ஒரு செப்பினுள் அழகான பூக்களைப் பறித்து அவற்றை யாரும் சூடிக் கொள்ளாமல் மூடி வைத்தால் என்ன ஆகும்? ஒரு பயனும் இல்லாமல் வாடி அழியும் அல்லவா? அது போலத் தான் தலைவியின் நிலையும் ஆகும் என்கிறது குறுந்தொகை. இதை,

'மடைமாண் செப்பின் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே' (குறுந்.9)

என்ற அடிகள் விளக்குகின்றன. மேலும், தலைவி தன் பெற்றோரின் செல்வ மகளாகவும், அங்கிருந்து வாழாமல் காதலனுடைய அன்புக்கு உரிய துணைவியாகவும் வாழ முடியாமல் அழகு இழந்து வாடுகிறாள். ஆயினும் அழகு இழந்த அவளுடைய உடல் யானை வளைத்து முறித்த பிறகும் மரத்தை விட்டு நிலத்தில் விழாமல் உள்ள நார் உடைய கிளை போல் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தலைவியின் மேனியில் படரும் பசலை தலைவன் வந்து தழுவும் போது நீங்குகிறது. விட்டுப் பிரியும் போது பரவுகிறது. அது தொட்டால் நீங்கி,

விட்டால் பரவும் பாசி போன்றது என்பதை,

'தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே' (குறுந்.399)

என்ற அடிகளின் வழி உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தலைவியின் காதல் நிலை தலைவி தான் கொண்ட காதலில் உறுதி உள்ளவளாக இருக்கிறாள். தலைவன் மேல் அசைக்க ஒண்ணா நம்பிக்கை உள்ளவளாகவும் இருக்கிறாள். தலைவியின் காதல் வளரும் நிலையில் அவள் உள்ளத்தைப் பண்படுத்தும் கடமை உடையவளாகத் தோழி விளங்குகிறாள். தலைவன் பிரிவால் கவலையுடன் இருக்கும் தலைவியிடம் தோழி அவனை நம்புதல் தகுமோ? என்கிறாள். அதற்குத் தலைவி, தலைவனுடைய நல்லுறவைக் குறித்து ஐயுறுகின்றாயோ? அவனோடு நான் கொண்ட நட்பு,

' நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே' (குறுந்.3)

என்று கூறுகிறாள்.

உண்மைக் காதல் அவள் உள்ளத்தே நிறைந்திருந்தமையால் அவ்வாறு கூறினாள். தலைவனோடு கொண்ட உறவின் பெருமையை நினைத்த அவள் நெஞ்சத்தில் பெரிய நிலவுலகம் உவமையாக நின்றது. உயர்வைக் கூறுமிடத்து வானத்தையும், ஆழத்தைக் கூறுமிடத்து கடல் நீரையும், அவள் உவமையாக்கியது சிறப்புக்குரியதாகும்.

நீரிலே வாழும் பறவைகளிலேயே மகன்றில் என்பது ஒரு வகை. அவை எப்போதும் துணையுடன் கூடியே வாழும். அவைகளுக்கு இடையே ஒரு பூ குறுக்கிட, அதனால் பூவின் இப்பக்கம் ஒன்றும் அப்பக்கம் ஒன்றும் பிரிந்து செல்ல நேரிட்டாலே அது மிகவும் வருந்துமாம். அந்தச் சிறு பிரிவுத் துன்பமே ஓர் ஆண்டு பிரிந்திருந்தாற் போல் உணருமாம் அப்பறவைகள். அத்தகைய காதலே தலைவியுடைய காதல் ஆகும் என்பதை,

' பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர்; உறை மகன்றில் புணர்ச்சி போலப்' (குறுந்.60)

என்ற அடிகள் தெற்றென விளக்குகின்றன.

தலைவியின் நெஞ்ச நிலை தலைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தலைவன் சென்ற இடத்தில் எவ்வாறு இருக்கிறானோ என்று கவலையுற்று வருந்துகிறாள். அவளுடைய நெஞச்ம்படும் பாட்டிற்குக் கூறும் நல் உவமை இதோ!

'ஏழூர்ப் பொது வினைக்கு ஓர் ஊர்யாத்த
உலை வாங்கு மிதிகோல் போலத்
தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே' (குறுந்.172)

இப்பாட்டில் ஓர் ஊரில் அமைந்த கொல்லனுடைய உலைக்களத்தில் உள்ள துருத்தி ஏழு ஊர்களின் பொது வேலைகளை ஏற்று வருந்துவது போல தலைவியின் நெஞ்சம் வருத்தம் அடைவதாகக் கூறப்பட்டுள்ளது.

தலைவியின் நெஞ்சம் காதல் மிகுந்து இருக்கும் போது தலைவனை நாடிச் செல்கிறது. தலைவி அவனை வெறுக்கும் போது திரும்ப அவளிடமே வந்து சேர்கிறது. இவ்வாறாகத் தலைவியின் நெஞ்சம், ஒரு நிலையில் இராமல் இங்கும் அங்குமாக வருந்துகிறது. இந்நிலையை விளக்குமிடத்து,

'அழுவம் நின்ற அலர்பேய் கண்டல்
கழிபெயர் மருங்கின் ஒல்கி ஓதம்
பெயர்தரப் பெயர் தந்தாங்கு
வருந்தும் தோழி அவர்இருந்த என்நெஞ்சே' (குறுந்.340)

என்ற பாடலடிகள் அமைந்துள்ளன. கடற்கரையில் கடலருகே நிற்கும் தாழை மரம் கழியின் நீர் வந்து விழும் போது அப்பக்கம் சாய்ந்து கடல் நீர் பெருகித் திரும்பும் போது மீண்டும் இப்புறம் திரும்புதல் போல தலைவியின் நெஞ்ச நிலை இருப்பதாகப் பாடப்பட்டுள்ளது.

தலைவன் தலைவியிடம் முதலில் இனியவனாகவே இருக்கிறான். பரத்தை பால் செல்லுமிடத்தே தலைவன் இன்னாதவனாக மாறுகிறான். இதைக் கூறுமிடத்து,

'புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்டுஇன் புதுமலர் முள் பயந்தாஅங்கு' (குறுந்.202)

என்ற உவமையைக் காணலாம்.

நெருஞ்சிச் செடி முதலில் கண்ணனுக்கு இனிய புதிய மலர் போல் காட்டிப் பிறகு முள்ளை வெளிப்படுத்துதல் போலத் தன் நெஞ்சிற்கு இனியவனாக இருந்த தலைவன் துன்பத்தைத் தருகிறான் என வருந்துகிறாள்.

தொகுப்புரை:
 
இவ்வாய்வின் வழித் தலைவியின் நிலையை அழகுற உவமைகள் விளக்கியமாற்றை அறிந்து கொள்ள முடிகின்றது. இயல்பாகவே பெண்களை வருணிக்குமிடத்து கண்களைப் பூக்களுக்கும், நெற்றியைப் பிறைக்கும் ஒப்பிடுவதை இங்கேயும் காணமுடிகின்றது. பிரிவுத் துயரினால் தலைவியின் உடல் மெலிந்து பசலை பரவிய நிலைக்குப் பாசியும் அவளின் பொலிவிழந்த முகம் வாடிய மலர்களுக்கும் ஒப்புமையாகக் கூறப்பட்டிருப்பது முற்றிலும் பொருத்தமே. காதல் கொண்ட தலைவியின் உண்மைக் காதலையும் ஆழத்தையும் விளக்க ஆசிரியர்கள் பயன்படுத்திய உவமைகள் அருமையே. மேலும் தலைவியின் நெஞ்சநிலையை விளக்குமிடத்து, அவள் நெஞ்சத்தின் வருத்தத்திற்குத் துருத்தியும் கடல் நீரால் அலைக்கழிக்கப்படும் தாழை மரமும், நெருஞ்சிமுள்ளாகத் தலைவன் அவள் நெஞ்சத்தை வருத்துவதாகவும் பாடியிருப்பது நல் உவமைகளுக்குச் சான்றுகளாகும்.

துணைபுரிந்த நூல்கள்:

1. குறுந்தொகை, கழக வெளியீடு.
2. தமிழ் இலக்கிய வரலாறு, மு.வரதராசனார்.



 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை -
641 035

பேச
: 98424 95241.

 





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்