கவிஞர். கு.மா.பாலசுப்பிரமணியம் நூற்றாண்டு நினைவேந்தல்


கவிஞர் கு.மா.பா.திருநாவுக்கரசு


பிரபல தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், நினைவில் வாழும் எம் தந்தை கவிஞர்.கு.மா.பாலசுப்பிரமணியம் வரும்
13.5.2020 அன்று நூற்றாண்டை நிறைவு செய்கிறார். பத்திரிகையாளராக இருந்து பாடலாசிரியராக உயர்ந்து 600க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை இயற்றியுள்ளார் இவர். 1945-47களில் கொழும்பு 'வீரகேசரி' தமிழ் நாளிதழில் துணையாசிரியராக பணியாற்றினார். இவரை சிறப்பு செய்யும் எண்ணத்தில், இப்பதிவு இணையத்தில் வெளியாகிறது.


'கலைமாமணி' 'கவிக்குயில்' கு.மா.பாலசுப்பிரமணியம்
(தோற்றம்: 13.5.1920   -   மறைவு: 4.11.1994)

 

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குநர் (1950-1994)

தமிழ்நாடு சட்டமேலவை முன்னாள் உறுப்பினர் (1974-1980)

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற முன்னாள் செயலாளர் (1989-1991)
 

  •  'கு.மா.பா' என்று அழைக்கப்படும் கவிஞர். கு.மா.பாலசுப்பிரமணியம்

  •   'கலைமாமணி' விருது பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்

  •  'கவிக்குயில்' தமிழ்க் கவிஞர் மன்றம் வழங்கிய பட்டம் பெற்றவர்

  •   கொள்கைக் கவிஞராக, மரபுவழி நின்று தமிழுணர்வோடு கடமையாற்றியவர்

  •  காலத்தை வென்று நிற்கும் திரைப்பாடல்களைக் காற்றில் உலவவிட்ட கவிஞர். நினைவில் நிற்கும் பாடல்களால் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர்.

  • சாதாரண விவசாயியாக இருந்து, பத்திரிகை எழுத்தாளராக கால்பதித்து, தமிழக அரசியலும், தமிழ்த் திரைப்படத் துறையிலும் பரிணமித்தவர்.

'கு.மா.பா' என்று எல்லோராலும் அழைக்கப்படும் கவிஞர். .கு.மா.பாலசுப்பிரமணியம், திருவாரூர் மன்னார்குடி வழியிலுள்ள, கமலாபுரம் அருகிலுள்ள வேளுக்குடி என்னும் சிறிய கிராமத்தில், ஒரு சாதாரண வேளாண் குடும்பத்தில், தாய் கோவிந்தம்மாள், தந்தை மாரிமுத்து ஆகியோரின் ஒரே மகனாக 13.5.1920இல் பிறந்தார். 5ஆம் வயதிலேயே தன் தந்தையை இழந்த இவர், தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறுவயது முதலே சமயப்பற்றுடைய தாயிடம் தேவாரம் திருவாசகம் போன்ற தமிழ்ப் பாடல்களைக் கற்றதுடன், ஏழ்மையின் காரணமாக 6ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், இளம் வயதிலேயே விவசாயம், மளிகைக்கடை, துணிக்கடை ஆகிய இடங்களில் பணிகளைச் செய்துகொண்டே பத்திரிகைகளை வாசிக்கும் ஆர்வத்தால், தமிழறிவை வளர்த்துக்கொண்டார். புதுமைப்பித்தன், தி..., கு..இராஜகோபாலன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்ததாலும், பாரதியார், பாரதிதாசன், தேசிக விநாயகம் போன்றோரின் கவிதைகள், பாடல்களை நேசித்ததாலும் தமிழில் தானும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். சொந்த முயற்சியில் சிறுகதைகள், கவிதைகள் எழுதி, நவயுகன், திருமகள்இ சண்டமாருதம், பிரசண்ட விகடன்இ கலைமகள் போன்ற பத்திரிகைகளில் தன் படைப்புகளை வெளியிட்டு எழுத்தாளனாக பரிணமித்தார். கவி கா.மு.ஷெரீப், 'மேதாவி' எனும் புனைப்பெயர் கொண்ட கோ..சண்முகசுந்தரம் இருவரும் இவருக்குப் பரிச்சயமான வேளுக்குடி மண்ணின் எழுத்தாளர்களாக பிரபலமாயினர். இளம்வயதில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு சமூகநீதிக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, வேளுக்குடி தன்மான இயக்கத்தின் செயலாளராக கா.மு.ஷெரீப்பும், துணைச் செயலாளராக எங்கள் தந்தையும் இயக்கங்களை வழிநடத்தினர். திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் மு.கருணாநிதி, மன்னை நாராயணசாமி ஆகியோர் நட்பும், ..சி.சுப்பிரமணியம், பரலி சு.நெல்லையப்பர் ஆகியோர் தொடர்பும் இந்தக் காலத்தில் கவிஞருக்கு மிகவும் உதவியாக இருந்தது.. 

1943இல் 'தமிழன்' (மதுரை) வார இதழிலும், 1944இல் 'வீரசக்தி' (கோவை) மாத இதழிலும், 1945இல் (கொழும்பு) 'வீரகேசரி' நாளிதழிலும் துணை ஆசிரியராகப் பணியாற்றி பத்திரிகை அனுபவங்களை வளர்த்துக் கொண்டார். காந்திய வழியைப் பின்பற்றி, தேச பக்தியுடன் இந்திய விடுதலைப் போரில் சுதந்திரம் பெற்ற பிறகு, 1947இல் புதுக்கோட்டை, இராயவரத்தில் 'தமிழ்க்குரல்' என்னும் சொந்தப் பத்திரிகையை நண்பர் பி.எம்.சேவுகரத்தினம் என்பவருடன் இணைந்து நடத்தினார். தொடர்ந்து நடத்த இயலாமல் நஷ்டமடைந்து பிழைப்பு தேடி சென்னை வந்து சிலம்புச் செல்வர் .பொ.சிவஞானம் தலைமையில் இணைந்து, இயக்க ஏடுகளான 'தமிழ்முரசு' மற்றும் 'செங்கோல்' இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். வடக்கெல்லைப் போராட்டம், தெற்கெல்லைப் போராட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டம், மாநில சுயாட்சிப் போராட்டம் ஆகியவற்றில் கழகத்தின் முன்னணிப் போராட்ட வீரராகப் பங்கேற்று சிறைசென்றார்.

நிறைய தமிழ் நூல்களைப் படிக்கவும், எழுதவும் வாய்ப்புபெற்ற இந்தக் காலத்தில், இவரின் கற்பனை, சொல்நயம் உடைய கருத்தான கவிதைகளைப் படித்துவிட்டு,  சிந்தாதிரிப்பேட்டை  உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் திருவேங்கடம் பிள்ளை என்பவர்இ இவருக்கு யாப்பிலக்கணத்தை முறைப்படி கற்றுத்தந்து எழுதுவதற்குப் பயிற்றுவித்தார். 

1950இல் திரைப்பட இயக்குநர் .நீலகண்டன் பரிந்துரையால், ஏவி.எம். நிறுவனத்தில் உதவி இயக்குநராக பணியில் சேர்ந்த இவர்இ முதன்முதலாக பேரறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதிய 'ஓர் இரவு' திரைப்படத்தில், வசனங்களை படியெடுத்து நடிகர்களுக்கு பயிற்றுவிக்கும் வேலையில் ஈடுபட்டார். பிரதி எடுக்கும்போது, ஒரு காட்சியில் பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதியை விவரிக்கும், அண்ணாவின் வரிகள் இவருக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை 'பெண்ணாகப் பிறந்தாலே... வாழ்வில் எந்நாளும் துயர்தானே...' என்று துவங்கும் சோகப் பாடல் வரிகளாக்கி, இயக்குநர் .நீலகண்டன், இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம், கவிஞர். கே.பி.காமாட்சி ஆகியோரிடம் காட்டி, அவர்களின் ஒப்புதலுடன், தயாரிப்பாளர் ஏவி.எம். அவர்களின் பாராட்டும் அனுமதியும் பெற்று, கவிஞரின் முதற் திரைப்பாடலாக பாடகி டி.எஸ்.பகவதி பாட, பதிவான இந்தப் பாடல் படத்தில் இடம்பெற்றது.. இதேப் படத்தில் மேலும் இரண்டு பாடல்களை எழுதும் வாய்ப்பினைப் பெற்றார். ஏவி.எம். நிறுவனத்தின் கதை இலாகா பிரிவில், மாத ஊதிய ஊழியராக சில ஆண்டுகள் பணிதொடர்ந்தார். 

பிறகு ஏவி.எம்.நிறுவனத்தில் இருந்து விலகி, சுயசம்பாத்திய எழுத்தாளராக பல நிறுவனங்களில் கதை, வசனம், பாடல்களை எழுதும் வாய்ப்புகளைப் பெற்றுப் பிரபலமானார். 1952இல் திரைப்பட இயக்குநர் எம்.வி.இராமன் அவர்களின் ஆலோசனையை ஏற்று, பம்பாய் பிலிம்ஸ்தான் ஸ்டுடியோவில் கதை இலாகாவில் பணியில் சேர்ந்தார். அங்கு மொழிமாற்றுப் பட வேலைகளைக் கற்றுக் கொண்டு, 'நாஸ்திகன்' 'சாம்ராட்' ஆகிய இந்திப் படங்களை, தமிழில் மொழிமாற்றம் செய்து, பாடல்களும் எழுதினார். 

1954இல் மீண்டும் சென்னை திரும்பிய கவிஞர், சொந்தமாக வீடுகள் கட்டியதுடன், பல திரைப்படப் பாடல்களை எழுதி, நேயர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்தார்.. அரசியலில், .பொ.சி.யின் தலைமையைத் தொடர்ந்து ஏற்று, தமிழரசுக் கழகத்தில் பொதுச்செயலாளர் ஆனார்.

கோமதியின் காதலன், கணவனே கண்கண்ட தெய்வம், தங்கமலை ரகசியம், ரத்த பாசம், சக்கரவர்த்தித் திருமகள், திருடாதே, மரகதம், உத்தம புத்திரன், அன்னையின் ஆணை, அம்பிகாபதி, யானை வளர்த்த வானம்பாடி, களத்தூர் கண்ணம்மா, நானும் ஒரு பெண், சித்ராங்கி, குழந்தைகள் கண்ட குடியரசு, மகாகவி காளிதாஸ் போன்ற எண்ணற்றப் படங்களில் இவர் எழுதிய பாடல்கள், தரமான இசையமைப்பாலும், இனிய பாடகர்களின் குரலொலியாலும், பிரபல நடிகர், நடிகையர் பங்கேற்ற காட்சிகளாலும், இன்றளவும் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பெற்றுள்ளன. சபாஷ் மீனா, வீரபாண்டிய கட்டபொம்மன், கொஞ்சும் சலங்கை, தூரத்து இடிமுழக்கம் ஆகிய படங்களில் அனைத்துப் பாடல்களையும் கவிஞர். கு.மா.பா.எழுதி பெருமை சேர்த்தார். கொஞ்சும் சலங்கை, மகாகவி காளிதாஸ் போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனமும் எழுதி தன் திறமையை வெளிப்படுத்தி, மக்கள் மனங்களில் இடம்பெற்றுள்ளார்.    

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் குரலும், காரிக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரமும் இணைய, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில், பதிவான 'சிங்கார வேலனே தேவா....' பாடலை எழுதினார். 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில், ஜெமினிகணேசன்இ சாவித்திரி நடிப்பில், பாடலுக்கு முன்வரும் 'சாந்தா.. உட்கார்.. ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்...? உன் இசை என்னும் இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு ஓடோடிவந்த என்னை ஏமாற்றாதே சாந்தா..' பதிலாக, 'என் இசை உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்....' இடைமறித்து, 'தேனோடு கலந்த தெள்ளமுதம்... கோல நிலவோடு சேர்ந்த குளிர்த்தென்றல்... இந்த சிங்காரவேலன் சன்னதியில் நமது சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும். பாடு.. சாந்தா.. பாடு..' என்று துவங்கும் வசனம் இந்தப் பாடலைப் போலவே பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. காலத்தை வென்று இன்றளவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கிராமபோன் ரிகார்டுகள் விற்பனையில் மிக அதிகமாக இந்த ஒலித்தட்டுகள் விற்பனையை எட்டி வரலாற்று சாதனை புரிந்ததும் குறிப்பிடத்தக்கது. 

பிரபல இசையமைப்பாளர்கள் ஜி.இராமநாத ஐயர், ஆர்.சுதர்சனம், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், டி.ஜி.லிங்கப்பா, சலீல் சௌத்திரி ஏனைய இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும், இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் ஏவி.எம், எம்.வி.இராமன், .நீலகண்டன், பி.ஆர்.பந்துலு, .எல்.சீனிவாசன், ஸ்ரீராமுலு நாயுடு, மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், சித்ராலயா ஸ்ரீதர், ஆர்.ஆர்.சந்திரன் மற்றும் பலரின் திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதி பாராட்டைப் பெற்றவர் கவிஞர் கு.மா.பா. 

சமகாலத்தில் இவருடன் திரைப்பாடல்கள் எழுதிய உடுமலை நாராயண கவி, கே.பி.காமாட்சி, கவி.கா.மு.ஷெரீப், மருதகாசி, தஞ்சை இராமையாதாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி போன்ற பிரபலங்களும் மதிக்கத்தக்க எழுத்தாற்றல் உடையவராய், சந்த ஞானத்துடன் எளிதில் ஈர்க்கும் பாடல்களை இயற்றும் திறமும் உடையவராய் திகழ்ந்தார் கவிஞர் கு.மா.பா. யாப்பு இலக்கணப்படி இசைப்பாடல்களை எழுதி, 'மகாகவி காளிதாஸ்' படத்தில் காளிதாசனை ஒரு புலமை மிகுந்த தமிழ்க்கவிஞனாகக் காட்டினார். மெட்டுக்குப் பாட்டெழுதச் சொன்னாலும்இ பாட்டுக்கு மெட்டமைத்தாலும் இவர் மனங்கவரும் பாடல்களை ஆக்கும் திறமையுடையவராக விளங்கினார்.   

பரதநாட்டியக் கலைஞர்களுக்காக, சில பதங்களை இயற்றியதுடன், சாகுந்தலம், அல்லித் திருமணம், ரிஷ்ய சிருங்கர், உஷா கல்யாணம் போன்ற நாட்டிய நாடகங்களை உருவாக்கி மேடை ஏற்றியதுடன், 'காவிய நடனங்கள்' என்னும் நூலை புத்தக வடிவிலும் வெளியிட்டுள்ளார். 'நாட்டியப் பேரொளி' பத்மினி சகோதரிகள், குமாரி கமலா, வழுவூர் இராமையா பிள்ளை ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு எழுதி, வெற்றி கண்டுள்ளார்..  

வானதி பதிப்பகம் 'முதற்குரல்' என்னும் இவருடைய கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. 'இன்பத்துளிகள்', 'சூடிய மலர்' சிறுகதைகள் தொகுப்புகளும், 'அதிர்ஷ்டக் குழந்தை,' 'பச்சை மாலை' நாவல்களும்இ 'காவிய நடனம்' நாட்டிய நாடகங்கள் தொகுப்பும்இ 'தணிகைவேள் சதகம்' பக்திக் கவிதை நூலும் வெளியிட்டுள்ளார். அண்மையில், மணிவாசகர் பதிப்பகம் கவிஞரின் திரைப்படப் பாடல்கள் தொகுப்பை வெளியிட்டுள்ளது. 600க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை கவிஞர் எழுதிய போதும் சரியாக ஆவணப்படுத்தாமற் போனதால்இ ஏறக்குறைய 250 பாடல்களை மட்டும் தொகுப்புக்காக சேகரித்திருக்கிறோம்.   

1975இல் தமி.ழக அரசின் 'கலைமாமணி' விருது பெற்றார். 

1979இல் நடைபெற்ற கவிஞரின் மணிவிழாவில், முனைவர் கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் .அன்பழ்கன் சிறப்புரை ஆற்றினர்.

நடிகர் விஜயகாந்தின் முதற் படமான 'தூரத்து இடிமுழக்கம்' திரைப்படத்தில், இயக்குநர் கே.விஜயன் இயக்கத்தில், 'செம்மீன்' புகழ் சலீல் சௌத்திரியின் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். .எல்.சீனிவாசனின் மகன் .எல்.எஸ்.கண்ணப்பன் தயாரிப்பு, இயக்கத்தில் 'கனவுகள் கற்பனைகள்' என்னும் திரைப்படத்தில், கங்கை அமரன் இசையில், 'வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே....' பாடலை எழுதினார். 

1989இல் தமி.ழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராக, அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியால் நியமிக்கப்பட்டார். 

தனது 74ஆம் வயதில், 4.11.1994இல் வீட்டில் காலை செய்தித்தாள் வாசித்த நிலையில், ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார்.   
    


 


          


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்