வெல்லுஞ்சொல் இருக்க கொல்லுஞ்சொல் எதற்கு?

முனைவர் அ.கோவிந்தராஜூ


யாரிடம் பேசினாலும் பூத் தொடுப்பது போல ஏற்ற சொற்களை அமைத்துப் பேசினால் எந்தச் சிக்கலும் இல்லை. கற்களையும் முட்களையும் வீசினாற்போல் பேசினால் பிரச்சனைதான் வரும்.

இதமான சொற்கள் இனிமையான சொற்கள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இன்பம் தரும்; மகிழ்ச்சி தரும். மாறாக வெறுப்பும் கோபமும் கலந்த சொற்கள், விரக்தியும் வேதனையும் கலந்த சொற்கள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் துன்பம் தரும்; துயரம் தரும்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

என்பது மணிக் குறள். இவற்றைவிட சிறந்த சொற்களைப் பெய்து இன்னொருவர் பேசிவிட முடியாது என்னும் வகையில் பேசுதல் வேண்டும். அப்படிப் பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் வெல்லுஞ்சொல் ஆகும்.

நான் இங்கே குறிப்பிடுவது மேடைப்பேச்சு அன்று.

நான் குறிப்பிடுவது கணவன் மனைவிக்கிடையேயான பேச்சுஇ பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையேயான பேச்சு. ஆனால் இன்றைக்கு நடைமுறை வாழ்வில் கொல்லுஞ்சொல் பேசுவோரே மிகுதியாக உள்ளார்கள். படிக்காதவர்களை விட படித்தவர்களே கொல்லுஞ்சொற்களை அதிகம் பேசுகிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும். இதனால் நட்பு முறிகிறது; உறவு உடைகிறது.

எனது மாணவன் ஒருவன் இயற்பியல் தேர்வு எழுதிவிட்டு வந்தான். ஒரு மதிப்பெண் வினா ஒன்றுக்கு மட்டும் தவறான விடை எழுதியதாக அம்மாவிடம் சொன்னான். 'சென்ட்டம் போச்சா? இதுக்கு நீ நாக்கப் பிடிங்கிக்கிட்டு சாகலாம்' என்று ஒரு கொல்லுஞ்சொல்லை உதிர்த்தாள் அவனுடைய அம்மா.. அவளுடைய ஒரே மகன் அன்று மாலையில் தூக்கிலே தொங்கிவிட்டான் அந்த வினாவில் ஓர் எழுத்துப்பிழை இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கப்பெற்று அவன் இருநூறுக்கு இருநூறு மதிப்பெண் பெற்றான்! இது நடந்த நிகழ்வாகும்.

அன்று கணிதத் தேர்வு. தேர்வு மைய வாயிலில் அவளது வருகைக்காகக் காத்திருந்தேன். 'நல்லாவே எழுதலப்பா' என்றபடி வெளியில் வந்தாள் என் மகள். 'டோன்ட் வொரி வா முதல்லபோய் நல்லா சாப்பிடுவோம்.' எனச்சொல்லி அழைத்துச் சென்றேன். தேர்வை ஒழுங்காக எழுதவிலை எனத் தன் அம்மாவிடமும் சொன்னாள். 'எல்லாம் நல்ல மார்க்குதான் வரும்; மொதல்ல சாப்பிட வா' என்று கூறி ஊட்டாத குறையாக சாப்பிட வைத்தாள்.. என்ன கெட்டுப்போய் விட்டது? இன்று அவள் அமெரிக்காவில் விஞ்ஞானியாக உள்ளாள்.

'நீ இனிமேல் இருந்து என்ன ஆகப்போகுது? காலா காலத்தில் போய்ச் சேருவியா.' என்னும் மகனின் கூற்று ஒரு தாய்க்குக் கூற்றுவனாய் அமைந்த கொடுமையையும் நானறிவேன்.

'சும்மா பூச்சாண்டி காட்டாத. நீ தொலைஞ்சாதான் எனக்கு நிம்மதி' என்று ஒரு கணவன் கோபத்தில் கொப்பளிக்கஇ அவனுடைய மனைவி ஓடிச்சென்று வீட்டுக்கு அருகில் இருந்த பொதுக் கிணற்றில் விழுந்து தொலைந்து போய்விட்டாள். எங்கள் கிராமத்தில் என் கண்ணுக்கு முன்னால் நடந்த கொடுமை இது.

விடுதியில் தங்கிப்படித்தத் தன் மகளைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு முதல் பருவத் தேர்வு மதிப்பெண் விவரத்தைக் கேட்ட அந்தத் தாய் பொங்கிச் சீறினாள். 'இந்த மார்க்க வச்சிக்கிட்டு நீ வீட்டுப்பக்கம் வந்துடாத' என்று சொல்லி போனை வைத்துவிட்டாள். பிறகென்ன அவள் வரவில்லை; அவள் உடல்தான் வந்தது.

மேலே சொன்ன எடுத்துக்காட்டுகளில் யாரும் சாகட்டும் என்று பேசவில்லை. உணர்வு மயமான நேரத்தில் சற்றும் யோசிக்காமல் உதிர்க்கும் சொற்கள் கூர்வாள் எனமாறி கூற்றுவனாய் அமைந்து விடுகிறது. அதனால்தான் வள்ளுவர்

'யா காவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு'

' என்று கிளிப்பிள்ளை சொல்வதுபோல் சொல்கிறார்.

'இரண்டு அடி வாங்கினால்தான்
திருந்துவாய் என்றால்
வள்ளுவரிடம் வாங்கு.'

என்று நான் எப்போதோ எழுதிய ஹைக்கூதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

சரி தெரியாமல் வார்த்தைகளைக் கொட்டிவிட்டீர்கள். சொல்லால் அடித்துக் காயப்படுத்தினீர்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும்? உடனே மருந்து போட வேண்டும். என்ன மருந்து என்கிறீர்களா? பேசியதற்கு வருத்தப்படுவதும் மன்னிப்புக் கேட்பதும்தான் மாமருந்தாக அமையும்.

மன்னிப்பாவது கேட்பதாவது. ஈகோ வந்து தடுக்கும். அந்த ஈகோவின் தலையில் ஒரு குட்டுவைத்துவிட்டு காயம்பட்டவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். அப்பா அம்மா குழந்தைகளிடத்தில் மன்னிப்புக் கேட்பதா? கணவன் மனைவியிடத்தில் மன்னிப்புக் கேட்பதா? ஆசிரியர் மாணவியிடத்தில் மன்னிப்புக் கேட்பதா? முதலாளி தொழிலாளியிடம் மன்னிப்புக் கேட்பதா? இப்படி எல்லாம் யோசிக்காதீர்கள். பிறரிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்பதும்இ பிறர் மன்னிப்புக் கேட்கும்போது நீங்கள் மன்னிப்பதும் மிக நல்ல பண்பாகும்.

நீங்கள் மற்றவரை மன்னிக்கும்போது ஏற்படுகிற மகிழ்ச்சியையும், மன்னிக்கப்படும்போது ஏற்படுகிற நிம்மதியையும் ஒருமுறை அனுபவித்துப் பாருங்கள். பிறகு நீங்கள் வெல்லுஞ்சொற்களை மட்டுமே பேசுவீர்கள்.

அப்புறம் பாருங்கள். உங்களைச் சொலல் வல்லார் என்று உலகம் பாராட்டும்.





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்