மனவழுத்தமும் தற்கொலைச் சிந்தனையும்

த.சிவபாலு B.Ed.Hons, M.A.Cey.


இயந்திரமயமான வாழ்க்கை முறையில் பரிதவிக்கின்றது மனித இனம். ஓய்வே இன்றி ஓடி ஓடி உழைக்கவேண்டிய நிலை மனிதர்களின் வாழ்வியலை தலைகீழாக மாற்றியுள்ளது. உணவு, உடை, உறையுள் என்பனவற்றிற்காக உழைப்பதோடு அமைதியான வாழ்வை மேற்கொண்டுவந்தத மனிதன் இன்று ஓய்வு என்ற எண்ணத்திற்கே இடமில்லாமல் ஊண், உறக்கமின்றி உழைத்து உருக்குலையும் நிலையே இன்று உலகநாடுகளில் காணப்படுகின்றது. நிலவுடமைச் சமதாயத்தில் இருந்து மாறி தொழிற்புரட்சியால் மாற்றம் கண்ட பசுமைப் புரட்சி இன்று இயந்திரமயமாக்கப்பட்ட வாழ்கைச் சூழலைத் தந்துள்ளது. கைத்தொழில் உற்பத்தியின் வளர்ச்சியும், தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும் மனிதனை இயந்திரமாக ஆக்கியுள்ளது. மனித தேவைகள் ஆரம்ப காலங்களை விடவும் மாறுபாடு கண்டு வந்துள்ளது. இயற்கையோடு ஒட்டிய வாழ்வியல் மாற்றத்தோடு தொழில் மயமாக்கப் பட்ட சமுதாய அமைப்பில் இன்று தூய்மையான காற்றையே சுவாசிக்கமுடியாத அளவிற்கு அமிலக காற்றைச் சுவாசிக்கும் நிலையும் அதிகரித்துள்ளது.

உள அழுத்தம், உளத்தளர்ச்சி, உள நெகிழ்வு, உள இறுக்கம், தாழ்வுணர்ச்சி என்பன நாம் அடிக்கடி உயயோகிக்கன்ற அல்லது கேட்கின்ற பதங்கள். மனவழுத்தம், மனச்சோர்வு, மனவிரக்தி, உற்சாகமிழப்பு, தாழ்வுமன நிலை, அமிழ்ந்துபோதல் போன்றன ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாகவே உள்ளன. வளர்ந்தவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அல்லது மனத்தளர்ச்சி பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு அதாவது சிறு பிள்ளைகளுக்கும் ஏற்படுவது இயல்பு. இதனால் அவர்களின் கல்வி அறிவு விருத்தி பாதிப்படையக் கூடும். மனவழுத்த நிலை (Depressed) ஆராய்ந்தறிந்த மரியன் (2003) என்னும் உளவியலாய்வாளர் அதனை இரண்டு பகுப்புக்குள் கொண்டு வந்துள்ளார். அகத்தே உள்ளது மற்றது புறத்தே உள்ளது என்பதாக அதன் தன்மைகள் செயல்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளார். அகவயமான தன்மைகள் பசி, நோவு, சத்தத்தினால் எற்படும் உணர்வு, உடல் வெப்பநிலை மாறுதல், சமூகநெருக்கடிகள், சோர்வு, மற்றும் மிகநெருக்கமான பௌதிகவியல் சூழலியல் காரணிகள் என்பனவற்றால் ஏற்படுகின்றன. ஆனால் புறவயமான உள இறுக்கம் (Stress) குடும்பத்தைப் பிரிந்திருத்தல், குடும்ப அமைப்பில் மாற்றம், குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதம், தர்க்கம், ஒருவருக்கொருவர் முரண்படுதல், வன்முறைக்கு ஆளாகுதல், மற்றவர்களின் அடாவடித்தனம், அடக்கு மறைகளுக்கு உள்ளாகுதல் போன்ற அனுபவங்களும், மிகவும் நேசிக்கப்படும் ஒரு பொருளை இழத்தல், அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பபுக்களை அடையத்தூண்டுதல், அவசரப்படுத்துதல், ஒழுங்கமைப்பின்மை என்பன எல்லாம் மனஇறுக்கத்திற்கு வழிவகுக்கின்றன. எனவே பெற்றோர் பிள்ளைகளின் நடத்தைகளை அவதானிப்பது மட்டுமன்றி அவர்களுக்கு மன இறுக்கம் ஏற்படாதவகையில் நடந்துகொள்வதும் மிக முக்கியமானதாகும்.

உளவழுத்தம் அதிகரிக்கும்போது மனப்பயம் ஏற்படுகின்றது. மனப்பயத்தை சரியாகக் கையாள முடியாதநிலை, எதிர்காலம்பற்றிய பீதி என்பன உள அழுத்தத்திற்கு எண்ணையூற்றி எரியச் செய்யும் செயலாக அமைகின்றது. மனிதனது தேவைகள் அதிகரித்துள்ளன. தேவைகளின் அதிரிப்பு அவனது உழைப்பை அதிகரிப்பதோடு உழைப்பை உறிஞ்சும் நிலையும் மனிதனை நெருக்கடிக்குள் உள்ளாக்கியுள்ளது. மனிதனது தேவைகள் அதிகரிக்கும்போது அவனது வருவாயும் அதிகரிக்கவேண்டிய கட்டாயத் தேவையும் அதிகரிக்கின்றது. இவற்றை ஈடுசெய்ய மனிதன் மாடாய் உழைக்கவேண்டி நிலையை எதிர்கொள்கின்றான். பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதனுக்கு காலத்திற்குக் காலம் ஏற்பட்ட பாரிய உயிர் கொல்லித் தொற்றுநொய்களின் தாக்கம் அவனை நிலை குலைய வைத்து வந்துள்ளது. எனினும் இன்று உலகளாவியதாகப் பரவியுள்ள கோவிட் -19 என்னும் தொற்று மிகப் பயங்கரமாக உலக பொருளாதாரத்தையே ஆடம் காணவைத்துள்ளது. பொருளாதர மந்தநிலை ஏற்படுவதற்கான சான்றுகள் உலகளாவியதாக விரிந்துபட்டு வருவதன் காரணமாக வேலையின்மை, உற்பத்திக் குறைவு என்பனவற்றால் கீழ்மட் நிலையில் உள்ள மக்களின் நிலை மிகப்பரிதாபகரமானதாக மாறியுள்ளது. வீட்டிற்கு வெளியே செல்லவேண்டாம் என்னும் தடையுத்தரவினால் மக்கள் அதிர்சியடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து விடபடமுடியாமல் மக்கள் தங்கள் எதிர்காலம் பற்றி வீட்டிற்குள் அடைபட்டுக் கிடந்து சிந்தித்துக்கொண்டே இருப்பது அவர்களுக்கு உள நெருக்கடியைக் கொடுத்துவருவது எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால் இவற்றில் இருந்து எப்படி மீளப்போகின்றோம் என்பதனை நினைந்து நினைந்து மனவேதனையில் வெளியே சொல்லமுடியாமலும் வேலைக்குச் செல்லமுடியாமலும் அவதிப் படும் எத்தனையோ அடிமட்ட மக்களின் உள்ளத்தைப் பாதித்து அவர்களை உள நெருக்கடிக்கும்இ மனவழுத்தத்திற்கும் ஆளாக்கி வருகின்றது. எதிர்காலம் பற்றிய ஐயம் அவர்களின் ஆணிவேரை-அடித்தளத்தை ஆட்டிக் கொண்டிருப்பதனால் செய்வதறியாத பயம் நிறைந்த ஒரு புதிய உலகத்திற்குள் அவர்கள் சஞ்சரிக்கத் தொடங்குகின்றார்கள். இதனால் அவர்கள் செய்வதறியாது தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாது வேதனைக் கடலில் மூழ்கி அதிலிருந்து நீந்தி வெளியே வரமுடியாது தவிக்கின்றார்கள். இந்தப் பிரச்;சினைக்கு ஒரே தீர்வு தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளுவதே என்னும் எண்ண உந்துதலுக்கு இடம் கொடுக்கின்றார்கள். இந்த நிலை அவர்களை இட்டுச் செல்வதற்கு வாய்ப்பாக எதிர்காலம் பற்றிய ஐயப்பாட்டை ஊக்குவிப்பதாக இந்த கொறோணா உயிர்கொல்லித் தொற்றுநோய் அமைகின்றது. ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் உலக ரீதியான இறப்புக்கள், தொற்றுக்கள் பற்றிய செய்திகள் அனைவரையுமே பீதி கொள்ள வைக்கின்றது. நாளாந்தம் கேட்கும் செய்திகள் அதிகரித்தே செல்கின்றன. உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வரியா ராயின் குடும்பத்தினரையே கொறோணாத் தொற்று பீடித்துவிட்டது என்ற ஆதங்கத்தைத் தெரிவித்த ஒருவர் அவர்களைப் பிடித்தது எங்களை விட்டுவைக்குமா? எனக் கேள்வி எழுப்பினார். வதந்திகளையும், பெரிதாக ஊதிப் பெருப்பிக்கப்படும் காற்றடைத்த பலூனாக செய்திகள் விரைந்து பரவுகின்றன. இந்த நிலையில் எதிர்காலத்தைப் பற்றி ஐயப்படுவதும், என்ன செய்வது என்று தெரியாது யாருடனும் மனந்திறந்து கதைக்கமுடியாத சூழலில் நான் இந்த உலகிலிருந்து விடுதலை பெறுதலே ஒரே தீர்வு என முடிவெடுக்க சிலருக்கு அவர்களின் உள்ளத்தின் அடிமனதில் உறைந்துபோன பயப்பிராந்தியம் பூதாகரமான வடிவத்தைக் கொடுக்கின்றது. மனிதன் உணர்ச்சி வசப்படும்போது அவனை அறியாமலே சில சுரப்பிகள் சுரக்கத் தொடங்குகின்றன. உள அழுத்தத்திற்குக் காணரமான சுரப்பிகள் மூளையில் அதிகரித்து அடிமனதில் உள்ள சிந்தனைகளை வெளியே கொண்டுவருகின்றன. இதனால் அந்த உளச் செயற்பாடு பாதிக்கப்பட்டவர்களை தங்களை நிதானமாகச் சிந்திக்கவிடாது தடுப்பதோடு, எந்த விதை உள்ளத்தில் இளமைக்காலத்தில் விதைக்கப்பட்டார்களோ அவற்றின் வழியே செயற்படவும், அவை அவர்களை ஆட்டிப்படைக்கவும் தொடங்குகின்றது. நான் நன்றாகத்தானே இருக்கின்றேன் என ஒரு நிலையிலும் ஐஐயோ நான் என்ன செய்வேன் என்ற எண்ணப்பாங்கை இன்னொரு நிலையிலும் சிந்திக்கத் தூண்டுகின்றது. மனதில் உள்ள பயப்பிராந்தியம். வீணான கற்பனைகள், மீளமுடியாத துன்பங்கள்இ எதிர்காலம் பற்றிய பயம் அவனை அல்லும் பகலும் சிந்திக்கத் தூண்டுகின்றது. இதனால் தன்னிடம் ஏற்பட்டுள்ள இந்த நிலையை யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாத நிலையில் அவன் தூக்கமின்றி அல்லல் படுவது அவனுக்கு மட்டுமே தெரிந்த விடயமாகின்றது. சிந்தனை ஓட்டத்தை மாற்றமுடியாத நிலையில் அவனைத் தடுமாற வைக்கின்றது. அவனது உளச் செயற்பாடு. மூளையில் சுரக்கப்படும் இரசாயனம் அவனது சிந்தனையை மழுங்கடித்து இதனைச் செய் என உத்தரவிடுகின்றது. இந்த நிலை உள அழுத்தம் உடையவர்களிடம் காணக்கூடி பண்புகள் சில பின்வருமாறு அமையும்,

  • 1. ஒரு நிகழ்வைப்பற்றியே முழுமையாக சிந்தித்தல். மாற்றுக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாமை.

  • 2. குறிப்பிடப்பட்ட ஒரு தகவல்கள் அல்லது அட்டவணையிலிருந்து நல்ல நடத்தைகள் தொடர்பான குறிப்பாக விருப்பமானவை, மனப்பயமூட்டுபவை போன்ற நிகழ்வுகளுக்கான விடையைத் தரத்தக்க தெரிவைப் பெற்றுக்கொள்ளுதல்.

  • 3. தங்களது சொந்த உணர்வுகளுக்கு வேறுபட்ட நிகழ்வுகளை விளங்கிக்கொள்ளுதல்.

  • 4. உடலியல் மாறுபாடுகளை தூண்டல் பேறுகளை மாற்றிக்கொள்ள விளைதல்.

  • 5. யாருடனும் பேசாமல் அமைதியா தனித்திருக்க விரும்புவதும்.

  • 6.தங்கள் பாட்டில் தலையாட்டுதல் அல்லது கதைத்தல்

  • 7.அமைதியற்ற சூழலில் இருப்பதாக உணர்தல். ஒரு இடத்தில் இருக்கமுடியாது ஓடித்திரிதல்

  • 8.சின்ன விடயங்களுக்கும் கோபபப்டுதல்

  • 9.மிக நெருக்கமானவர்களோடு சீறுதல், சினத்தல், அடித்தல் போன்ற செயல்களை வெளிக்காட்டல்.

  • 10.எதனையோ பறிகொடுத்தவர்கள் போலக் காணப்படுதல்.

  • 11.உற்சாகமின்மை. எதிலும் விருப்பமின்மை, எதனையும் நிறைவேற்றும் மனம் இன்மை. தங்கள் பொறுப்புக்கள் கடமைகளை நிறைவேற்றாமை.

  • 12.தீர்மானங்களை எடுக்கமுடியாமல் தடுமாறுதல்.

  • 13.தன்னம்பிக்கை இழத்தல். எதனையும் எதிர்கொண்டு சமாளிக்கும் நிலைமையின்றித் தடுமாறுதல்.

  • 14.குற்ற உணர்வு மேலோங்குதல்

    • 15.ஏரிச்சல் - சகிப்புத்தன்மையை இழத்தல்.

  • 16.எதற்கும் அச்சமடைதல்.

  • 17.தற்கொலைச் சிந்தனை மேலோங்குதல்.

  • 18.பெண்களிற்கான மாதவிடாய்காலத்தில் மாற்றங்கள் ஏற்படுதல்

  • 19.உடலில் நோவேற்படுதல் - முதுகுக்குத்து, மூட்டுநோ, உடம்பு உளைச்சல்.

  • 20.இரத்த அழுத்தம் அதிகரித்தல்- இதயம் துடித்தல்.



ஒவ்வொருவரினதும் சிந்தனா ஓட்டங்கள், உள நெருக்கடிகளுக்கான காரணிகள் வெவ்வேறானவையாக அமைந்தாலும் அவை அவர்களை மன அமைதியற்றவர்களாக எதிர்காலம் பற்றிய பயத்தையும், அதிலிருந்து விடுபடமுடியாத மனப்பிரேமையும் ஏற்படுத்துவதனால் அவர்கள் தங்களுக்கு மிக நெருக்கமானவர்களோடும் கலந்துரையாட முடியாத ஒரு மனப்பயத்தையும் கிலேசத்தையும் ஏற்படுத்துவன் காரணமாக அவர்கள் பல்வேறுபட்ட விபரீத முடிவுகளை எடுக்கின்றார்கள். மேற்கூறிய பண்புகளில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவையோ ஒருவரின் உயிருக்கு உலைவைக்கும் காரணியாக மாறலாம். இவ்வித இடர்நிலைக்கு ஆளானவர்கள் தங்களுக்கு உள்ள குறைகளை மற்றவர்களிடம் ஒரு போதும் சொல்ல முன்வருவதில்லை. உடன்பிறப்புக்களிடமோ அன்றி தாய், தந்தையரிடமோ, துணைவரிடமோ சொல்லாமல் தங்களுக்குள்ளாகவே மனதில் வைத்து அவதிப்படுகின்றார்கள். ஈற்றில் அவர்களின் உளத்தில் ஊற்றெடுக்கும் இரசாயனப் பதாற்றத்தின் அதிகரிப்பு செவிப்புலன்களில் அவர்ளாhல் சிந்திக்கப்டட ஒரு விடயத்தைத் திரும்பத்திரும்ப நினைவுறுத்திக்கொண்டே இருக்கும். அந்த நிலையில் தாங்கள் விடுதலையடைய தற்கொலை மட்டுமே தீர்வு என்னும் தீர்க்கமான முடிவிற்கு உந்தப்பட்டு தற்கொலை செய்துகொள்ளுகின்றார்கள்.

காரணம் இன்றி தற்கொலைசெய்து கொள்ளும் நிலைமை உலக நாடுகள் அனைத்திலும் அண்மைக் காலங்களில் விரவிக் காணப்படுவதனைப் புள்ளிவிபரங்கள் கோடிட்டுக்காட்டுகின்றன. வீட்டில் தனித்திருத்தல் அல்லது வேலைக்குப்போகாமல் வழமையான நிலைமைகளில் மாற்றம் ஏற்படுதல் என்பன மன நெருக்கடி, மன அழுத்தம் என்பனவற்றைத் தோற்றுவிக்கின்றன. கனடாவில் வறுமைக்கு 40 இலட்சம்பேர் பாதிக்பபட்டுள்ளனர் என கனடா மருத்துவச் சங்க இதழ் (மார்ச் 2020)வெளியிட்டுள்ள அறிக்கை காட்டுகின்றது.

வறுமை காரணமாகவு பலர் தற்கொலை செய்துகொள்ளுவதாகவும், தொற்றுநோய்கள், விபத்துக்கள், தற்கொலைகள் உள்ளிட்டவை இருமடங்காக அதிகரித்துள்ளமைக்கு உணவு பற்றாக்குறையே காரணம் எனவும். நிறையுணவை உட்கொள்ளாத காரணத்தினால் உளவியல் ரீதியான துயரத்திற்கு உள்ளாவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. வறுமை, வேலையின்மை, தொற்றுநொய் பற்றிய வதந்திகள், கடன் தொல்லை போன்றவற்றால் உளவழுத்த்திற்கு உள்ளாவோர் தற்கொலை செய்துகொள்கின்றார்கள் என்னும் உண்மையை சுகாதார திணைக்களத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளதனை கருத்திற்கொள்ளுதல் வேண்டும்.

கொறோனா தொடர்பான தற்கொலைகளுக்கு மகுடம் போன்று ஜேர்மனியின் நிதி அமைச்சர் தற்கொலை செய்துகொண்டமை உலகையே வியப்பில் ஆழ்த்தியது. மார்ச் மாதத்தில் கொறோணா நோய் காரணமாக உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட 19 வயதான இளம்பெண் தற்கொலைக்கு முயன்று மருத்துவநிலையத்தில் மரணமானார். மான்கற்றன் வைத்திய சாலையில் பணியாற்றிய மருத்துவர் கொறோணா தொற்று ஏற்பட்டதனால் தற்கொலை செய்துகொண்டார். ரொறன்ரோவில் உள்ள ஒரு உயர்ந்த குடியிருப்பு வீட்டுமாடியில் இருந்து குதித்து 29 வயதுடைய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இங்கிலாந்தில் தந்தை தனது இரண்டு பிள்ளைகளையும் வெட்டிக் கொலை செய்ததோடு தானும் தற்கொலை செய்யமுயன்றுள்ளார். என்பதும் அண்மையில் ஒரு தாய் தனது மகளை கத்தியால் குத்திவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டதும் ஊடகச் செய்திகளாகும்.

'நான் மிகத் துன்பப்படுவது கொறோணா நோய்த் தொற்று உண்மையில் பயங்கரமானது ஆனால் அதனைவிட நான் துன்பப்படுவது மிக மோசமானது' என ஒரு உள நோயாளர் எனக்குத் தெரிவித்தார் எனத் தனது ரொறன்ரோ ஸ்ரார் கட்டுரையில் ஆசிரியர் குழு செய்தியாளர் Rachel Mendleson  தெரிவித்துள்ள கருத்து. பல்வேறு மனநல மருத்துவர்களின் கொறோணா தற்கொலைக்கான தனிக்காரணியாக இருக்கமுடியாது என்பதனை உறுதிசெய்வதாக உள்ளது.

ஏன் தற்கொலை செய்கின்றார்கள் என்பது பற்றித் தெரியாதபோது மக்கள்அதனைப் பற்றி பேசிக்கொள்ளுவது ஏன் என்பது எனக்குத் தெரியவில்லை என Dr. Tyler Black, a psychiatrist and suicide expert at B.C. Children’s Hospital in Vancouver  குறிப்பிட்டுள்ளமை கருத்திற்கொள்ளற்பாலது. ஓவ்வொரு ஆண்டும் கனடாவில் நான்கு ஆயித்திற்கு மேற்கட்டோர் தற்கொலை செய்துகொள்கின்றார்கள்.




                               


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்