பாரதியார் - கண்ணன் என் சேவகன்

முனைவர் நா.அமுதா தேவி

முகவுரை:

எட்டையபுரத்தில் பிறந்த முண்டாசுக் கவி சின்னச்சாமி ஐயரையும் இலக்குமி அம்மையாரையும் பெற்றோராக வாய்க்கப் பெற்றவர். சுதேசி மித்திரன் எனும் நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர் . தமிழ் ஆசிரியராகத் தம் பணியைத் துவக்கியவர். பாரதி பெண் விடுதலை, சுதந்திர உணர்வு, நாட்டு முன்னேற்றம், சமத்துவம் ஆகிய பல்வேறு பொருண்மைகளில் தம் படைப்புகளைக் கொடுத்தவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற புகழ்பெற்ற பல படைப்புகளைக் கொடுத்தவர் பாரதியார். கண்ணனைப் பற்றி பல்வேறு புதிய பரிமாணங்களைக் கண்டவர். அவற்றில் கண்ணனைச் சேவகனாக எண்ணி பாரதி பாடிய கண்ணன் என் சேவகன் என்னும் பகுதி குறித்து இக்கட்டுரையில் காண இருக்கின்றோம். பாரதி எஜமானன் ஆகவும் கண்ணன் சேவகன் ஆகவும் உரையாடும் சிறந்த கவிதைத் தொகுப்பு இதுவாகும்.

சேவகன் இயல்பு:

பாரதியின் கற்பனையில் உதித்த காட்சி கவிதையாக மலர்ந்திருக்கிறது. இறைவனைத் தமக்குச் சேவகனாகக் கற்பனை செய்த விதம் மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கின்றது. தம்மிடம் ஒரு சேவகன் பணியாற்றுகிறான். தன் உழைப்பிற்கான கூலியை அவன் உயர்த்திக் கேட்கின்றான். பலமுறை அவன் சூழ்நிலையை மனதில் கொண்டு அவன் கேட்காமலேயே ஊதியம் கொடுத்த போதும் கூட அவன் சரிவர தம் பணியைச் செய்வது இல்லை. வீட்டில் எனக்குப் பணிச்சுமைஅதிகமாக இருக்கும் பொழுது உரிய நேரத்தில் இங்கு பணிக்கு வர மாட்டான். ஏன் பணிக்கு உரிய நேரத்தில் வரவில்லை என்று கேட்டால் பல பொய்யான காரணங்களைச் சொல்லுவான். பானையில் இருந்த தேள் தன்னைக் கடித்ததாகவும், தன் பெண்டாட்டியின் மீது பூதம்வந்ததாகவும் இபாட்டியின் பனிரெண்டாம் நாள் காரியம் எனவும் பல பொய்களைக் கூறுவான். தான் இட்ட பணி ஒன்றாகவும் அவன் செய்யும் பணி வேறொன்றாகவும் இருக்கும். என் வீட்டில் உள்ள பெண்களிடம் தனியாக அவன் கலந்துரையாடல் நிகழ்த்துவதும் உண்டு. என் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் பல்வேறுவகையான மனிதர்களிடம் பகிர்ந்துகொள்வது அவன் இயல்பாக இருக்கிறது. வீட்டில் சிறிய பொருள் இல்லாத பொழுதும் கூட அதனைப் பெரிய நிகழ்வாகக் கருதி அனைவரிடமும் குறையாகக் கூறுவான். இத்தகைய சேவகனால் பல துன்பங்களுக்கு நான் ஆகின்றேன். ஆனலும் சேவகன் இல்லாவிடில் எந்த வேலையும் செய்ய இயலவில்லை.
இப்படியான வேலையளின் இயல்பினைப் பாரதி

பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ... 5


பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;


எனத் தனது பழைய வேலையாலின் இயல்பினைப் பதிவு செய்கிறார்.

புதியசேவகன் பணி:

அப்பொழுது எங்கிருந்தோ ஒருவன் வந்தான். தன்னை இடைச் சாதியைச் சார்ந்தவன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான். தான் ஆடு மாடுகளைப் பாதுகாப்பதாகவும், வீட்டினில் தூய்மைப்படுத்தும் பணியைச் சிறப்பாகச் செய்வதாகவும் உரிய நேரத்தில் இறைவழிபாடு செய்வதாகவும் எஜமானனின் சொல்கேட்டு நடக்கும் நல்ல சேவகன் ஆகவும் குழந்தைகளைப் பாதுகாத்து அவர்களை மகிழ்வுடன் வைக்கின்றவனாகவும் தான் நடந்து கொள்வதாக தன்னுடைய பணியின் சிறப்புகளை எடுத்துக் கூறுகிறார். காட்டு வழியில் செல்வதாக இருந்தாலும் திருடர்களின் பயம் குறித்து சிறிதும் கவலை கொள்ளாமல் தன் எஜமானனின் துன்பத்தினைத் தன் துன்பமாகக் கருதிப் பணியாற்றுவதாகக் கூறுகிறான். தனக்குக் கோலடி, குத்துப்போர், மற்போர் போன்ற வீர விளையாட்டுக்கள் தெரியும் எனவும் நயவஞ்சகம் செய்யத் தெரியாது எனவும் கூறுகிறான். உன் பெயர் என்ன என வினவியதற்கு ஊரில் உள்ள மக்கள் அனைவரும் என்னைக் கண்ணன் என்று அழைப்பதாகக் கூறுகிறான். உறுதியான உள்ளமும் நல்ல குணமும் மற்றவர்களுடன் இணக்கமாக வாழ்கின்ற நல்ல பண்பும் நல்ல சொற்களைப் பிறரிடம் கூறும் மனப்பாங்கு உடையவனாகவும் இருப்பேன் என்கின்றான். இவன் கூறிய பல நல்ல மொழிகளைக் கேட்டு மகிழ்ந்து இவனைப் பணியாளனாக வைத்துக் கொள்ளச் சம்மதிக்கிறார் எஜமான். இதனை,

இரவிற்பகலிலேஎந்நேரமானாலும்
சிரமத்தைப்பார்ப்பதில்லை, தேவரீர்தம்முடனே
சுற்றுவேன்தங்களுக்கோர்துன்பமுறாமற்காப்பேன்;
கற்ற வித்தை யேதுமில்லை


என்று தனது பணீயின் சிறப்பினைக் கவிதையில் பதிவு செய்த விதம் சிறப்பிற்கு உரியது.

அன்பினை எதிர் நோக்குதல்:

அவன் செய்யப் போகும் பணிக்குக் கூலியாக எத்தனை பணம் வேண்டும் எனக் கேட்கின்றான். தனக்கு மனைவி மக்கள் யாரும் இல்லை எனவும் எனவேபொருள் மீது எத்தகைய பற்றும் இல்லை எனவும் கூறுகிறான். நான் முதுமைப் பருவம் எய்தாத போதிலும் பொய்யுரை கூறியது இல்லை. என் மீது அன்பு காட்டினால் போதும் எனக்குப் பணம் பெரியது இல்லை என்கின்றார் . இவன் உரைத்தது கேட்டு பணம் வேண்டாம் எனக்கூறும் இவன் பைத்தியமா என்று கருதுகிறான்எஜமான் .கண்ணன் வேலைக்காரனாக என் வீட்டிற்கு வந்த நாள் முதல் என்னிடமும் குடும்ப உறுப்பினர்களிடம் மிகுந்த அன்பும் பற்றுதலும் உடையவனாக இருக்கின்றான். அவனால் நான் அடைந்த நன்மைகள் பலவாகும். கண்களை இமை காப்பது போல என்னையும் என்னைச் சார்ந்து உள்ளவர்களையும் போற்றிக் காக்கின்றான்.

கண்ணனின் செயல்:

கண்ணன் சேவகனாக வந்த பின் அவன் என் வீதியையும் வீட்டையும் சத்தம் செய்கின்றான். பெண்கள் செய்கின்ற குற்றங்களை எல்லாம் உடனே அவர்களிடம் எடுத்து உரைக்கின்றான் .என் குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியராகவும் தாயாகவும் மருத்துவராகவும் இருந்து அவர்களைப் பாதுகாக்கின்றான். பல சமயங்களில் தனக்கான பொருள் எதுவும் சேர்த்து வைக்காமல் என்மக்களுக்கு அப்பொருட்களைக் கொடுத்து உதவுகிறான் .நண்பனாகவும் மந்திரியாகவும் பண்பினை வளர்க்கும் தெய்வமாகவும் ஆசிரியனாகவும் பணிபுரிகிறான். இப்படிப்பட்ட இயல்பினை உடைய சேவகனைப் பெறுவதற்கு நான் என்ன தவம் செய்தேனோ அறியவில்லை. கண்ணன் என் இல்லத்திற்கு வந்த நாள் முதல் எல்லா செயல்களையும் அவன் பொறுப்பில் இயங்கிக்கொண்டு இருக்கின்றான்.

இதனைப் பாரதி,

எங்கிருந்தோவந்தான், இடைச்சாதியென்றுசொன்னான்.
இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!


என்ற வரிகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.

மாற்றம்:

கண்ணன் சேவகனாக வந்த பின்னர் எனக்குள் செல்வம், நல்ல பண்புகள், நற்புகழ், கல்வி, கவிதை எழுதும் மாண்பு, சிவஞானம் ஆகிய நல்ல பண்புகள் என்னுள் வளர்ந்து வருகிறது. கண்ணனே நானாகவும் என்னுள் கண்ணனும் இயங்கிக் கொண்டிருக்கிறோம். கண்ணனை நான் விரும்புவதற்கு எக்காரணத்தையும் கூறிவிட முடியாது. என்று இறைவனைச் சேவகனாக அடைந்த பாரதி தன் மன நிலையை கவிதையாக புலப்படுத்திய பாங்கு சிறப்புக்கு உரியது.

நிறைவுரை:

இறைவன் யாதுமாகி நிற்பவன். எல்லாப் பணி நிலைகளிலும் மனிதனை ஆட்கொள்பவன் எனவே பாரதியார் கண்ணனைச் சேவகன் என்ற நிலையில் கண்டபொழுதும் போற்றுதலுக்கு உரிய இடத்திலேயே வைக்க முடிகின்றது. கற்பனையாக இருந்த போதிலும் கவிதையில் உலவும் உயிர் நிறைந்த வரிகளைச் சுவைக்க முடிகிறது.


           
                  
முனைவர் நா.அமுதா தேவி


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்