இடதுசாரிச் சிந்தனை மரபிற் கிளர்ந்தவர் திறனாய்வாளர்
கோவைஞானி (1935-2020)


த.சிவபாலு
B.Ed.Hons,  M.A.

எஸ்.என்.நாகராசனின் வழியில் வந்தவர்  கோவைஞானி என அறியப்பட்ட கி.பழனிச்சாமி. நாகராசனின் மாக்சின் 'அன்னிமாதல்' பற்றிய புரிந்துணர்தலில் ஆகர்சிக்கப்பட்டு மார்க்கிசத்தையும், மாவோவிசத்தையும், பெரியாரியத்தையும் உள்வாங்கி தன்னை ஒரு மார்க்சிஸச் சிந்தனையாளராக வளர்த்துக்கொண்டவர் கோவைஞானி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழியை கற்றுப் பட்டம் பெற்றவர் கோவைஞானி. சமத்துவ வாழ்வினை உடைய சமுதாயத்தை உருவாக்கும் பொதுவுடமைச் சிந்தனையில்  ஊறித்திழைத்து சிந்தனாவாதியாகத் தன்னை மாற்றிக்கொண்டவர் அவர். தமிழ் இலக்கிய உலகில் ஈழத்து அறிஞர்களான பேராசிரியர்கள் .கைலாசபதி. கா.சிவத்தம்பி அவர்களின் மீது மிகுந்த பற்றும் மரியாதையும் வைத்திருந்தவர் ஞானி. அவரது படைப்புக்களைப் பார்த்து வியந்த பேராசிரியர் சிவத்தம்பி அவரகள் ஞானியிடம் அவரது படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்படி ஆலோசனை வளங்கியுள்ளார். அதுமட்டுமன்றி இந்தியாவிற்கு வெளியே கனடாவில் இயங்கிவரும் இலக்கியத் தோட்டத்தினால் இலக்கிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது என்றால் அவரது எழுத்துக்களின் தாக்கம் எத்தகையது என்பது சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.   

அவரைப் பற்றி ஒய்வுநிலைப் பேராசிரியை முனைவர் நளினிதேவி அவர்கள் பின்வருமாறு செப்பனிடுகின்றார்; 'பழந்தமிழ்ப் புலவர்கள்இ வள்ளுவம்இ கம்பன்இ சேக்கிழார் உட்படத் தமிழக, இந்திய, உலக இலக்கியப் படைப்பாளர்கள், அரசியல் தலைவர்கள், தத்துவ இயலாளர்கள், சமய இயலாளர்கள். சமுதாய ஆர்வலர்கள் என அனைவரையும் வேறுபட்ட பார்வையில் ஆய்ந்து அணுகி அவர்களின் சிந்தனைகள், செயல்பாடுகளில் உள்ள குறை-நிறைகளை அலசிக் கூறுவார்' என அவரது படைப்புக்ளை ஆய்வு செய்த அனுபவத்தையும் அவரோடு நெருங்கி உறவாடியதையும் நினைவுகூருகின்றார்.  

இன்று வாசகர்கள் குறைந்துவிட்டார்கள் என்னும் ஆதங்கம் நிலவுகின்றது, ஆனால் ஒருசிலர் சிறந்த வாசகர்களாக உள்ளனர். தமிழ்ச்சினிமா உலகில் சிறந்த ஒரு வாசகர் நடிகர் சிவகுமார். அவரே ஞானியைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 'கோவை சி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞானி 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கில நூல்களை அளவுக்கு அதிகமான நேரம் படித்ததால் முழுமையாகத் தன் பார்வையை இழந்தவர். இருப்பினும் மனைவியின் ஒத்துழைப்போடு உலகளாவிய மார்க்சியம், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் வரலாறு போன்றவற்றை - துணைக்கு எம்.ஏ, பி.. , பட்டதாரிகளை வைத்துப் படிக்கச் சொல்லி - அவற்றை மனதில் உள்வாங்கி 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.' எனச் சிலாகிக்கின்றார். 

'பொதுவாக மார்க்சியத் திறனாய்வாளர்கள் ரொம்பக் கறாரானவர்கள். அவர்களது ஆய்வுகள் எந்திரத்தனமாக இருக்கும். தங்களது செருப்புகளுக்காகக் கால்களைக் கத்தரித்துக் கொள்ளுபவர்கள். தாங்கள் பிடித்த முயலுக்குத் தான் மூன்று கால்கள் என்று சாதிப்பவர்கள் என்று பரவலாகக் பேசிக்கொள்வார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். எனினும் இதை நான் நம்பியவனில்லை. ஒருவேளை ஒன்றிரண்டு பேர் அப்படி இருக்கலாம். எல்லோரும் அப்படி இல்லை என்பதுதான் உண்மை. எனக்குத் தெரிந்து தமிழவன். முத்து மோகன், எஸ்.வி. ராஜதுரை போன்றவர்கள் விதிவிலக்கானவரகள். தங்கள் எல்லைகளைக் விரித்துக் கொண்டே இருப்பவரகள். இந்த வரிசையில் கோவை ஞானி அவர்கள் முதன்மையானவர் என்பதும் அவரது எழுத்துக்களில் பல்வேறு பரிமாணங்கள் இருக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை'' என ஞானியின் 'மார்க்சிச அழகியல்' என்னும் நூலுக்கான பதிப்புரையில் காவ்வியா பதிப்பக உரிமையாளர் சண்முகசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளமை கருத்திற்கொள்ளத்தக்கது. 

'மாந்தன் வாழும் சூழலையும், அவனுக்குள்; அகன்றுவிரியும் அகமன இயக்கத்தையும்; இடைவிடாமல் ஆராய்ச்சிக்குட்படுத்தி வருபவர் ஞானி அவர்கள். மண், விண், காலம் அகியவற்றோடு மானுடன் கொள்ளும் உறவைப் படைப்பு என்றும். பன்மிகு இயக்கம் என்றும் பல திசைப் பார்வை என்றும் குறிப்பிடுகின்றார். சீர்கெட்ட முதுலாளியமும். செல்லரித்த எகாதிபத்தியமும்; நமது அன்றாட வாழ்வை அர்த்தமிழக்கச் செய்கின்றன. சமூக விடுதலைக்கு எதிரானதாகவம். புதிரானதாகவும். நமது வாழ்வு கட்டமைக்கப்பட்டு வருகின்றது. சுரண்டலும், ஒடுக்கு முறையும், ஆதிக்கங்களும் நமது காலடியிலேயே வளர்த்தெடுக்கப்படும் கொடுஞ்சூழலில் அன்பையும், பண்பையம், நல்லுறவையும் தனிமனிதர்கள் பேணுவது எவ்வாறு என்று வினாத் தொடுக்கிறார். நம் கல்வி முறையும், குடும்ப, சமூகச் சூழலும் நமக்குள்; சமதர்மச் சிந்தனைகளைத் தூண்டவில்லையெனக் கவலைப்படுகிறார்' என ஞானியின் 'மார்க்சிய அழகு' நூலுக்கு அணிந்துரை எழுதிய அருள்திரு சுதாகர் குறிப்பிடுவதன் மூலம் அவரது சமுதாயப்பார்வை 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற அகண்ட  பேதமற்ற சமுதாயச் சமதர்மத்தை ஏற்படுத்வேண்டிய சித்தாந்தத்தை ஏங்கல்ஸ், மார்க்ஸ், லெனின், மாவோ வழியில் விதைத்துச் சமுதாயப் புரட்சிக்குத் தூபபமிட்டுள்ளார். என்பதனைப் பிரதிபலிப்பதாக அவரது மறைவு குறித்து  எஸ்.வி.இராஜதுரை குறிப்பிட்டுள்ளமை முத்தாரமாக அமைகின்றது.  

அவரது சமகாலத்து நண்பரான வி-எஸ்.வி.ராஜதுரை, (மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர்) கோவைஞானி யைப் பற்றி அவர் கொண்டுள்ள கருத்துக்களைப் பின்வருமாறு பகிர்ந்துள்ளார்.  'கோவை ஞானி என்றும் தமிழ்ச் சிந்தனை, இலக்கிய உலகிலும், 'கி..' என்று அவரது நெருக்கமான நண்பர்களாலும் அழைக்கப்பட்டுவந்த கி.பழனிச்சாமி எனும் ஒரு மாபெரும் ஆளுமை மறைந்துவிட்டது. தமிழ் அறிவுலகத்துக்கு அவர் வழங்கிய பங்களிப்பைப் பதிவுசெய்ய அவர் மீது பற்றும் பாசமும் வைத்திருந்த நண்பர்களால் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறப்பு மலர் கொண்டுவரப்பட்டபோது, தன்னைப் பற்றி நான்கு வரியாவது நான் எழுதுவதையே பெரிதும் விரும்புவதாகக் கூறினார். கி..வின் ஆக்கங்களையும் அவரது அரசியல் வாழ்க்கையையும் மதிப்பீடு செய்யும் கட்டுரை என்று பிரத்யேகமாக எதையும் என்னால் எழுத முடிந்திருக்குமா என்பது ஐயத்துக்குரியது. ஏனெனில், நான் எழுதிய நூல்களில் ஐம்பது விழுக்காட்டுக்கு மேல், நானும் அவரும் மணிக்கணக்கில் பேசி பகிர்ந்துகொண்ட அல்லது அவரால் கோடிட்டுக் காட்டப்பட்ட சிந்தனைத் தாக்கத்தின் கீழ் எழுதப்பட்டவை. மார்க்ஸியம் பற்றிய எனது புரிதல்இ இலக்கியம் பற்றிய எனது பார்வை ஆகியவற்றை வடிவமைத்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு' எனப் பதிவிட்டுள்ள அவர் தொடர்ந்தும் பின்வருமாறு சிலாகிக்கின்றார். 

'1960-களில் கோவையில் இயங்கிவந்த 'சிந்தனை மன்றம்'தான் நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நெருக்கமான நண்பர்களாவதற்கான களம். சி.பா.ஆதித்தனாரின் 'நாம் தமிழர் கட்சி'யைச் சேர்ந்தவர்களிலிருந்து தீவிர இடதுசாரிச் சிந்தனை யுடையவர்கள் வரை பல்வேறு தரப்பினர் ஒன்றுகூடி மாதமொருமுறை காத்திரமான விவாதங்களை கசப்புணர்வோ, காழ்ப்புகளோ இல்லாமல் நடத்திவந்த அந்த மன்றத்தில்தான் எஸ்.என்.நாகராஜன் மார்க்ஸின் 'அந்நியமாதல்' கருத்தாக்கத்தையும் விளக்கிக்கூறி, மார்க்ஸியம் பற்றிய எங்கள் புரிதலில் ஒரு திருப்புமுனையை உருவாக்கினார். 

'மாவோ மீதும்இ சீனா மீதும் ஆழ்ந்த பற்று கொண்டிருந்த ஜோசப் நீதாம் உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர். அவர் எழுதிய 'டைம் தி ரெஃப்ரெஷிங் ரிவர்' ( Time, the Refreshing Rever by Josep Neetham) நூலை, அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி..எல். பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்த ஞானிதான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். மார்க்ஸியத்தையும் ஆன்மிகத்தையும் இணைத்துப் பார்ப்பதில் ஞானிக்கு உள் உந்துதல் தந்தவர் நீதாம்தான். கிராம்ஷி என்ற பெயரே தமிழ்நாட்டில் அறிமுகமாகியிராத 1970-களில் அவரது படைப்புகளைத் தேடியலைந்து நாங்கள் இருவரும் அப்போது படித்தோம். ஜான் லூயிஸ், ஜோசப் நீதாம், சிட்னி பிங்கெல்ஸ்டைன், ஹெர்பெர்ட் ஆப்தேகர், அர்னால்ட் ஹாஸர், வால்ட்டர்பெஞ்சமின், ழான்-போல் சார்த்ர் போன்ற மேலை நாட்டு மார்க்ஸியர்களைப் படிக்கத் தொடங்கினோம். பெண்ணிலைவாதம் என்ற சொல்லே தமிழகத்தில் அறிமுகமாகியிருந்திராத நாட்களில் ஷுலாமித் ஃபயர்ஸ்டோனின் 'டயலெடிக் ஆஃப் செக்ஸ்'(The Dialective of Sex- The case for feminist revoluvion By Sulamist  Firestone) நூலைப் படித்து எனக்கு அந்த நூலின் சாரத்தை எடுத்துக்கூறியவர் ஞானி. என் பங்குக்கு செக் நாட்டு மார்க்ஸிய அறிஞர் விட்டேஸ்லாவ் கார்டாவ்ஸ்கி எழுதிய 'தி காட் ஈஸ் நாட் யெட் டெட்' (The Hear is yet Dead) என்ற நூலை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.

சீனாவில் மாவோ 1966-ல் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியைத் தொடங்கி வைத்திருந்தார். உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் புரட்சிப் போராட்டங்கள் நடைபெற்றுவந்த காலம் அது. சின்னஞ்சிறு வியத்நாம், உலகின் மிகப் பெரும் ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தியது. 1968-ல் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மாணவர் போராட்டங்கள் முகிழ்த்தெழுந்தன. அந்த ஆண்டில் பிரான்ஸில் மாணவர்களும் இளம் தொழிலாளர்களும் அதிகாரபூர்வமான கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்புக்கிடையில் நடத்திய புரட்சிகரப் போராட்டம், அங்கு மாபெரும் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்னும் நம்பிக்கையை எங்களுக்குத் தந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் தோன்றிய நக்ஸலைட் இயக்கம் எங்களை ஈர்த்ததில் வியப்பில்லை.  

சைவ சித்தாந்தத்திலிருந்து கிறிஸ்தோபர் கால்ட்வெலின் இலக்கியக் கோட்பாடுகள் வரை சிந்தனை மன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்ட விஷயங்கள் ஏராளமானவை. அந்த மன்றத்தின் செயல்பாடுகளின் நீட்சியாகத்தான் 'புதிய தலைமுறை' என்ற மாத ஏடு பிறந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்திலுள்ள எந்தவொரு கட்சியின், பிரிவின் கட்டுப்பாடுகளுக்கும் கட்டளைகளுக்கும் உட்படாமல் மார்க்ஸியத்தை முதன்மைப்படுத்தும் சுதந்திரமான விவாதங்களுக்கான ஏடாகத்தான் அது தொடங்கப்பட்டது. கருத்து வேறுபாடுகள் காரணமாக கி.பி.யும் நானும் அதிலிருந்து விலகினோம். அந்த ஏடு எந்த அளவுக்கு நக்ஸலைட் இயக்கத்தையும் மாவோ சிந்தனையையும் ஆதரித்ததோ அதே அளவுக்கு நானும் ஞானியும் அதே அரசியலை ஆதரித்தோம்; சிந்தனை அளவில் மட்டும் அல்ல; மாவோவின் வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான சுவரொட்டிகளை நானும் ஞானியும் அடங்கிய குழுவினர் கோவை நகர் முழுவதும் ஒட்டும் அளவுக்குக்கூட இந்த ஆதரவு ஒருகாலகட்டத்தில் இருந்தது. அதே வேளையில், எது ஒன்றையும் விமர்சனப் பார்வையுடன் அணுகும் நாங்கள் அந்த இயக்கத்தையும் விதிவிலக்காகக் கருதவில்லை. சாரு மஜும்தாருக்கே எங்கள் கருத்து வேறுபாடுகளை ஒளிவுமறைவின்றி முன்வைத்தோம். 

சீனாவில் நூறு மலர்கள் பூத்தனவோ இல்லையோ, நூறு கருத்துகள் முட்டி மோதினவோ இல்லையோ, 'புதிய தலைமுறை' ஏடு தொடங்கப்பட்டதற்கான குறிக்கோள்களை 'பரிமாணம்', 'நிகழ்' ஆகிய இரு ஏடுகளில் நிறைவேற்றுவதில் ஞானி பெற்ற வெற்றி கணிசமானது. 1990-ல் கண் பார்வையை அவர் முற்றிலுமாக இழந்துவிட்ட பிறகு ஞானப் பார்வையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும் முயற்சியாகவே அவரது அரசியல், இலக்கியச் செயல்பாடுகள் அமைந்திருந்தன என்றால் தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் அவர் பெற்றிருந்த ஆழமான புலமை அதற்கான வலுவான ஊட்டமாக அமைந்திருந்தது. அவரது அடிமனதில் கனன்றுகொண்டிருந்த தமிழ் தேசியத்தை மார்க்ஸிய அடித்தளத்தின் மீதே கட்டமைக்க விரும்பினார். உலக இலக்கியத்தையும் ஒட்டுமொத்த மானுட குலத்தின் விடுதலையையும் விழைந்த அவரால் ஒருபோதும் வேறுவிதமாகச் சிந்தித்திருக்க முடியாது' எனத் தனது கட்டுரையில் நினைவுகளை மீட்டிருக்கின்றார் இராஜதுரை அவரகள். 

அவரது சித்தாந்தக் கொள்கைகளைக் கண்டு பயமுற்ற அரச இயந்திரம் அவரை நக்ஸலைட் என முத்திரை குத்தியதுஇ மாசோதுங்கைக கண்டு இந்தியா மிரண்டதே அதற்கான காரணமாகம்;. மாவோவைவின் சித்தாந்தப் பார்வையையும் பாட்டாளிவர்க்கப் புரட்சியையும் அவர் ஆதரித்தமையே காரணமாகும் என்பது அன்று இந்திய அரசு இடதுசாரிகளை நசுக்க முற்பட்டதற்கான காரணம் என்பதும். மேலைநாடுகளின் ஆலோசனைகளும் சீனாவைக்காட்டி மிரளவைத்ததும் காரணிகளாகும்.

 'கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டை ஆக்கமுறையில் பிளெக்னோவ் புரிந்து கொண்டிருந்தார். நவீனத்தும் என்ற கருத்தை இவர்கள் கடுமையாகச் சாடினர். கார்க்க்கி, மாயாகோவஸ்கி, பிரெக்ட் முதலரியவர்களுக்குள் நவீனத்துவம் செழித்திருந்ததை இவர்கள் கண்டுகொள்ளவில்லை. சோசலிய யாதர்ததவாதம் என்பது ஸ்டாலின் காலத்தில் ஒரு அவசர தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரைகுறையான கோட்பாடு. இந்தியச் சூழலில் இந்தக் கோட்பாட்டுக்கு இடம் இல்லை. இந்தச் சொல்லாக் காட்டிலும் மார்க்சிய யதார்த்தவாதம் என்ற சொல் சரியாக பொருந்தும் என்று தோன்றுகின்றது. பிரதிபலிப்பு என்பதை லெனின் அற்புதமாக விளக்கினார். புறம் அகத்தைப் பிரதிபலிக்கிறது. அகத்தின் இயல்புக்கு ஒத்தவாறு பிரதிபலிக்கின்றது. இது (Pழளளவைiஎந சுநகடநஒழn) பாசிட்டிவ் ரிபெலெக்சன். மனம் தூண்டப்பட்ட நிலையில் புறத்தின் மீது எதிர்வினை செய்கிறது. இது (யுஉவiஎந சுநகடநஒழn) ஆக்டிப் ரிபௌக்சன். கலாச்சாரம்,, இலக்கியம் தத்துவம் முதலியை அனைத்தும்  மனிதன் புறத்தின் மீது செலுத்தும் எதிர்வினைகள்'. என மிக நயமாக தனது திறனாய்வுப் பார்வையை எழுத்தாளர் பஞ்சாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுத்; தனது பார்வையை காய்தல் நோதல் இன்றி முன்வைக்கின்றார். இவ்வித ஆரோக்கியமான ஒரு விமர்சனத்தைத் தமிழகத்தில் ஞானியிடமிருந்துதான் எதிர்பார்க்க முடியும் என்பதனால் அவரிடம் கருத்துரை பெறுவதற்காகத் தேங்கிக்கிடந்த நூல்கள் நூற்றுக் கணக்கானவை. 

படைப்பிலக்கியம் பற்றிக் குறிப்பிடும்போது தனது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்; 'கலை இலக்கியம் குறித்த மார்க்சிய அணுகுமுறையில் அந்தியமாதல் என்பதை மையப்படுத்தினால் ஒழிய மனிரக்களுக்குள் நடைபெறும் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியாது. ஆந்நியமாதல் என்பது இன்றைய சமூகச் சூழலில் பெரும்பாலும் எல்லா மனிதர்களையும் சிறிய அல்லது பெரிய அளவில் பாதிக்கத்தான் செய்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் மனிதனுக்குள் இருக்கவேண்டி பலமுக்கிய பரிமாணங்கள் இல்லை. பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாமல் உடமை வர்க்கமும் அந்நியமாதலுக்கு உள்ளாகி இருப்பதை மார்க்ஸ் விள்ககி இருக்கின்றார். பணம், அதிகாரம், ஆடம்பரம், போதை,தற்பெருமை, மதவாதம் என்பனவவற்றுக்குள் மனிதர்கள் முடங்கி இருப்பது அந்நியமாதல் அன்;றி வேறு இல்லை. பாட்டாளி வர்க்கம் என்பது இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் இல்லை. முதலாளிகளும் இப்படிப் பாதிப்புக்கு உள்ளகி உள்ளனர். இதன் காரணமாக வாழ்வியக்கம் இவர்களுக்குள் முழுமையாக இல்லை. இயற்கை முதலியவற்றோடு இவர்களுக்கு முழு அளவில் உறவு இல்லை. இப்படி எத்தனையோ வழிகளில் இவர்களுக்குள் முடக்கம் நேர்ந்திருக்கிறது. வரலாறு மற்றும் பொருளியல் சூழல் இதற்கான காரணம் என்று இங்கு சுருக்கமாகச் சொல்லலாம். இத்தகைய சமூகச் சூழலில் பாட்டாளிகளின் சுதந்திரம் முதலியவை கட்டுப்பாட்டுக்கு உள்ளாகி உள்ளன. முதலாளியும் சுதந்திரவானாக இல்லை. பணத்திற்கும் அதிகாரத்திற்கும் அவனும் அடிமைப் பட்டிருக்கிறான். அவனுக்கு வாய்த்திருக்கும் சில வசதிகள் காரணமாக அவன் தனது அடிமைத்தனத்தை உணர்வதில்லை. இந்நிலையில் உடமை வர்க்கத்தினருக்கும் சேர்த்து பாட்டாளி வர்க்கம் பாடுபட வேண்டும் என்று மார்க்ஸ் கூறுகிறார்' என அவர் வைக்கும் கருத்தியல் வாதம் உண்மையிலேயே மார்க்சியத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள வைக்கின்றது. மார்க்சியம் பற்றிய தெளிந்த அறிவை அவர் பெற்றுள்ளமையால் தான் அவரது எழுத்துக்கள் தெளிந்த ஓடையில் நீர் பாய்வதுபோன்று சலனமின்றிச் செல்கின்றன என்பதனை அவரது திறனாய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இலக்கியத்துக்கும் மார்க்சிசத்திற்கும் மிகத் தெளிவான முடிச்சை அவிழ்த்து விடுகின்றார். இலக்கிய விமர்சகர் எப்படியெல்லாம் பார்க்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவரது சிலப்பதிகாரப் பார்வையைத் தருவது பொருத்தமாக அமையும். 'பண்பாடு வளர்ப்புஇ மரபு வழியில் கற்பிகப்படும் அறம் என்றெல்லாம் இங்கு நம் ஆய்வுகள் செல்ல வேண்டும். மார்க்சியம் இங்கு நுழைவதற்கில்லை. பழங்காலச் சூழலில் நீதி முறையாக வகுக்கப்படவில்லை. பாண்டியனும் தன் மனைவி காரமணமாக ஒரு நெருக்கடியில் இருக்கின்றான். காணாமல் போய்விடடதாக பொற்கொல்லன் சொன்ன சிலம்பை மீட்டுத் தருவதன் மூலம் அவள் ஊடலைத் தீர்க்கமுடியும். அமைச்சர்களை அவன் கலந்து கொள்ளவில்லை. கோவலன் கையில் சிலம்பு இருந்ததால் அவனைக் கொன்று சிலம்பு கொண்டு வாரும் என்று ஆணை இடுகின்றான். காவலன் இப்பொழுது நீதியைச் செயல்படுத்த வேண்டி நேருகிறது. கோவலன் நல்லவனாகத் தோன்றகிறான் என்று ஒரு காவலன் சொல்லஇ இன்னொருவன் நமக்கது வேலை அல்ல. கோவலன் கையில் சிலம்பு இருக்கிறது. ஆகவே அவன் குற்றவாளி. கொல்வது நம் கடமை என்று அவன்; செயல்படுகிறான். கோவலன் வெளி நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி வந்தவன். அவனிடத்தில் விலை உயர்ந்த சிலம்பு இருக்கமுடியாது. ஆகவே அவன் கள்வனாக இருக்க முடியும். இளங்கோ தரும் விவரங்கள் வராற்றுச் சூழலைப் புரிந்துகொள்ளப் போதுமானவை. இப்படியே நம்கால இலக்கியங்களையும், வரலாறு மற்றும் பொருளியல் சூழலை வைத்து விளங்கிக் கொள்ள முடியும். இது குறித்து மார்க்சியம் மேலும் துல்லியமான விவரங்களை வேண்டுகிறது. ஓர் இலக்கியத்தைப் படைக்கும் எழுத்தாளன், சமுதாயத்தில் எத்தகைய வாழ்நிலையோடு இயங்குகிறன் என்றெல்லாம் நாம் திரட்டும் விபவர்ஙகள் சிறிய அல்லது பெரிய அளவில் அவனது படைப்பை விளக்கமுடியும். வணிகமுறை எழுத்தாளர்களின் படைப்புக்களை இப்படி எல்லாம் திறனாய்வுக்கு உட்படுத்த முடியும்.' என படைப்புகளுக்கு திறனாய்வு செய்யும் அணுகு முறைகள் பற்றி சிலாகித்திருப்பது அவரது நுண்ணறிவைக் காட்டுகின்றது.  மார்க்கிச சித்தாந்தத்தின் ஊற்றாகப் பிரவாகிக்கின்றது. சரி பிழை கூறுவது அல்லத் திறனாய்வு, அது அணுமுறைகளையும் அதற்கான தீர்வுகளையும் உள்ளடக்கியது என்பது அவரது திறனாய்வைக் கூர்ந்து நோக்கும்போது புலனாகின்றது. 

இவற்றைவிட பெரியாரியத்தின் கருத்துக்களை உள்வாங்கினாலும் அவரது கொள்கை முதலாளித்துவத்தின் எல்லைதான் என்பதனை தனது திறனாய்வாக வெளிக்கொண்டு வருவுதனையும் சுட்டிக்காட்டியாக வேண்டும். 'சமதர்மமும், சுயுமரியாதையும் பெரியாரின் மெய்யியல் பகுத்தறிவு ஓர் ஆய்வுமுறை மட்டுமே. இன்று, பெரியாரியமும் முதுலாளியத்திற்கத் துணை நிற்கிறது, சாதி, மத, பார்ப்பனிய எதிர்ப்போடு நிற்பது முதலாளிய எல்லையே' என்கின்றார். சமுதாயம் என்பது தனியே பாட்டாளி வர்க்கத்தினரையோ அன்றி முதலாளி வர்க்கத்தையோ மட்டும் கொண்டதல்ல. பல்வேறு சாதிய, சமய, பிரதேச வேறுபாடுகளை உள்ளடக்கியது, அதனை எழுத்தாளன் மனதிருத்தி, அவற்றில் உள்ள நல்லிணக்கம் கொண்டவற்றை உள்ளார்ந்து நோக்கி அவற்றின் வழி தட்டிக் கொடுத்து தவறுகளைக் களைய முற்படவேண்டுமே ஒழிய எல்லாவற்றையும் புறத்தொதுக்கவோ அன்றி அகத்தில் கொள்ளவோ கூடாது, கால்மார்க்சை ஆதரித்த ஏங்கல்ஸ்கூடத்தான் ஒர் ஆலை முதலாளி. அவர் முதலாளி என்பதற்காக அவரை மார்க்சிசச் சித்தாந்தத்தில் இருந்து ஒதுக்கிவிட்டு இடது சாரிகளை அல்லது பாட்டாளிகளை மட்டும் சமுதாய உறுப்பினர்களாகக் கொள்ளமுடியுமா?  

கனடாவின் எழுத்தாளர் அகில் சாம்பசிவம் அவர்களின் கோவையில் நடைபெற்ற நூல் வெளியீட்டிற்குத் தலைமைதாங்கி நடத்தினார் என்றால் அவரது இலக்கிய ஈடுபாட்டையும் வெறுமனே மார்க்கிச வாதியாக அன்றி இலக்கியவாதியாகவும் காட்டிக் கொண்டு அனைவரையும் ஒப்புர நோக்கி அணுகும் மாண்பு கொண்டவர் என்பது வெளிப்படை.  தமிழ்ர் சால்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த மாமனிதர். அந்த மாமனிதம் இன்று எம்மோடு இல்லை.   

'மார்க்சிய அழகியல்', 'கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை?' என்பனபோன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளதோடு பெருந்தொகையான இலக்கிய திறனாய்வுகளை எழுதியுள்ளது அவரது பார்வையை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.    தனது கருத்துக்கள் சாதாரண மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு 'நிகழ்', 'தமிழ்நேயம்' உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தினார். தமிழ் மார்க்சியம் என்பதன் மூல முன்னோடி கோவை ஞானி அவர்கள். 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள்இ 3 கவிதை நூல்களை படைத்திருக்கிறார். பாரதிக்கு நோபல் பரிசு கிட்டாது  அவர் புறக்கணிக்கப்பட்டது போன்று தமிழனாகப் பிறந்த ஞானி தமிழ் இலக்கிய உலகத்திற்காற்றிய பணி வெளியே கொண்டு வரப்படாது மழுங்கடிக்கப்பட்டமைக்கு அவர்மீது இடதுசாரிச் சாயம் பூசப்பட்டதும் காரணமாகின்றது, புதுமைப்பித்தன் விளக்கு விருதினை 1998 லும். கனடா இலக்கியத்தோட்ட விருது, 2010 லும் எஸ்.ஆர்.எம். பல்கவலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய பரிதிமாற் கலைஞர் விருதினை 2013லும் இந்து தமிழ்த் திசை வழங்கிய சாதனையாளர் விருது 2019லும் பெற்றிருக்கின்றார். தமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருதினை 2006இல் கிடைக்கப்பெற்றுள்ளது. கனடா இலக்கிய விருதினை அதன் தலைவராக இருந்த மறைந்த பேராசிரியர் செ.கனகநாயகம் அவர்கள் நேரடியாகக் கோவைக்கு அவரது இல்லத்திற்குச் சென்று கையளித்திருந்தார் என்றால் அவருக்கு வளங்கப்பட்ட விருதினால் இலக்கியத் தோட்டம் பெருமை பெற்றிருக்கின்றது எனலாம். ஆனாலும் சாகித்திய மண்ணடலப் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்ட அவரது ஆற்றலை ஏனோ அரசு மறுத்துள்ளமை அரசியல் செல்வாக்கை அவர் பெற்றிருக்காதமையோ அன்றி கால்வருடியாக கைகட்டிப் பின்செல்ல மறுத்தமையோ என்பது மறைபொருளாகவே உள்ளது, தமிழ்த் தேசியத்தை ஆதரித்த தாக்கமாகவும் சாகித்திய மண்டலக் குழுவினரின் விசனத்திற்கு உள்ளாகியும் இருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றுகின்றதுஇ அவர் இல்லாதபோதும் அவருக்கு இனியாவது சாகித்திய மண்டலப்பரிசு கிட்டுமா என்பதே தமிழ் எழுத்தர் உலகினதும் வாசகர்களினதும் அவாவும் அங்கலாய்ப்பும் ஆகும்.  

வாசகர்களின் நலன்கருதி அவரது படைப்புக்களைத் தமிழ் விக்கிபீடியா பதிவிட்டுள்ளமையை இங்கே தருகின்றோம்.

 

திறனாய்வு நூல்கள்:

மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் - 1988

தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் - 1994

எண்பதுகளில் தமிழ் நாவல்கள் - 1994

படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம் -

தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் - 1997

நானும் என் தமிழும் - 1999

தமிழன் வாழ்வும் வரலாறும் - 1999

தமிழில் படைப்பியக்கம் - 1999

மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் - 2001

எதிர் எதிர் கோணங்களில் - 2002

மார்க்சிய அழகியல் - 2002

கவிதையிலிருந்து மெய்யியலுக்கு - 2002

தமிழ் தமிழர் தமிழ் இயக்கம் - 2003

தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் - 2004

வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் - 2004

தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் - 2005

தமிழன்பன் படைப்பும் பார்வையும் - 2005

வள்ளுவரின் அறவியலும் அழகியலும் - 2007

தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் - 2008

நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் - 2009

செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் - 2010

தமிழிலக்கியம் இன்றும் இனியும் - 2010

வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - 2011

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் - 2012

அகமும் புறமும் புதுப்புனல் - 2012

அகமும் புறமும் தமிழ்நேயம் - 2012

ஞானியின் எழுத்துலகம் - 2005

ஞானியோடு நேர்காணல் – 2012

 

மெய்யியல்:

மார்க்சியத்திற்கு அழிவில்லை - 2001

மார்க்சியமும் மனித விடுதலையும் - 2012

இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் - 1975

மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு - 1976

கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை - 1996

நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் – 2006
 

கவிதை நூல்கள்:

கல்லிகை - 1995

தொலைவிலிருந்து - 1989

கல்லும் முள்ளும் கவிதைகளும் - 2012

தொகுப்புக்கள்:

தமிழ்த் தேசியம் பேருரைகள் - 1997

அறிவியல் அதிகாரம் ஆன்மீகம் - 1997

மார்க்சியத்தின் எதிர்காலம் - 1998

படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும் - 1999

மார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள் - 1999

விடுதலை இறையியல் - 1999

இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம் - 2000

மார்க்சியம் தேடலும் திறனாய்வும் - 2000

நிகழ் நூல் திறனாய்வுகள் 100 - 2001

பெண்கள் வாழ்வியலும் படைப்பும் - 2003






                           
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்