கச்சிருக்கும்போது கரும்பானேன்!

கவிஞர். மா.உலகநாதன், முனைவர் பட்ட ஆய்வாளர்


கச்சிருக்கும் போது கரும்பானேன்: கைக்குழந்தை
வச்சிருக்கும் போது மருந்தானேன்: - நச்சிருக்கும்
கண்ணார் கரும்பானார் காணவும் நான் வேம்பானேன்.
அண்ணா மலையரசுக் கு.          
   
                                                                         - சுப்பிரதீபக் கவிராயர்.

ளமையும், எழிலும் இருக்கும்போது ஏறெடுத்துப் பார்க்கும் ஆடவர்கள், எழில் நலம் குறைந்த பிறகு அவர்களைப் பொருட்டாகக் கூட மதிப்பதில்லை என்பதை மேற்கண்ட பாடலின் பொருளாகக் கொள்ளலாம்.
திருமணமான புதிதில் ஒரு இளைஞன் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு கோயிலுக்குச் செல்கிறான். செல்கின்ற வழியிலே அவளுக்கு முள் குத்திவிட்டது. அவள் ஆ என்று அலறியதும் இவன் ஓடோடிச்சென்று அவளது காலைப் பிடித்து மெதுவாக அந்த முள்ளை நீக்குகிறான். அடடா! சனியன் பிடித்த முள் குத்திவிட்டதே என்று அங்கலாய்க்கிறான்.

சரித்திரம் மீண்டும் திரும்புகிறது. அதே இளைஞன் : அதே மனைவி ஆண்டுகள் ஐந்து கடந்த பின்னர் மகனையும், மகளையும் அழைத்துக்கொண்டு அதே போலக் கோயிலுக்குச் செல்கிறார்கள். இப்பொழுதும், அவளுக்கு முள் குத்திவிடுகிறது. அவளது அலறல் சத்தம் கேட்டதும்: சனியனே! பார்த்து வரக்கூடாதா? முள்ளைக் குத்திக்கொண்டுத் தொல்லைப் படுத்துகிறாயே? என்று கடுகடுக்கிறான்.
எப்படியிருக்கிறது பார்த்தீர்களா?

இதைத்தான் நற்றிணையில் ஒரு பாடல், இளமையிருந்தாலும் முதுமையானாலும் இல்லறத்தில் வாழ்பவர்கள் ஒரே நிலையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.


சங்க இலக்கியங்கள், உலக இலக்கியங்களின் இமயம்: அவை உலகம் தோன்றியதிலிருந்து உலகம் இருக்கும் வரையுள்ள வாழ்க்கையைப் பற்றிப் பேசுகின்றன. சங்கத் தொகை நூல்களில் நற்றிணை என்ற நூல் முதலிடம் பெறுகிறது. நல்10 திணை ஸ்ரீ நற்றிணை என்றாகும். நல்ல ஒழுகலாறுகளைக் கூறுவது என்று பொருள். 192 புலவர்களால் பாடப்பெற்றது நற்றிணை. நற்றிணைப் பாடல்களைத் தொகுக்கச் செய்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
பொது நிலையில் எல்லா அக இலக்கியங்களிலும், பெரும்பாலும் தோழி கூற்றுதான் மிகுதியாக இருக்கும். அந்நிலையில் நற்றிணையிலும் தோழி கூற்றே மிகுதியாக உள்ளது.
சங்க காலக் காதல் வாழ்வில் அவனில் அவளும், அவளுள் அவனும் கரந்து கரைகின்ற தன்மை உள்ளீடானது.

இம்மை மாறி மறுமை யாயினும்
நீயாகி யரெம் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே
- (குறுந்தொகை)

நற்றிணையில் தோழி கூற்றாக அமைந்த ஒரு பாடல்,

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி - பூக் கேழ் ஊர!
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு யானைப் போஓர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.
- (நற் - 10)

தலைவி தலைவனை உயிரினும் மேலாகக் கருதினாள்: அவனுடன் வாழ எண்ணினாள்: அவனையே காதலித்து உருகினாள்: இதனைத் தோழியும் நன்குணர்ந்தாள்: தலைவனுடன் இணைத்தும் வைத்தனள்;. ஆனால், தலைவன் பால் தோழிக்கு ஒரு ஐயம் தோன்றுகிறது. இளமையழகைக் கண்டு விரும்பி ஏற்றுக் கொண்ட தலைவன், தலைவியின் முதுமைப் பருவத்திலும் கைவிடாதிருக்க வேண்டுமே என்ற கவலையில், இவளது அண்ணாந்து நிமிர்ந்துள்ள அழகிய கொங்கைகள் தளர்ந்து சாய்ந்த காலத்திலும், பொன்போன்ற இவளது மேனியிலே கருமணி போன்று தாழ்ந்து தொங்கும் நன்நெடுங் கூந்தல் வெள்ளிய நிறம் பெற்று நரைத்திடும் நிலைக்கு வந்தாலும் நீ இவளைக் கைவிடாது காப்பாற்றுவாயாக! அக்காலத்தில், இவள் நம் முயக்கத்துக்ப் பயன்படாள்! முதுமையடைந்தாள் என்று கருதி, விட்டுப் பிரியாது பாதுகாப்பாயாக! என்று தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள்.

பாவேந்தர், எது எனக்கு இன்பம் நல்கும் : இருக்கின்றாள் என்பதொன்றே எனக்கு இன்பம் நல்கும் என்பார்.
முதுமைக் காதலிலும் ஒரு நெறியைக் காட்டுகிறது நற்றிணை.


worldnath_131149@yahoo.co.in