ஆட்சிமொழி

கவிஞர் இரா.இரவி

தமிழறிஞர் பாவாணர் தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டது போல், உலகின் முதன் மொழி நம் தமிழ் மொழி. தமிழராகப் பிறந்ததற்கே உலக மனிதர்கள் யாவரும் பெருமை கொள்ள வேண்டும். என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில். மற்ற மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி நம் தமிழ்மொழி.

தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மாமா, அத்தை, நாத்தனார், மைத்துனன், கொளுந்தன் - இப்படி தமிழ்மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் இத்தனை உறவுச் சொற்கள் கிடையாது. அதனால் தான், மகாகவி பாரதி பாடினான்,

'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்' என்று.


இனிமையான நம் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அரசுப் பணியாளர்களின் கடமை. தமிழக அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழியாக முழுவதும் நடைமுறைக்கு வரவில்லை. காரணம் பழக்கத்தின் அடிப்படையில் பழைய கோப்பினைப் பார்த்து அதன்படியே ஆங்கிலத்தில் எழுதி வருகின்றனர். வரைவுகளில் தமிழில் எழுதினால் எழுதுபவருக்கும் புரியும், வரைவு பெறுபவர்களுக்கும் நன்கு புரியும். நினைவூட்டு மடலைக் கூட பலர் ஆங்கிலத்தில் எழுதி வருகின்றனர்.

"பார்வை காண்க, பதில் வரைக" நான்கே சொற்களில் நினைவூட்டு மடல் வரையலாம். தமிழில் எழுதினால் சுருக்கமாக எழுத முடியாது என்று கருதி வருகின்றனர். வயிற்று வலி காரணமாக விடுப்பு எடுக்க வேண்டிய அரசுப் பணியாளர், விடுப்புக் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதினார். காய்ச்சல் காரணமாக என்று எழுதினார். ஏன்? என்று கேட்ட பொழுது, ஆறாம் வகுப்பு படிக்கும்போது காய்ச்சல் காரணமாக விடுப்பு வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதிப் பழகியது இன்றும் தொடர்கிறது என்றார். இந்த நிலைதான் ஆங்கிலக் கடிதங்களால் ஏற்படும். தமிழ்நாட்டில் தமிழ் அலுவலர்கள் சந்திப்பு கூட்டம் நடக்கின்றது. இந்தத் தகவலை ஆங்கிலத்தில் அனுப்பு வேண்டிய அவசியம் என்ன?

கடைநிலை ஊழியருக்கு விளக்கம் கேட்டு, ஆங்கிலத்தில் தருகின்றனர். அதிகம் படித்து இராத அவர் எப்படி அம்மடலை புரிந்து கொண்டு பதில் தர இயலும். எனவே ஆங்கிலம் தெரிந்த மற்றொரு நபரை அணுகி விளக்கம் தருகின்றார். ஆனால் அந்த விளக்கம் சம்மந்தப்பட்டவரின் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொண்டு தந்த விளக்கமாக இருக்காது. எனவே, தமிழ்நாட்டில் மடல்களில் யாவும் தமிழிலேயே இருக்க வேண்டும். பிற மாநிலங்களுக்கான மடல்கள் மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்த வேண்டும்.

வடமாநிலங்களில் இந்தியில் கையொப்பம் இட்டால் தான் சம்பளம் கிடைக்கும். வேறுமொழயில் கையொப்பம் இட்டால் சம்பளம் தர மாட்டர்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழில் கையெழுத்து போடுங்கள் என்று அறிவுறுத்த வேண்டிய அவல நிலை. அப்பாவிற்கான முன்னெழுத்தை பலர் ஆங்கிலத்திலேயே இட்டு வருகின்றனர். வெளிநாட்டில் அப்பா முன் எழுத்தை தமிழ் எழுத்தைப் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து யாராவது இடுவார்களா? இட்டால் ஏற்பார்களா? நம் நாட்டில் தான் இந்த நிலை. எனவே அனைவரும் முன்னெழுத்தை தமிழில் எழுத முன் வர வேண்டும்.

சங்க காலத்தில் தமிழே ஆட்சி மொழியாக இருந்தது என்பதற்கு பல்வேறு சான்றுகள் உண்டு. அன்று பயன்படுத்தப்பட்ட ஆட்சிச் சொல்கள் நிறைய உள்ளது. அவற்றில் முக்கியமானவை அவையம், அவை, ஆசிரியர், முனைவர், கோட்டம், சிறை, வேளாண், முதல்வன், மண்டபம், வானூர்தி,  சீருடை,  நாளங்காடி,  நுகர்வோர், அகவை, அமைச்சர், கண்காணிப்பு, கணக்கர், தாளாளர், நிர்வாகி இப்படி பல சொற்கள் அன்றே பயன்படுத்தப்பட்டு இன்று வரை வழக்கில் உள்ளது. ஆட்சிச் சொல் அகராதி என்ற நூல் தமிழக அரசு வெளியிட்டு, அரசு அலுவலகங்களில் உள்ளது. படித்து அறிந்து கொள்ளலாம்.

உணவுக் கலப்படம் உடலுக்குக் கேடு, மொழிக் கலப்படம் மொழிக்குக் கேடு என்பதை உணர்ந்து, பிறமொழிச் சொற்களை முடிந்த மட்டும் தவிர்க்க வேண்டும்.

தமிழ்ச் சொல்

அவை
திரு
அரியணை
யானை


பிறமொழிச் சொல்

சபை
ஸ்ரீ
சிம்மாசனம்
கஜம்


மொழி விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்தன. இனாம், கலாட்டா, சாந்தி, தாசில்தார், தாக்கீது, பசலி, ஜப்தி, குமாஸ்தா, லத்தி, ஆஜர், பந்தோபஸ்த், ராஜினாமா, ஜமாபந்தி, ரத்து, முன்சீப், தாலுகா, இலாகா, சிரசுதார், மஸ்தூர், கிஸ்தி, பிரதேசம், ஆஸ்தி இப்படி பல சொற்கள் கலந்துள்ளன. இந்தச் சொற்களை மடல்களில் எழுதுவதையும்,  பேச்சில் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

சாக்கு, பீரோ, கக்கூஸ், கபே, அலமாரி, மேஸ்திரி, சாவி, பிரவேசம், அமுல் இப்படி பல பிறமொழி சொற்கள் நமது தமிழ்மொழியில் கலந்து உள்ளது. இவற்றையும் தவிர்க்க வேண்டும். ஆட்சிச் சொல் அகராதி நூலில், தூய தமிழ்ச்சொற்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

ஆங்கிலத்தில் பேசும்போது ஆங்கிலம் பயன்படுத்தலாம். தமிழில் பேசும்போது ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவது தவறு. ஊடகங்களின் வருகையால் தமிங்கலம் பரவலாக்கப்பட்டு விட்டது. இவற்றைத் தவிர்க்க முன்வர வேண்டும். ஆங்கிலேயர்கள் ஆங்கிலம் பேசும்போது தமிழ் கலந்து பேசுவார்களா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அரசு அதிகாரிகள் திட்ட விளக்க கூட்டங்களில் பேசும்போது சொல், பிறமொழிச் சொல் கலப்பின்றி, முடிந்தளவிற்கு நல்ல தமிழில் பேச வேண்டும். நல்ல தமிழில் பேசுவது கேலிக்குரியதாக ஆக்கப்பட்டுள்ள அவல நிலை மாற வேண்டும். நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரை விரட்டி விட்டோம். ஆனால் ஆங்கிலத்தை விரட்டாமல் பிடித்துக் கொண்டோம்.

தமிழ்மொழி மிகவும் நுட்பம் வாய்ந்தது. தமிழில் ஒரு புள்ளிக்கு கூட மதிப்பு உண்டு. கல்வி என்பதை புள்ளி போடாமல் கலவி என்று எழுதினால் பொருளே மாறி விடும். எனவே தமிழ்மொழியை மிகவும் கவனமாக எழுத வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தார் என்பதை மாவாட்ட ஆட்சித் தலைவர் வந்தார் என்றால் ஒரு எழுத்தால் மிகப் பெரிய பொருள் குற்றம் வந்து விடும். எனவே கவனம் தேவை.

காவல் துறையில் தமிழ் ஆட்சிமொழி கடைபிடிப்பதில் குறைபாடு உள்ளதாக ஆய்வு செய்த உதவி இயக்குனர்கள், தமிழ் வளர்ச்சித் துறையினர் தெரிவித்தனர். எனவே, காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை இவற்றை தமிழிலேயே எழுத வேண்டும். அப்போது தான் என்ன? எழுதி உள்ளது என்பது தெரியும், புரியும். அரசுப் பணியாளர்கள் அதிகாரிகளின் நாட்குறிப்பு, பயண நிரல் என யாவும் தமிழிலேயே எழுத வேண்டும். அரசுப் பணியாளர்கள், மக்கள் பணியாளர்கள் மக்கள் வரிப் பணத்திலிருந்து தான் சம்பளம் பெறுகின்றோம். மக்கள் மொழியான தமிழ் மொழியில் நடவடிக்கை நடைபெற வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அலுவலக ஆணை, செயல்முறை ஆணை, சுற்றறிக்கை யாவும் தமிழிலேயே இருத்தல் வேண்டும். செயல்முறை ஆணையில் நகராட்சியினர் மட்டுமே முன்னிலை என்று எழுத வேண்டும். மற்ற அலுவலர்கள் செயல்முறை ஆணையில் முன்னிலை என்று எழுதுவது தவறு, பிறப்பிப்பவர் என்று எழுதுவதே சரி. தமிழ் ஆய்வுக்கு வரும் உதவி இயக்குனர்களிடம் தங்களுக்கு எழும் கேள்விகளுக்கு, விடை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

தாய்மொழி கல்வி தான் தேவை என்பதை மகாத்மா காந்தியடிகள், நோபல் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் வரை அறிஞர்கள் அனைவருமே வலியுறுத்தி உள்ளனர். நாமும் நம் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை தாய்மொழியாம் தமிழ் மொழியிலேயே வழங்க வேண்டும். அப்போது தான் சுயமாக சிந்திக்கும் அறிவு வளரும். அறிவியல் மேதை அப்துல் கலாம், ஆரம்பக் கல்வியை தமிழ் மொழியிலேயே பயின்றார். அதனால் தான் அவரால் சாதிக்க முடிந்தது. நாகரீகம் என்ற பெயரால் ஆங்கிலக் கல்வி பயிற்று மொழியாக ஆங்கிலம் கற்பித்து, குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலை குறைத்து வருகின்றனர். பாபா பிளாக் சிப் என்று ஒரு ஆங்கிலப் பாடல், கருப்பு ஆடே வா வா, மசிரு இருக்கா என்பதே இதன் பொருள். இந்தப் பொருள் எத்துணை பேருக்கு புரிந்தது, இதில் என்ன நீதி உள்ளது? ரெயின் ரெயின் கோ அவே என்று ஒரு ஆங்கிலப் பாடல், மழை அடிக்கடி பொழியும் நாட்டில், விளையாட வேண்டும், மழையோ போ போ என்று எழுதப்பட்ட ஆங்கிலப் பாடலை வெப்ப பூமியான நமது நாட்டிற்கு மழை தேவை, இங்கு இந்தப் பாடலைப் பாடுவது பொருத்தமற்றது. மாமழை போற்றுதும் என்று பாடியவர்கள் நாம். தமிழ்ப் பாடல்களில் பொருள் உண்டு. செய்தி உண்டு. எனவே இனி கட்டாயமாக ஆரம்பக் கல்வியை அழகு தமிழிலேயே வழங்க வேண்டும்.

கணக்காயர் தணிக்கைக்கு பதிலை, ஆங்கிலத்திலேயே பல அலுவலகங்களில் எழுதி வருகின்றனர். தமிழில் எழுதலாம், தமிழில் எழுதினால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கணக்காயர் அலுவலகம் அறிவித்து உள்ளது. வணிக நிறுவனங்கள் பெயர்ப் பலகையை தமிழலேயே எழுத வேண்டும். அரசு அலுவலகங்களில் பெயர்ப்பலகை தமிழிலேயே இருக்க வேண்டும். அரசு இதற்கு நிதி ஒதுக்கீடு உள்ளது. தமிழ் ஆட்சி மொழி தொடர்பாக பல அரசாணைகள் உள்ளது. அரசுப் பணியாளர்கள் அரசாணைக்கு கட்டுப்பட்டு தமிழை ஆட்சி மொழியாக்க முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.சம்பள உயர்வு அரசாணை வந்தவுடன் நடைமுறைப்படுத்தி சம்பள உயர்வு பெறுவதைப் போல தமிழ் ஆட்சிமொழி அரசாணைகளை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வரும் ஆணைகள் முழுவதுமே தமிழில் வரவேண்டும்.

எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆன போதும், இன்னும் அதைக் கடைபிடிக்காத அரசுப் பணியாளர்கள் பலர் உள்ளனர். அனைவரும் எழுத்துச் சீர்திருத்தத்தை கடைபிடிக்க வேண்டும். உலகில் எந்த மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்பு நம் மொழிக்கு உண்டு. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ்மொழி.

மக்களாட்சி மக்களுக்கு புரியும் வகையிலேயே நடைபெற வேண்டும். எனவே தமிழ் ஆட்சிமொழி தமிழக அலுவலகங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.தமிழ் ஆட்சிமொழி அரசாணைகள் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் ஆட்சிமொழி அரசாணைக்கு கட்டுப்படாத அரசுப் பணியாளர்களுக்கு தண்டனை வழங்குவதில் இனி தயக்கம் காட்டக் கூடாது. தண்டனை உண்டு என்று உணர்த்தினால் தான் ஆங்கிலத்தில் வரைவுகள் எழுதுவது தவறு என்பதை உணருவார்கள். அரசுப் பணியாளர்களின் மனத்திலும் மாற்றம் வர வேண்டும். ஆங்கிலம் உயர்ந்த மொழி என்ற தவறான கருத்தைப் போக்க வேண்டும். எங்கும் தமிழ்,  எதிலும் தமிழ் என்ற நிலை வர வேண்டும். உயர்நீதி மன்றத்திலும் தமிழில் வழக்காட உரிமை வேண்டும். உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞர் மட்டுமே வாதாடுகின்றார். அவர் என்ன பேசுகின்றார் என்பது வழக்கில் தொடர்புடையவர்களுக்கு புரிய வேண்டும். அப்போது தான் முழுமையான நீதி கிடைக்கும். சங்கம் வைத்த தமிழ் வளர்த்த மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை உள்ளது. அங்கு செந்தமிழுக்கு இடம் தர வேண்டும். தமிழை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்த நடுவணரசு உயர்நீதிமன்ற மொழியாகவும், நடுவணரசு ஆட்சி மொழியாகவும், தமிழை அறிவித்து தமிழுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.

 

eraeravik@gmail.com

 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.