'ஈழத்து நாடகம்.... எனது பார்வையில்.....!

முல்லை அமுதன்

'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈனநிலை கண்டு துள்ளுவார்'

                                                            - பாரதி

ஈழத்து நாடக உலகம் பல விற்பன்னர்களைத்தந்துள்ளது. ஈழத்து நாடகத் தந்தை எனக் கருதும் 'கலையரசு' சொர்ணலிங்கம் அவர்களின் வருகைக்கு பின்பு இன்றைய தாசீசியஸ், கே. பாலேந்திரா வரை பலர் நாடக இலக்கியத்திற்கு பங்காற்றியதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது. கலையரசுவின் வாரிசுகளாக நவாலியூர் நடேசன், ரகுநாதன், பரிஸ்டர் யோசப் போன்றோரை நாம் பெற்றிருக்கிறோம். அவரின் 'தேரோட்டி மகன்' இன்றும் மறக்கமுடியாத நாடகமாகும்.

நான் பங்குபற்றிய அல்லது என்னைப் பயன்படுத்திய எமது ஊர் சனசமூகநிலைய ஆண்டுவிழாக்களில் 'சந்தியில் நில்லாதே' எனும் கிண்டல் நிறைந்த நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றி தொடர்ச்சியாக 'கனவுக்கிளி'. 'நல்லமுடிவு', 'மலர்ந்தவாழ்வு' எனும் நாடகங்களை மேடையேற்றும் வாய்ப்பு எழுபதுக்குப்பின் கிட்டியது.

சிறு வயதில் திருகோணமலை பெருந்தெரு மெதடிஸ்ட் தமிழ்கலவன் பாடசாலையில் படித்த காலங்களில் ஆசிரியர் திரு. வேதநாயகம் அவர்களின் முயற்சியில் உயர்தரவகுப்பு மாணவர்களால் 'துரோகி', 'குரங்குகள்' எனும் நாடகங்கள் மேடைகண்டன. அப்போது சிறுபராய வகுப்பில் நான் கற்றுக் கொண்டிருந்த போது 'வில்லியம் தெல்' நாடகத்தில் சிறுபாத்திரத்தில் முதன்முதலாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இப்போது நினைத்தாலும் உடல் கூசுகிறது. நானா அது என்பது போல?

க.பொ.த (சா.தரம்) யாழ். கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற காலத்தில் ஆசிரியர் நடராசா அவர்களின் முயற்சியினால்; 'சுந்தரமூர்த்தி நாயனார்' எனும் கவிதை நாடகம் ஒன்றைத் தயாரித்து யாழ் திறந்த வெளி அரங்கில் மாணவர்களால் மேடையேற்றப்பட்டது. மாணவர்களின் குரல் வளமும் கவிதைச் செறிவும் இயக்குனரின் சிறந்த நெறியாள்கையும் இணைந்து பலரையும் வியக்கச் செய்திருந்தது.

அவ்வப்போது 'அடங்காப்பிடாரி', 'வெளிக்கிடடி விசுவமடுவிற்கு', 'புழுகர்பொன்னம்பலம்', 'புழுகர்பொன்னையா', 'தம்பி கொழும்பிலே' போன்ற நகைச்சுவை நாடகங்கள் பிரபல்யமாகியிருந்தன. நான் பார்த்த நாடகங்களில் 'ஷர்மிலா ஆர்ட்ஸ்' ஐசாக் இன்பராஜா நடித்த கே. பாலசந்திரனின் 'மச்சானைப்பார்த்தீங்களா?' நகைச்சுவை நாடகம் வீரசிங்கம் மண்டபம் நிறைந்த இரகர்களுடன் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கதாகும். அன்னக்கிளி திரைப்படம் வெளிவந்த காலத்தில் பிரபல்யமான பாடல்வரியைத் தலைப்பாகக் கொண்டிருந்ததனாலும் இந் நாடகம் பிரபல்யம் பெற்றதில் வியப்பில்லை.

எண்பதிற்கு முன்பு கொழும்பில் இருந்து கலைச்செல்வனின் இயக்கத்தில் சிறீசங்கர் நடித்த 'ஒரு மனிதன் இரு உலகம்' நாடகம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இரண்டு காட்சிகள் நடந்தன. பரத்த கரகோசங்களுக்கிடையில் ஒரு சினிமா பார்த்த ஞாபகம் ஏற்பட்டது. காட்சியின் கோர்வை, வசன அமைப்பு, நெறியாள்கை ஒன்றாக இணைந்து பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதே போல் தான் வரணியூரானின் 'புழுகர் பொன்னையா', 'சம்பந்தம்', 'இரைதேடும் பறவைகள்', 'அசட்டு மாப்பிள்ளை', 'நம்பிக்கை' போன்ற நாடகங்களை வெற்றிகரமாக நடாத்தியிருந்தார். நல்ல ஆழுமை மிக்க இயக்குனரின் திறமையை இவரின் நாடகங்களில் கண்டேன். இதற்கு திருநெல்வேலியில் இவர் அரங்கேற்றிய டாக்டர் கோவூரின் 'நம்பிக்கை' எனும் நாடகம் சிறந்த உதாரணமாகும்.

எமது சனசமூகநிலைய ஆண்டுவிழா ஓன்றில் நானே எழுதி, இயக்கி நடித்த 'மலராத வாழ்வு' எனும் நாடகம் பல விமர்சனங்களைத் தந்திருந்தது. அந்த விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சமாளிக்க. எனக்கு ஒரு மாதம் பிடித்தது. அதே மேடையேற்றத்தின் போது நண்பர்களான பேரின்பநாதன், ஆனந்தன், கதிர்காமநாதன் போன்றவர்களால் 'ராதையின் நெஞ்சம்' எனும் முழுநீள சமூக நாடகம் மேடையேற்றப்பட்டது. நாடகம் அரங்கியல் சார்ந்து சொக்கன்
1977ல் எழுதிய 'ஈழத்து தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி' எனும் நூல் எம்மைச் சிந்திக்கவைத்தது.

1980 களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எமக்கு நாடகம் பற்றிய சிந்தனையை தெளியவைத்தது. அஷ;ரப்கானின் 'ஒரு வீடு கோவிலாகிறது', சில்லையூர் செல்வராஜனின் 'தணியாத தாகம்' குறிப்பிடத்தக்கதாகும். வேறுபல நாடகங்களைக் கேட்டிருந்தாலும் என்னை முழுமையாக ஆகர்சித்தது தணியாததாகமாகும். அதில் சோமு பாத்திரத்தில் 'அண்ணைறைட்' கே. எஸ் பாலச்சந்திரன் நடித்திருந்தார். நேயர்களை உறைய வைத்த நாடகமும் இதுதான். அமரர் வாசுதேவன் கூட நடித்திருந்தார்.

வாசுதேவன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து அமரர்ரானார். கே. எஸ் பாலச்சந்திரன் கனடாவில் வாழ்கிறார்.
செல்வராசன் நம்மிடையே இல்லை. அவரின் திரைப்படச்சுவடி நூல் மட்டும் நம்முன் ஞாபகமாய் என்றும் உள்ளது.

தன் நாடக அனுபவங்களை கே. செல்வராசன் என்பவர் கொழும்பில் நூலாக வெளியிட்டுள்ளார். 'கலையரசு' சொர்ணலிங்கம் அவர்களும் தனது நாடக அனுபவம் பற்றி எழுதி வெளியிட்டுள்ளார். அந்தனி ஜீவா இலங்கை நாடகம் பற்றி இந்தியப்பதிப்பகம் ஊடாக ஒரு நூலை வெளியிட்டிருந்தாலும் அவரின் 'அக்கினிப்பூக்கள்' நாடக நூலே பரவலாக நமக்குக் கிடைத்தது. கொழும்பில் மேடையேற்றப்பட்ட 'அக்கினிப்பூக்கள்' நாடகத்தை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேற்ற கால, நேர, நிதி, சூழல் ஒத்துழைக்காமையினால் அன்று முடியாமல் போனதில் எனக்கு இன்னமும் வருத்தமே.

எமது சனசமூக நிலையத்தின மூத்த கலைஞர்களால் 'இண்டைக்கு சமைக்காதே' , 'இன்று விட்டேன் கொண்டலடி' போன்ற நகைச்சுவை நாடகங்கள் சிறப்பாக மக்களால் ரசணையுடன் பார்க்கப்பட்டது. பின்பு கலைஞர்களின் வாழ்க்கைச் சூழலால் நல்ல நாடகங்களை அவர்களால் தரமுடியாமல் போனது.

நல்லுர் மனோகரன் என்பவர் 'விதவையின் இதயம்' நாடகத்தைத் தந்தார். முதன் முதலில் பெண்வேடத்திற்கு ஒரு பெண்ணையே நடிக்க வைத்திருந்தார். பின்னாளில் அவர் திரைக்கதை வசனம் நடிப்பு என சுக்கிரன் லிமிட்டேஸின் 'நெஞ்சுக்குத்தெரியும்' (சினிமாஸ்கோப்) திரைப்படத்தில் நுழைந்து கொண்டார். இத்திரைப்படம் கூட
1983 கலவரத்தின் போது எரியூட்டப்பட்டுவிட்டது.

ஈழத்து நாடகம் அரசமட்டத்தில் தேசியத்தமிழ் நாடகவிழா என்று நடத்தினாலும் அரசியல் ஸ்திரம் அற்ற பெரும்பான்மை ஆட்சியாளர்களால் சரிவர முன்னிறுத்தி நடத்தப்படவில்லை. அரசாங்க அதிகாரிகளின் அல்லது அரச அனுசரனைகள் இருப்பவர்களால் மட்டுமே தொடர முடிந்தது. சமாதான காலத்தில் கொஞ்சம் வெளிச்சம் காட்டினாலும் அது தொடரவில்லை.

பிரதேசமட்டங்களில் ஆங்காங்கு நாடக முயற்சிகள் நடந்தன. மட்டக்களப்பில் பேராசிரியர் மௌனகுரு, விரிவுரையாளர் பாலசுகுமார் போன்றோரின் முயற்சியினால் நாடக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திருகோணமலையிலும் அமரர் சித்தியமரசிங்கம் போன்றோர் மிகுந்த சிரமங்களுடன் நாடக பங்களிப்புச் செய்தனர். அந்நாட்களில் கே.கே. மதிவதனனின் 'காதலே நீ வாழி' நாடகம் புகழ் பெற்றது. யாழ் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் படித்த காலங்களில் ஆசிரியர் வேலாயுதம் அவர்களின் முயற்சியினால் 'மனக்கோயில்', 'கலைஞன் கனவு', போன்ற நாடகங்கள் மேடையேற்றம் கண்டன. 'மனக்கோயில்' நாடகத்தில் பெண்வேடத்தில் ஆறு மாதங்கள் நான் பயிற்சி பெற்றிருந்தும் என் வயதின் மாற்றத்திலான குரல் உடைவு என்னை வேறு ஒரு பாத்திரத்தில் நடிக்கும் படியாயிற்று. எனினும் நான் ஏற்றிருந்த பாத்திரமே சிறப்பானதாக ரசிகர்களாலும், ஆசிரியர்களாலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதில் சௌந்தரநாயகம், தர்மேந்திரன், நடராஜா ஆகியோர் நடித்திருந்தனர். இதே கலைஞர்களால் இந் நாடகம் பலஇடங்களில் மேடையேற்றம் கண்டது. பின்னர் தர்மேந்திரனின் ஒருங்கிணைப்பில் அனலைதீவில் நடந்த கலைவிழாவில் 'சீதா கல்யாணம்' என்ற நகைச்சுவை நாடகம் மேடையேற்றப்பட்டது. இதில் பெண்வேடமேற்று நடித்திருந்தேன். அந்தக் காலம் ஒரு பொற்காலம் என்றே எனக்குத் தோன்றுகிறது. திரும்பிய பக்கமெல்லாம் நாடக நிகழ்வுகள் நடந்தவண்ணமே இருந்தன. அரியாலை நாடக மன்றங்கள், கரையூர், குருநகர், பாசையூர், நாவாந்துறை , நவாலி , சங்கானை, விளான், ஆணைக்கோட்டை, வண்ணார்பண்ணை, புத்தூர், வல்வை, பண்ணாகம், தெல்லிப்பளை, சுளிபுரம் போன்ற பல இடங்களின் மன்றங்கள் கலைஞர்கள் பாடசாலைகள் நாடக முயற்சிகளுக்கு முக்கியத்துவம் தந்தன. பண்ணாகம் இ. கிருஸ்னதுரை, காரைசுந்தரம்பிள்ளை, விளான் சி. ரீ மகான், வி.வி. வைரமுத்து, ஜே. எம்;. ராசு, பூந்தான் ஜோசப், வி ரி ஏ விஸ்வா, புத்தூர் யோகராஜா: ஏ.ரி பொன்னுத்துரை, வி.எம் குகராஜா, குழந்தை சண்முகலிங்கம், பாலேந்திரா, நாச்சிமார் கோவிலடி ராஜன், வண்ணை எஸ். வி. ஆனந்தன், ரகுநாதன், ஜசாக் இன்பராஜன் போன்ற பலரைக் குறிப்பிடலாம்.

மானிப்பாய் இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தபோது கல்லாரியின் வருடாந்த இல்ல நாடக்ப் போட்டியில் திரு நற்குணசேகரனின் இயக்கத்தில் சுந்தரர் இல்லத்திற்காக 'மூன்று துளிகள்' எனும் சமூக நாடகத்தில் பெண்வேடமிட்டு நடித்ததை மாணவ, ஆசிரியர்களுடன் இணைந்து அதிபர் பேராயிரவர், கலைஞர் ஏ.ரகுநாதன், கவிஞர் சத்தியசீலன் அமரர் அப்பச்சி மகாலிங்கம் போன்றவர்களின் பாராட்டைப்பெற்றமை இன்றும் மறக்கமுடியாதது. அதே விழாவில்தான் நாச்சிமார் கோவிலடி ராஜன் இயக்கி மேடையேற்றிய இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' நாடகம் சிறந்த நாடகமாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டுவிழாவில் நாச்சிமார் கோவிலடி ராஜனின் இயக்த்தில் கே பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு' நாடகம் சிறப்பிடம் பெற்றது.

யாழ்ப்பாணத்தில் எண்பதுகளில் குழந்தை சண்முகலிங்கன், தாசீசியஸ், பிரான்சீஸ் ஜெனம், சுந்தரலிங்கம், வி. எம் குகராஜா போன்றவர்களின் கூட்டுமுயற்சியில் திருநெல்வேலியில் நாடக அரங்கக் கல்லூரியை ஆரம்பித்து செயற்பட்டும் வந்தது. நல்ல நாடகங்களை மேடையேற்றியும், புதிய முயற்சிகளுக்கு களம் அமைத்து செயற்பட்டனர். க. பாலேந்திரா, ஆனந்தராணி, நிர்மலா போன்றோரின் முயற்சியில் அவைக்காற்றுக் கலைக்கழகம் ஊடக 'மழை','கண்ணாடிவார்ப்புகள்' , 'யுகதர்மம்', 'முகமில்லா மனிதர்கள்' போன்ற பல நாடகங்கள் மேடையேற்றம் கண்டன.

சுகைர்ஹமீடின் 'ஏணிப்படிகள்' மூலமே பாலேந்திரா புகழ் பெற்றிருந்தார். கொழும்பு இராம கிருஷ;ண மண்டபத்தில் பார்த்து அந்த நாடகத்தை வியந்திருக்கிறேன். நடிப்பு, நெறியாழ்கை, மேடையமைப்பு என்பன சிறப்பாக இருந்தது.

பலருக்கு நல்ல நாடக நூல்கள் வரவில்லையே என்ற ஆதங்கம் உண்டு. அப்படியாயின் வெளிவந்த நூல்கள் அவர்கள் பார்வைக்கு கிடைக்கவில்லையா? அல்லது அப்படிச் சொல்பவர்கள் தேடுதலில் ஈடுபடவில்லையா? நாடக நூல்கள், நாடக விழா மலர்கள் , நடிகர்களின் நினைவுமலர்கள் அல்லது பாராட்டு மலர்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன்

தற்போது குறும்படம், திரைப்படம், சின்னத்திரை என உலாவருபவர்கள் நாடக பயிற்சி பெற்றவர்களாகவே இருக்கின்றனர். ஏ. ரகுநாதன், பரிஸ்டர் யோசப், கீர்த்தி, கீ. செ. துரை, நாச்சிமார் கோவிலடி ராஜன் போன்ற பலரைக் குறிப்பிடலாம். நாடக முயற்சிகளுக்கு மாறிமாறி வரும் அரசுகள் வழங்கும் ஒத்துழைப்புகள்; அதிகமாக வேண்டும்.

'கோடையிடி' குமரன் ஆசிரியரால் 'நக்கீரன்' நாடகம் விஜயதஷமியை முன்னிட்டு மேடையேற்றப்பட்டது.அதில் சிவனாக குமரன் ஆசிரியரும் தருமியாக நானும் நடித்திருந்தோம்.

எமது இனம் விடுதலையடைந்து நாடகங்கள் இன்னமும் பெருமை தரக்கூடியதாக இருக்கும். எமது ஈழவிடுதலைப்பேராட்டம் தொடங்கிய காலம் முதல் இற்றைவரை பல்துறைசார் கலையிலக்கிய வடிவங்களை உள்வாங்கி புதிய எழுச்சியுடன் எழுந்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. போராட்ட வடிவங்களைக்கூட நவீன வடிவில் நமது பாரம்பரியங்கள் சிதைவுறாமல் வீதிநாடகமாகவும், மேடைநாடகமாகவும் இதர ஒலி,ஒளி வடிவமாகவும் பரிணமித்து வந்துள்ளதை உற்சாகமாக பார்க்க முடிகிறது.

மலையகத்திலும் வாசுதேவன், அந்தனிஜீவா போன்ற பலரும் சிரமங்களுடன் மேடையேற்றிவருகின்றனர். கிழக்கில் வாழும் இஸ்லாமிய சகோதரர்கள் கூட நாடகங்களை எழுதி மேடையேற்றி வருகின்றனர். எனினும் இவைகள் முழுமையாக வெளிக்கொணரப்படாமைக்கு போர்ச்சூழல் படைப்பாளர்களின் வறுமையும் காரணமாகலாம்.

எண்பதுகளில் தனித்து ஷேபாகிரியேஷன்ஸ்  எனும் அமைப்பைத் தொடங்கும் வரை 'இது தான் முடிவு', 'கனவுக்கிளி' எனும் சமூக நாடகங்களை வி. ரி.ஏ. விஸ்வாவுடன் இணைந்தும் தனித்தும் நாயன்மார்கட்டு பேச்சியம்மன் கோவில் வீதியில் சிறப்பாக அமைக்கப்பெற்ற மேடையில் அரங்கேற்றினோம். பிரதிகள் தயார் பண்ணி கலைஞர்களைத்தேடி பின் ஒருங்கிணைத்து நீண்ட நாட்களுக்கு ஒத்திகை பார்த்து அது தருகின்ற வலிகளைவிட வி. ரி. ஏ. விஸ்வாவுடன் இணைந்து நடிக்கும் போது சில சமயம் தவிர்க்கப்படுகிறது. கலைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களுடன் கலந்துரையாடி கதையை, உரையாடலின் வடிவத்தை தீர்மானித்து கலைஞர்களே தமது சொந்தக் கற்பனையிலான வசனங்களை மேடை சூழலுக்கேற்ப நடித்துக் காட்டி வெற்றியும் கண்டிருக்கிறோம்.

யாழ் முடமாவடியில் 'கலைக்குரிசில்' நாடக மன்றத்தினை நிறுவியவர்களில் விஸ்வாவும் ஒருவர். கல்கியில் தொடராக வெளிவந்த 'தங்கப்பதக்கம்' , 'கௌரவம்' நாடகப்பிரதிகளை எமது நாடக சூழலுக்கேற்ப விஸ்வா திறம்பட தயாரித்து பலமேடையேற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும். அதே போல் திருநெல்வேலி வாலையம்மன் சனசமூக நிலைய கலைஞர்களும், கள்ளியங்காடு சார்ந்த கலைஞர்களும் திருநெல்வேலி காளிகோவிலடி சனசமூக நிலைய கலைஞர்களும் நாடகங்களை நிறையவே மேடையேற்றியுள்ளனர். 'மின்னல்', 'வெளிச்சம்', 'யார் செய்த குற்றம்', 'புனர்ஜென்மம்', 'உயிர்கொடுத்த உத்தமன்', 'காத்தவராயன்','சந்தர்ப்பம்' போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கன. 'சக்கடத்தார்', 'அண்ணை றைட்', ;அடங்காப்பிடாரி' 'மயானகாண்டம்' , 'அலாவுதீன்' 'சாவுக்குச் சவால்' , 'அடிவளவு', 'திவான்', 'வடக்கும் தெற்கும்', 'கவரிமான்' , 'தீபம்', 'நல்ல சூடு', 'மன்னர் மன்னன்', 'கயல்விழி', 'நீர்ஊற்று', 'நெருப்பு', 'தண்ணீர்', 'கலையும் கண்ணீரும்', 'தாகம்', 'களங்கம்', 'பலிக்களம்', 'கோடை', 'புதியதொருவீடு' போன்றன நல்ல நாடகங்களாகும்.

எனது சிறிய தந்தையாரான அமரர் முத்துகுமாரு நீர் கொழும்புலும், நல்லூர் சாதனாபாடசாலையிலும் ஆசிரியராக இருந்த போது நாடகங்களை எழுதி மேடையேற்றினார். கே. எஸ் கோபாலகிருஸ்னனின் 'பணமா பாசமா' திரைப்படம் வந்த காலத்தில் கட்டப்பிராய் கலைமணி சனசமூக நிலைய நிதிக்காக கள்ளியன் காடு இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் மேற்படி மன்ற கலைஞர்களால் முழு நீள சமூக நாடகமாக 'மாறியது நெஞ்சம்' மேடையேறியது. நட்பு, காதல், வஞ்சம், தியாகம் என பாத்திர வார்ப்புகள் ஊடாக கதையை நகர்த்திச் சென்ற விதம் இன்றும் மனக்கண் முன் விரிகிறது. நாம் படித்துக்கொண்டிருந்த அக்காலத்தில் எம்மை அங்கீகரிக்க மூத்தவர்கள் தயாராக இல்லாத சூழலில் நாமும் அவர்களிடம் இருந்து அந்நியப்பட்டே வாழமுடிந்தது. அவர்களுடன் நாங்கள் அல்லது எங்களுடன் அவர்கள் இணையும் வாய்ப்பு அன்று இருந்திருந்தால் நிறையவே சாதிக்க முடிந்திருக்கும். முடியாது போனது தூரதிஸ்டம் தான்.

எண்பதிற்குப் பிற்பாடு ஷேபாகிரியேஷன்ஸ் ஊடாக 'ஸ்ப்த ஸ்வரங்கள்' , 'ராகம் தாளம் பல்லவி',
'may fair lady’ லேடிநிகழ்ச்சிகளை நடத்தியபோது தான் பலரும் ஒத்துழைப்பு வழங்க முன் வந்தனர். நண்பர் செல்வராஜா அவர்கள் திருநெல்வேலியில் முதன் முதலாக 'சந்தர்ப்பம்' எனும் சமூக நாடகத்தை இரட்டை மேடைக்காட்சியாக நடாத்தினார். திரைப்படங்களில் கலை இயக்குனராக பயிற்சி பெற்ற செல்வராஜா நான்கு மணித்தியாலங்கள் அந்த நாடகத்தை நடாத்தி பாராட்டையும் பெற்றிருந்தார். பின்னர் இதனைத் திரைப்படமாக்கும் முயற்சியில் (1983 ல்) இறங்கியும் திரைபடம் வெளிவரமுடியாமல் போய்விட்டது.

அந்நாட்களில் உண்மைக் கதைகளை, தமிழக நாடக- நாவல்களை, திரைப்படங்களைத் தழுவி எம்மவர்களும் நாடகங்களைத் தயாரித்தனர். இக்கால கட்டத்தில்; தான் கொழும்பில் இருந்து தினகரன், ;ஈழமணி வாராந்தப்பத்திரிகைகளில் நாடக, திரைப்பட கதைச்சுருக்கங்களை புகைப்படங்களுடன் பிரசுரிப்பார்கள். அதில் ஸ்ரீசங்கர் , பி. ஏ நாதன் , உதயகுமார் நடித்த நாடகங்களின் கதைச்சுருக்கமும் இடம்பெறும். ;இவைகளைச் சில சமயம் அவசர நாடகங்களுக்காக பயன்படுத்தியதும் உண்டு.

எமது பேராட்டம், புலம்பெயர் சூழல் இவைகளில் ஏற்பட்ட மாற்றம் விரைவில் புதிய வீச்சாய் நாடகங்களும், அவை சார்ந்த நூல்களும் இவைகளுடாக கலைஞர்களுக்கான அங்கீகாரமும் கிடைக்கும் என்பது திண்ணம்.

அதுவரை எமது கனவும் அந்தரத்தில் ......!.



mullaiamuthan_03@hotmail.co.uk