ஆரியமாயையின் தோற்றமும் வளர்ச்சியும்

மருத்துவர். .லம்போதரன்

நாமெல்லாம் கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலமாக ஆரிய திராவிட கொள்கைகளினாலும், பேதங்களினாலும், வாதங்களினாலும் நன்றாக அலைப்புண்டு விட்டோம். இது நம்மையெல்லாம் எங்கேயோ கொண்டு வந்து விட்டுவிட்டது. இந்த ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர்? திராவிடர்கள் எங்கிருந்து வந்தனர்? ஆரியன் என்ற சொல் பாரத பாரம்பரியத்தில் பெரிய மனிதன், பண்பானவன், சிறந்தவன், உயர்வானவன் என்ற கருத்தில் பயன்பட்டு வந்தது. விந்திய மலைக்கு வடக்கே இருந்தவர்களையும் ஆரியர் என்றும் வடவர் என்றும் குறிக்கும் வழக்கம் தமிழ் இலக்கியங்களில் இருந்தது. இது சேர, சோழ, பாண்டியர் என்பதுபோல ஒரு பிரதேச, ஒரு நில இயல் சேர்ந்த குறிப்புப் பெயரே அன்றி ஒரு இனத்தைக் குறிக்கும் பெயரல்ல. விந்திய மலைக்குத் தெற்கே குஜராத், மகாராஷ;டிரம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய பிரதேசங்களில் வசித்த பிராமணர்கள் பஞ்ச திராவிடர்கள் என அழைக்கப்பட்டனர். இன்றைய கேரளம் அன்றைய தமிழ்நாட்டில் அடக்கம். ஆதி சங்கரர் சௌந்தரியலகரியில் 'திராவிடசிசு' என்று அந்தணர் குலத்துதித்த திருஞானசம்பந்தரைப் பாடுகின்றார். 'வண்டமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த திண்திறல் நெடுவேல் சேரலன்;' என்று சிலப்பதிகாரம் தமிழ் மறையோர் என்று அந்தணரைக் கூறும். 'பாசமாம் பற்றறுத்துப்பாரிக்கும் ஆரியனே' என்றும், 'நந்தம்பாடியில் நான்மறையோனாய் அந்தமில் ஆரியனாய் அமர்ந்த நெறி' என்றும் மாணிக்கவாசகர் சிவனைப் பாடுகின்றார். 'ஆரியன் தோற்ற முன் அற்ற மலங்களே' என்று திருமூலர் திருமந்திரத்தில் பாடுகின்றார்.

ஆரியம் என்பது வடமொழியாகிய சமஸ்கிருதத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. 'வடசொற் கிளவி வடவெழுத் தொரீ, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே' என்று தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களைப்பற்றி தொல்காப்பியம் பேசும். தமிழும் வடமொழியும் எமது இரு கண்கள் போன்றவை. செந்தமிழ் இலக்கியங்களைச் சுவைப்பதற்கும், பொருள் கொள்வதற்கும்கூட வடமொழி இலக்கணமும், விளக்கமும் தேவைப்படுகின்றது. அல்லாவிட்டால் இரு பெயர்ச்சொற்கள் சேரும் தமிழ் இலக்கண சொற்புணர்ச்சி விதிகளின் இரு பெயரொட்டுப் பண்புத்தொகையின்படி திருக்குறளின் முதற்சொல்லாகிய ஆதி 10 பகவன் ஸ்ரீ ஆதிபகவன் என்று அல்லாமல் ஆதிப்பகவன் என்றுதான் வரவேண்டும். திருக்குறளுக்கு உரை எழுதியவரின் பெயர்கூட கரணை 10 நிதி ஸ்ரீ கருணாநிதி என்று இல்லாமல் கருணையாநிதி என்றுதான் வரவேண்டும்.

வடமொழி என்பது பரதகண்டம் என்னும் அன்றைய இந்திய துணைக்கண்டம் எங்கும் காணப்பட்ட வௌ;வேறு மக்கட் கூட்டங்களுக்கு இடையிலான பொதுத்தொடர்பு மொழியேயன்றி ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ, அல்லது மக்கட் கூட்டத்திற்கோ உரிய மொழி அல்ல. அது கற்றறிந்தவர்களின் மொழியாக விளங்கியது. அவர்களின் இடைத்தொடர்பு மொழியாக விளங்கியது. வௌ;வேறு மொழிகள் பேசும் மக்கட் கூட்டத்தினரின் பொதுத் தொடர்பாடல் மொழியாக விளங்கியது. ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது மக்கட் கூட்டத்துக்கோ அல்லாது பரதகண்டம் முழுமைக்கும் அறிய வேண்டி அறிவு நூல்களும், மெய் நூல்களும் இம்மொழியில் எழுந்தன. 'ஆரியமும் தமிழும் உடனே சொலிக் காரிகையார்க்கும் கருணை செய்தானே' என்கிறது திருமந்திரம்.

முதன்முதலில்
1853 இல் 'ஆரிய' என்ற சொல் ஐரோப்பாவில் ஒரு இனத்தைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிந்துநதிதீர ஆராய்ச்சியாளரான சேர் ஜோன் மார்ஷல்  (Sir John Marshall) ஆரியர் படையெடுப்பைப்பற்றிப் பேசுகின்றார். தொன்மையான சிந்து நதிதீர குடியிருப்புகள் திராவிடர்களின் நாகரிகம் என்றும், மத்திய ஆசியாவில் இருந்து குதிரைகளில் வந்த ஆரியர்களின் படையெடுப்பால் இந்நாகரிகம் அழிக்கப்பட திராவிடர்கள் தெற்கே குடிபெயர்ந்தார்கள் என்றும், ஆரியரின் இயற்கை வழிபாட்டுடன் திராவிடர்களின் சிவ வழிபாடும், சக்தி வழிபாடும் கலந்து உருவாகியதே இன்றைய இந்துமதம் என்றும் கூறினார் இவர். இவருடன் அக்காலத்திய வரலாற்று ஆசிரியர்களாகிய மார்டைமர் வீலர் (Martimer Wheeler), ஸ்ருவார்ட் பிகொட் (Stuart Piggot)   போன்றோர்களும் சேர்ந்து கொண்டார்கள். இக்காலத்திலே நமது கீழைத்தேச வேத, உபநிடத, பௌத்த சாத்திரங்களையெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பித்துப் பதிப்பித்து ஐம்பத்தொரு தொகுதிகளாக வெளியிட்ட மாக்ஸ் முல்லர் (Max Muller)  தமது எழுத்தின் மூலமாகவும், உரைகளின் மூலமாகவும், அவரது சமகாலத்திய அறிஞர்களுடனான தொடர்பாடல்கள் மூலமாகவும் ஆரியப்படையெடுப்புக் கொள்கைக்கு உரம் சேர்த்தார்.

இதற்கு அக்கால உலக அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்ந்த புறநிலைக்காரணிகள் முக்கிய காரணமாக அமைந்தன. சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ; சாம்ராச்சியம் உலகளாவி வளர்ந்திருந்த காலம். இவ்வாறு உலகம் முழுவதும் போக்குவரத்தும், பரிமாற்றமும் பெருகிவர கீழைத்தேய தத்துவங்களை மேலைநாட்டார் கண்டறிந்து மூக்கின் மேல் விரலை வைத்த காலம். இவ்வாறான பண்பாட்டுச் சிறப்பு மிக்க கலாச்சாரத்தை தாம் மறுதலித்து அரசியல் ஆதிக்கமும், மதப்பிரச்சாரமும் செய்வதை நியாயப்படுத்தவும், நிலை நிறுத்தவும் வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் இங்கு அவர்களுக்கு ஏற்படுகின்றது.

ஐரோப்பாவின் நூற்றாண்டுகளான இருண்ட காலத்தின் பின்
13 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய அரசியல், சமுதாய, கைத்தொழில், பொருளாதார, பண்பாட்டு மறுமலர்ச்சியின் உச்சக்காலமும் இதுவே. அதன்விளைவாக ஐரோப்பாவில் உதயமானதுதான் தூய ஆரியமேன்மைவாதக் கொள்கை. ஜேர்மனியில் இது ஹிட்லரை உருவாக்கி இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குக் காரணமாகி இலட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்தபின்தான் ஓய்ந்தது. ஏறக்குறைய இதே காலத்தில் இக்கொள்கை தமிழ் நாட்டிலே அதன் மறுவடிவான திராவிட மேன்மைவாதக் கொள்கையாகப் பிறப்பெடுத்தது.

இதற்கு பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடப் புத்தகங்களினூடாகப் புகுத்தப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆராய்ச்சியாளர்களினதும், நூலாசிரியர்களினதும் ஆரியப் படையெடுப்புக்கொள்கையோடு, இந்தியாவின் அரசியலில் நிலவிய வட இந்தியர்களினதும், ஹிந்தி மொழியினதும் மேலாதிக்கமும், தென்னிந்தியாவில் நிலவிய பிராமணர்களின் கல்வி, சமுதாய, பொருளாதார மேலாதிக்கமும், மதப்பிரசாரகர்களின் நிதி உதவிகளும், பிரசார தந்திரோபாயங்களும் புறநிலைக்காரணிகளாக அமைந்தன. தொல்காப்பியர் தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஆக்கப்பட்ட தமிழ் நூல்களில் ஒன்றுகூட ஆரியரை ஒரு இனம் என்றோ, ஆரிய மொழியாம் சமஸ்கிருதத்தை வேற்றின மொழி என்றோ ஒரு வரி தானும் எழுதவில்லை என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. ஆயினும் இன்று 'நன்றும் தீதும் பிறர்தர வாரா' என்றுரைத்த புறநானூற்றுத் தமிழ் மரபில் வந்த நாம் எமது சமூகத்திலும், சமயத்திலும் பீடித்திருக்கும் பீடைகள் எல்லாம் இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களால் படைக்கப்பட்ட ஆரியரின் வேலையே என்று சொல்லி மாய்கின்றோம். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக எம்மிடையே புரையோடிப்போயுள்ள இந்த ஆரிய திராவிட பேதம் இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பெரும் சவால்.

இன்று இன்றைய அறிவியல் ஆராய்ச்சி விமர்சன முறையாக மீண்டும் இந்த ஆரியப் படையெடுப்பு அல்லது குடியேற்றக் கொள்கையை அலசி ஆராய்ந்து டேவிட் ஃபுரோலி
(David Frawley, the author of ‘The myth of Aryan invasion of India, Co – author of ‘Vedic Aryans and the origin of civilization),  முனைவர் கொன்ராட் எல்ஸ்ட் (Dr,Koenraad Elst, the author of ‘Update on the Aryan invasion debate), மிஹெல் டானினோ (Mishell Danino, the author  of ‘the invasion that never was), பேராசிரியர் கே. இந்திரபாலா Dr.K.Indrapala, the author of ‘The evolution of an ethnic identity – the Tamils of Srilanka cC 300 BCE to C.1200 BCE) போன்ற பல வரலாற்று ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் மீள எழுதியிருக்கிறார்கள். இவர்கள் ஆரியப்படையெடுப்பு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆராய்ச்சியாளர்களின் அனுமானமான ஒரு கற்பனாவாதம் என்றும் அதற்கு எந்தவிதமான தொல்லியல், மானுடவியல், வரலாற்று ஆதாரங்களும் இல்லையென்றும் தெட்டத்தெளிவாக நிரூபித்துள்ளனர்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே பொதுவான மூதாதையரைக் கொண்டவர்களே பண்டைய சிந்துவெளி நாகரிக மக்களும், இன்றைய வட இந்திய ஆரியர்களும், தென்னிந்திய திராவிடர்களும் என்பது இன்றைய உண்மை வெளிப்பாடும் நிலைப்பாடும் ஆகும். இவர்களிடம் இருந்து பேச்சு வழக்கு மொழிகளில் இருந்து உருவானவையே பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம், தமிழ் மற்றும் இந்திய மொழிக் கூட்டங்களும், பழங்குடி மொழி வழக்குகளுமாம்.

1980 களின் பின்னர் விஞ்ஞான, மருத்துவ, சரித்திர, தொல்லியல், மொழியியல், மானிடவியல் போன்ற துறைகள் யாவற்றிலும் தோன்றி வளர்ந்த கூரத்த விமர்சன நோக்குடன் கூடிய வழு குறைந்த ஆராய்ச்சி அணுகுமுறைகளின் பயனாகும். முன்னர்போல ஒவ்வொரு துறைகளிலும் பெயர் எடுத்த பெரிய மனிதர்கள் சொல்லும் மேம்போக்கான கருத்துக்களையெல்லாம் வேதவாக்காகக் கொண்ட காலம் மலையேறிவிட்டது. ஆனால் இருபத்தைந்து வருடங்களாகியும் இன்னமும் எங்களிடமிருந்து இந்த பழைய சரித்திரக் குப்பைகளும், அவற்றின் கொள்கைகளும், தாக்கங்களும், சுவடுகளும் போகவில்லை.

யார் திராவிடர்?

காலங்காலமாக திராவிட மொழிகளையே தமது தாய் மொழியாகக் கொண்ட பிராமணர்களை அவர்கள் திராவிடர்கள் அல்ல என்றும் ஆரியமாயை என்றும் சொல்லிப் புறந்தள்ளி விட்டோம். அவர்களும் இதை நம்பிக்கொண்டு, தம்மை ஒரு புறம்பான இனக்கூட்டமாக அடையாளம் கண்டு பாரத மண்ணில் ஆரியர் என்னும் இனத்தை முதன்முதலாகத் தோற்றுவித்து மயங்குகின்றார்கள். தமிழ் ஞானசம்பந்தன் என்று தனது பாடல்களில் தன்னைக்குறித்த சம்பந்தர் திராவிடர் இல்லை என்றால் வேறு யார்தான் இங்கு திராவிடர்? திராவிட சிசு என்று சங்கராச்சாரியார் சௌந்தரியலகரியில் பாடிய இந்த சம்பந்தர்கூட திராவிடர் இல்லை என்றால் வேறு யார்தான் இங்கு திராவிடர்? அந்தணச் சீராளர்களான சுந்தரரும், மாணிக்கவாசகரும் திராவிடர் இல்லை என்றால் யார்தான் இங்கு திராவிடர்? தமிழில் மெய்யியல் நூல்கள் படைத்த சந்தனாசாரியார்களான அருணந்தி சிவம், உமாபதி சிவம் ஆகியோரும் திராவிடர் இல்லையென்றால் யார்தான் இங்கு திராவிடர்? நாயன்மார்களில் பெரிய புராணம் கூறும் அந்தணர்களான அப்பூதியடிகள், சடையனார், இசை ஞானியார், கணநாதர், குங்கிலியக்கலயர், சண்டேசர், சிறப்புலி நாயனார், சிறுத்தொண்டர், சோமாசிமாற நாயனார், திருநீலநக்கர், நமிநந்தியடிகள், புகழ்த்துணை நாயனார், பூசலார் நாயனார், முருக நாயனார் ஆகியோர் திராவிடர் இல்லை என்றால் வேறு யார் தான் எமது திராவிடர்கள்?

அழிந்து மறைந்து மறந்து போய்க்கொண்டிருந்த தமிழ் நூல்களையெல்லாம் மாட்டு வண்டியில் ஊர் ஊராகச்சென்று தேடி எடுத்துச் சரி பார்த்துப் பதிப்பித்து வெளியிட்ட உ.வே. சாமிநாதையர் திராவிடர் இல்லையென்றால் வேறு யார்தான் இங்கு திராவிடர்? நவீன தமிழ் இலக்கிய உலகுக்கே திறவுகோலாக விளங்கிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் திராவிடர் இல்லை என்றால் வேறுயார்தான் இங்கு திராவிடர்? தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையெல்லாம் பதினாறு வருடங்கள் செலவழித்து ஆராய்ந்து பத்து வருடங்களை செலவழித்து அதை சரி பார்த்து இருபத்தோராம் நூற்றாண்டில் பதினேழு தொகுதிகளாக தமிழ் இலக்கணப் பேரகராதியை வெளியிட்டிருக்கும் புதுச்சேரி பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத்தின் தமிழ் பண்டித வித்துவான், மாந்தக் கணணி தி. வே. கோபாலையர் திராவிடர் இல்லையென்றால் வேறு யார்தான் இங்கு திராவிடர்?

காலங் கடந்த சரித்திரக் குப்பைகளான ஆரிய திராவிட பேதங்களைக் கழைவோம். தமிழின் பெயரால் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். புதிய சமுதாயத்துக்கும் அதன் வளர்ச்சிக்கும் மாற்றங்களே தேவை. ஆதாரமற்ற, ஆரோக்கியமற்ற பழமைகளைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருப்பது அவரவர் அரசியலுக்கும் சொந்த ஆதாயங்களுக்கும் வேண்டுமானால் உதவலாம். ஆனால் வளரும் உலகத் தமிழ்ச் சமூகத்தின் ஆரோக்கியத்துக்கு உதவாது.




knowingourroots@hotmail.com