கங்காரு நாட்டு காகிதம்

லெ.
முருகபூபதி

ஆளை ஆளை பார்க்கிறார்.... ஆட்டத்தைப்பார்த்திடாமல் ஆளை ஆளை பார்க்கிறார்...


வுஸ்திரேலியாவில் அரங்கேற்றங்களுக்கு குறைவில்லை. ஒவ்வொரு வாரமும் இந்நாட்டில் ஏதாவது ஒரு மாநிலத்தில் பரதநாட்டிய, மிருதங்க, அல்லது வாய்ப்பாட்டு அரங்கேற்றம் நடந்துகொண்டுதானிருக்கிறது. குறிப்பிட்ட மூன்று கலைத்துறைகளிலும் எம்மவர்களின் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கவும் பயிற்சி வழங்கவும் ஆசிரியர்கள் பல்கிப்பெருகிவிட்டனர். இந்த அரங்கேற்றங்களில் சிலசமயங்களில் நாம் தமிழைத்தேடும் அபாக்கியவதிகளாகிவிடுவோம்.

பரதநாட்டிய அரங்கேற்றத்துக்கு தயார்ப்படுத்தப்படும் எம்மவர்களின் பிள்ளைகளில் எத்தனைபேர் தொடர்ந்தும் ஆடுவார்கள் என்று நாம் கேள்வி கேட்கக்கூடாது. அவர்களின் இல்லங்களில் அரங்கேற்றப் படங்களின் தொகுப்பான அல்பமும் பதிவான இறுவட்டும் இருக்கும். விருந்தினர்கள் வந்தால் பார்த்து ரசிக்கலாம்.

அரங்கேற்றத்திற்காக அனுப்பப்படும் அழைப்பிதழிலும் நிகழ்ச்சியன்று தரப்படும் வண்ணமயமான சிறிய மலரிலும் தமிழைத்தேடவேண்டும். இதுபற்றி யாரும் குறைசொல்லக்கூடாது. சொன்னால் நிகழ்ச்சிக்கு வரும் எம்மவரின் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது என்பார்கள். அல்லது அவுஸ்திரேலியா வெள்ளை இனத்தவர்களுக்கும் கலாரசிகர்களான வேற்றுமொழி பேசும் இந்தியர்களுக்கும் தமிழ் தெரியாது என்பார்கள்.

கடந்த ஆண்டு இறுதியில் மெல்பனில் நடந்த தமிழ் - சிங்கள- ஏனைய இனத்தவர்கள் கலந்துகொண்ட ஒன்றுகூடலில் நான் சிங்கள மொழியில் பேசினேன். எம்மவர்களில் பலருக்கு ஆங்கிலம் தெரிந்த அளவுக்கு சிங்களமும் தெரியும் என்ற நம்பிக்கையில் சிங்களத்தில் பேசினேன். அத்துடன் தமிழ் பேசத்தெரியாத சிங்களவர்களுக்கு, இதோ பாருங்கள் நான் உங்களது மொழியை எனது சகோதர மொழியாகக்கருதி படித்துப் பேசுகிறேன். அதுபோன்று நீங்களும் எமது மொழியை பேசிப்பழகுங்கள் என்று உணர்த்துவதற்காகவும் அப்படிப்பேசினேன்.

சில தமிழ்க்கொழுந்துகள் அதனால் அதிருப்தியுற்றதாக பின்னர் அறிந்தேன். ஆனால் காலம் காலமாக இந்த கடல்சூழ்ந்த கண்டத்தில் எம்மவரின் அரங்கேற்றங்களில் நாம் தமிழைத்தேடுகின்றோமே என்று எவரும் கவலைப்படவும் இல்லை. அதிருப்தி தெரிவிக்கவும் இல்லை.

இந்த அரங்கேற்றங்கள் பற்றி சொல்வதற்கு பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை மாத்திரம் சொல்லிவிட்டு நான் முக்கியமாக குறிப்பிட வந்த விடயத்துக்கு வருகின்றேன். ' வசதியிருக்கும்போது எங்கட பிள்ளையின்ற அரங்கேற்றத்தை வெளிநாட்டு சொந்த பந்தங்கள் புடைசூழ பார்த்துவிடுவோம். பிறகு இந்த நாட்டில் பிள்ளை தனக்குத்துணையாக யாரைக்கொண்டுவருமோ தெரியாது.'

' எங்கட விருப்பப்படி கலியாணங்கள் நடக்குமா என்பதும் நிச்சயமில்லைத்தானே. அதுதான் எங்கட கைக்குள்ள இருக்கேக்கையே எங்கட விருப்பப்படி அரங்கேற்றச்சடங்கை வைச்சிடுவோம். கலியாணச்சடங்கு எங்கட கையில இருந்தால் சரி. இல்லாட்டில் கடவுள் விட்ட வழி.'

இந்த அரங்கேற்றங்களுக்காக தமிழகத்திலிருந்து புகழ்பெற்ற மிருதங்க, வயலின் வித்துவான்கள் பாடகர்கள், பாடகிகள் அழைக்கப்படுவார்கள். வந்தவர்களும் அரங்கேற்றம் முடிந்தவுடனேயே விமானம் ஏறமாட்டார்கள். அவர்களுக்காக மற்றுமொரு மண்டபத்தில் மற்றுமொரு நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்படும். அதற்கு சில சமயம் அனுமதிக்கட்டணமும் வசூலிக்கப்படும். பச்சைத்தண்ணீரில் பலகாரம் பொரிக்க முடியாதுதானே.

தமிழக கலைஞர்களுக்காக நடத்தப்படும் பிரத்தியேக நிகழ்ச்சியிலும் நாம் தமிழைத்தான் தேடிக்கொண்டிருப்போம். நிகழ்ச்சி அறிவிப்பிலிருந்து கலைஞர் அறிமுகம் வரையில் 26 எழுத்து சர்வதேச மொழிதான் உதிரும்.

ஆனால், எம் எழுத்துலக பிரம்மாக்களுக்கு முன்மாதிரியான விடயம் ஒன்றை இந்நிகழ்வுகளில் என்னால் காண முடிந்தது. நடன, மிருதங்க, வாய்ப்பாட்டு அரங்கேற்றங்களில் இந்தத்துறை சார்ந்த அனைத்து ஆசிரியர்களையும் காணலாம். அவர்களுக்குள்ளிருக்கும் மனநிலை பற்றி எம்மால் எதுவும் சொல்ல முடியாது. ஆனாலும் அவர்கள் சக ஆசிரியர்களின் மாணவர்களின் அரங்கேற்றங்களில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார்கள். அரங்கேற்றம் முடிந்த பின்னர் நடத்தப்படும் பிரத்தியேக நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்கள். கலைக்குடும்பத்தின் சங்கமத்தை இதிலே அவதானிக்க முடிகிறது.

ஆனால் அளவுக்கு அதிகமாக சுயபெருமை பேசும் எழுத்தாளர்கள் அறிவுலகம் சார்ந்தாவது ஒன்று கூடுவது அபூர்வமாகத்தான் நடக்கிறது.

எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடந்தோறும் எழுத்தாளர் விழா நடத்தும்போது எழுத்தாளர்கள் என்று தம்மைச்சொல்லிக்கொள்ளும் பலரை மண்டபத்தில் காண முடியாது. பக்கத்தில் நடந்த எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு வரமாட்டார்கள். ஆனால் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை மலேசியாவில் நடத்துங்கள் தமிழ்நாட்டில் நடத்துங்கள் என்று வானொலி ஊடகத்தில் பிதற்றுவார்கள்.

மெல்பனிலும் சிட்னியிலும் தமிழக எழுத்தாளர் ஜெயமோகனும் இலங்கை எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பும் கலந்துகொண்ட இலக்கிய சந்திப்பு நடந்தது. எத்தனை எழுத்தாளர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்கள் என்பதை என்னால் விரல்விட்டு எண்ணிச்சொல்ல முடியும்.

பல வருடங்களுக்கு முன்னர் எனது மூன்று நூல்களின் வெளியீடு சிட்னியில் நடந்தது. அச்சமயம் தமிழகத்திலிருந்து கவிஞர் அறிவுமதி வந்திருந்தார். சிட்னியில் நீண்டகாலம் வசிக்கும் ஒரு எழுத்தாளர், (நூல் வெளியீட்டு அழைப்புக்கிடைத்தும்) அவரை அந்தக்கூட்டத்துக்கு அழைத்துவராமல் சிட்னி சுற்றிக்காண்பிக்க கூட்டிச்சென்றுவிட்டார்.

பின்னர் அறிவுமதி மெல்பனுக்கு வந்ததும் அவருக்காக நான் ஒரு சந்திப்பை ஒழுங்குசெய்ய நேர்ந்தது.

குறிப்பிட்ட சிட்னி எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி வந்திருந்தபோதும் (தகவல் தெரிந்திருந்தும் எனக்கு தகவலை கசியவிடாமல்) மௌனம் காத்தார். பிறகு நான் எப்படியோ தகவல் அறிந்து அவரை மெல்பனுக்கு அழைத்து சந்திப்புக்கு ஒழுங்கு செய்தேன்.

இப்படியும் இருக்கிறார்கள் எமது எழுத்தாள பிரம்மாக்கள்.

இலங்கையில் கடந்த ஜனவரியில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டிலும் சிலரை இனம்காண முடிந்தது. வீடு தேடிச்சென்று அழைப்பிதழ் கொடுத்த சில எழுத்தாளர்கள் அந்தப்பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. அமைப்பாளரான என்னுடனோ அல்லது மாநாட்டு அமைப்புக்குழுவினருடனோ கருத்தியல் ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும் அதில் கலந்துகொண்ட இளம் தலைமுறையினருக்காகவாவது வந்திருக்கலாமே என்ற பெருமூச்சுத்தான் வந்தது.

எழுத்தாளர்கள் தனித்தனி தீவுகளாகிவிடுகிறார்களோ?

'ஆளை ஆளை பார்க்கிறார்... ஆட்டத்தைப்பார்த்திடாமல் ஆளை ஆளை பார்க்கிறார்.' என்ற பாடல் இவர்களுக்கும் பொருந்தும்.


 

letchumananm@gmail.com