தமிழ் இலக்கியத் தோட்டம் - இயல் விருது விழா – 2008

- திருமதி. கங்காதர்சினி அகிலேஸ்வரன்

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் பல உன்னதமான சேவைகளை வழங்கிவருகிறது. இவ்வமைப்பு 2001 ஆம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பமானது. கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்களின் ஆதரவோடு, உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்த்தெடுக்கும் நோக்கில் செயல்ப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கில நூல்களை மொழிபெயர்ப்பது, அரிய தமிழ் நூல்களை மீள்பதிப்புச் செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்களை அளிப்பது, மாணவர்களுக்கு தமிழ்ப் புலமைப்பரிசில் வழங்குவது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது போன்ற இன்னோரன்ன பணிகள் இதனுள் அடங்கும்.

அந்தவகையில் 2008க்கான இயல் விருது விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (24.05.2009) மாலை 6.00 – 8.30 மணிவரை ரொறொன்ரோ பல்கலைக்கழகம், டிரினிட்டி கல்லூரி, சீலி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, ஜேர்மன் போன்ற நாடுகளிலிருந்து பல தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டார்கள்;.
இலங்கையிலிருந்து பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், இந்;திய பெண்ணிய எழுத்தாளர் அம்பை, கலாநிதி முருகர் குணசிங்கம், ஜேர்மனியிலிருந்து சுரதா யாழ்வாணன், எழுத்தாளர்கள் பால மனோகரன் மற்றும் கருணாகரமூர்த்தி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

சரியாக மாலை ஆறு மணிக்கு சிற்றுண்டி, குளிர்பான உபசாரத்துடன் விழா ஆரம்பமானது. திரு. கனக செல்வநாயகம் தலைமையேற்று இவ்விழாவை திறம்பட நடத்தினார். ஒரு நிமிட மௌன அஞ்சலியைத் தொடர்ந்து திரு. கனக செல்வநாயகம் வரவேற்புரையை வழங்கினார்.

'இலங்கையில் இடம்பெற்ற இடம்பெயர்வுகள், மனித அவலங்கள், பாரிய உயிரிழப்புக்களின் கவலைகளைச் சுமந்தவர்களாக நாம் அனைவரும் இருக்கிறோம். மிகப்பெரிய பாரதூரமான மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளது. காலம் மாறும். நல்லதொரு காலம் பிறக்கும் என்று நம்பிக்கை கொள்வோம். புயலுக்குப் பின் அமைதி ஏற்படுவதைப் போல இலங்கையிலும் எதிர்காலம் சுபீட்சமாக அமையும் என்று நம்புவோம்' என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.

தொடர்ந்து காலச் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் சில இரத்துச் செய்யப்பட்டு நேரடியாக விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது.

முதலாவதாக புனைவு இலக்கியத்திற்காக பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை நினைவுப் பரிசு – 'வார்ஸாவில் ஒரு கடவுள்' என்ற நாவலுக்காக எழுத்தாளர் தமிழவன் (முனைவர் கார்லொஸ் சபரிமுத்து) அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நாவல் தனித்து நமது கலாச்சாரத்துக்குள் மட்டுப்படுத்தப்படாது சர்வதேச அளவில் அதன் இயங்குதளம் உள்ளது. போலந்தின் சமகால வரலாறு, அவர்கள் கம்யுனிச ஆட்சியை எதிர்கொள்ளும் முறை, இந்தியர்களின் மீது அவர்கள் வைத்துள்ள அக்கறை போன்றவை நாவலுள் விரவிக்கிடக்கின்றன. தமிழுக்கு முற்றிலும் அந்நியமான உத்தியும், சொல்முறையும் கொண்டது. ஒரு புதிய பரிமாணத்தை தமிழ் வாசகர்களுக்கு இந்நாவல் வழங்கியிருக்கிறது.

செல்வி தர்மினி தர்மலிங்கம் எழுத்தாளர் பற்றிய அறிமுகத்தை வழங்க, எழுத்தாளர்கள் திரு பாலமனோகரன், கருணாகரமூர்த்தி ஆகியோர் விருதினை வழங்கினர். எழுத்தாளர் தமிழவன் சார்பாக செழியன் விருதினைப் பெற்றுக்கொண்டார்.

அடுத்து, திரு. தி.தி.கனக சுந்தரம்பிள்ளை மற்றும் உலக தமிழ் ஆசிரியர் நினைவாக 2008 ஆம் ஆண்டுக்கான அபுனைவுப் பரிசு கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் மக்களின் வரலாறு பற்றி அண்மையில் வெளிவந்த 'இலங்கையில் தமிழர்' என்ற நூலுக்காகவே இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இலங்கைத் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள், அரசியல், சமூக, சமய, மொழி, கலை, கலாச்சாரம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய புலமைசார் வரலாறாக இந்நூல் விளங்குகிறது. உள்ளதை உள்ளவாறு ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒரே நேரத்தில் எழுதப்பட்ட சிறப்புக்கும் உரியது இந்நூல்.

செல்வி பவித்ரா ரெட்ணேஸ்வரன் எழுத்தாளர் முருகர் குணசிங்கம் பற்றிய அறிமுகத்தை செம்மையான முறையில் வழங்கினார். திரு ரவீந்திரவர்மன்;, லலிதா ஜெயராமன் ஆகியோர் விருதினை வழங்க, கலாநிதி முருகர் குணசிங்கம் விருதினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து திரு. குணசிங்கம் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டார்.

'ஒரு வரலாற்று ஆசிரியர் என்ற வகையிலும், நூலக விஞ்ஞானத் துறையைச் சார்ந்தவன் என்ற வகையிலும் தமிழர்கள் பற்றிய ஒரு முழுமையான வரலாற்று நூல் வரவேண்டும் என்று ஆதங்கப்பட்டவன் நான். தமிழர்கள் பற்றிய இந்த வரலாற்று நூல் காலத்தின் தேவை. என் ஐந்து வருட தொடர்ச்சியான ஆய்வின் வெளிப்பாடு இது. பல கஷ;டங்கள், வேதனைகள், சோதனைகள், இடைஞ்சல்களைத் தாங்கியபடி இதனைச் செய்து முடித்தேன். இந்த விருது எனக்குக் கிடைத்த ஒரு கௌரவம்' என்று குறிப்பிட்ட குணசிங்கம் அவர்கள் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பாளர்களுக்கும், நிறுவனத்தார்க்கும், குறிப்பாக எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டுக்கான பேராசிரியர் ஆ.வி. மயில்வாகனம் கவிதைப் பரிசு லீனா மணிமேகலைக்கு வழங்கப்பட்டது. இவர் எழுதிய 'உலகின் அழகிய முதல் பெண்' என்ற கவிதைத் தொகுப்பிற்கே மேற்படி பரிசு வழங்கப்பட்டது. லீனா மணிமேகலை ஒரு கவிஞர் என்பதற்கும் மேலாக ஒரு திரைப்பட இயக்குநர், நடிகர், பதிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். பண்பு, மரபு, ஒழுக்கம் என்ற கொள்கைகளால் பெண்களை அடக்கி வைத்திருந்த நிலையில் அவற்றுக்கெதிரான சொல்லாடல்களைக் கையாண்டு தன் கவிதைகளால் அந்த வரம்புகளை கேள்விக்குள்ளாக்கினார். காமமும், சுயமும் இவரது கவிதைகளில் இயல்பாக புழங்கு தமிழில் நுழைந்துவிடுகிறது. சற்றும் மறைவில்லாத அந்தரங்க விபரிப்புகள் மனக் கூச்சங்களுக்கு சவாலாக எழுகின்றன. இவ்வாறான இவரது கவிதைகள் தமிழுக்கு புதுவரவு.

செல்வி கன்னிகா திருமாவளவன் லீனா மணிமேகலை பற்றிய அறிமுகத்தை அழகு தமிழில் வழங்கினார். திரு.திருமதி நந்தகுமார் அவர்கள் விருதினை வழங்க லீனா மணிமேகலையின் சார்பில் விருதினை திருமதி. கங்காதர்சினி அகிலேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தகவல் தொழில்நுட்பத்திற்காக, 2008 ஆம் ஆண்டுக்கான சுந்தர ராமசாமி விருது சுரதா யாழ்வாணனுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் எழுத்துருக்களை யுனிக்கோட் உருமாற்றி மூலம் எவரும் வாசிக்கக் கூடிய முறையை அறிமுகப்படுத்தியமைக்காக இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது. சுரதா யாழ்வாணனை செல்வி பைரவி ரஞ்சித் அறிமுகம் செய்தார். பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் சுரதா யாழ்வாணனுக்கு விருதினை வழங்கி கௌரவித்தார்.

சுரதா யாழ்வாணன் தனது உரையில், இவ்விருது தனக்கு கிடைப்பதை இட்டும், இதுவரை காலமும் இணையத்தளம் மூலமாகவே அறிமுகமாகி இருந்த இலக்கிய நண்பர்களில் சிலரை அங்கு சந்திக்கக் கிடைத்ததையிட்டும்;, தான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

'தமிழ் கணனித்துறைக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்திருக்கிறது இந்த விருது வழங்கும் நிகழ்வு. சாதாரணமாக ஒரு பல்கலைக்கழகமோ, அல்லது அரசாங்கம் ஒன்றோ முன்மாதிரியாக வழங்கியிருக்க வேண்டிய இத்தகையதொரு விருதினை அந்த முன்மாதிரியாகச் செயல்ப்பட்டு இத்தகைய விருதினை வழங்கிய, தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கும், சுந்தர ராமசாமி அறக்கட்டளையினருக்கும் எனது நன்றிகள்' என்று குறிப்பிட்டார். மேலும் 'இது எனக்குக் கிடைத்த சிறப்பு விருதாக நான் கருதாமல், எனக்கு முன்னோடியாக தமிழ் கணனித்துறையில் தொழில்நுட்பவியலாளர்களாக விளங்கியவர்களுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே இதனைக் கருதுகிறேன் என்றார். இறுதியாக பேராசிரியர் கா. சிவத்தம்பியின் 'தமிழின் சிறப்பானது அதன் தொன்மையில் இல்லை. அதன் தொடர்ச்சியில் தான் உள்ளது' என்ற கூற்றை நினைவுறுத்திச் சென்றார்.

அடுத்ததாக இவ்வாண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு இடையேயான மிகச் சிறந்த கட்டுரையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விருது செல்வி அஞ்ஜெலா பிரிட்டோவிற்கு வழங்கப்பட்டது. திரு.திருமதி ஜேசுதாசன் அவர்கள் விருதினை அஞ்ஜெலாவிற்கு வழங்கினர். விருது பெறுநரை செல்வன் ஜெகன் கனகநாயகம் அறிமுகம் செய்தார்.

அஞ்ஜெலா தமிழ் ஆர்வத்தோடு தன்னைப் வளர்த்த பெற்றோருக்கும், தன்னை வழிநடத்திய தமிழ் ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இவ்வாறான விருது மாணவர்களுக்கு வழங்குவதை இட்டு மகிழ்ச்சியை தெரிவித்த அஞ்ஜெலா தமிழ் கல்வி மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும் இளம் சமுதாயம் பற்றுக்கொள்ள இவ்விருது தூண்டுகோளாக அமையும் என்றார்.

இறுதியாக விழாவின் சிறப்பு விருதான 2008 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இயல் விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்பட்டது.

கடந்த நாற்பது ஆண்டு காலமாக தமிழ் எழுத்துலகில் மட்டுமன்றி தன் செயல்ப்பாட்டை பெண்கள் வாழ்க்கையின் சகல துறைகளுக்கும் விரித்து தன் பதிவுகளை இலக்கியத்துக்கும் அப்பால் வேறு வடிவங்களுக்கும் கடத்தியவர் என்ற வகையில் அம்பை அவர்களுக்கு இந்த வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனை விருது வழங்கப்பட்டது.

கவிஞரும், எழுத்தாளருமான பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் இயல் விருது பெறும் அம்பையை அழகுற அறிமுகம் செய்துவைத்தார்.
'சிலர் விருதுகளால் பெருமை பெறுகிறார்கள். சிலரால் விருதுகள் பெருமை பெறுகின்றது. இந்தவகையில் அம்பை இரண்டாவது வகையைச் சார்ந்தவர் என்பது எனது கருத்து. ஏற்கனவே இயல்விருது பெற்றவர்கள் பற்றி மாறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளன. ஆனால் தீவிர இலக்கியப் பிரக்ஞை உடையவர்கள் மத்தியில் அம்பையைப் பற்றிய அத்தகைய மாறுபட்ட கருத்துக்கள் எதுவும் இருக்க நியாயம் இல்லை என்று உறுதியாக நம்புகிறேன். அம்பையை பெண் எழுத்தாளர் என்றோ, அன்றி ஒரு பெண்ணிய எழுத்தாளர் என்றோ வகைப்படுத்த நான் விரும்பவில்லை. தற்கால தமிழ் இலக்கிய உலகில், தற்கால தமிழ் சிறுகதை உலகில் மிக முக்கிய ஆளுமைகள் உடைய ஒருவராகவே நான் இவரைக் கருதுகிறேன். அப்படியே நான் உங்களுக்கு இவரை அறிமுகம் செய்கிறேன்' என்று குறிப்பிட்டார் நுஃமான்.

'சமூகத்தில் பெண்கள் பற்றிய ஒரு முழுமையாக பார்வையைக் கொண்டிருப்பவர் அம்பை. சுமகால எழுத்தாளர்களுள் முதன்மையானவர். இவருடைய கதையாளுமை, மொழியாற்றல், வாழ்க்கை பற்றிய இவருடைய பார்வை, அதை கதையாக்கித் தரும் அழகியல் செய்நேர்த்தி என்பன பெண், பெண்ணியம் என்ற எல்லைகளுக்கு அப்பாலும் இவரைக்கொண்டு நிறுத்துகின்றன. இவர் இன்றைய மனச்சாட்சியின் குரல். நம் மனச் சாட்சியை உலுப்பும் ஆற்றல் இவருடைய எழுத்துக்களுக்கு இருக்கின்றது' என்று அம்பையைப் பற்றிய பல ஆழமான கருத்துக்களை முன்வைத்தார் பேராசிரியர். அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற சிறுகதையின் கூறுகளை, நுணுக்கமான விடயங்களைப் பகிர்ந்துகொண்டார். அந்திமாலை, சிறகுகள் முறியும் முதலான அம்பையின் ஏனைய கதைகள் பற்றியும் விபரித்தார். அம்பைக்கு முன் இலங்கையில் பெண்ணியம் பற்றி எழுதிய பெண் படைப்பாளியான பவானி ஆழ்வாப்பிள்ளை பற்றியும் அவர் குறிப்பிடத்தவறவில்லை.

திருமதி பாமா மகேந்திரன் மற்றும் டாக்டர் நாகசுவாமி ஆகியோர் அம்பைக்கான இயல்விருதினை வழங்கினர். விருதினைப் பெற்றுக்கொண்ட எழுத்தாளர் அம்பை ஏற்புரையினை வழங்கினார்.

இந்தியாவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ கூட தனக்கு தமிழ் இலக்கியத்திற்கு இப்படி ஒரு விருதும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த அம்பை இது ஒரு அபூர்வமான தருணம் என்று குறிப்பிட்டார். பெண்கள், பெண் எழுத்தாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி மிகவும் சுவையாகவும், அழுத்தமாகவும் பேசினார். தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். பெண்களை, பெண் எழுத்தாளர்களை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பது பற்றிய ஒரு ஆழமான பேச்சாக அம்பையின் பேச்சு அமைந்திருந்தது. பெண் மீதான உடல் சார்ந்த பார்வைகள் தவறானவை. அதில் தனக்கு என்றுமே உடன்பாடில்லை என்றும் குறிப்பிட்டார்;. பெண் உடல்சார்ந்த பார்வைகள் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

இறுதியாக சங்கரி செல்வநாயகத்தின் நன்றியுரையுடன் கூட்டம் சரியாக 8.30 மணிக்கு நிறைவுபெற்றது.