மகாகவி பாரதி விரும்பிய பாரதம்

ப. இரமேஷ், (பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்)

ருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் ஈடு இணையில்லாதக் கவிஞர் பாரதியே.  வசன கவிதை என்ற ஒன்றை உலகுக்கு அளித்து, மரபை உடைத்தெறிந்த உன்னத கவிஞர் மகாகவி பாரதியார்.  இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாட்டு விடுதலைக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பாடிய ஒரு பெரும் புலவர். பாரதியின் பார்வை விசாலமானது.  நாடு விடுதலை பெறுவது மட்டும் அவரது நோக்கமல்ல இந்தியநாடு ஒரு வல்லரசாக பரிணமிக்க வேண்டும் என்று கனவு கண்டார்.  பிற்காலச் சமுதாயம் எப்படி ஆரோக்கியமாக மலர வேண்டும் என்பதை முன்னரே எடுத்துக் காட்டியவர் பாரதி.  அவர் விரும்பிய பாரதத்தைப் பற்றிய செய்திகளை வெளிக் கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அக்கால பாரதத்தின் நிலையைச் சாடுதல்

நாடு அடிமைப்படவும், நாட்டின் முன்னேற்றம் தடைபடவும் காரணமாக விளங்குகின்ற சாதிமத பேதங்கள், மூடநம்பிக்கை, பெண்ணடிமை போன்றவற்றை கடுமையாக தனது பாடல்களில் சாடியுள்ளார். பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் சாதிமத இன உணர்வுகள் மேலோங்கி நின்றுவிடக்கூடாது என்பதற்காக,

                “சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
               
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” 1

என்று குறிப்பிடுகிறார்.  மேலும் அவர் வாழ்ந்தக் காலத்தில் சமுதாயத்தில் நிலவிய மூட நம்பிக்கையை.

                “நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
               
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்
               
அஞ்சியஞ்சிச் சாவார் - இவர்
               
அஞ்சாத பொருளில்லை அவனியிலே” 2

என்று நெஞ்சம் குமுறுகிறார்.  மேலும் பெண்ணடிமை ஒழிந்தாலே, பொன்னாட்டின் விலங்கொடியும் எனக் கண்ட பாரதி

                மாதர் தம்மை இழிவு செய்யும்
               
மடமையைக் கொளுத்துவோம்”3

என்று தன்னுடையச் சிந்தனைகளைப் பதிவு செய்கிறார்.

பாரதி விரும்பிய பாரதம்

பாரதி உணர்ச்சி வேகத்தில் நாட்டைப் போற்றுவதும் வணங்குவதும் போதும் என நின்று விடுபவரல்லர்.  நாட்டை எவ்வெவ் வகைகளில் உயர்த்த வேண்டும் என்பது பற்றிய தீர்மானங்களை, கனவுகளைக் கொண்டிருந்தவர்.  கல்வி, அறிவியல், கலை, இலக்கியம், விவசாயம், தொழில், வாணிகம் எல்லாவற்றிலும் முன்னேற்றத்திற்கான வழிவகைகளைத் தீர்மானித்தவர்.

                “பாரத தேசமென்று பெயர்ச் சொல்லுவார் - மிடிப்
               
பயங் கொல்லுவார் துயர்ப் பகை வெல்லுவார்”4

எனத் தொடங்கி அந்த நிலை வருவதற்காக நாம் செய்ய வேண்டியவகைளை பாடலில்  கூறுகிறார்.

இமயப் பனிமலையின் மீது உலாவுவோம்; மேற்குக் கடல் முழுதும் கப்பல் விடுவோம், பள்ளிகளை எல்லாம் கோயில்கள் போலப் புனிதத் தலங்களாகக்குவோம்; எங்கள் பாரத தேசம் இது என்று தோள் கொட்டுவோம்; சிங்களத் தீவுக்கு ஒரு பாலம் கட்டுவோம் ; சேது சமுத்திரத்தை மேடாக்கிச் சிங்களத்தையும் இந்தியாவையும் இணைக்கும் சாலை அமைப்போம், வங்கத்தில் தேவைக்கதிகமாய் பாய்ந்து கடலில் வீணாகும் வெள்ளத்தைத் திசை திருப்பி மத்திய இந்தியப் பகுதிகளில் விவசாயம் பெருக்குவோம். தங்கம் முதலிய உலோகங்களை வெட்டி எடுப்போம் வெளிநாடுகளில் அவற்றை விற்று நமக்குத் தேவைப்படும் பொருள் அனைத்தும் வாங்கி வருவோம்.

                 “முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
               
மொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்தே
               
நத்தி நமக்கினிய பொருள் கொண்ர்ந்து
               
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே”5

என்று நம்முடைய வாணித்தைப் பற்றியும் பல நாட்டு வணிகர்களும் நமது மேற்குக் கடற்கரையில் நாம் விரும்பும் பொருள்களைக் கொண்டு வந்து நம் பொருளை விரும்பி நின்றனர்.  என்பதையும் குறிப்பிடுகிறார். மேலும்

               சிந்துநதியின் மிசை நிலவினிலே
               
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
               
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
               
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்
               
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
               
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்”6

மாராட்டியர் கவிதைகளைப் பெற்றுக் கொண்டு சேர நாட்டுத் தந்தங்களைப் பரிசளிப்போம் காசி நகர்ப் புலவர் பேசும் உரை காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்று கனவு கண்ட பாரதியின் நோக்கம் என்ன வென்றால், பல மொழி, பல இனம், நதி, பலவிதமான நிலஅமைப்பு எனவிரிந்துள்ள பாரதத்தை ஒருமைப்படுத்தப் பாரதி எண்ணுகிறார்.

காதலால் ஒருமை கூடும், கொடுக்கல் வாங்கலால் இணைவு நேரும், செய்திப் போக்குவரத்தால் ஒற்றுமை கூடும், பண்டமாற்று வணிகத்தால் தொடர்புகள் பெருகும் இவையே பாரதியின் நோக்கமாகும்.  பாரதி பற்றி கவிஞர் வைரமுத்து குறிப்பிடும் பொழுது,

                “மகா கவியே
               
நரைத்துவிடும் முன்பே
               
மரித்துப் போனவனே
               
ராஜ கனவு கண்ட
               
ஏழைக் கவிஞனே
               
நீ
               
எங்கள்
               
சரித்திரத்தின் சாறு” 7

என்று குறிப்பிடுகிறார் மேலும்,

                “இமயத்துக்கும்
               
குமரிக்கும்
               
ஒரு
               
நீளக் கனவு கண்ட கவி
               
நீயே தான்
               
உன் கனவுக்குப்
               
பலன் காண்பது
               
எங்கள் கடமையல்லவா?” 8

என்று நம்முடைய கடமையை நினைவு கூர்கிறார்.  பாரதியின் கவிதைப்புலமைப் பற்றியும் அவரது கனவு பற்றியும் கவிஞர் மீரா குறிப்பிடும் பொழுது

               சிலருடைய எழுத்து
               
தினமும் கிழிபடும் காலண்டர்
               
இன்னும்
               
சிலருடைய எழுத்து
               
வருடக் கடைசியில்
               
பழசாகிப் போகும் பஞ்சாங்கம்;
               
உன் எழுத்து
               
இனிவரும் யுகத்தையும் காட்டும்
               
தூர தரிசனம்” 9

என்று பாரதியின் கவிதை ஆற்றலையும் அவரது தீர்க்க தரிசனத்தையும் பற்றிக் குறிப்பிடுகிறார்.

தொழில் வளம், செல்வ வளம் பெருக பாரதி கூறும் கருத்துக்கள்

பட்டாடை, பருத்தியாடைகளைச் செய்து மலைகளெனக் குவிப்போம்.  செல்வங்களைக் கொண்டு வரும் உலக வணிகர்களுக்கு அவற்றை விற்போம்.  ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம், குடைகள், கோணிகள், ஆணிகள், வண்டிகள், கப்பல்கள் பலவும் செய்வோம் என்று தொழில் வளத்தைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை கூறுவதன் மூலம் இந்தியா பல துறைகளிலும் முன்னேற வேண்டும், மக்கள் அனைவரும் வளம்பெற்று சிறக்க வேண்டும் என்ற அவரின் ஆவலை, பரந்த மனதை நாம் உணர முடிகிறது.  மேலும், மந்திரம் கற்போம் தொழில் தந்திரங்கள் கற்போம், விஞ்ஞான அறிவு கொண்டு வாணை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தின் இயல்புகளைக் கண்டறிவோம் காவியம் செய்வோம், ஒவியம் செய்வோம், அன்றாட வாழ்வுக்குத் தேவையான காடு வளர்ப்போம் என்றுரைப்பதிலிருந்து இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதோடு, கல்வி கேள்விகளில், கலைகளில், விஞ்ஞானத்தில் என அனைத்திலும் உயரவேண்டும் என்ற அவரின் விருப்பம் தெளிவாகிறது.

தொகுப்புரை :

பாரத நாட்டின் மேன்மைகளை மனக் காட்சியாகக் காணும் பாரதிக்கு, இக்காட்சிகள் நடைமுறையாக வேண்டுமென்றால் சாதிக் கொடுமையும் பல்வேறு உயர்வு தாழ்வு நிலைகளும் ஒழிய வேண்டும் என்று எண்ணுகிறார்.  அவரது சோசலிச சமதர்ம மனித நேயச் சிந்தனை, கண்ட கனவுகள் இன்றைய காலங்களில் பெருமளவு நடந்தேறியது என்றாலும், உலக நாடுகளிடையே இந்தியா வல்லரசாக பரிணமிக்கும் பொழுதுதான் பாரதி கணட கனவு உண்மையிலேயே பலிக்கும்.

                     
                                                             

rkavithaxeroxspkoil@gmail.com