பிரபல திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வாலி காலமானார்

பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலி இன்று வியாழன் தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 82. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

கடந்த ஜுன் 8ம் நாள் அன்று வசந்தபாலனின் தெருக்கூத்து படத்திற்காக .ஆர்.ரகுமான் இசையில் பாடல் எழுதிக்கொடுத்துவிட்டு வீடு திரும்பியவர் , அன்று இரவே உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இடையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.ஆனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பயனளிக்காமல் இன்று மாலை ஐந்து மணி அளவில் அவர் இறந்தார்

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்டவாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில். தன் நண்பர்களின் துணையுடன்நேதாஜிஎன்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி

வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழர் ஒருவர்மாலி'யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார் என்று கூறப்படுகிறது

வாலி ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாக தமிழ்த் திரையுலகில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கினார். இவ்வளவு நீண்ட காலம் நிலைத்து நின்ற திரைப்படப் பாடலாசிரியர் வேறு எவரும் இல்லை என்கிறார் திரைப்பட ஆய்வாளர் வாமனன்

வாலி பத்தாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதியதாகக் கருதப்படுகிறது.

2007ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன் போன்ற கவிதை நூல்களையும் படைத்துள்ளார்.

 

நன்றி: பிபிசி


தமிழ்ஆதர்ஸ்.காம் தனது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.