மதுரை வரலாறு (கலை இலக்கிய பெருமன்ற விழாவில் உரை)

தொல்லியல் அறிஞர் வேதாட்சலம்

தொகுப்பு - கவிஞர் இரா.இரவி

கற்காலத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பழைய கற்காலம், இடைக் கற்காலம்,புதிய கற்காலம், பழைய கற்காலக் கருவிகள் மதுரை பகுதியில் கிடைக்கவில்லை. இடை கற்காலக் கருவிகள்; மதுரையில் கிடைத்துள்ளது. மதுரை என்றால், மதுரையின் மையப்பகுதி இதுவரை அகழவாராய்ச்சி செய்யப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. மதுரையைச் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று உள்ளது. மதுரையின் மையப்பகுதியில் எதிர்க்காலத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றதால் இன்னும் பல வரலாற்று சான்றுகளைப் பெற முடியும் என்பது உண்மை.

உலகின் மூத்த குடி தமிழ்க்குடி மதுரையில் வாழ்ந்துள்ளான். மதுரை மனிதன் பூமியில் புதைந்து கிடந்துள்ள கற்களை சிறுசிறு கருவியாகப் பயன்படுத்தி இருக்கின்றான். கி.மு
4000 ஆண்டில் பயன்படுத்தப்பட்ட கற்காலக் கருவி துவரிமான், அரிட்டாபட்டி, மாங்குளம் போன்ற பகுதிகளில் கிடைத்தது. நாடோடி வாழ்க்கையில் இருந்து மாறி, ஓரிடத்தில் தங்கி வாழும் வாழ்க்கைக்கு மாறுகிறான்.

கற்காலத்திற்குப் பின் இரும்பு காலம் வருகின்றது. கி.மு.
1000 இரும்பு உருவாகின்றது. இரும்பு கண்டுபிடிப்பிற்கு பின் மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றது. மதுரையின் புறப்பகுதியில் இரும்புக்கால மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன. ஆரம்பத்தில் மனிதன் இறந்ததும் எரிக்கும் பழக்கம் இல்லை. சமாதிகள் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. சமாதியைச் சுற்றி கல்வட்டம் அமைத்தல், பூமிக்கு மேல் கல்லறை கல்திட்டு அமைத்துள்ளனர். இடு துளை வழியாக படையல் பொருட்கள் ஆண்டுதோறும் போடும் பழக்கம் இருந்துள்ளது. பின் குத்துக்கல் வைத்து நடும் முறை, பின் எழுதி வைக்கும் கல்வெட்டு முறை, முதுமக்கள் தாழிகள் இட்டு புதைக்கும் முறை வந்தது. மேலூர் அருகே வெள்ளரிப்பட்டி பெருமாள் மலை அருகே ஆயிரக்கணக்கான கல்லறைகள் இன்றும் உள்ளது. சில அழிந்து
விட்டது.

மதுரையில் கோவலன் பொட்டல் என்ற பகுதியில் கல்லறைகள் உள்ளது. இறந்தவர்களை புதைத்தல் பின்னர் அவர்களது எலும்புகளை எடுத்து கலயத்தில் வைத்துள்ளனர். மண்ணோடு புதைக்கப்பட்ட எலும்புகள் 200 வருடத்திற்குள் அழிந்து விடும். தாழிகளில் வைக்கப்பட்ட எலும்புகள் ஆயிரம் வருடங்களானாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அந்த ஆற்றல் உள்ள கலயத்தை அன்றே கண்டுபிடித்து உள்ளான். இன்றைக்கு மதுரையில் ஆவின் பால் நிறுவனம் உள்ள சாத்தமங்கலம் பகுதியில் கல்லறைகள் நிறைய இருந்தன. கி.மு
400 ஆண்டில் மதுரையின் நாகரிக வளர்ச்சிக்கு பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில் இலக்கியச் சான்றுகள் உள்ளது. கி.மு நூற்றாண்டிலேயே மதுரை என்ற பெயர் இருந்துள்ளது. அழகர் மலையில் கி.மு.2ஆம் நூற்றாண்டில் மதிரை என்ற சொல் வருகின்றது. மதிரை என்பது ஒரு பெண் தெய்வத்தின் பெயராக இருந்திருக்கலாம். ஆதிரை என்பது போல மதிரை என்பது மதுரையாக பிறகுதான் மாறுகின்றது. கி.மு3ஆம் நூற்றாண்டில் பாண்டி நெடுஞ்செழியன் முனிவர்களுக்கு கல் படுகை அமைத்துக் கொடுத்ததற்கான சான்று உள்ளது. மதுரையில் பௌத்தம், சமணம் என பல்வேறு சமயங்களும் இருந்துள்ளது. மதுரையைச் சுற்றி 13 இடங்களில் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

புலிமான் கொம்பு என்ற இடத்தில் நடுகற்கள் கிடைத்தது. இந்தியாவிலேயே தொன்மையான சான்றாக அசோகர் காலச் சான்று சொல்லப்படுகின்றது. அதற்கும் முந்திய சான்றுகள் மதுரையில் உள்ளது. பூலாங்குறிச்சி என்ற ஊரில் மதுரையைப் பற்றிய சாசனம் கிடைத்தது. சேந்தன், சேந்தன்குட்டன் என்ற மன்னர்கள் வரலாற்றில் மதுரையைப் பற்றி வருகின்றது. சங்க காலத்திற்கு பிறகான கல்வெட்டு நிறைய கிடைத்துள்ளது. சமண மதத்தில் வாசுதேவன் என்ற கடவுள் இருந்தது. குளக்கரையில் முனிவர்கள் வசித்த இடம் இப்படி பல்வேறு சான்றுகள் பல்வேறு சமணர்களின் கல் படுக்கைகள் உள்ளது. மதுரை மீண்டும் பாண்டியர்கள் வசம் வருகின்றது. கடுங்கோன் என்ற மன்னன் கைப்பற்றுகின்றான். இதற்கான செப்பேடு உள்ளது. குருவிக்காரன்சாலை பகுதியில் வைகை ஆற்றில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு கல்லை எடுத்துப் பார்த்த போது வட்டெழுத்து கல்வெட்டாக இருந்தது. கிபி.7-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு தடுப்பணை,மதகு அமைத்து வாய்க்கால் வெட்டி நீர் பாசனம் நடந்ததை தெரிவிக்கின்றது.அடுத்தவர்களை பாதிக்கும் வண்ணம் பெரிய அணைகள் அன்று கட்டப்படவில்லை.