காதல் இலக்கியம்
 

அனலை ஆறு இராசேந்திரம்

திருகோணமலைக்குத் தென்பாலுள்ளது வெருகற்பதி. அங்கு அமரர் இடர் தீர்த்த குமரவேள் சித்திரவேலாயுதர் என்னும் பெயருடன் கோவில் கொண்டுள்ளார். அப்பெருமான் மீது கன்னி ஒருத்தி கொண்ட காதலைப் பேசுகிறது சித்திரவேலாயுதர் காதல் என்னும் சிற்றிலக்கியம். இது வீரக்கோன் முதலியார் என்னும் புலவராற் கி.பி 1686க்குச் சிறிது முன் பின்னான காலப்பகுதியிற் பாடப்பட்டது. நாலு சீர்களாலான இரண்டு அடிகளைக்கொண்ட, 421 கண்ணிகளை உடையது. கண்டியை ஆண்ட இராசசிங்கன் என்னும் மன்னன் இதனுட் பேசப்படுகின்றமையான் நூலாசிரியர் வாழ்ந்த காலம் 1686ஐ ஒட்டியதே என்பது தெளிவாகிறது.

முத்தமிழ்க் கடவுளாகிய சித்திரவேலாயுதர் அருமை பெருமைகளைப் பேசுவதே நூலின் நோக்கமாகும். அப்பெருமான் மேற் காதல் கொண்ட மங்கை ஒருத்தி தன் காதலை அவருக்கு உரைத்திடக் கிளி ஒன்றின் உதவியைப் பெறுகிறாள். காதலைச் சுமந்து கிளி தூது புறப்படுவதற்கு முன், அதற்கு அறிவுரை சொல்லும் முறையிற் சித்திர வேலாயுதர் புகழைப் பேசுகிறாள். 'சொல்லாதை' என முடியும் கண்ணிகள் சிலவற்றில் வரலாற்றோடு சேர்த்து, சித்திர வேலாயுதர் சீரைப் போற்றும் புலவர் திறம், அவர் பேராற்றலுக்கு எடுத்துக் காட்டாகும். கண்ணிகள் அனைத்தும் தலைவி கூற்றாகவே அமைந்துள்ளன.

முதலில், பெருமானோடு தன் காதலைக் கூறக் கூடாத சந்தருப்பங்களை கிளிக்குச் சொல்கிறாள் மங்கை.


'என்போலும் பெண்கள் இசைந்தனுப்பும் தூதுவர்கள்
அன்புடனே பேசும் அமையமதிற் சொல்லாதை'


தன்னை ஒத்த இளம் பெண்கள் அனுப்பிய தூதுவர்கள் பெருமானுடன் உரையாடும் வேளையில் இடைப்புகுந்து பேசுதலைக் தவிர்க்குமாறு கூறுகிறாள் தலைவி.

வெருகலையும் அதைச் சூழ்ந்துள்ள பிற ஊர்களையும் சேர்ந்த சித்திர வேலாயுதர் அடியார்கள், 'அக்கடவுளை இந்திரன், சந்திரன் வீரவாகு முதலிய தேவர்களும் திக்குக் காவலர்களும் விண்ணிலிருந்து வந்து வழிபட்டு செல்வர்' என்னும் நம்பிக்கையுடையவர்களாய் விளங்கினர். மக்கள் நம்பிக்கையை ஏட்டிற் பதிவு செய்கிறார் புலவர்.


'இந்திரனும் சந்திரனும் எண்ணரிய விண்ணவரும்
வந்துதொழும் போதெனது மையறனைச் சொல்லாதை'

'வீரவா கோடுமற்றும் வீரர்தொழு தேத்துகின்ற
நேரமதில் என்மயலை நீயெடுத்துச் சொல்லாதை'

'எண்டிசையிற் பாலகரும் இப்புவியி லுள்ளவரும்
தெண்டனிடும் வேளையிலென் சேதிதனைச் சொல்லாதை'


விண்ணவரும் மண்ணவரும் தொழும் பெருமை வாய்ந்த கடவுளுக்கு ஆலய மமைத்தும் பூசை, வழிபாடுகள் ஒழுங்காக நடைபெறவும் ஆனவை செய்தோர் வரலாற்றில் இடம்பெற வேண்டியவர்களன்றோ!

'சித்திர வேலாயுதவேள் சேர்ந்து மகிழ்வாயுறையும்
சித்திரஞ்சேர் ஆலயமும் செம்பொற் சினகரமும்'

'திட்டமுடன் முன்னாளிற் செய்தநல்ல நாதனெனும்
செட்டிவம்மி சத்திலுள்ள செய்ய பிரதானி கள்போய்'

'பன்னரிய பாதம் பணிந்துதொழு தேத்துகையில்
என்னுடைய சங்கதியை எள்ளளவும் சொல்லாதை'


கலையழகோடு ஆலயத்தையும் அதனருகே ஓர் அரண்மனையையும் கட்டுவித்தவன் நல்லநாதன் என்னும் பெயருடைய செட்டியார் என்பதும், அவன் பரம்பரையினர் தொடர்ந்து சித்திர வேலாயுதர்பால் பத்திமைகொண்டு விளங்கினர் என்பதும் மேலைக் கண்ணிகளால் தெரியவருகின்றன.

கண்டியை ஆண்ட இராசசிங்கமன்னன் அளித்த நன்கொடைகள் ஆலயத்திற் பூசை வழிபாடுகள் தங்குதடையின்றி நடக்க வழி வகுத்தன.
'மெத்தப் புகழ்வாய்ந்த வெருகற்பதியுறையும்
சித்திரவே லாயுதரின் சீரடியில்; லன்புகொண்டு'

'மானமுடன் மிக்க வயல்நிலமும் தோப்புகளும்
மானியமாய் ஈந்த மகராச ராசேந்திரன்'

'மாணிக்கம் வைத்திழைத்த வன்னப் பதக்கமுடன்
பூணணிக ளீந்து புகழ்படைத்த பூபாலன்'

'கண்டி நகராளும் கனகமுடி ராசசிங்கன்
தெண்ட னிடும் போதெனது சேதியைநீ சொல்லாதை'


மாணிக்கம் பதித்த அழகிய பதக்கத்தைப் பெருமானுக்குச் சாத்தி மகிழ்ந்தN;தாடு, வயல்களும் தோப்புகளும் எழுதி அளித்து பொருள் முட்டின்றி ஆலய அன்றாடச் செயற்பாடுகள் நடந்திட இராசிங்க மன்னன்; வேண்டியன செய்தான் என்னும் வரலாறு நாலு கண்ணிகளிலும் தெரிகிறது.

வெருகலையும் அதன் அயலூர்களையும் ஆண்ட சிற்றரசர்கள் சித்திரவேலாயுதரை வழிபட்டதையும், அவர்கள் ஆலயத்தின் அழகிய மண்டபமொன்றில் அப்பகுதி நலன் குறித்த மாநாடுகள் நடத்தியதையும் கூறுகின்றன கீழ்வரும் கண்ணிகள்.
'துன்னுமிரு மரபும் துய்ய இளஞ்சிங்கமெனும்
வன்னிமை பொற்பாதம் வணங்கையின்நீ சொல்லாதை'

'வன்னிமை தேசத்தார் மகாநாடு தான்கூடி
மன்னுமெழின் மண்டபத்தே வீற்றிருக்கும் வேளையிலே'


சித்திர வேலாயுதப் பெருமான் அரச உயரதிகாரிகள் தொழும் பெட்புக் குரியார்: அது மட்டுமன்றி, தமிழ்வாணர்கள் சூட்டும் பாமாலை கொள்ளும் பெற்றிக்கு முரியார்.
'சாற்று நிலைமை தலைமையுடன் மற்றுமுள்ளார்
போற்றுகையில் என்மயலைப் பூங்கிளியே சொல்லாதை'

'வித்வசனர் பாமாலை மெல்லடியிற் சூட்டுகையிற்
சத்தியமாய் என்மயலை நீயெடுத்துச் சொல்லாதை'


இக்காதற் சிற்றிலக்கிய நூலாசிரியரை ஒத்த வேறு புலவர் சிலர் பெருமான் மீது கவிமாலை சூட்டி மகிழ்ந்தன ராயினும், அக்வாக்காங்கள்; பேணுவாரின்றிச் சிதைந்து போனமை தமிழ்மக்களுக்கு வேதனையே அளிப்பதாகும்.

'கோதில் புகழ்வீரக் கோன்முதலி தானியற்றும்
காதல் அரங்கேற் றுகையிற் காதல்தனைச் சொல்லாதை'


சித்திர வேலாயுதர் காதல் என்னும் இந்நூல் அங்கு அரங்கேற்றம் கண்ட தகவலைத் தருகிறது இக்கண்ணி.

பொருத்தமான வேளை அறிந்து காதலையும் அக்காதலினாலுறும் துயரையும் சித்திரவேலாயுதர்க்கு எடுத்துரைத்து தன்னை ஏற்றருள விண்ணப்பம் வைக்குமாறு கிளியிடம் கோருகிறாள் தலைவி. வழமை போல் தலைவியின் இக்கோரிக்கையோடு நூலை நிறைவு செய்கிறார் புலவர்.

காதல் என்னும் சிற்றிலக்கியமும் தூது சிற்றிலக்கியத்தை ஒத்த போக்குடைய தாகும். புலவர் கூற நினைக்கும் கருத்துக்கள் அனைத்தையும் கொட்டித் தீர்க்க இடமளிக்கும் இதன் பண்பை தக்கவாறு பயன்படுத்தியுள்ளார் நூலாசிரியர். வெருகற் பதியையும் அதன் அயலூர்களையும் சார்ந்த மக்களின் 325 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றின் ஒரு பகுதியைச் சுமந்து நிற்கும் இந்நூல் என்றும் போற்றப்பட வேண்டிய தாகும். புலவர் நுண்மாண் நுழைபுலமும் வரலாற்றைப் பதிவு செய்யும் பாங்கும் ஏனையோர் கைக்கொளும் தகைமையவாகும்.