தீண்டாமையும்-திருநங்கையும்

 

வைகை அனிஷ்

 

இமைகள் நனையும், இதயத்தின் அடி ரணமென வலிக்கும், புருவம உயரும் இதுதான் திருநங்கைளின் அன்றாட வாழ்க்கை.
 

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என மும்மதத்தினரின் கூட்டுக்கலவைதான் திருநங்கைகள். கிரேக்க மன்னர்களின் படுக்கையறைக் காவலர்களாக இருந்துள்ளார்கள். 16 ஆம் நூற்றாண்டில் வத்திக்கான் கிங்டைன் தேவதாலயத்தில் இவர்கள் பாடற்குழுவினராக இருந்திருக்கிறார்கள். முதன் முதலில் காகிதத்தை கண்டுபிடித்தவர் ஒரு திருநங்கையே. முகலாயப் பேரரசு காலத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பில் அரவானிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் ஐந்து அடுக்கு பாதுகாப்பு இருந்துள்ளது. இதில் நான்காவது அடுக்கு பாதுகாப்பு என்பது பெண்களை பாதுகாக்கும் படை பிரிவாகும். திருநங்கைகள் படைத்தளபதிகளாக மாலிக்கபூர், மல்லி கருஸ்கான், ஜலாவுதீன்கான் போன்றவர்கள் இருந்துள்ளனர். தமிழ் இலக்கியத்தில் அலி, பேடி, இடமி, இப்பந்தி, கிலிபம், சண்டகம், கோஷா என முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு என்று தனி மொழி ஒன்றையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மொழிக்கான இலக்கணமோ அல்லது உருவ அமைப்போ இல்லாத மொழிதான் கவுடி பாஷா எனவும்  கவுடி பாசை எனவும் அழைக்கப்படுகிறது.
 

பிறந்த பால் உறுப்பு அறுக்கப்பட்ட அல்லது விதை மட்டும் அறுக்கப்பட்ட ஆண்கள் ஆங்கிலத்தில் eunch என்றும் தமிழில் அலி அல்லது பேடி என்று சொற்களால் அழைக்கப்படுகிறது. இப்படி ஆண் உறுப்பு சிதைக்கப்பட்ட ஆண்களே பாதுகாவலர்களாக அரண்மனைகளிலும் ராணிகள் வாழும் அந்தப்புரங்களிலும் நிறுத்தப்பட்ட வரலாறு அனைத்து நாடுகளிலும் உண்டு.
 

ஆங்கிலத்தில் ஆண்-பெண் தவிர்த்த பிற பாலினத்தாரை transgender என்றும் சுருக்கமாக பேச்சி வழக்கில் tg என்றும் அழைக்கின்றனர். ஆண் உறுப்போடு ஆணாகப் பிறந்து தன் மனம், செயல், குணாதிசயத்தால் பெண்ணாக தன்னை உணருபவர்களை திருநங்கையர் என்று அழைக்கிறோம். பெண் உறுப்போடு பெண்ணாகப் பிறந்து தன் மனம் மற்றும் செயல்களில் ஆணாக உணருபவர்களை திருநம்பிகள் என்று அழைக்கப்படுகிறது.
 

அலிகள், பொட்டை, அரவாண், 9 என அழைக்கப்பட்டவர்கள் தற்பொழுது திருநங்கைகள் என அழைக்கப்படுகிறார்கள்.உண்மையில் சொல்லப்போனால் இவர்கள் எல்லாருமே பெண்கள் என அழைக்கப்படுவதை விரும்புகிறார்கள்.
 

9(ஒன்பது)
 

மருத்துவர் ஹாரி க்ளைன்பெல்டர் மற்றும் அவர் தம் உடன் உழைப்பாளர்கள் இணைந்து மார்பகங்கள் வளர்ந்த, சிறிய விரைகளை உடைய மலட்டுத்தனத்துடன் கூடிய ஒன்பது நபர்களைப் பற்றிய அறிக்கையை 1942 ஆம் ஆண்டில் வெளியிட்டார். அதிலிருந்து ஒம்பது என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

 

அரவாணி
 

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் நடைபெற்ற கூத்தாண்டவர் விழாவில் நடந்த அழகிப் போட்டிக்கு தலைமை ஏற்ற அப்போதைய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.இரவி என்பவர்தான் முதன் முதலில் அரவாணி என்ற பெயரை முன்மொழிந்தார்.
 

திருநங்கை
 

ஆண் குழந்தைகளாகப் பிறந்து பின் வளரும் போக்கில் தம்மைப் பெண்களாகவே உணர்ந்து பெண்ணாகவே தம்மை மாற்றிக்கொள்ள மனப்பூர்வமாக விரும்பி பெண்களோடு சேர்ந்திருக்கும் ஆசை கொண்டவர்களாக பெண்கள் உடையும் அணிகலன்களையும் அலங்கரித்துக் கொள்பவர்கள். இதனால் வீட்டில் தண்டிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். குழந்தையாக இருக்கும்போது திருநங்கை என்ற உணர்வு ஏற்படுவதில்லை. பருவ வயதை எட்டியவுடன் தன்னுள் ஏற்பட்டும் மாற்றம் மற்றும் மனஉளைச்சல் ஆகியவற்றால் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். இவர்கள் ஆண் உடலுக்குள் அடைபட்டு  சிறைப்பறவையாக பெண் உடலையும் பெண உள்ளத்தையும் விடுதலை செய்யும் ஆவேசம் இவர்களை உந்தித்தள்ள மும்பை சென்று அங்கு அரவாணிகள் சமூகத்தில் இணைந்து தம் ஆண் உறுப்பை அறுத்தெரிந்துவிட்டு அதையே பெண் உறுப்பாக மாற்றியமைக்க அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள்இவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்படும்போது பலர் இறந்துள்ளார்கள். பலர் சிறுநீரகக்கோளாறு உள்பட பலவித நோய்களுக்கு ஆளாகிவிடுகிறார்கள். இருப்பினும் ஆண் உறுப்பை அறுத்து எரிந்துவிட்டு பெண்ணாக மாறவேண்டும் என்ற உணர்வு ஏன் வருகிறது என்பது அறியப்படாத விடயம் ஆகும்.
 

அறிவியல் கூற்றுப்படி பொதுவாக ஆண்-பெண் சேர்க்கையினால் கரு உருவாகும் போது தாயின் கருவறையில் முதல் எட்டுவாரங்கள் அது பெண் குழந்தையாகத்தான் இருக்கும். எட்டாவது வாரத்துக்குப் பிறகுதான் அது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பது தீர்மானிக்கிறது. எல்லாக் கருவும் முதலில் பெண்ணாகத்தான் உருவாகும். சிலருக்கு ஆண் குழந்தையின் உடல் உறுப்புகள் உருவானாலும் உளப்பூர்வம் தொடர்பான உடலியல் கூறு ஏற்பாட்டில் மாற்றம் இல்லாமல் அது ஏற்கனவே இருந்த பெண் தன்மையோடே தொடர்கிறது. அவர்கள் தான் பின்னர் பருவவயது வரும்போது திருநங்கையராகிக்னறனர்.

xx  குரோமோசோம்கள் இருப்பவர் ஆண் எனப்படுவர். ஒல குரோமோசோம்கள் உள்ளவர் பெண் எனப்படுகிறார். சிலர் xxy என்றும் xyyy என்றும் இன்னும் விதவிதமான கலவைகளில் பிறந்துவிட நேரிடுகிறது.
 

பள்ளிப்படிப்பு
 

இவ்வாறு மாற்றம் அடைந்த திருநங்கையர்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஆண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்தமுடியாது. அதே போல பெண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்தமுடியாது. இதனால் பள்ளிப்படிப்பை இடையில் விட்டுவிடுகின்றனர். அதன் பின்னர் பாலியல் தொழில், பிச்சை எடுப்பதை தொழிலாக வைத்துக்கொள்கின்றனர்.
 

இலக்கியத்தில்  திருநங்கைகள்
 

தமிழின் முதல் தத்துவநூல் எனப் போற்றப்படுகின்ற நீலகேசி, திருநங்கையர்களின் துன்பங்களை பற்றி இவ்வாறு கூறுகிறது.
 

"பேடி வேதனை பெரி
தோடி
யூரு மாதலாற்
சேடி
யாடு வன்மையிற்
கூடியாவதில்லை
"
 

என்கிறது அப்பாடல். இதற்கு முன்னால் ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின் உருவான சைவ, வைணவ பக்தி இலக்கியப் பாடல்கள் இறைவன் ஆண், பெண், அலி என மூன்று பாலினமாக பார்க்கப்படுவதை கூறுகிறது. இதனை வலியுறுத்தி திருவாசம் " பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க"என்கிறது.
 

சமஸ்கிருத புராண இலக்கியங்கள் கிரகராசிகளின் பலாபலனை அறியும் பொருட்டு புருஷநாள், பெண் நாள், அலிநாள் என்று வகைப்படுத்துகிறது. ஆண் நட்சத்திரம், பெண் நட்சத்திரம், அலிநட்சத்திரம் (மிருகசீரிஷம், சதயம், மூலம்) என்று வகைமை செய்கிறது.

கொளடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் திருநங்கையர்களின் பணிகளை பிரித்துக் கூறுகிறது. அவையானவன, ஒற்று வேலை பார்த்தல், தன்நாட்டு மந்திரி உள்ளிட்ட அரச குடும்பங்கள், எதிரி நாட்டு அரச குடும்பங்களில் என்ன நிகழ்கிறது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிந்து சொல்லும் ஒற்றர்களுக்கு பொருத்தமானவர்களாக குறிப்பிடப்படுகிறது. மன்னரின் அரண்மனைகளிலும் உயர்வகுப்பினர்களின் வீடுகளிலும் பெண்களுக்கு அலங்காரம் செய்வது, நடவனமாடி மகிழ்விப்பது போன்ற பணிகளை செய்துள்ளனர். அரண்மனைக்குள்ளும், அந்தப்புரத்திற்குள்ளும் எந்த வித தடையின்றி எண்பது வயதைக்கடந்த ஆண்களும், ஐம்பது வயதைக்கடந்த பெண்களும், வயதுவரம்பற்ற திருநங்கைகளும் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைக்கொண்ட அரசன் தன்னை பாதுகாத்துக்கொள்ள திருநங்கைகளைப் பயன்படுத்தி உள்ளான். படுக்கையில் இருந்து எழும் அரசனுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதில் இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு குப்பாயமும், தலைப்பாகையும் திருநங்கையர் பொறுப்பிலானது. இவ்வாறு வீரம், நம்பிக்கை, விசுவாசத்தின் அடிப்படையில்; நம்பிக்கைக்குரியவர்களாக திருநங்கைகள் இடம் பெற்றுள்ளனர்.
 

1569 ஆம் ஆண்டு நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில்  தக்காணத்தை ஆட்சி செய்த பூராஹன் நிஜாம் சிங்கிற்கும், அகமத்நகரை ஆட்சிசெய்த ராஜா இப்ராகிமுக்கும் இடையே போர் நடந்துள்ளது. அதில் திருநங்கைகள் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதே போல ராணி சாந்தாவின் அரண்மனையில் இரண்டு போர்பிரிவுகள் இருந்துள்ளன. இரண்டும் திருநங்கையரால் ஆனது  என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
 

முடியாட்சியின் துவக்க காலம் துவங்கி பதினேழாம் நூற்றாண்டுவரை அரசு அதிகார மையத்தில் திருநங்கையர் வகித்த பாத்திரம் எவ்வித வீழ்ச்சிகளையும் சந்திக்கவில்லை. ஆனால் 19ம் நூற்றாண்டிக்குப்பிறகுதான் திருநங்கையர்கள் பற்றி இழிவான சொல்லை பிரான்சும், இங்கிலாந்தும் துவக்கியது.
 

அரவாணியும் அறுவை சிகிச்சையும்
 

அரவாணியாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்கிறார்கள். ஆண் உறுப்பை நீக்கி அவளை இன்னொரு அரவாணி தன்னுடைய மகளாக தத்து எடுத்துக்கொள்கிறாள். ஆரம்பத்தில் திண்டுக்கல், ஆந்திராவில் கடப்பாவில் மட்டுமே செய்துள்ளார்கள். இவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்படும்போது விரதம் கடைபிடிக்கப்படுகிறது. முதலில் அசைவ உணவும் அதன் பின்பு சைவ உணவும் கொடுப்பார்கள். அதன் பின்னர் தனியாக விடப்பட்டு அந்த சடங்கு நடைபெறும். அந்த சடங்கு மூன்று நாள் நடைபெறும். அப்போது கம்மங்கூழ், கேப்பைக்கூழ், கஞ்சி இவைகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதன் பின்னர் யாராவது ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் அதன் பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு நிர்வாண பூஜை நடைபெறும். நிர்வாண பூஜை நடைபெறும் இடத்தில் போத்திராஜ் மாத்ரா படம் வைத்திருப்பார்கள். அங்கு குழி ஒன்று வெட்டப்பட்டு இருக்கும். இரவு 12 மணிக்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்யும் அரவாணி வாயில் முடியை வைத்து தலையில் எலுமிச்சை பழத்தை வைத்து அடிப்பார்கள். அந்த அடியில் அரவாணி மயங்கிய நிலையில் காணப்படுவாள். பின்னர் கைகள் இரண்டையும் பின்புறம் கட்டிவைத்துவிட்டு பூஜை முடிந்தவுடன் மாதாஜி கையில் இருக்கும் அரிவாளால் ஆணுறுப்பு துண்டிக்கப்படும்.அப்போது இரத்தம் பீறிட்டு குழி முழுவதும் நிரம்பி விடும். அந்த ரத்தத்தை உடல் முழுவதும் தேய்த்து விடுவார்கள். பின்னர் மயக்கத்தை தெளியவைத்து இரண்டு கால்களையும் விரித்து அமரவைப்பார்கள். அதன் பின்னர் சுடாக காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயை எடுத்து காயம்பட்ட இடத்தில் தடவுவார்கள். அப்பொழுது கண்ணாடியை பார்க்கவோ அல்லது எந்த ஆணையும் ஏறிட்டு பார்க்க அனுமதிப்பதில்லை. பின்னர் விழா கொண்டாடப்படும். விழாவின்போது சீர் வரிசை செய்யப்பட்டு அன்று இரவு கையில் செம்பில் பாலை கொடுத்து ஏதாவது ஒரு நதிக்கரையில் கொண்டு போய் பாலை ஊற்றி திரும்பி பார்க்காமல் வந்துவிடுவார்கள். இத்தனை செலவுகளையும் வளர்ப்புத்தாய் செய்யவேண்டும்.
 

ஆலய வழிபாடு
 

அரவாணிகள் எந்த மதத்தில் இருந்து வந்தாலும் அவர்களுக்கு இனி தெய்வம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில்தான். இந்த கூவாகம் உளுந்தூர்பேட்டையில் உள்ளது. இவை தவிர தமிழகத்தில் 44 கோயில்கள் உள்ளது. கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கஞ்சப்பள்ளி, குமாரமங்கலம், குறிச்சி, குட்டாம்பட்டி, துடியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் கொத்தட்டை, புவனகிரி, தேவனாம்பட்டினம், திருட்டகளம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் களரிகியமும் சேலம் மாவட்டத்தில் பழைய 10ரமங்கலம், பனைமடல், பேரூர், துடியலூர, திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்வாணம்பாடி, தேவனுர், வீரனேந்தல்,வேதாந்தவழியும் வேலூர் மாவட்டத்தில் சோழவரம், புதூர், வெள்ளையம்பட்டி, வரச10ர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கொணலூர், கூவாகம், பெண்ணவளம், தைலாபுரம் மற்றும் பாண்டிச்சேரியில் மதுக்கரை, பிள்ளையார்குப்பம் ஆகிய ஊர்களில் உள்ளது.
 

வழிபாட்டு மரபு
 

கூத்தாண்டவர் வழிபாட்டு மரபும் திரௌபதி வழிபாட்டு மரபும் உள்ளது. தமிழ் மரபில் அரவாண் வழிபாடு முக்கியமானது. திரௌபதி கோவிலில் அரவாணிகள் வெட்டப்பட்ட தலையின் பகுதியை காணலாம்.இந்த தலைப்பகுதி பெரும்பாலான கோவில்களில் மரத்தினால் ஆனவை. தீய ஆன்மாக்களிடம் இருந்து மக்களையும் பக்தர்களையும் காக்கும் காவல் தெய்வமாக அரவான் இருக்கிறார். உலகிலேயே மிகப் பெரிய அரவான் தலை கும்பகோணத்தில் ஹாஜியார் தெருவில் உள்ளது.

 

உறவு முறை:
 

குரு-அம்மா

நானி-நானகுரு-பாட்டி

தாதி-தாதகுரு-கொள்ளுப்பாட்டி

படாகுரு-காலாகுரு-பெரியம்மா

சோட்டாகுரு-காலா குரு-சின்னம்மா

பூஜி-மூத்தோர்-மூதாதையர்

சாஸ்-மாமியார்

குருபாய்-அக்கா-தங்கை

நலந்த்-அண்ணி

ஜேட்டாணி-ஓரகத்தி

சேலா-மகள்

நாத்திசேலா-பேத்தி

சந்திசேலா-பேத்தியின் மகள்

சவுக்கன்-பங்காளி

டேப்கா-சிறுவன்

டேப்சி-சிறுமி

பாவ்வா-அண்ணன்

கல்லா-கிழவன்

கல்லி-கிழவி

 

சாதிப்பிரிவு
 

படே ஹவேலி, சோட்டா ஹவேலி என்று உள்ளது. ஹைதராபாத் நிஜாம் ஆட்சிக்காலத்தில் ஒரு சமயம் நாட்டில் மிகுந்த வறட்சி ஏற்பட்டது. மக்கள் பஞ்சம் பட்டினியால் வாடினர். இப்போது இரு அரவாணிகள் நடனத்தால் மிகுந்த மழை பெய்து நாடு முழுவதும் செழுமையானதால் மன்னன் அவர்கள் இருவருக்கும் இரண்டு அரண்மனைகளைப் பரிசாகக் கொடுத்தான். அவன் கொடுத்த சோடா ஹவேலி(பெரிய அரண்மனை) படா ஹவேலி(சிறிய அரண்மனை) என்று சொல்லக்கூடிய இரண்டும் இன்னும் திருநங்கைகள் கட்டுப்பாட்டில் உள்ளது.

 

திருநங்கைகள் கொடி
 

ஹல்லி போஸ்வல் என்பவரின் கை வண்ணத்தில் ஒரு ஓவியத்தை உருவாக்கி திருநங்கை கொடியை உருவாக்கி உள்ளார். இந்த ஓவியம் ஆண், பெண், திருநங்கைகள் எல்லோரையும் பிடித்திருக்கிறது. இக்கொடி 2000த்தில் அமெரிக்காவில் வெளிர் ஊதா, வெளிர் ரோஸ் அகிய வண்ணங்களில் உருவாக்கியுள்ளார்.
 

முஸ்லிம் பண்பாடும்-திருநங்கைகளின் சமூக வாழ்க்கையும்
 

பொதுவாக திருநங்கைகள் சமூகச் சடங்குகள் இந்து, முஸ்லிம் மதங்களின் கலவையாகவே உள்ளது. தமிழகத்தில் நடத்தப்படும் சடங்குகளில் இந்து மதத் தாக்கம் அதிகமாகவும், வட மாநில சடங்குகளில் முஸ்லிம்களின் மதத் தாக்கம் அதிகமாக உள்ளன. இதற்கு காரணம் வட இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைந்திருப்பதே காரணம்.
 

திருநங்கைகள் அறுவை சிகிச்சை செய்து முடித்து 40 ம் நாள் செய்யப்படும் சடங்கின்போது பச்சை நிற உடைகளையே அணியவேண்டும் என்ற நியதியாக உள்ளது. அது போலவே பாலூற்றும் சடங்கின் இறுதியில் தாய்வீட்டு சீதனமாக அளிக்கப்படும் 5 தங்க குண்டுமணிகள் கோர்த்த இஸ்லாமிய சமூகத்தில் திருமணத்தின்போது அணிவிக்கப்படும் லச்சா போன்று உள்ளது.
 

திருநங்கைகளுக்கு என்று பொதுமொழியாக ஷகவுடி மொழிஷ உள்ளது. இம்மொழி உருது, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் கலவையாக உள்ளது. இம்மொழியில் பல உருது சொற்கள் கலந்து உள்ளது. கானா-சாப்பாடு, ஜமாத்-மூத்த அரவாணிகள் குழு, ஜிந்தகி-வாழ்க்கை, பரிவார்-குடும்பம் என்பன.
 

பஞ்சாயத்து கூட்டம் நடைபெறும் இட  ங்களில் அலிகள் கட்டாயமாக முக்காடு இட்டு இருக்கவேண்டும். இது முஸ்லிம் பெண்களின் பின்பற்றும் நடத்தையை நினைவு படுத்துகிறது. ஜமாத் பிரச்சினையின்போது அல்லாகி கசம், மாத்தாகி கசம் என்று கூறுவார்கள். இந்து, இஸ்லாம் மதங்களை நினைவு படுத்துகிறது. திருநங்கைகள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது வணக்கம் சொல்லவேண்டும். அப்போது சலாமலேக்கும் என்று கூறினால் பதிலுக்கு மாலேக்கும் சலாம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இவை இஸ்லாம் மதத்தின் தாக்கம் ஆகும். முஸ்லிம்களை பன்றிகளை வெறுப்பவர்கள். இதே போல திருநங்கைகளும் பற்றிக்கறி கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. பன்றிக்கறி சமைத்தவர்கள் வீட்டில் தண்ணீர் கூட குடிக்கமாட்டார்கள்.
 

மூன்றாம் பாலினம்

 

15.4.2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது. திருநங்கை பிறப்பு என்பது ஒரு தனிப்பிறப்பு கிடையாது. ஹார்மோன் குறைபாடு காரணமாக இக்குறைபாடு உடைய குழந்தைகள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கின்றன. பெண்ணாய் பிறந்து திருநங்கையாக மாறும் குழந்தைகள் குறைவு. ஆணாய் பிறந்து திருநங்கையாக மாறுபவர்களுக்கு ஒரு சமூக அமைப்பு ஆதரவு கொடுப்பது இந்த திருநங்கை சமூகம் தான். இவர்கள் வாழ்வில் உறவுமுறை, சடங்குள், நம்பிக்கை, மொழி என பல இஸ்லாம், இந்து மதங்கள் கலந்துள்ளது. இவர்களை இனிமேலாவது தீண்டக்காதவர்களாக எண்ணாமல் மனிதனாக எண்ணவேண்டும்.

 

ஆதார நூல்கள்:
 

1.மக்கள் போராளி, ஆகஸ்ட் மாத இதழ், திருப்போரூர்

2.சு.சமுத்திரம், வாடாமல்லி நாவல், அருவி வெளியீடு, சென்னை

3.ஆய்வுமாலை, இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம், சென்னை

 

கட்டுரையாளர்

வைகை அனிஷ்

3.பள்ளிவாசல் தெரு

தேவதானப்பட்டி-625 602

தேனி மாவட்டம்

செல்:9715-795795


 

 

 www.tamilauthors.com