இணையத்தளங்களில்  இளைய   தலைமுறையினரின் இலக்கியப் பரம்பல்

வி.ஜீவகுமாரன்

இலக்கியம் படைத்தல் என்பது ஒவ்வொருவரின் இயலுமைக்கும் திறமைக்கும் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பினும், அதை வெளிக்கொணர்தலிலும், அதை வாசகரிடையே கொண்டு சென்று சேர்த்தலிலும், வாசகரின் எண்ணங்களை அறிந்து கொள்வதில் உள்ள சிரமங்களை எம் மூத்த சந்ததியினர் நன்கு அனுபவித்து இருந்தனர்.

அரசியல் தலையீடுகள். . . இலக்கிய விற்பன்னர்கள் ஆளுக்கொரு பக்கமாய் பிரிந்து நின்று பிடித்துக் கொண்ட குழாயடிச் சண்டைகள். . . புதிதாக முளைத்து வந்த 'இசும்'கள். . . இந்தியப்பத்திரிகைகளில் எம்மவருக்கு இருந்த அளவுக்கு மீறிய ஈடுபாடு. . . இவற்றினூடு ஒரு படைப்பாளியின் படைப்பு அச்சேறுவது என்பது கயிலாயமலைக்கு தலையால் நடந்து செல்லும் முயற்சி போன்றது. இந்தப் போராட்டத்தில் கருக்கலைக்கப்பட்டதும், குறைப்பிரசவமானதும் என எத்தனையோ இலக்கிய முயற்ச்சிகள் முளைவிடு முன்பே கருகிப் போயின.

இதையும் தாண்டி எம்மிடையே உலகத் தரத்தில் பேசப்படும் அளவில் எழுத்தாளர்கள் எம்மிடையே முளைத்தாலும், இந்த தடைகள் இருந்திராவிட்டால் இன்னமும் எத்தனையே எழுத்தாளர் எம்மிடையே மலர்ந்திருப்பார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இலங்கை இந்திய நாடுகளில் பொதுவாக எழுத்தாளர்கள் பதிப்பாகத்தாரின் தயவை நாடிநின்ற நிலை புலம் பெயர்ந்த எழுத்தாளருக்கு இல்லாவிட்டாலும் அவர் அவர்கள் தமது செலவில் பதிப்பித்த நூல்களின் பரம்பலுக்கு பெரிதும் கஷ்டப்படுகின்றார்கள்............ மீண்டும் ஒரு பதிப்பகத்தினையோ அல்லது புத்தகசாலையோ நாடிச் செல்லுகின்றார்கள்.

இந்த புலம் பெயர்ந்த ஆசிரியர்களின் புத்தக வெளியீடுகள் பெரும்பாலும் தமது நண்பர்கள், வேண்டியவர்களுடன் ஒரு மாலை நேரத்து தேனீர் விருந்துடனும் நாலைந்து பேரின் சிறப்புரையுடனும் நிறைவுற, அதன் பின் அந்த ஆசிரியர்களின் புத்தகங்கள் சந்தைப்படுத்த வாய்ப்புகள் இன்றி வீட்டுப் பரண்களில் கட்டுக் கட்டாக தூசி படிந்து போய் இருப்பதும், காலப் போக்கில் சிலர் தமது நூல்களை இலவசமாக கொடுப்பதும் அதிகமாக புலம் பெயர்நாடுகளில் கண்கூடு.

கடந்தகாலச் சரித்திரங்கள் எம்பின்னடைவிற்கான காரணங்களை அறிய உதவினாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு துணை செய்தது என்றால், 'வானத்தில் இருந்து தேவன் வருகின்றார்.........  அதிசயங்கள் நிகழ்த்த இருக்கின்றார்........ .உலகம் 2001ல் அழிய இருக்கின்றது........  தேவரட்சனையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கடற்கரைகளில் சுவிஷேச கூட்டங்களில் சொன்னதுக்கு எதிர்மாறாக ஒரே ஒரு விடயம் உலகத்தில் நடந்தது. அதுதான் உலகம் கம்பியூட்டர் மயப்பட்டது. கணனி உலகத்தில் ஏற்பட்ட பெரும் முன்னேற்றம் தான்.'
அது அனைத்தையும் மாற்றி அமைத்தது.

இந்தக் கணனி உலகின் பிரவேசம் அல்லது அதன் தாக்கம் உலகத்தில் எந்த துறையையும் விட்டு வைக்கவில்லை - இலக்கியத்துறை உட்பட.

இந்த கணனித்துறையும் கணனியும் எங்கள் அடுத்த சந்ததிக்கு சிலேற்றும் கரும்பலகையுமாக அவர்கள் இலக்கியத் துறையில் காட்டிய ஆர்வமும் சேர்ந்து நூல்களின் வடிவமைப்பில் பரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

ஒரு புத்தகத்தின் பக்கங்களை மலிந்த வெள்ளைத்தாள்களிலும் மண்ணென்ணை மணம் மாறாத கறுத்த மையுடனும் வாசித்த எமக்கு அவர்களின் வண்ண மயமான இணையத்தளப்பக்கங்கள் பிரமிக்க வைக்கின்றது.
இணையத்தளத்தில் வடிவமைக்க கூடிய வசதிகள் அளவுக்கு அதிகமாகவே இருப்பதால் கற்பனையில் தோன்றும் அனைத்தையும் அவர்களால் வடிவமைக்க கூடியதாய் இருக்கிறது.

ஒரு நாடகத்திற்கு அல்லது திரைப்படத்துக்கு பின்னணி இசை எவ்வாறு கை கொடுக்கின்றதோ அதே அளவு இந்த இளைய தலைமுறையின் படைப்புகளுக்கு கணனியில் உள்ள கிராபிக்ஸ் வசதிகள் கை கொடுக்கின்றது.
உதாரணத்திற்கு ஒரு பதினாறு வயதுப் பெண் டென்மார்க்கில் உள்ள வானம் என்ற இணையத்தளத்திற்கு ஒரு அகதிகள் என்ற தலையங்கத்தில் கவிதை எழுதி அனுப்பியிருந்தாள்.

அகதிகள்

இந்தப் பனி
இந்த கடல்
இந்த வானம்
யாருக்குச் சொந்தம்?

எங்கே எமது
சொந்தங்கள்
அங்கே நாங்கள்
போவோமா?


வளர்ந்தவர்களாகிய நாங்கள் முகத்தை தொலைத்தவர்கள்........... முகவரியைத் தொலைத்தவர்கள் என வார்த்தைகளைத் தேடி அலையும் பொழுது அந்தச் சின்னப் பெண் கவிஞரோ டென்மார்க்கின் இயற்க்கையும் பெற்றவர்களின் அகதித் துன்பத்தையும் சின்ன சின்ன வார்த்தைகளால் அழகாகவே வடித்திருந்தாள்.
எழுதியதுடன் நின்று விடவில்லை.
தனது கவிதைக்கு பின்புலப்படம் ஒன்றைத் தேடிப்புறப்படுகிறாள். இறுதியில் அவள் கண்டெடுத்த படம் எது தெரியுமா?


ஒரே கவிதை! வெளிப்பாடு மாத்திரம் இரண்டு வகை!! இதற்குப் பயன்படுத்தியது ஒரு சின்ன கணனி நுட்பம்.. கணனியிலேயே பென்குயினின் படத்தை தேடி எடுத்து, அதனை கவிதைக்கு பின்னணியாக வைத்து எழுத்துக்களுக்கும் வர்ண நிறத்தைக் கொடுக்கும் பொழுது அந்த கவிதையின் வெளிப்பாடு எங்கோ போய் நின்று எம்மை அண்ணாந்து பார்க்க வைக்கின்றது.
இதையே இன்னோர் பெண் அழகிய இரண்டு கிளிகளின் படத்தைப் பார்க்கின்றாள். அங்கு அவளுக்கு கவிதை பிறக்கின்றது. அதனை படத்தின் மீது எழுதுகின்றாள்.


எமக்கு ஓர் அழகிய படைப்புக் கிடைக்கின்றது.
ஆண்டாண்டு காலமாய் மூத்த எழுத்தாளர்கள் பலர் எத்தனையோ வடிவங்களில் முன் வைத்த சாதியம், இனத்துவேஷம் எல்லாத்தையும் வேறு ஒரு புதிய பரிமாணத்தில் இந்தச் சிறுமி முன்னே வைத்துவிட்டுப் போயிருக்கின்றாள். இந்த வடிவமும், இதனை வெளிக்கொணரும் ஊடகமும் தமிழ் இலக்கியத்திற்குப் புதிது.  அதில் உள்ள மிகச்சிறப்பு யாதெனில் எழுதிய வேகத்திலேயே உலகம் முழுக்க அது பரம்புதலும், அதே வேகத்தில் அதன் மீதான வாசகரின் விமர்சனங்களை அறியக்கூடியதாக இருப்பதுமே. விமர்சனங்களும் அதன் மீதான வாக்குவாதங்களும் சிலவேளைகளில் மிகவும் காத்திரமான விடயதானங்களை அடக்கியிருப்பது கண்கூடு.

இவ்வாறு சின்னக் சின்னக் கவிதைகள்........ கட்டுரைகள்..... கதைகள் பெரும்பாலும் கணனி வசதியுள்ள அனைத்து புலம் பெயர்நாடுகளிலும்....... .ஏன் இந்தியா, இலங்கையிலும் வெளிவரத் தொடங்கி விட்டது. தனியே எழுத்து வடிவத்தில் இருந்த இலக்கியங்கள் இந்த கிரபிக்ஸ் கலையுடன் சேர்ந்து ஒரு புதுப்பரிமாணத்தை எட்டியுள்ளது. இதில் இன்றைய இளைய சந்ததியினர் மிக ஈடுபாடு காட்டுகின்றனர்.  இவ்வாறு டென்மார்க்கில் இணையத்தளத்தில் வெளிவந்த பல கவிதைகளைத் தொகுத்து இந்தியாவில் இருந்து மித்ரா பதிப்பகத்தினர் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டு இருக்கின்றார்கள். கணனியில் இருந்தது போலவே அனைத்து கவிதைப் பக்கமும் வர்ணத்தாள்களில் வெளிவந்து இருக்கின்றது. மெல்லத் தமிழ் இனித்துளிர்க்கும் என்ற இந்த இளையோரின் கவிதைத் தொகுப்பு இந்த கட்டுரையில் நான் அலசிய பல விடயங்களுக்கு சாட்சியமாகின்றது.

இங்கு கவிதை பேசுகிறது...... கணனி கண் சிமிட்டுகிறது...... மழலையின் பிஞ்சுவிரலைப் பிடித்தபடி மாலையோரத்துக் கடற்கரையோரம் நடந்து செல்லும் உணர்வு மேலிடுகிறது. சிறு கை அளாவிய கூழாக இக்கவிதைகளை நான் நுகர்ந்தேன்.


அவசர வாழ்க்கையை எம் மீது நாமே திணித்துக் கொண்ட இந்த புலம் பெயர்வாழ் உலகத்தில், ஒரு குறுகிய நேரத்தில் இலக்கியத்தைச் சுவைப்பதற்கு இந்த வடிவம் பெரிதும் உதவுகின்றது – நின்று கொண்டோ இருந்து கொண்டோ நாம் பஸ்களில் பயணம் செல்லும் பொழுது ஆனந்தவிகடனில் வாசிக்கும் ஒருபக்கக் கதை போல...... அல்லது கவிதை போல இவையும் அமைந்து விடுகிறது.
இதிலே இலக்கியத் தரத்தையும் வளர்த்துக் கொண்டுவிட்டால் வேறு என்ன வேண்டும் எம் அடுத்த சந்ததிக்கு?
அவர்களது தளத்திற்கு நாம் சென்று அவர்களை ஊக்குவிப்பதும் அதன் மூலம் அவர்களின் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக நிற்பதன் மூலமே அவர்களின் திறமையை மென்மேலும் வளர்த்தெடுக்க முடியும். மூத்த சந்ததியின் நல்வழிகாட்டலும், இளைய சந்ததியின் புதுயுக விஞ்ஞான அறிவும் சேர்ந்தால் நிச்சயம் ஒரு புது இலக்கிய வடிவம் எமக்கு கிடைக்கும்.

இது காலத்தின் கட்டாயம்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்பதற்கிணங்க இந்த புதுக்கட்டுமான இலக்கிய வடிவம் நிச்சயமாக வரவேண்டிய ஒன்று. உலகத்திற்கு ஒளி கொடுக்கும் சூரியனும் சந்திரனும் போல புத்தகவடிவத்தில் வந்து கொண்டிருந்த இலக்கியம் ஒரு வடிவம் ஆயின் இணையத்தளத்தில் வெளிவரும் இந்த இலக்கியம் இன்னோர் வடிவம் ஆகும்.


 

 

 

 



இந்தப் புதுயுகத்தில் எம் இளைய தலைமுறையினருடன் இணைந்து இணையதளங்களில் இலக்கியப் பரம்பலை மேற்கொள்வோம்..

இன்னும் நாம் வளர்வோம்!!


jeevakumaran5@yahoo.com