ஆந்திரப் பெருந்திணை

 

அனலை ஆறு இராசேந்திரம் 

 

ண், பெண் என்னும் இருபாலாரில் ஒருபாலார் மறுபாலார் மேல் உள்ளத்தாலும், உடலாலும் கொள்ளும் வேட்கையைக் காதல் அல்லது காமம் எனப் பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர். காமத்தை, அதன் இயல்பு நோக்கி ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை என மூவகையினதாக அவர்கள் பகுத்தனர். இருவர் மாட்டும் ஒத்த வேட்கை அமையப் பெறுமாயின், அது ஐந்திணைக் காமம் எனப் போற்றப்படும், இது நிகழும் இடத்தைப் பொறுத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைப்படும். 'ஐந்திணை யுடையது அன்புடைக் காமம்' என்றார் நாற்கவிராச நம்பி - இருவர்க்கும் ஒரே நேரத்தே மற்றவர்மேல் காமம் அமைதலின் இது அன்புக் குறைபாடற்ற முழுமையான ஓர் ஒழுக்கமாகும். இக்கருத்துப் பற்றி 'அன்பினைக்திணை' என இது சிறப்பித்துக் கூறப்படும்.

கைக்கிளை ஐந்திணை போல் அன்பு முழுமை பெற்ற ஒழுக்கமன்று. அது அன்புக் குறைபாடுடையது. இருபாலாரில் ஒருவர் மற்றவர்மேல், அவர் இணக்கம் இன்றிக் காதல் கொள்ளும் ஒழுக்கமே கைக்கிளை யாகும். இதனால், இதனை ஒருதலைக் காமம் என்றனர் நம் செந்தமிழ்ச் சான்றோர். 'கைக்கிளை யுடையது ஒருதலைக் காமம்' என்று நம்பியப்பொருள் சொல்லும். தலைவன், தலைவி என்னும் இருவரில் ஒருவரிடத்து மட்டும் எழும் வேட்கை கைக்கிளைக் காமமாகும். கைக்கிளை என்பதற்கு ஒருபக்க உறவு என்பது பொருளாகும்.
 

'பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்' ஆகும். தலைவன் தலைவியைப் பொருந்தா முறையிற் காமுறுவதும், தலைவி தலைவனைப் பொருந்தா முறையிற் காமுறுவதும், இருவரும் பொருந்தா முறையிற் பிறரைக் காமுறுவதும் பெருந்திணையாகும். ஆண்மை, பெண்மை, அறம், அன்பு, சமூகக்கட்டுப்பாடு, ஒழுக்கம், வாழ்க்கைமுறை முதலியவற்றுக்கு மாறான காமம் சார்ந்த நடத்தைகள் பெருந்திணைக்குள் அடங்குகின்றன.

 

 'ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்

 தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்

 மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்

 செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே'

                                                                                    - (அக- 54)

 

என்பது தொல்காப்பியம்.
 

மடலூர்தல், இளமை தீர்ந்த நிலையிலும் காமவேட்கை உடையவராதல், காமத்தினின்று தெளிவு பெற முடியாது அறிவழிந்த குணம் உடையராதல், மிக்க காமம் காரணமாக உடலாலும் உள்ளத்தாலும் சொல்லாலும் எதிர்ப்படுவோரை வல்லுறவு கொள்ளல் என்னும் நான்கும் பெருந்திணைக் குறிப்புக்களாம் என மேலை விதி சொல்கிறது.
 

தொல்காப்பியம் கூறும் இப்பெருந்திணைக் குறிப்புக்களை புறப்பொருள் வெண்பாமாலை முப்பத்தாறு துறைகளாகப் பிரித்துக் கூறும்.
 

புறப்பொருள் வெண்பா மாலை, தொல்காப்பியம், நம்பியகப் பொருள் முதலிய நூல்கள் கூறும் பெருந்திணைக் குறிப்புக்களையும் அவற்றுக்கான எடுத்துக்காட்டுப் பாடல்களையும், ஆந்திர நாட்டு அகநானூறு எனப் போற்றப்படும் 'காதா சப்த சதி' நூற் கருத்துக்களுடன் ஒப்பிட்டு விளங்கிக் கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
 

அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை முதலிய அகத்திணை நூல்களின் பாடல்கள் ஆக்கப்பட்ட அதே காலத்தில், ஆந்திர நாட்டில் பிராகிருத மொழியிற் பல்வேறு புலவர்களால் ஆக்கப்பட்டு, பின்னொரு காலத்தில் தொகுக்கப்பட்ட எழுநூறு அகத்திணைப் பாடல்களைக் கொண்டதே கதா சப்த சதி.
 

பாடலாசிரியர்களோ, உரையாசிரியர்களோ அவற்றிற்குத் திணை, துறை வகுத்தார் அல்லராயினும், அந்நூலை ஆந்திர நாட்டு அகநானூறு என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்த பேராசிரியர் இரா.மதிவாணன் அவர்கள் தமிழ் அகத்துறைப் பாடல்களையொட்டி அவற்றிற்குத் திணை துறை வகுத்துத் தந்துள்ளார். பன்மொழிப் புலவர் மு.கு. சகந்நாதராசா அவர்களின் அகவற் பாவினாலான மொழிபெயர்ப்பு ஒன்றும் இதற்கு உளது. இக்கட்டுரையிற் பேராசிரியர் மதிவாணன் அவர்களின் மொழிபெயர்ப்பே எடுத்தாளப்படுகிறது.
 

இனிச் சில பெருந்திணைத் துறைகளை நோக்குவோம். இவற்றுள் மடலூர்தல் ஆண்களுக்கானது. தன் காதல் நிறைவேறப் பெறாத தலைவன் பனங்கருக்காற் குதிரையும், வண்டியும் செய்து, உடம்பு முழுவதும் நீறுபூசி, எலும்பு எருக்கம்பூ முதலியவற்றை மாலையாய்த் தரித்துக்கொண்டு அக்குதிரையில் ஏறி இருக்க, ஊரார் இழுத்துச் செல்ல வீதிதோறும் வந்து, தலைவியிடம் காதலில் தான் தோற்றுவிட்டதைப் பலருமறியுமாறு செய்வான். இது மடலூரதர் எனப்படும். இத்தகைய செய்கை தலைவன் ஆண்மைக்குக் குறை பயத்தலின் பொருந்தாக் காமத்துள் வைக்கப்படுவதாயிற்று.
 

தலைவியின் பாற் கொண்டிருக்கும் காமம் எல்லை கடத்தலான் மயக்க நிலையின் நின்று தலைவன் பேசும் மொழிகள் ஆண்பாற் கிளவி எனப்படும்.

 

 'காமுறு காமம் தலை பரிந்தேங்கி

 ஏமுற் றிருந்த இறைவன் உரைத்தன்று'

                           (பு.வெ.மா. பெருந்திணை – 28)

 

இவை அறிவு கடந்த பிதற்றல் நிலையிற் பேசப்படுபவை ஆதலின் பெருந்திணை ஆயின.

தலைவன் தான் கூடிய மகளிர்க்குப் பிழையாது நடவாது அறம் பிறழ்ந்து ஒழுகுதல் 'குற்றிசை' எனப்படும். பிறமகளிரை நயக்குமாறு தலைவன் நெஞ்சத்தே எழும் சிறுமை மிக்க வேட்கை குறுங்கலி ஆகும். இவை இரண்டையும் பு.வெ.மாலை பொருந்தாக் காமம் எனக் கூறும்.
 

வேட்கை முந்துறுத்தல் பெண்களுக்கானது. மகளிர் தம் வேட்கையை முதலில் வெளிப்படுத்தல் இயல்பு அன்று. ஆடவர் தம் வேட்கையை வெளிப்படுத்திய பின் அதற்கான தம் உடன்பாட்டைத் தெரிவிப்பதே முறையாகும். இதற்கு மாறாக மகளிர் தம் வேட்கையை முந்துறுத்தல் பெண்மைக்கு அழகன்று ஆதலின் அது பெருந்திணையின் பாற்படுவதாயிற்று.
 

தலைவனைக் கூடிய தலைவி மிக்க காமத்தால் அதனைக் கைவிட இயலாதவளாய் இருப்பது காதலிற் களித்தல் என்னும் துறையாகும்.
 

'மைவரை நாடன் மார்பகம் பொருந்திக் கைவிடல் அறியாக் காதலிற் களித்தன்று'

இரவுத் தலைச் சேறலும் பெண்களுக்கானதே. எடுத்துக்காட்டுப் பாடலுடன், அதுபற்றிப் பார்ப்போம்.
 

பணையாய் அறைமுழங்கும் பாயருவி நாடன்

பிணையார மார்பம் பிணையத் - துணையாய்க்

கழிகாமம் உய்ப்பக் கணையிருட்கண் செல்வேன்

வுழிகாண மின்னுக வான்

                                                                     (பு.வெ.மாலை – 311)

 

'அருவி பாயும் நாட்டினையுடைய தலைவனின் மாலை அணிந்த மார்பினைத் தழுவுதற்கு, மிக்க காமத்தின் வாய்ப்பட்டவளாய்க் கரிய இருட்டின்கண் செல்கின்றேன். வழியைத் தெரிந்து தொடர்ந்து நடத்தற்கு உதவியாக மேகம் மின்னுவதாக'

தலைவன் தலைவியைத் தேடிச் செல்லுதலே முறையாகும். அப்படியிருக்கத் தலைவி தலைவனைத் தேடிச் செல்வது பெண்மைக்கு மாறானதாகும். இதனாற்றான் இத்தகைய இரவுத் தலைச் சேறல்களைப் பொருந்தாக் காமம் என்னும் பெருந்திணைக்குள் அடக்கினர் தமிழ்ச் சான்றோர்.
 

'பெண்ணே! காதலனைத் தேடி

நள்ளிரவில் மெல்ல நடந்து செல்வதைத் தவிர்

நள்ளரவில் ஏற்றப்படும் சிறுவிளக்கு

தொலைவில் இருப்பவர்களுக்குக் கூடத் தெரிந்துவிடுவது போல

ஓளிவிட்டுத் திகழும் உன் முகப்பொலிவும்

பொன்மேனிக் கட்டழகும்

உன்னைக் காட்டிக் கொடுத்துவிடும்'

                      (கா..சதி 5 – 15)

 

இரண்டாயிரம் ஆண்டின் முந்திய ஆந்திர நாட்டுச் சான்றோரும் இரவுத் தலைச் சேறலைப் பொருந்தாக் காமமாகவே கொண்டனர் என்பதற்கு மேலைப் பாடலே சான்றாகும்.

 

'தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்' என்பதற்குக் 'காம மயக்கம் காரணமாகத் தெளிவுபெற முடியாது அறிவிழந்து நிற்கும் தன்மை' எனப் பொருள் கூறுவர் உரையாசிரியர். கருப்பஞ்சாறு பிழியும் இயந்திரத்தில் ஏற்பட்ட பிழையைத் திருத்துவதற்காகச் செப்பக்காரன் (ஆநஉhni) ஒருவன் வந்தான். அவன்மேல் அவ்வில்லாளுக்குக் காமம் பிறந்தது.

 

 'இயந்திரச் செப்பக் காரனே

 வேனீர் வேண்டு மென்கிறாய்

 நான் எதிர்பார்த்தது போல

 நீ கரும்பாலை இயந்திரத்தை

 முறையாகச் செப்பம் செய்யவில்லை

 அது நன்கு இயங்கவில்லை

 உனக்குக் காதற் றிறமும் தெரியவில்லை

 கருப்பஞ்சாறு இல்லாமல்

 வெல்லக்கட்டி செய்ய இயலுமா?'                  
                                                                      (கா..சதி 6: 54)

 

தன் முறை தவறிய காமத்தை சிறிது நேரடியாகவும் பெரிதும் பிறிது மொழிதலாகவும் அவள் சொல்கிறாள்.

 

வீட்டுத் தலைவி ஒருத்தியிடம் கள்ளக் காதலன் அடிக்கடி வந்து போயினான். பழக்க மிகுதியால் அவள் வளர்த்த நாய் அவனைக் கண்டால் வாலாட்டி வரவேற்கும். தொழில் நிமித்தம் வெளி நின்று வரும் அவள் கணவனைக் கண்டாற் குரைத்துக், கடிக்கப் பாயும்.

 

 'அவள் வளர்த்துள்ள நாய்

 கள்ளக் காதலன் வந்தால்

 வரவேற்கிறது: வாலைக் குழைக்கிறது

 கணவனைக் கண்டாற்

 குரைக்கிறது: கடிக்கப் பாய்கிறது'

 

 இவ்வாறு, கவிக்கூற்றாகக் கதா சப்த கதி அவள் பொருந்தாக் காமத்தைப் பதிவு செய்திருக்கிறது.

 

 செல்வம் மிக்கவனைக் குலமகளிர் விரும்பிய பொருந்தாக் காமத்தைப் பிறிது மொழிதல் அணி விளங்க கதா சப்த சதி இப்படிச் சொல்கிறது.

 

 'மாம்பழம் தின்ற கிளையைப் பின்தொடர்ந்து

 தேனீக்கள் பறக்கின்றன'

 

ஒரு வீட்டில் வதிந்த மாமியும் மருமகளும் கள்ளக் காதலர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். ஒருநாள் இருவரும் காடு சென்று தத்தம் கள்ளக் காதலர்களுடன் புணர்ச்சி நிகழ்த்திவிட்டுத் திரும்பினர். மாமி தன் தகாத உறவை மறைத்தவளாய், மருமகளின் பொருந்தா உறவை அவளுக்குச் சுட்டிக் காட்டினாள். அதற்கு மருமகள்,

 

 'மாமி என் கூந்தலில் மூங்கிற் சருகு

 ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறாய்.

 உன் முதுகில் வெண்புழுதி வந்தது எப்படி

 

 என்று கேட்க, எனக்குத் தெரியாதா? என்று பதிலடி கொடுத்தாள்.

 

 அன்றைய ஆந்திரக் கன்னியர் தமிழ்க் கன்னியர் போலவே கற்பை உயிரினும் மேலாக மதித்தனர். கொண்டானை அன்றிப் பிறரிடம் அவர் தம்மை இழந்தாரல்லர். கற்பென்னும் திண்மை பெண்மையின் அணிகலமாய்ப் போற்றப்பட்டது. திருமணமாகுமுன்னே கற்பிழந்த கன்னி ஒருத்தி பெற்ற பரிகசிப்பைக் கதா சப்த சதி சொல்வதைப் பாருங்கள்.

 

 கன்னிப் பெண் கற்பிழந்தாள் என்பதைக்

 காணக் கூசிய பறவைகள்

 கூட்டமாக எழுந்து என ஆரவாரித்து

 எள்ளி நகையாடின.

 கை தட்டிச் சிரிப்பது போல்

 இறகுகளைப் படபடவென்று

 அடித்துக்கொண்டு பறந்தன.

                                                      (கா..சதி 3: 18)

 

 தம் துணையன்றி வேறு துணையுடன் உறவு கொள்ளா இயல்பினவான பறவைகள் இயல்பாகச் செய்யும் ஆரவாரத்தை நகையாடியதாகவும், இறகுகளை அடித்துப் பறப்பதைக் கைதட்டிச் சிரித்ததாகவும் தற்குறிப்பேற்ற அணி விளங்கப் புலவர் கூறும் நயம் அற்புதமானது.

 

அக்காலத்தில் உழவைத் தொடங்கும்போது சுமங்கலிப் பெண்கள் ஏருக்குக் குங்குமப் பொட்டிடும் வழக்கம் இருந்தது. வயலிடத்தே வைத்துப் பொருந்தாக் காமம் மேற்கொண்ட சுமங்கலி ஒருத்தியை அடையாளம் காட்டுகிறது கீழ்வரும் பாடல்.

 

 பருத்தி நிலத்திற்

 பொன்னேர் கட்டும்போது

 தன்னெஞ்சே தன்னைச் சுடுவதால்

 ஒழுக்கம் தவறிய பெண்ணின் கை

 கலப்பைக்குக் குங்குமம் இட நடுங்குகிறது

                                                                           (கா..சதி 2:65)

 

ஆடவர் மேற்கொள்ளும் பொருந்ததாக் காமத்தைக் காட்சிகளாய்க் காட்டுகின்றன கீழ்வரும் இரண்டு பாடல்களும்.
 

 இறந்தவனின் மனைவியர்

 உடன்கட்டை ஏறுவதற்காக

 அதற்குரிய உடையணிந்து வந்து நின்றனர்.

 இத்துயரக் காட்சியைக் கண்ட

 அனைவர் கண்களும் கலங்குகின்றன.

 ஊர்த் தலைவனோ அவ்விதவையரின்

 அழகையும் இளமையையும்

 உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றான்

                                                                          (கா..சதி 5:49)

 

 கணவனுடன் பிறந்தோன்

 கணவனில்லா நேரம்

 தகாத பார்வை பார்க்கிறான்

 குலக்கொடியாளின்

 உடலும் உள்ளமும் கூசுகிறது.

 தன்வள மனைச் சுவர்களில்

 தீட்டப்பட்டிருந்த

 இராமகாதை ஓவியத்தின்

 இலக்குவனைக் காட்டினாள் அவள்

 அண்ணி சீதையை அன்னையாய்க் கருதிய

 இலக்குவன் உருக்கண்டு

 அவன் தலை கவிழ்ந்தான்

                                                               (கா..சதி 1:34)

 

மேற்காட்டியவாறாக, ஆடவர், அரிவையர் என்னும் இருபாலார் அகத்தில் எழும் தவறான காம உணர்வுகளைக் காதா சப்த சதி பெருந்திணைக்குள் அடக்குகிறது. 'வேப்பம் பழத்தைக் காக்கைகள்தானே தின்னும் (கா..சதி 3:15) என்னும் கவிதை அடி பரத்தமையைப் பழிக்கின்றது. தீய வழியிற் சேர்த்து அன்பில்லாத உறவுக்குக் கூலியாக ஆடவர் கொடுக்கும் பணம் வேப்பம் பழமென்றும் அதைப் பெற்றுக்கொள்ளும் பரத்தையர் காக்கைகளென்றும் இங்கே குறிக்கப்படுகின்றனர். சங்க இலக்கியங்கள் பரத்தையர் உறவைப்பொருந்;தாக் காமமெனக் கூறியதோ கண்டித்ததோ இல்லை. தலைவனுக்குரிய இயல்பான ஒழுக்கம் அது என்றவாறே அவை கூறா நிற்கும். காதா சப்த சதி பரத்தையர் உறவைப் பழிப்பது கொண்டு அந்நாளைய ஆந்திர மக்கள் காமம் சார்ந்த நடத்தைகளில் தமிழ் மக்களினும் இறுக்கமான வரைமுறைகளைக் கொண்டிருந்தனர் எனக் கருத இடமுண்டாகிறது.
 

இதுகாறும் கூறியவற்றால் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திராவிட இனச் சான்றோர்கள் காமம் சார்ந்த ஒழுங்கீனங்களையே பெருந்திணை எனக் கொண்டனர் என்பது தெளிவாகிறது. தூய்மையுடன் பேணப்பட வேண்டிய மானிடக் காதல் சான்றோர் வகுத்த சமுதாயக் கட்டுப்பாடுகளைக் கடக்குங்கால், அவை பெருந்திணைக்குள் சேர்கின்றன என்பதைப் புலவர் பெருமக்கள் படைத்துத் தந்துள்ள பாக்கள் காட்டுகின்றன. உடலினால் மட்டுமன்றி, உள்ளத்தாலும் வாக்காலும் தவறிழைப்போர் கூட பெருந்திணைக்குள் அடக்கப்படும் போக்கு, அந்நாள் திராவிட இனம் கைக்கொண்டிருந்த பண்பாட்டு விழுமியங்களுக்கு ஓர் உரைகல்லன்றோ!.

 

 

 www.tamilauthors.com