ஈமத்தாழி

முனைவர்.இரா.குணசீலன


(ஈமத்தாழி – இறந்தவர்களை வைத்து அடக்கம் செய்யும் மட்கலம்.)

மிழர் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று ஈமத்தாழி. பழங்கால மனிதன் விலங்குகளைப் போல் வாழ்ந்தான். பின் இனக்குழுவாகவும், நிலவுடைமைச் சமூக வாழ்வும் வாழ்ந்து பண்பாட்டு வளர்ச்சி பெற்றான்.  இப்பண்பாட்டுக்கூறுகளைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.

இனக்குழுவாக வாழ்ந்தபோது வயது முதிர்ந்தவர்களைத் தம்முடன் வேட்டையாட அழைத்துச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அந்நிலைகளில் அம்முதியவர்களைப் பெரிய தாழிகளில் வைத்து அவர்களுக்குத் தேவையான பொருட்களையும் வைத்துச் சென்றிடுவர் எனப் பண்பாட்டு மானுடவியல் கூறுகிறது.

சங்கப்பாடல்கள் பலற்றிலும் ஈமத்தாழி பற்றிய குறிப்பு காணப்படுகிறது.


இறந்த மனிதன் மீண்டும் கருவுற்றுப் பிறக்கிறான் எனற நம்பிக்கைப் பழந்தமிழரிடையே இருந்திருக்கிறது. அதனால் அவன் மறுபிறப்புக்குத் தேவையான எலும்புகளையும், அவன் பயன்படுத்திய பொருட்களையும் அத்தாழிகளில் இட்டுப் புதைத்தனர். மேலும் அந்த தாழிகள் தாயின் கருவரைபோலவே வடிவமைக்கப்பட்டது குறிப்பித்தக்கது. கிடைத்த ஈமத்தாழிகளின் கழுத்துப்பகுதியில் தொப்புள்கொடிபோன்ற வடிவமைப்பு அக்கால மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.


சான்று – 1.

(இறந்தவரை அடக்கும் தாழி அவரது பெருமைக்கு ஏற்ப மிகப் பெரிதாக இருக்கவேண்டும் என்பது சங்கத்தமிழர் மரபு. )

ஐயூர் முடவனார் என்னும் புலவர், தம் அரசன் இறந்துவிட்டான், அவன் புகழுக்கு ஏற்ப பெரிய தாழியை உன்னால் செய்யமுடியுமா? என்று கேட்பதாக புறநானூற்றுப் பாடல் ஒன்று அமைந்துள்ளது.

மண்ணில் கலங்கள் செய்யும் குயவனே....!
இருள் திரண்டு ஓரிடத்தே நின்றது போன்ற ஆகாயத்தில் சென்று தங்கும் சூளை ஒத்த இடமகன்ற பழைய ஊரில் கலங்களைச் செய்கின்ற குயவனே.......!
நீ இரங்கத்தக்கவன்....!
நீ எவ்வளவு வருந்தப் போகிறாய்............?

பெரிய போர்ப்படையை உடையவன்,
அறிவுடைய மாந்தர்களிடம் புகழ் பெற்றவன்,
சூரியனைப் போல தலைமைப் பண்புடையவன்,
செம்பியன் மரபினன்,
கொடிகள் அசையும் யானைகளுக்குச் சொந்தக்காரன்,
எனப் பல்வேறு பெருமைகளையும் கொண்டவன் சோழன் அத்தகைய அரசன் இறந்துவிட்டான்.......
அவன் புகழுக்கு இணையான பெரிய தாழியைச் செய்ய நீ எங்கு போவாய் ..........

உன்னைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது........
என்கிறார் புலவர்.
இப்பாடல் வாயிலாக சங்க காலத்தில் இறந்தவரின் புகழுக்கு இணையான பெரிய தாழியை செய்து அவரைப் புதைக்கவேண்டும் என்ற மரபு புலனாகிறது.
இதனை,


'கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை,
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
அளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்?
நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை,
விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை அயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப்,பெருமலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ,நினக்கே?'


                                                 புறநானூறு 228.என்னும் பாடல் இயம்புகிறது.




சான்று – 2

பெண் ஒருத்தி தன் கணவனுடன் சுரத்திடையே வந்துகொண்டிருந்தாள். அப்போது உண்டாகிய போரில் விழுப்புண் பட்ட கணவன் இறந்து போனான். அதனால் தனிமையுற்ற தலைவி ஊர்க்குயவனிடம் பேசுவதாக இப்பாடல் உள்ளது.

கலம் செய்யும் குயவனே.......!
பெரிய இடத்தைக் கொண்ட தொன்மையான இவ்வூரில் கலம்
செய்யும் குயவனே.......!

வண்டிச் சக்கரத்தில் உள்ள பல்லியைப் போல நான் தலைவனுடன் இன்ப, துன்பங்களில் ஒன்றாகவே வாழ்ந்துவிட்டேன். இப்போது அவன் மட்டும் என்னை நீங்கி இறந்து போனான். நான் மட்டும் தனியாக வாழ விரும்பவில்லை.

அதனால் நானும் அவனோடு இருப்பது போன்ற மிகப் பெரிய தாழியைச் செய்வாயாக....
என்கிறாள் தலைவி..
தன் கணவன் இறந்துவிட்டாலும் தானும் அவனோடு இறந்துவிடவேண்டும் என்ற தலைவியின் அன்போடு
இறந்தவரைத் தாழிகளில் வைத்துப் புதைக்க வேண்டும் என்ற தமிழர் மரபும் இப்பாடல் வழிப் புலனாகிறது.இதனை

'கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!'


                                              (புறநானூறு -256)என்னும் பாடல் உணர்த்துகிறது.

இப்பாடல்கள் வழியாகப் பழந்தமிழர் இறந்தவர்களை பெரிய ஈமத்தாழிகளில் வைத்துப் புதைக்கும் மரபினை அறியமுடிகிறது.



gunathamizh@gmail.com