பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்

 

டல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சென்னையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார்.

 

எஸ்.எஸ்.ஆர். என அழைக்கப்பட்ட சேடப்பட்டி சூரியநாராயண ராஜேந்திரன் 1928-இல் பிறந்தார். திரைப்படங்களில் தெளிவான உச்சரிப்புடன் வசனங்களைப் பேசி ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த எஸ்.எஸ்.ஆர். 6 வயதில் இருந்தே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர். பாய்ஸ், டி.கே.எஸ்.சகோரர்களின் நாடகக் குழு உள்ளிட்டவற்றில் ஏராளமான நாடகங்களில் நடித்தவர். பின்னர், திரையுலகில் நுழைந்தார்.
 

சிவாஜிகணேசனின் முதல் படமான "பராசக்தி'தான் இவருக்கும் முதல் படம். அந்தப் படத்தில் சிவாஜிக்கு இணையாக அவரது நடிப்பும் இணைத்து பேசப்பட்டது. அடுத்தடுத்து "முதலாளி', "குமுதம்', "ரத்தக்கண்ணீர்', "கை கொடுத்த தெய்வம்', "குலதெய்வம்', "தை பிறந்தால் வழிபிறக்கும்', "காஞ்சித்தலைவன்', "ராஜா தேசிங்கு', "ரங்கூன் ராதா', "பூம்புகார்', "சிவகங்கை சீமை' என பல படங்கள் அவருக்குப் புகழைத் தந்தன.
 

கடந்த 2003-ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்த "தம்' படத்திலும் எஸ்.எஸ்.ஆர். தனது முத்திரையைப் பதித்திந்தார். இதுவே அவரது கடைசிப் படம்.
 

எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்த படங்களுள் - மருது சகோதரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு உருவான - "சிவகங்கை சீமை'யும் ஒன்று. மருது சகோதரர்களின் 213-ஆவது நினைவுதினமான வெள்ளிக்கிழமையன்றே (அக்.24) எஸ்.எஸ்.ஆரும் மறைந்தது குறிப்பிடத்தக்கது.
 

லட்சிய நடிகர்: பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடித்த எஸ்.எஸ்.ஆர். அதை கடைசி வரை பின்பற்றி வந்தார். தான் கொண்ட கொள்கைகளுக்கு மாறாக அவர் படங்களில்கூட நடித்தது இல்லை.
 

"சம்பூர்ண ராமாயணம்' படத்தில் பரதன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, தனது கடவுள் மறுப்புக் கொள்கைக்கு அது மாறானது எனக் கூறி அந்த வாய்ப்பை ஏற்க மறுத்தார். பின்னர், அந்த வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். பெரியார், அண்ணா ஆகியோரால் லட்சிய நடிகர் என்று அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆருக்கு பின்னாளில் அந்தப் பெயரே அடைமொழியாக நிலைத்து நின்றது.
 

முதல் எம்.எல்..: அண்ணாவால் ஈர்க்கப்பட்ட எஸ்.எஸ்.ஆர். திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 1962-ஆம் ஆண்டு அவர் தமிழக சட்டப் பேரவைக்கு திமுக சார்பில் தேனியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தியாவிலேயே நடிகராக இருந்து சட்டப்பேரவைக்கு எம்.எல்..வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை எஸ்.எஸ்.ஆர். பெற்றார். அதன் பிறகு, மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டார்.

அதிமுக தொடங்கப்பட்ட பிறகு, அந்தக் கட்சியில் 1981-ஆம் ஆண்டில் இணைந்தார். ஆண்டிபட்டி பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகியே இருந்தார்.
 

வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்: திறமையான நடிகர், எம்.எல்.., எம்.பி., என பன்முகங்களைக் கொண்டிருந்த எஸ்.எஸ்.ஆர்., தனது வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுதும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தார். அது இப்போது இறுதி வடிவம் பெற்றுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 

மறைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு 3 மனைவிகள், 6 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

 

 

 

 

 www.tamilauthors.com