திருப்பூர்  இலக்கிய சந்திப்பு (05-06-2012)


"மாற்றுக் கல்விக்கான நூல்களை ஆசிரியர்கள் வாசிக்க வேண்டும்'


திருப்பூர், ஜூன்
5: மாற்றுக் கல்விக்கான நூல்களை ஆசிரியர்கள் வாசிக்க வேண்டும் என்று திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுக் கல்விக்கான நூல்கள் குறித்த அறிமுகக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்ட கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஈழத்து எழுத்தாளர் அகில் எழுதிய கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைத் தொகுப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது.

எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், கனவு இலக்கிய வட்ட வழக்குரைஞர் ரவி ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.

போர் பாதிப்புகள், இடம்பெயர்வுத் துயரங்கள் ஒருபுறம் இருந்தாலும், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வேர்கள் அவர்களது தாயகத்தில்தான் ஊடுருவி இருக்கும் என்று எழுத்தாளர் அகில் தனது ஏற்புரையில் குறிப்பிட்டார்.

பாவ்லோ ஃபிரைரே யின் எதார்த்தத்தை வாசித்தலும், எழுதுதலும், கிருஷ்ணகுமார் எழுதிய முரண்பாடுகளில் இருந்து கற்றல் ஆகிய நூல்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் மணி, இதுபோன்ற கூட்டம் தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பூரில் நடப்பதாகக் கூறினார்.

மாற்றுக் கல்வி நூல்களை ஆசிரியர்கள் வாசிக்கும் சூழல் ஏற்படும்போதுதான், சமூக மாற்றத்திற்கான விதைகள் விதைக்கப்படும் என்றார் அவர்.

இதில் ஆத்தூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மு. முருகேசன், சமூக உரிமைகளுக்கான ஆசிரியர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி, சமூக நீதிக்கான வழக்குரைஞர்கள் அமைப்பின் உமர்கயாம், தாய்த்தமிழ் கல்விப் பணி மருத்துவர் முத்துசாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர் சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

நன்றி:தினமணி
 

 

 

 www.tamilauthors.com