சங்ககால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா

ம்பிக்கை மனித சமுதாயத்தின் ஆணிவேராக உள்ளது. இந்நம்பிக்கை தொன்றுதொட்டு மாந்தரினுள் காணப்படும் ஒன்றாகும். நம்பிக்கையை, சமய நம்பிக்கை, மூடநம்பிக்கை எனப் பலவாறாகப் பகுப்பர். இலக்கியங்கள் அனைத்தும் அவ்வக் காலத்து நம்பிக்கையாகவோ அல்லது வாழ்வியல் நம்பிக்கையாகவோ பெரும்பான்மையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் வாழ்வியல் நம்பிக்கைகளுள் ஒன்றாக சமய நம்பிக்கையும் இடம்பெறுகிறது. பத்துப்பாட்டு இலக்கியங்கள் செவ்வியல் காலத்து மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகளை எடுத்துரைக்கின்றன. அவற்றுள் எட்டாவது பாட்டாக அமைந்திருப்பது குறிஞ்சிப்பாட்டாகும். இது ஆசிரியப்பாவால் ஆன 261 அடிகளைக் கொண்டுள்ளது.

இந்நூல்
குறிஞ்சிநில மக்களின் பண்பாட்டை நன்கு விளக்குகிறது. இதன் ஆசிரியரான கபிலர் பாரியின் நண்பர். பாரிக்கும், கபிலருக்கும், இருந்த நட்பினைப் புறநானூற்றுப் பாடல்கள் புலப்படுத்துகின்றன. கபிலர் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்ததால் குறிஞ்சிப் பாடல்களையே அதிகம் பாடியுள்ளார். மலை, மலைவளம், மலையக மக்கள் ஆகியோரைப் பற்றிய பல செய்திகள் இவரது பாடல்களில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிஞ்சிப்பாட்டு தனி மனிதனைக் குறித்துப் பாடப்பட்டதன்று.

குறிஞ்சித்தலைவனைப்
பற்றி விளக்கமாகப் பாடவேண்டும் என்ற பேர்ஆவலுடன் கபிலர் தாமே விரும்பிப் பாடிய பாடலாகும். இந்நூல் குறிஞ்சி நில மக்களின் வாழ்க்கையை கற்போர் உள்ளம் களிகொள்ளும் வகையில் கதைபோன்று கூறிச்செல்கின்றது. பொருளறிந்து படிப்போர் இதனை நன்கு உணரலாம். குறிஞ்சிப் பாட்டில் ஆரிய அரசனைப் பற்றியோ பிரகதத்தனைப் குறித்தோ யாதொரு குறிப்பும் காணப்படவில்லை. இவ்வரசனனைப் பற்றிய வரலாறும் இந்நூலில் ஒன்றும் இல்லை. “ஆரிய அரசன் பிரகதத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டிற்கு முற்றிற்றுஎன்று நச்சினார்கினியர் உரையின் முடிவில் காணப்படுகின்றது. இந்நூல் ஆரிய அரசன் பிரகதத்தன் மீது பாடப்பட்டது என்பதற்கு இதனைத் தவிர பிற சான்றுகளும் இல்லைஎன்பதே உண்மை. ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன் எனும் அரசன் பெயர் குறுந்தொகையில் காணப்படுகின்றது. குறுந்தொகையில்
184 ஆவது பாடல் இவ்வரசனால் பாடப்பட்டது.

இவ்வரசன்
தமிழ்ப்புலவனாக விளங்கியுள்ளான் என்பதற்கு மேற்குறித்தவையே சான்றுகளாகும். குறிஞ்சிநிலத் தலைவியைப் பற்றி செவிலித்தாயிடம் தலைவியின் தோழியானவள் கூறுவது போன்று இக்குறிஞ்சிப்பாட்டு அமைக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி நிலமக்களின் பல்வேறுவிதமான சமயஞ்சார்ந்த வாழ்வியல் நம்பிக்கைகள் இந்நூலில் காணப்படுவது நோக்கத்தக்கது. கடவுள் நம்பிக்கை பண்டைக் காலத்தில் தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை மிகுந்து காணப்பட்டது. தங்களுக்கு ஏற்பட்ட நோய் நீங்குவதற்கு கடவுளிடம் மக்கள் வேண்டினர். மேலும் சொன்ன சொல் தவறமாட்டேன் என்று கடவுளின் முன்னர் ஆணையிடுவர். மலர்களையும், நறுமணப்பொருள்களையும் கொண்டு மக்கள் கடவுளரை வழிபட்டனர். இதனைபரவியும், தொழுதும், வரவு மலர்தூவியும் வேறுபல் உருவின் கடவுள் பேணி. நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி” (குறிஞ்சிப்பாட்டு5-8) என்று கபிலர் குறிப்பிடுகிறார். இறைவனிடம் வேண்டியும், தொழுதும் பலமலர்களை இறைவனுக்குப் போட்டும், பல்வேறு உருவங்களுடன் கடவுளை வேண்டுகிறாய். தூபம் காட்டியும் நறுமணப்பொருள்களைப் போட்டும் துன்பமடைந்து இவள் நோய் இன்னதென்று அறியாது திகைக்கின்றாய். என தோழி செவிலித் தாயிடம் கேட்பதிலிருந்து கடவுளிடம் முன் நின்று ஆணையிட்டுக் கூறும் வழக்கம் இருந்ததை, “மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி அம்தீம் தண்ணீர் குடித்தலின”; (குறுந்தொகை 209-21) என்ற பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.

காதல் கொண்ட தலைவன் காதலியிடம்நான் உன்னை மணந்து இல்லறம் நடத்துவேன்என்று உறுதி கூறுகிறான். அப்பொழுது மலையின் மீது உள்ள கடவுளை வாழ்த்தி வணங்குகின்றான். பின்னர்மலையிலிருந்து வரும் இனிய அருவிநீரை அள்ளிப் பருகினான்என்று இவ்வரிகளில் மக்களின் சமயம் சார்ந்த வாழ்க்கை குறிப்பிடப்பட்டள்ளது. மேலும், கடவுள் ஒருவரே. அவரே பல உருவங்களுடன் பல்வேறுவிதமான கடவுளர்களாக் காட்சித்தருகிறார் என்ற செய்தியானது, “வேறு பல் உருவின் கடவுள்” (குறிஞ்சி
.6) எனக் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறு
பிறப்பு உயிர்களுக்கு மறு பிறப்பு உண்டு. இவ்வுலகத்தைத் தவிர இன்ப துன்பங்களை அனுபவிக்கக் கூடிய வேறு உலகங்களும் உண்டு. இத்தகைய நம்பிக்கை பழங்காலத் தமிழர்களிடம் இருந்தது. தலைவன் தனக்கு வாக்களித்தபடி மணந்துகொள்ள வராததைக் கண்ட தலைவிஇப்பொழுது நம்மை அவர் மணத்து கொள்ளாவிட்டாலும் மறு உலகத்திலாவது அவரைக் கூடி இன்பம் அடையும் வாழ்க்கை கிடைப்பதாகஎன்று கூறி வருந்துகிறாள். இதை கபிலர் கூறுவதன், மூலம் மறுபிறப்புக் கொள்ளையை வலியுறுத்துகின்றனர். அவர் முறைப்படி என்னை மணந்து கொள்ள வராவிட்டாலும் என்மனம் சமாதானம் அடையும்படி இறந்தபின் செல்லும் மறு உலகத்திலாவது அவரோடு இணைபிரியாதிருக்கும் நன்மை கிடைக்கட்டும் என்று கூறி தலைவி கண்கலங்கினாள்@ சோர்வடைந்தாள்@ தாங்க இயலாத துன்பத்துடன் தேம்பி அழுதாள.; இதனைஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என மான் அமர் நோக்கம் கலங்கிக் கையற்று ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்” (குறிஞ்சிப்பாட்டு 23-26) என்ற வரிகளில் கபிலர் எடுத்துக்காட்டுவது நோக்கத்தக்கது. ஒழுக்கத்தின் மீது நம்பிக்கை ஒழுக்கத்துடன் வாழவேண்டும் அதுவே உண்மையான சிறந்த வாழ்க்கையாகும். ஒழுக்கத்திலிருந்து வழுவி வாழும் வாழ்வு இழிவானது. அஃது ஒருவருக்கு அழியாப் பழியையும் இழிவையும் தரும். ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் புகழ் பெறலாம் என்று பண்டையக்கால மக்கள் நம்பினர். நம்பியதோடு மட்டுமல்லாது அவ்வண்ணமே வாழ்ந்தனர். இத்தகைய பண்பாடு சார்ந்த நம்பிக்கையினை, “முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை நோவருங் குயை கலங்கெடிற் புணரும் சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசறக் கழீஇய வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறுகாட்சி ஐயர்க்கும் அந்நிலை எளியவென்னார் தொன்மருங்கு அறிஞர்” (குறிஞ்சிப்பாட்டு 13-18) என, கபிலர் பாடலால் அறியலாம்,அதாவது, முத்து, இரத்தினம், பொன் இவைகளால் இழைக்கப்பட்ட அணிகலன் எவ்வளவு கெட்டுப் போனாலும் மீண்டும் அதனை சீர் செய்து கொள்ளலாம். ஆனால் நல்ல தன்மையும் பெருமையும் நல்ஒழுக்கமும் மாசடைந்துவிட்டால் அந்த மாசினைத் திருத்தி மீண்டும் புகழ்பெற இயலாது. குற்றமற்ற அறிவுள்ள பெரியோர்களாலும் இந்நிலையை அடைய முடியாது என இப்பாடல் வரிகள் ஒழுக்கத்தின் உயர்வை சிறந்த எடுத்துக்காட்டுடன் தெளிவாகக் குறிப்பிடுகிறது. குறிஞ்சிப்பாட்டு அக்கால மக்களின் உன்னத வாழ்க்கையை விளக்கும் அரிய ஓவியம் போன்று அமைந்துள்ளது. ஒழுக்கம் உயிர் போன்றது என்ற அரிய வாழ்வியல் நம்பிக்கைகளும், கபிலரால் காட்சிப்படுத்தப்படுவது இன்புறுதற்குரியதாகும். மேலும் சங்க கால மக்கள் வாழ்வியல் சார்ந்த நம்பிக்கைகளில் ஆணித்தரமாக இருப்பதைக் காணலாம்.

 

 

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-
641 028
பேச:
098424 95241.

 

 

 

 

 www.tamilauthors.com