திண்டுக்கல் மாவட்ட நாட்டுப்புறக் கதைகளில் நம்பிக்கைகள்


முனைவர
் பூ.மு.அன்புசிவா

நாட்டுப்புற மக்களின் வாழ்க்கைக் கூறுகளை உள்ளடக்கியது நாட்டுப்புறவியலாகும். மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே நாட்டுப்புறவியலும் இருக்கிறது எனலாம். நாட்டுப்புறவியல் நாட்டுப்புற மக்களின் எண்ணங்கள், நம்பிக்கைகள், வரலாறுகள், செயல்பாடுகள், பழக்கவழக்கங்கள், சூழல்கள் முதலானவற்றை எடுத்துக் கூறுகின்றது. சமுதாயத்தின் வளர்ச்சியையும் அது காட்டுகிறது.

சமுதாயம் நாட்டுப்புற இலக்கியத்தில் சிறப்பிடம் பெறுகிறது. சமுதாயம் குறித்த செய்திகள், சமுதாய மாற்றம், வளர்ச்சி போன்றவற்றை நாட்டுப்புற இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. எனவே காலந்தோறும் தோன்றும் பல்வேறு மாற்றங்கள் நாட்டுப்புற இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன. உணர்ச்சிகள் நிறைந்த இவ்விலக்கியங்கள் நாட்டுப்புற மக்களின் இன்ப, துன்ப உணர்வுகள், அனுபவங்கள், குற்றங்கள், துடிப்புகள் போன்ற பலவற்றையும் வெளிக் காட்டுகின்றன. இதனால் ஒவ்வொரு காலத்திலும் நடந்த நிகழ்வுகளைப் பின்வரும் பல தலைமுறை மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. தலைமுறை தலைமுறையாக நாட்டுப்புற இலக்கியங்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்று வர இதுவே காரணம். நாட்டுப்புற இலக்கியக் கூறுகளில் ஒன்றான கதை எல்லா இடங்களிலும் சிறப்பு பெறுகிறது.

நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் நாட்டுப்புறக் கதைகளுக்கு இன்றியமையாத இடமுண்டு. மக்களிடையே எளிமையாகத் தகவல்களைக் கொண்டு செல்வதற்கு நாட்டுப்புறக் கதைகள் நல்ல சாதனமாக அமைகின்றன. அவ்வகையில் திண்டுக்கல் வட்டாரத்தில் காணப்படும் நாட்டுப்புற நம்பிக்கைகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

நம்பிக்கைகள் – விளக்கம்

மனித வாழ்க்கைப் பயணம் நம்பிக்கையின் துணை கொண்டே நடைபெறுகிறது. நம்பிக்கை என்பது ஒன்றை உண்மையென ஏற்றுக் கொள்வதாகும்.

'நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு அம்மக்களால் சமுதாயத்தில் பாதுகாக்கப்படுகின்றன. மனிதனின் தன்னல உணர்வும், சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன'.

நாட்டுப்புற மக்களிடையே பல்வேறான நம்பிக்கைகள் பல்கிக் கிடைக்கின்றன. மனிதனுடைய வாழ்வியல் நிகழ்ச்சிகளுக்கும் நம்பிக்கைகள் காரணமாக அமைகின்றன.
இம்மக்களிடம் தெய்வம், கடவுள் வழிபாடு, நேர்த்திக்கடன், கனவு போன்ற நம்பிக்கைகள் காணப்படுகின்றன.

தெய்வம் தொடர்பான நம்பிக்கைகள்

பொதுவாகச் சமுதாயத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகள் உண்மையாகவோ, பொய்யாகவோ இருக்கலாம். ஆனால் கிராமப்புற மக்களைப் பொருத்தமட்டில் தெய்வத்தின் மீது அளவற்ற நம்பிக்கை உடையவர்களாகக் காணப்படுகின்றனர். மேலும் நல்ல காரியத்திற்குச் செல்லும்போது இன்னின்னாரைப் பார்த்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடையே காணப்படுகிறது. வானம் பூமியிலிருந்து வெகுதூரத்தில் இருப்பதற்கும் இவர்களிடம் நம்பிக்கையுண்டு.

ஒரு பாட்டி நெல் விளைவித்தாளம். அப்பொழுது தேவலோகப் பறவைகள் எல்லாம் நெல்லைக் கொத்தித் தின்று விட்டனவாம். உடனே பாட்டி காளிகோயிலில் போய் விரதம் இருந்ததாம். காளி தோன்றி என்ன என்று கேட்க வானம் எட்டுவண்டி நூலு போட்டாலும் எட்டாம போகணும். பத்துவண்டி நூலு போட்டாலும் பத்தாம போகணும் என்று வேண்டியதாம் அது மாதிரி வானம் எட்டாத உயரத்திற்குப் போய்விட்டதாம்.
இயற்கையிலேயே படைக்கப்பட்ட வானம் பற்றிய இக்கதை இன்றும் வழங்கப்படுகின்றது.

கடவுள் வழிபாடு துன்பத்தை நீக்கும்

மனிதன் கடவுள் மீது அதிக நம்பிக்கை உடையவனாக இருக்கிறான். இறைவனை வழிபட்டுத் தம் துன்பத்தை அவனிடம் ஒப்படைத்தால் தம் துன்பம் நீங்கி இன்பம் எய்திட வழி கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மக்களிடத்தில் காணப்படுவதால் அவர்கள் தெய்வத்தை வணங்குகிறார்கள்.

மூன்றுபேர் கடவுளிடம் எதைத் தொட்டாலும் பொன்னாக வேண்டும் என்று கேட்டனர். கடவுளும் கொடுத்தார். அவர்கள் தொட்டதெல்லாம் பொன் ஆயின. மகிழ்ச்சியில் உணவு அருந்தச் செல்ல, அதுவும் பொன்னானது. மீண்டும் கடவுளிடம் நாங்கள் எங்கள் தவற்றை உணர்ந்துவிட்டோம் என்றனர். கடவுளும் அவர்களை மன்னித்து இயற்கை எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறிச் சென்றார்.

இக்கதை அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி பற்றிய நம்பிக்கையை உணர்த்துவதாக அமைகிறது வாழ்வில் கிடைப்பதைக் கொண்டு வாழ்வது தான் நிம்மதியான வாழ்வாகும்.

நேர்த்திக் கடன் தொடர்பான நம்பிக்கை

ஒரு காரியத்தை நினைத்துக் கொண்டு அதை நிறைவேற்றினால் இன்ன வேண்டுதலைச் செய்கிறேன் என்று வேண்டிக் கொள்ளும் வழக்கம் கிராமப்புற மக்களிடையே அதிகமாக உள்ளது.

'செல்லமாளுக்கு அம்மை போட்டுவிட, அவளது தாய் மங்கம்மாள் மாரியம்மனிடம் ஆயிரங்கண் பானை எடுப்பதாக வேண்டினால், அதுபடியே செல்லம்மாளுக்கும் அம்மை நோய் தீர்ந்தது. தாயம்மாளும் அந்நேர்த்திக் கடனைப் பங்குனிப் பொங்கலில் நிறைவேற்றினாள்'.

இக்கதையில் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் நோய் தீரும் என்ற நம்பிக்கை வேரூன்றி வளர்ந்திருப்பதை அறிய முடிகின்றது. தெய்வத்தை வேண்டி நேர்த்திக் கடன் முடிப்பதையும் காண முடிகிறது.

விதி பற்றிய நம்பிக்கை

மனிதன் பிறக்கும்போதே அவன் வாழ்க்கை இவ்வாறு தான் அமைய வேண்டும் என்பதைக் கடவுள் முன் கூட்டியே தலைவிதியாக எழுதிவிடுவான் என்ற நம்பிக்கை கிராம மக்களிடையே காணப்படுகிறது.

இந்தியச் சமுதாயம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பெரும் மாற்றங்கள் ஏற்படாமல் தேங்கிக்கிடப்பதற்கு இந்த விதி கொள்கையே காரணமாகும், என்பர்.

'பிராமணத்தி ஒருத்தி வேலைக்காரன் துப்பிய வெற்றிலையைத் தின்று விடுகின்றாள். இதைக்கண்டு அவள் கணவன் அவ்வேலைக்காரனுடனேயே அனுப்பி வைத்துவிடுகிறான். அவனிடம் இவள் இறக்கும் போது மட்டும் எனக்குத் தகவல் சொல் என்கின்றான். சில வருடங்களிலேயே அப்பெண் இறந்துவிட, செய்தி பிராமணனுக்குச் சொல்லப்படுகின்றது. பிராமணன், பிராமணத்தியின் மண்டை ஓட்டைப் பார்த்து சில நாள் பிராமணன், பாதி நாள் வேலைக்காரன் கூட வாழ்க்கை என்று எழுதியிருக்குதே' என சொன்னான்.

இக்கதை விதியை யாராலும் வெல்ல முடியாது என்ற நம்பிக்கையை வலியுறுத்துவதாக அமைகிறது.

கனவு பற்றிய நம்பிக்கை

நாட்டுப்புற மக்கள் கனவுகள், வாழ்வில் பின் நிகழப்போவதை முன்னரே உணர்த்துகின்றன என்று நம்புகின்றனர். கனவுகளையே நல்ல கனவு, கெட்ட கனவு என்று இரு வகையாகப் பிரிப்பர். மேலும் நன்மையோ, தீமையோ வருவது கனவு மூலம் தெரிந்துவிடும் என நம்புகின்றனர்.

கனவு பற்றிய செய்திகள் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளன. பின்னிகழ்வுகளை முன் கூட்டியே அறிவிப்பது கனவு என்பர்.

'ஒரு பெண் சித்தி கொடுமையால் மிகவும் துன்புற்றாள். அப்பெண் தனது அம்மாவின் சமாதியில் தினமும் உடகார்ந்து அழுதுவிட்டுச் செல்கிறாள். ஒரு நாள் அவள் அம்மா கனவில் வந்து உன்னை இந்நாட்டு ராசா திருமணம் செய்வான் என்று கூறி, அதற்குப் பல தடங்கல்கள் ஏற்படும் எனவும் கூறிவிட்டுச் செல்கிறாள். சொன்னது போலவே சித்தியால் பல தடங்கல்கள் ஏற்பட்டன. இறுதியில் ராசாவுக்கும் அப்பெண்ணுக்கும் திருமணம் நடந்துவிட்டது'. இக்கதையின் வழி, முன்னோர்களின் ஆவி தமக்குக் கெட்டதோ, நல்லதோ நிகழப்போவதைக் கனவில் தோன்றிக் கூறுவதாக நம்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

நல்ல நட்பு

நண்பனின் இன்ப துன்பம் இரண்டிலும் பங்கு கொள்வதே சிறந்த நட்பாகின்றது. கீழ்க்காணும் கதை நல்ல நட்பின் சிறப்பினை எடுத்தியம்புகிறது. 'ஒரு நாட்டுல வேடன் ஒருத்தன் இருந்தான் ஒரு நாள் மான் கூட்டத்தின் மீது நஞ்சு கலந்த அம்பை எய்தான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டது. நாளடையில் மரம் காய்ந்து பட்டுப்போனது. அம்மரத்தின் பொந்து ஒன்றில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி, மரத்தின் நிலையைக் கண்டு வருந்தினாலும் அம்மரத்தை விட்டுப் போகவில்லை. அக்கிளியின் அன்பைக் கண்ட தேவேந்திரன் மனித உருவில் வந்தான். மரத்தை விலகாமலிருக்கக் காரணம் கேட்டான். அதற்குக் கிளி, எல்லா வகையிலும் சிறந்த குணங்கள் நிறைந்த இந்த மரத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். இளமைப் பருவத்தில் இந்த மரம்தான் பாதுகாப்புக் கொடுத்தது. இப்போது விலகிச் சென்றால் அது எவ்வளவு மோசமான செயல் என்றது. கிளியின் பரிவைக் கண்ட இந்திரன் கிளிக்கு ஒரு வரம் தருவதாகக் கூறினான். உடனே கிளி மரம் முன்போல் தழைக்க வரம் கேட்டுப் பெற்றது. மரம் பூத்துக் குலுங்கியது. பின் கிளி இந்திரனுடன் தேவலோகம் சென்றது'.

நண்பன் துயருறும்போது, அவனிடமிருந்து, துன்பத்தில் பங்கு பெறுவதோடு, துயர்களையவும் வழிவகுப்பது நல்ல நட்பு ஆகும்; அதற்குத் தெய்வமும் உதவி செய்யும் என்ற நீதிக் கருத்து இக்கதையின் மூலம் அறியப்படுகிறது.

தெய்வம் தொடர்பான நம்பிக்கை, கடவுள் வழிபாடு தொடர்பான நம்பிக்கை, நேர்த்திக்கடன் தொடர்பான நம்பிக்கை போன்றவை சமுதாய நலன் கருதி ஏற்பட்டதாகக் கருதுகின்றனர். கருங்கச் சொன்னால் கிராம மக்களிடம் நம்பிக்கைகள் என்பதே இரத்தத்தோடு கலந்து நிற்கின்றன எனலாம்.

கதைகள் மனித வாழ்வின் வரலாறுகளை உணர்த்துவன. குழந்தைகளுக்கான அறிவு வளர்ச்சியில் நீதிக் கதைகள் சிறப்பான பங்கினைக் கொண்டுள்ளன. தென்காசி வட்டாரக் கதைகள் சிலவற்றைப் பார்க்கும்போது, அக்கதைப் போக்குகள் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் காணப்படுவதை அறியமுடிகிறது. பொதுவாக சமூகத்தின் செய்திகளையும், குறிப்பாக – வட்டாரச் செய்திகளையும் தாங்கி நாட்டுப்புறக் கதைகள் அமைகின்றன. இக்கதைகளைச் சமூகவியல் நோக்கில் ஆராயும் போது அவற்றின் இன்றியமையாமை இன்னும் வெளிப்படும்.

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-
641 028
பேச
:098424 95241.