உலக இலக்கியம்

இரா.சடகோபன்

 

 

கியூபாவின்  நண்பன்
எர்னஸ்ட்
ஹெமிங்வேயின்
வயது
முதிர்ந்த மனிதனும்
கடலும்
 

 

ங்கில இலக்கியத்திலும் உலக இலக்கியத்திலும் ஆழக்கால் பதித்த ஆரோக்கியமான படைப்பாளிகளில்  முன் வரிசையில் வைத்துப் பார்க்கப்படுபவர்தான் எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) இவரது காலம் 1891 1961  வரையிலானது. இவர்  எத்தனையோ   பல  படைப்புகளை சிருஷ்டித்திருந்த போதும்  இவர் இறுதியாகப் படைத்த ''வயது முதிர்ந்த மனிதனும் கடலும் (The Old man and the Sea)  என்ற குறு நாவலே இவருக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது. இந்த  நாவலின் தாக்கத்தையும் இதுவரை  இவர்  செய்திருந்த இலக்கியப் பணிகளுக்காகவும் சேர்த்து 1954 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

 

மேற்படி வயது  முதிர்ந்த மனிதனும் கடலும் என்ற நாவல் 1951 ஆம் ஆண்டு கியூபா நாட்டின் கடலோரக் கிராமத்தில்  வாழ்ந்த  வயது முதிர்ந்த ஒரு ஏழை மீனவனின்  வாழ்க்கை அனுபவத்தை  அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதாகும். இவர் 1925 ஆம் ஆண்டு தனது முதல் படைப்பான The Torrents of Spring என்ற  நாவலின் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். இக்கதை ஒரு மிகச் சாதாரணமான  குடும்பமொன்றின் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்டது. இது ஒரு வெற்றிப் படைப்பாக அப்போது  கருதப்படவில்லை. எனினும் இதனைத் தொடர்ந்து அதே ஆண்டிலேயே இவரால் எழுதப்பட்ட The Sun also Rises என்ற நாவலே இவர் எத்தகைய படைப்பாளி என்று திரும்பிப் பார்க்க வைத்து எழுத்துலகில் இவருக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இக் கதை மாட்டுச் சண்டை மற்றும் அதனுடன் தொடர்பு பட்ட மக்களின்  பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்டது.

 

இலக்கிய விமர்சகர்களின் கூற்றின்படியும் ஹெமிங்வேயின் சுய சரிதையை எழுதிய ஜெப்ரி மேயரின் அபிப்பிராயத்தின்படியும்  அவரது எல்லாப் படைப்புக்களையும் விட மேற்படி The Sun also Rises என்ற படைப்பே சிறப்பானது என்பது பலரதும் கருத்தாகும். அதன்பின் அவர் ஐந்து நாவல்களையும் மூன்று சிறுகதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளார். இவர் தனது வாழ்க்கையை  ஒரு போர் வீரனாகவே ஆரம்பித்தார்.

 

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் முன்னணிப் படையில் இணைந்து போர் புரிந்தார். அதன் காரணமாக பல உயிராபத்துக்களை சந்தித்து உயிர் தப்ப வேண்டியிருந்ததுஅவர் மிகுந்த துணிச்சல் மிக்கவராக இருந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு மீண்டவராக இருந்தபோதும் இவர் 1961  ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டமை இன்னமும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு புதிராகவே உள்ளது.

 

ஹெமிங்வே தனது அதிகமான காலத்தை கியூபாவில் கழித்ததுடன் கியூபப் புரட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். அதன் காரணமாக அமெரிக்காவின் எப்.பி.. (F.B.I)

 

உளவுப் படையினர் இவர் தொடர்பிலான கடிதக் கோவை  ஒன்றை  பராமரித்து வந்ததுடன்  இவரைப் பின் தொடர்ந்து உளவு பார்ப்பதிலும் ஈடுபட்டனர். இது இவருக்கு பெரிதும் மன உளைச்சலைத் தருவதாக இருந்தது. இவரது மரணத்துக்கும் இந்த விவகாரத்துக்கும்  சம்பந்தம்  இருக்கலாம் என ஒரு சந்தேகம் காணப்படுகின்றது. 1940 ஆம் ஆண்டு தொடக்கம் ஹெமிங்வே கியூபாவிலேயே வசித்து வந்தார்அவருக்கு அந்நாட்டில் வீடு ஒன்றும் சொந்தமாக இருந்ததுடன்  கியூபாவின்  புரட்சித் தலைவர் பிடெல் காஸ்ட்ரோவுடனும் மற்றும்  கியூபப் புரட்சியின் முன்னணித் தலைவர்களுடனும்  அவர் நெருங்கிய  சம்பந்தம் வைத்திருந்தார். அவரின் மரணத்தின் பின்னர் கொம்யூனிஸ்ட் கியூபா அவருக்கு உயர் கௌரவத்தையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்தி வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டது. இன்றுங் கூட கியூப மக்கள் ஹெமிங்வேயை தமது உற்ற நண்பனாகவே கருதுகின்றனர்.

 

''வயது  முதிர்ந்த மனிதனும் கடலும்'' என்ற கதையின் பிரதான கதை மாந்தன்  சந்தியாகோ  என்ற வயது முதிர்ந்த மீனவன் ஆவான். அவன் மீன் பிடிப்பதற்காக  கடலில் நீண்ட தூரம் செல்கிறான்ஒருமுறை அவன் கடலுக்குச் சென்று எவ்வளவு முயற்சித்தும் மீன்கள் அகப்படவே இல்லை. இபபடிப் பல நாட்கள் அல்ல 84 நாட்களாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. அவனுக்கு மீன் பிடிப் படகில் மீன்பிடிப்பதற்கு உதவியாக ஒரு சிறுவனே  கடமையாற்றினான். மீன் ஒன்றும் கிடைக்காமல் 40 நாட்களைக் கடந்த போது சிறுவனின தந்தை அச்சிறுவனை முதியவரிடம் இருந்து பிரித்து வேறு ஒரு மீன் பிடிப் படகில் வேலைக்குச் சேர்த்து விட்டார்.

 

ஆனால்  சந்தியாகோ 85 ஆவது நாள் மீன் பிடிக்கச் சென்றபோது ஒரு விசித்திர சம்பவம் நிகழ்ந்ததுமுதியவரின் வலையில் ஒரு விசாலமான  பெரிய மீன் சிக்கிக் கொண்டது. அந்த மீனை கடலில் இருந்து தூக்கி படகுக்குள் போடவோஅல்லது அதனை இழுத்துக் கொண்டு  கரை சேரவோ முதியவரால் முடியாமல் அத்தனை  கனமாக அந்தமீன் இருந்ததுமாறாக அந்த கொழுத்த மீன் முதியவரையும் படகையும் மேலும் மேலும் ஆழ்கடல்  நோக்கி இழுத்துச் சென்றது. சில தினங்கள் இவ்விதம் போராடிய பின்னர் மீனின் நிறை குறைவது  போலும், அதன் சலனங்கள்  அற்றுப்  போனது போலவும் உணர்வு மீனவனுக்கு ஏற்பட்டது. அவன் தனது படகை கரைநோக்கி செலுத்தக் கூடியதாகவும் இருந்ததுஒருவாறு அவன் படகைக் கரை சேர்த்தான். ஆனால்  இறுதியிலும்  அவனுக்கு சோகம்தான்  காத்திருந்தது. அவன் கரை சேர்த்திருந்தது மீனை அல்ல. ஒரு பெரிய மீனின் எலும்புக் கூட்டை மட்டும்தான்.

 

இந்தக் கதை ஒரு உண்மையான  அனுபவக் கதை என்றும் இதனை கியூபா மீனவனான மனுவல் உலிபாரி மொன்டிஸ்பான் என்றவனிடம் இருந்து தான் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும் பின்னர் ஹெமிங்வே தெரிவித்துள்ளார்.

 

''என்னால் இக்கதையை  தற்செயலாகவே கேட்க நேர்ந்ததுஒரு நாள் காலையில் நான் கடலுக்குச் செல்வதற்கு  எனது படகை தயார்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது தான்  அந்த வயது முதிர்ந்த மீனவனைச் சந்தித்தேன். என்னுடன்  உரையாட விரும்பிய அவன் எனக்கு தான் பெற்ற அனுபவத்தைக் கூறினான்அவன் தன் அனுபவத்தை மிகச்  சோகத்துடன்  என்னுடன் பகிர்ந்து கொண்டான். அவன் முகம் உணர்ச்சியால் கொப்பளித்துப்  பொங்குவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்இறுதியில் அவன் கண்களில் இருந்து சில கண்ணீர்த் துளிகளும் சிந்தியபோது  அவன் கதை என் இதயத்தைத் தொட்டது. நான் வீட்டுக்குச் சென்றவுடன்  அக்கதையை  அந்த மீனவனின் உணர்வுடனேயே எழுத ஆரம்பித்தேன். ஆனால்  நான் எழுதியது அப்படியே அவன் கூறிய கதையை அல்ல. அவனுடைய அனுபவப் பகிர்வின் ஊடாக நான் சிந்தித்த கதையையே எழுதினேன்நல்ல திறமைசாலியான பத்திரிகையாளன் ஒருவன், தான் தெரிந்து  கொண்ட செய்தியை அப்படியே உள்ளது உள்ளபடி எழுதமாட்டான்வாசகர்களின் மனதை ஊடுருவும் விதத்தில் அந்த செய்தியை தத்தமது அனுபவம் போல் உணரும் விதத்தில் தேவையானதை  சேர்த்தும் தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்தும் வாசகன்  கண் முன்னே ஒரு நாடகம் நடப்பதைப் போல் கதை சொல்வான்நானும்  கூட அத்தகைய ஒரு பத்திரிகை நிருபனாகவே  என்னைக் கருதுகிறேன். உலகப் புகழ் பெற்ற ஓவியர்களான பிக்காஸோ கோயா  போன்றவர்கள் கூட பத்திரிகை நிருபர்கள் போன்றவர்கள் தான். அவர்கள் யுத்தத்தைப்  பற்றியும் யுத்தத்தின் அழிவுகளையும் கொடூரத் தன்மைகளையும் வெளிப்படுத்தும் வகையில்  படைத்துள்ள ஓவியங்கள் எத்தகைய  உன்னதமான செய்திகளைக் கூறுகின்றன? அவர்கள் வண்ண வண்ண மைகளையும் தூரிகைகளையும்  அந்த செய்திகளைச்  சொல்லப் பயன்படுத்தினார்கள். நான் என் பேனாவைப்  பயன்படுத்துகிறேன். அவ்வளவு தான் வேறுபாடு.

 

வயது முதிர்ந்த மீனவன்  என்னிடம் சொன்ன  விடயம் ஒரு உருக்கமான  சம்பவம் மாத்திரம்தான்அது ஒரு சிறுகதையாகவோ, நாவலõகவோ வர வேண்டுமானால் அது எழுத்தாளன் கையிலேயே தங்கியுள்ளது. அவனது சிந்தனை, கற்பனைத்திறன், சிருஷ்டி ஆற்றல், அனுபவ முதிர்ச்சி, ஆழ்ந்த அறிவு என்பன படைப்பாற்றலுக்குள் புகுந்து ஒரு படைப்புக்கு உயிர்மையை  வழங்குகின்றன. ஒரு கதை  நேர்த்தியாக அமைய வேண்டுமாயின் அதனை மிகத் தெளிவாக குற்றங் குறைகள் நீக்கப்பட்டு குறித்த எல்லைக்கப்பால் நீட்டப்படாமல்  கூறப்பட வேண்டுமென்பது மிக அவசியமான அம்சமாகும்.

 

அந்த வயது முதிர்ந்த மீனவன்  முன்னெப்போதும் கண்டிராத பெரிய  மீன் ஒன்றை பிடித்தான்அந்த மீனுக்கும் அவனுக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டத்தின் பின் ஒருவாறு வலையுடன் சேர்த்து மீனை படகில் பிணைத்து விட்டான். இந்தக் கதையில் வில்லன்களாகக் காட்டப்படுபவர்கள் சுறா மீன்கள் அவன்  பிடித்த மீனுடன் ஏற்பட்ட போராட்டத்தில் அவன் வெற்றி பெற்றாலும்  சுறாக்களிடம் தோற்றுப் போகிறான். சுறாக்கள் பிடிப்பட்ட மீனைப் பின் தொடர்ந்து வந்து அதனை கடித்துச் சாப்பிட்டு  விடுகின்றன. இங்கு வில்லன்களாக சித்தரிக்கப்படுபவர்கள் வேறு யாருமல்ல. வருமான வரி அறவீட்டுத் திணைக்களத்தின் அதிகõரிகள் தான். மனிதர்கள் மிகச் சிரமப்பட்டு உழைத்துச் சேர்க்கும் பணத்தை அந்த உழைப்பில் கொஞ்சமும் பங்கு கொள்ளாத இந்த வருமான வரி அறவிடும் அதிகாரிகள் பறித்துக் கொள்கிறார்கள். இத்தகைய விடயங்களை அந்த வயது முதிர்ந்த மீனவன் சொல்லவில்லைஅவை கதாசிரியனாகிய என்னுடைய  கருத்துக்களே.

 

நான்  இந்தக் கதையை  எழுதுவதற்கு ஒரு உத்தியைக் கையாண்டுள்ளேன். அந்த உத்தியானது  கடலில் மிதக்கும் பனிப்பாறையின் தாற்பரியம் போன்றது ஆகும். அந்தத் தாற்பரியத்தை  பின்வருமாறு  விளக்கலாம். மிதக்கும் பனிப்பாறையின் எட்டில் ஒரு பங்கு மடடுமே நீருக்கு வெளியில் தெரியும். மிச்சம் ஏழு பங்கு நீருக்கடியில் மூழ்கி இருக்கும். கியூபாவின்  மீனவ  சமூகத்தின் பிரச்சினைகள், கடல் வாழ்க்கை, மீன்பிடித்தல் ஆகிய அம்சங்களுடன் அவர்களுடனான எனது வாழ்க்கை அனுபவத்தையும் சேர்த்து ஒரு பெரிய  நீண்ட கதையை என்னால் எழுதியிருக்க  முடியம். ஆனால் இந்தக் கதையை நான் எழுதும்போது  அவற்றையெல்லாம்  ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்தக்  கதைக்கு எவை அவசியமோ அவற்றை மட்டுமே  நான் எடுத்துக் கொண்டேன். அத்தகைய அவசியமானவைகளுடன்  எனது அனுபவம் பெற்ற அறிவு என்பனவும் இணைந்ததே இக் கதை. கடலில் மிதக்கும் பனிப்பாறையின்  கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் எட்டில் ஏழு மடங்கு நேரடியாக உங்கள் கண்களுக்குப் புலப்படாமல் இக் கதையில் மறைந்திருக்கும் எனது அனுபவமும் பட்டறிவுமாகும்.

 

பல்வேறு மொழிகளிலுமுள்ள  இலக்கியங்களில்  சில மட்டுமே மீண்டும் மீண்டும்  வாசிக்கப்படுபவையாகவும் பேசப்படுவனவாகவும் உள்ளன. அவ்விதம் சிலாகித்துப் பேசப்படுபவர்களில் எர்னஸ்ட் ஹெமிங்வேயும் ஒருவர். இத்தகைய இலக்கியங்கள் தமிழ் மொழியில்  மொழி பெயர்க்கப்படல் வேண்டும்நாம் வாய்விட்டு இவை  பற்றி பேசுவதன் மூலம் தான் நமது இலக்கியத்தையும் செழுமைப்படுத்திக் கொள்ள முடியும்அல்லது நாம் எழுதியவற்றை நாமே படித்து பெருமைப்பட்டுக் கொண்டு தொடர்ந்தும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாகவே இருந்து கொண்டிருப்போம்.