எனது ஊர் சரவணை

கலாநிதி பால. சிவகடாட்சம்

 


ங்களுடைய ஊர் எது என்று யாராவது குறிப்பாகச் சிங்களவர்கள் கேட்டால் நான் உடனடியாக எனது ஊர் சரவணை என்று சொல்லிவிடுவதில்லை. அது எங்கே இருக்கிறது. வடக்கிலா கிழக்கிலா என்றெல்லாம் கேள்விகள் வரும். எனது ஊர் கைற்ஸ் (kayts)  என்று சொல்லி விட்டால் அது எங்கே இருக்கிறது என்று விளக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. எல்லோருக்கும் அறிந்த இந்தத் துறைமுகத்தில் இருந்து மூன்றுமைல் தூரத்தில்தான் எனது கிராமமான சரவணை இருப்பதால் எனது ஊர் கையிற்ஸ் என்று கூறுவதில் தவறில்லை என்பது என்கருத்து.

ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்டபோது தமது நாட்டில் உள்ள தீவுகளின் பெயர்களையே இங்குள்ள தீவுகளுக்கும் வைத்தனர். அனலை தீவுக்கு 'ரொட்டர்டாம்' காரைதீவுக்கு ஆம்ஸ்டர்டாம்' புங்குடுதீவுக்கு 'மிடில்பேர்க்' நெடுந்தீவுக்கு 'டெல்வ்ற்' என்பதெல்லாம் அவர்கள் வைத்த பெயர்கள்தான். வேலணைக்கு அவர்கள் வைத்த பெயர் 'லெய்டன்'. இந்த லெய்டன் தீவின் பிரசித்திபெற்ற வடமுனைத் துறைமுகமான ஊராத்துறைக்கு அவர்கள் வைத்த பெயர்தான் கையிற்ஸ்.

இற்றைக்கு
850 வருடங்களுக்கு முன்னர் இலங்கையை ஆண்ட பராக்கிரமபாகு என்னும் பெயருடைய மன்னனால் எழுதுவிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நயினாதீவில் கண்டெடுக்கப்பட்டது. இம்மன்னன் காலத்தில் ஊராத்துறைக்கு கடல்வழியாக மரக்கலங்களில் வந்துசேரும் அந்நிய தேசத்தவருக்குப் போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும் என்ற மன்னனின் ஆணையை இந்தக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. தமிழ்மொழியில் மாத்திரமே எழுதப்பட்டுள்ள இந்தக்கல்வெட்டு கல்வெட்டு பின்வருமாறு வாசிக்கப்பட்டுள்ளது.

'நாங்கள் ஊராத்துறையில் பரதேசிகள் வந்து இருக்கவேணும் என்றும் அவர்கள் ரச்சைப்படவேணுமென்றும் பலதுறைகளில் பரதேசிகள் வந்து நந்துறையிலே கூடவேணுமென்றும் நாம் ஆனை குதிரைமேல் ஸ்நேகமுண்டாதலால் நமக்கு ஆனை குதிரைகளோடுவந்த மரக்கலங்கள் கெட்டதுண்டாகில் நாலத்தொன்று பண்டாரத்துக்குக் கொண்டு மூன்று கூறும் உடையவனுக்கு விடக்கடவதாகவும் வாணிய மரக்கலங்கள் கெட்டதுண்டாகில் செம்பாகம் பண்டாரத்துக்குக் கொண்டு செம்பாகம் உடையவனுக்கு விடக்கடவதாகும் சகல சிங்கள சக்கரவர்த்தி ஸ்ரீ பராக்கிரமபாகு தேவரின் இவ்விவஸ்தை சந்திராதித்யர் உள்ளதனையும் கல்லிலும் செம்பிலும் எழுத்து வெட்டிவித்து'

அன்று பராக்கிரமபாகுவால் ஊராத்துறை என்ற அழைக்கப்பட்ட கையிற்ஸ். இன்றும் தமிழ்மக்களால் ஊராத்துறை என்றே அழைக்கப்படுகிறது. இந்தத் துறைமுகத்தில் இருந்து கிழக்கே மூன்று மைல் தூரத்தில் உள்ளது சரவணை. இதன் வடக்கே நாய்க்குட்டி வாய்க்கால் என்னும் கடற்கரை உள்ளது. ஒருகாலத்தில் நாவாய்கள் எனப்படும் தோணிகள் வருவதற்கு வசதியாக வெட்டப்பட்ட நாவாய்க் கால்வாய் பின்நாளில் நாய்க்குட்டிவாய்க்கால் எனமருவிற்று என்று கூறுவர். நான் சிறுவனாக இருந்தபோது இந்த நாய்க்குட்டிவாய்க்காலில் வருடந்தோறும் நடைபெற்று வந்த மாட்டுச்சவாரி போட்டியைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.

சரவணைக்கிராமத்தின் வடமேற்கில் நாரந்தனைக் கிராமமும் மேற்கே கரம்பொன் ஊராத்துறை ஆகிய இடங்களும் தெற்கே புளியங்கூடலும் தென்கிழக்கில் வேலணைக்கிராமமும் கிழக்கில் மயிலைப்புலம், மண்கும்பான் ஆகிய கிராமங்களும் உள்ளன.

பிற்காலத்தில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் புகையிலைப் பயிர்ச்செய்கையை ஊக்குவித்தபோது விவசாயம் செய்யத் தேவைப்பட்ட கூலிஆட்களைத் தஞ்சாவூரில் இருந்தும் வரவழைத்து குடியமர்த்தியதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் தீவுப்பகுதிகளில் மக்கள்தொகை மேலும் அதிகரித்திருக்க வாய்ப்புண்டு. சரவணை மக்களுள் மிகப்பெரும்பாலானோர் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டவர்கள். சரவணைப் புகையிலை தென்னிலங்கையில் மிகப்பிரசித்தி பெற்றது.

எங்களுடைய வீட்டைச் சுற்றிலும் நெல்வயல்கள். மழைகால இரவுநேரத்தில் மாரித்தவளை கூப்பிடும் சத்தத்தைக் கேட்டபடி உறங்கப்போவது ஒரு மறக்கமுடியாத அநுபவம்.

முன்னர் ஒருகாலத்தில் தாம் உணடு தமது தொழிலான விவசாயம் உண்டு என்று வாழ்ந்துவந்த சரவணைக் கிராமத்து மக்களுக்கு ஒருகாலப்பகுதியில் பெரும் மனக்குறை ஒன்று ஏற்பட்டது.

இனந்தெரியாத காரணங்களால் ஏற்பட்ட கருச்சிதைவுகளும் பாலர் மரணங்களும் நாளடைவில் சரவணைக்கிராமத்தின் மக்கட்தொகையில் பெரும்வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என மக்கள் பயப்பட்டனர். கஷ்டம் ஏற்பட்டால் கடவுளைத் தேடுவது மக்களின் இயல்பு. குழந்தைகளின் கடவுளான முருகப்பெருமானுக்கு ஒரு கோயில் கட்டத் தீர்மானித்தனர். களிமண்ணும் ஓலையும் கொ;ன்டு ஒரு கொட்டில் கட்டி முருகனின் சின்னமாகிய வேலை நட்டு கதிர்வேலாயுதசாமி கோவிலை ஸ்தாபித்தனர்.

போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இந்துக்கோயில்களை இடித்தழித்தபோது விக்கிரகம் ஏதும் இல்லாமல் ஒரு வேலைமாத்திரம் கொண்டிருந்த இந்தக்கோவில் தப்பிவிட்டது என்று சொல்லுகிறார்கள்.

100வருடங்களுக்கு முன்னர் இந்தக் கிராமத்தில் கிறீஸ்துவப் பாடசாலைகள் இருண்டு மட்டுமே இருந்தன. ஆனாலும் மகப்பெரும்பாளன மக்கள் சைவர்கள். இவர்களின் நலன்கருதி 1922இல் வினாசித்தம்பி நொத்தாரிஸ் என்பவர் தனது மனைவியின் சீதனக்காணியில் மனைவி பெயரிலேயே நாகேஸ்வரி வித்தியாசாலை என்னும் பெயரில் ஒரு பாடசாலையை ஆரம்பித்தார். பின்னர் இதன் நிர்வாகத்தை (HinduBoard) எடுத்துக்கொண்டது. இங்கு என்னுடைய தாயார்தான் முதலாவது பயிற்றப்பட்ட பெண்ணாசிரியை. இவருக்கு முன்னர் தையல் மாத்திரம் கற்பிக்க ஒரு பெண்மணி இருந்தார். அவரை தையல் அக்கா என்று மாணவிகள் அழைத்தனர். எனது தாயார் இங்கு ஆசிரியராகச் சேர்ந்த போது அவரையும் தையல் அக்கா என்றே அழைக்கத்தொடங்கினர். இங்குதான் நானும் எனது ஆரம்பக்கல்வியைத் தொடங்கினேன்.

சரவணைக்கும் நாரந்தனைக்கும் இடையில் ஒரு கந்தசாமி கோவில் உள்ளது, இக்கோயில் இரு கிராமத்தவருக்கும் பொதுவானது. எண்பதுகளுக்கு முன்னர் இந்தக்கோவில் திருவிழாக்களில் சப்பரம் சிகரம் சின்ன மேளம் பெரியமேளம் என்று ஒரே கொண்டாட்டமாக இருக்கும். இலங்கை இராணுவத்தின் வருகையால் முற்றாகச் சேதம் அடைந்து பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தக்கிராமத்தில் இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் இன்று எவருமே இல்லை. ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஐயர் ஒருவர் வந்து பூசை செய்துவிட்டு உடனே திரும்பி விடுவதாகக் கேள்விப்பட்டேன்.