டொராண்டோ'வில நடைபெற்ற ஞானம் சஞ்சிகையின் 'ஈழத்துப்புலம்பெயர் இலக்கியச்சிறப்பிதழ்' வெளியீட்டு விழா

 

..கிரிதரன

 

இன்று ஞானம் தனது 175 இதழாக வெளியிட்டிருந்த சிறப்பு இதழான 'ஈழத்துப்புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா 'டொராண்டோ'வில் நடைபெற்றது. 'டொராண்டோ தமிழ்ச்சங்க ஆதரவில் வைத்திய கலாநிதி லம்போதரனுக்குச்சொந்தமான 'டொராண்டோ' தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில். எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினையும், வைத்திய கலாநிதி .லம்போதரன் தலைமையுரையினையும் ஆற்ற அறிமுக உரையினைப் பேராசிரியர் .ஜோசப் சந்திரகாந்தன் ஆற்றினார். அதன்பின்னர் நூல் நிகழ்வுக்கு வந்திருந்தோருக்கு விற்பனைக்கு விடப்பட்டது. தொடர்ந்த நிகழ்வில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையினையும், இறுதியாக நன்றியுரையினை எழுத்தாளர் ஶரீரஞ்சனி விஜேந்திராவும் ஆற்றினார்கள். நிகழ்வில் கலாநிதி சுப்பிரமணியன் அவர்கள் நீண்டதொரு , சிந்தனையைத்தூண்டும் உரையினை ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது. அதிலவர் புலம்பெயர் தமிழர்களின் இலக்கியத்தில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையில் கருப்பொருளாக அமைந்த பொருளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி  விரிவாக  அவற்றைப்பிரிவுகளாக்கி எடுத்துரைத்தார். ஆரம்பத்தில் வெளியான படைப்புகள் தாயகமண் பற்றிய கழிவிரக்கமாக அமைந்திருந்தன; அதன் பின்னர் ஈழம் மற்றும் புகலிடச்சூழல்களை உள்வாங்கியவையாக விளங்கின; அதன் பின்னர் புகலிடத்தில் காலூன்றியவர்கள, புகலிடத்தில் தம் தாயகத்தில் நிலவிய பண்பாட்டுச்சூழலை மீண்டும் உருவாக்க முனைவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அதே சமயம் பெண்ணியம், சாதியம் போன்றவை புலம்பெயர் இலக்கியத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையன என்பதுபற்றியும் அவரது உரை ஆராய்திட முற்பட்டது. இவ்விதமாகத்தனது நீண்ட உரையினை ஆற்றிய கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் இறுதியில் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றி எழுத்தாளர்களான  தேவகாந்தன், ஜெயமோகன் ஆகியோர் முறையே 2000ஆம் ஆண்டிலும், 2010,லும் தெரிவித்த கருத்துகளையும் குறிப்பிட்டார். அத்துடன் அவர் எஸ்.பொ/ இந்திரா பார்த்தசாரதியால் தொகுத்து வெளியிடப்பட்ட 'பனியும்இ பனையும்' சிறுகதைத்தொகுப்பு பற்றியும் குறிப்பிட்டார். அத்தொகுப்பில் படைப்புகள் வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று அன்றே குறிப்பிடப்பட்டிருந்ததை எடுத்துரைத்து, இன்று மீண்டும் அவ்விதமான பிரிவுகளை நோக்கித்தான் எமது புலம்பெயர் இலக்கியமும் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

 

உரைகளைத்தொடர்ந்து அவ்வுரைகள் பற்றிய தனது கருத்துகளை வைத்தியர் .லம்போதரன் அவர்கள் முன் வைத்தார். அதிலவர் முன் வைத்த கருத்தொன்று சிந்திக்கத்தூண்டுவதாக அமைந்திருந்தது. தற்போது நாட்டில் நிலவிய சூழலில் பாரிய மாற்றமேற்பட்டிருப்பதால், அங்கிலிருந்து பல்வேறு எதிர்பார்ப்புகளுடன், பல இலட்சங்களைக்கொடுத்து வரும் புதிய தமிழ்க்குடிவரவாளர்கள் இங்கு காலூன்றுவதற்காகப்படும் சிரமங்கள், துயரங்கள் பற்றிக்கூறிய அவர் முன்பு யுத்தக்காலகட்டத்தில் வந்தவர்கள் இவ்விதமான எதிர்பார்ப்புகளுடன் வரவில்லை. உயிர்தப்பினால் போதுமென்று வந்தவர்கள். ஆனால் புதியவர்கள் எதிர்பார்ப்புகளுடன் வந்தவர்கள். இது பற்றியும் கலாநிதி நா.சுப்பிரமணியன் வகுத்த பிரிவுகளுடன் இன்னுமொரு பிரிவினை உருவாக்கி ஆராய்வது நல்லதாகவிருக்கும் எனக்கூறினார்.

 

பீன்னர் நடைபெற்ற பார்வையாளர் கருத்தரங்கில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் 'துறைசார் விடயங்களை ஒட்டிய இலக்கியப்படைப்புகளும் வருவதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார் தனது படைப்புகள் தன் அனுபவங்களை மையமாக வைத்தே உருவாகின என்றார்.

 

மொத்தத்தில் ஈழத்திலிருந்து புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிய நல்லதொரு ஆவணப்பெறுமதிமிக்க தொகுப்பினை வழங்கிய ஞானம் சஞ்சிகை இதழும், அதன் ஸ்தாபகரும், ஆசிரியருமான  வைத்தியர் தி.ஞானசேகரன் பாராட்டுக்குரியவர். தொகுப்பின் நேர்த்தியும், படைப்புகளின் கனமும் என்னைப்பிரமிக்க வைத்தன. 950 பக்கங்களைக்கொண்ட இத்தொகுப்பினைச் சிறப்பிதழாகக்குறிப்பிடுவதை விட மலராகக்குறிப்பிடுவதே சரியானதென நிகழ்வில் உரையாற்றிய பலர் குறிப்பிட்டிருந்தனர். அதுவே அடியேனின் கருத்துமாகும்.

 

மேலும் நிகழ்வில் எழுத்தாளர்கள் பலரைக்காண முடிந்தது. சிற்றுண்டி இடைவேளையில் எழுத்தாளர் குரு அரவிந்தனுடன் சிறிது உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்வின் பின் எழுத்தாளர் தேவகாந்தனுடன் நீண்ட  நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. நிகழ்வினை நடாத்திய எழுத்தாளர் அகில்,வைத்தியர் .லம்போதரன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். இவர்கள் 'டொராண்டோ' தமிழ்ச்சங்கம் வாயிலாக மாதாமாதம் நடாத்தும் கலை, இலக்கியக்கருத்தரங்குகளும் குறிப்பிடத்தக்கன. இவர்களுக்கு உறுதுணையாகக் கலாநிதி நா.சுப்பிரமணியன் போன்றவர்களிருப்பதும் குறிப்பிடத்தக்கது.