கவிஞர் கவிதாசன் கவிதைகளில் தன்னம்பிக்கையும் இளைஞர்களின் எழுச்சியும்

முனைவர் பூ.மு.அன்புசிவா


ள்ளத்துள்ளது கவிதை - இன்ப உருவெடுப்பது கவிதை; தௌ;ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்துரைப்பது கவிதை' என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. கவிதை என்பது பாடு பொருளில் உயர்ந்திருக்க வேண்டும். உணரவும், உள்வாங்கவுமான செய்கை உன்னதமானது. அதை படைப்பாக வெளிக்கொணரும்போது நோகாமல், தெளிவாக புரியவும், அறியவுமாக வருவது அந்தபடைப்பை இலக்கியத் தகுதிக்கு உயர்த்தும்.

வடிவத்தைவிட கருத்தை தெளிவாய் பிரதிபலிக்கும் கவிதைகளும், கவிஞனுமே காலத்தால் போற்றப்படும் நிலையில் உள்ளனர். 'உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்' என்றார் மகாகவி பாரதி. கவிஞன் உண்மையை உணரும் பக்குவத்திலும், மூன்று காலத்திற்குமான சமுதாய சிந்தனையை தாக்கமாய் தருவதிலும் தேர்ந்தவனாய் தன்னை தயாரித்துக் கொள்வது அவசியமானது அந்த அவசியமே அவனது தெளிவான திடமான படைப்பில் ஒன்றாய் கலந்து சுடர்விடும்.

21-ஆம் நூற்றாண்டின் இலக்கியக் காலத்தை ஆய்வாளர்கள் புதின இலக்கியம், சிறுகதை இலக்கியம், புதுக்கவிதை இலக்கியம் என்பர்;. இந்நூற்றாண்டில் புதுக்கவிதையே வானளாவிய வளர்ச்சியடைந்துள்ளது. கவிதாசன் கவிதைகளில் இளைஞர்களின் தன்னம்பிக்கைகளையும் இளைஞர்களின் எழுச்சிகளையும் குறித்த செய்திகளை இக்கட்டுரையில் காணலாம்.

கவிதை

கவிதை பொருள் பொதிந்த சொல். கதையாகவும் விதையாகவும், கவியாகவும் உருமாற்றம் அடையும் அதிசய உத்தியை தன்னுள் புதைத்தது. எடுப்பவனின் கையில் போர் வாளாகி சுழற்றப்படும் போதுதான் இந்த ஆயுதத்திற்கே மரியாதை கிட்டுகிறது. இலக்கிய வகைகளில் உயர்வான இதை உறைக்குள் இட்டே ஊனப்படுத்துவது அறிவிலித்தனம் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. காலம், மானுடம், பூபாகம் என்ற ஒவ்வொன்றின் நேசிப்பிலும் கவிதை உயிர்ப்புடன் தன்னைத் தக்க வைத்துக் கொண்டு பயணிக்கிறது.

மனிதன் உணர்ச்சிகளின் மொத்த உருவம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு உணர்ச்சி அலைகள் எழுகின்றன. மலையைப் பார்க்கும் பொழுது மனம் உயர்வு பெறுகின்றது, விம்முகிறது. வறுமையைக் காணும்போது வாடி வதங்குகிறது. இது போன்ற உணர்ச்சி அலைகள்தான் கவிதாசன் கவிதைகளாக மலர்கின்றன. கவிதைகளில் பாடுபொருள்கள் மாற்றம் பெற்று வருகிறது. குறிப்பாக இப்பத்தாண்டு கால எல்லைக்குள் அதிகமாக இளைஞர்களின் கனவுகளைப் பற்றியும் அவர்களின் எதிர்கால இலக்குகளையும் குறிவைத்து எழுதி குவித்துள்ளனர்.

தன்னம்பிக்கை விதை

ஏழைகளின் எல்லையில்லா சொத்து தன்னம்பிக்கை. இதனை இன்றைய இளைய சமுதாயத்திற்கு கவிஞர் சிற்பி கூறுவது...

'முடங்கிக் கிடந்தால்
சுpலந்தியும்
நம்மைச் சிறைபிடிக்கும்
எழுந்து நடந்தால்
எரிமலையும் நமக்கு வழி பொடுக்கும்;'


என்பன போன்ற சிந்தனைப் படைப்புகள் இளையோர்க்கு எழுச்சியூட்டும் என்பது நம்பிக்கை.

'இளைஞனே
பருவ நெருப்பில்
காய்ச்சிய வாளே!
நாளை என்பது
உன் திருநாளே
நினைவிருக்கட்டும்
உன்
புருவ நெருப்பில்
பூகம்பங்கள்
இமையைத் திறந்தால்
சூர்யோதயங்கள் ...'

என்று ஆசிரியர் இளைஞனின் நம்பிக்கைக்குத் தூபம் இட்டுள்ளதைக் காண முடிகின்றது. மேலும் நம்பிக்கையை மட்டும் இழந்து விடக்கூடாது என்பதனை,

'தன்னம்பிக்கையோடு
எழுந்து நின்றால்
இமயம் கூட
நமக்கு இடுப்பளவுதான்.


என்ற வரிகளைப் படிக்கும் ஒவ்வொரு இளைஞனும் தன்னையறியாமல் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு பூமித்தாயை முத்தமிடுவான்.
சோம்பித் திரிபவர்களையும் வாழ்க்கையின் பயனை அறியாதவர்களுக்கும் துப்பாக்கியிலிருந்து புறப்படும் தோட்டாக்களாக சிற்பி இளைஞனை விழித்து அழைக்கின்றார்.

'வா
நீ வெல்ல
விண்வெளி காத்திருக்கிறது
நீ பந்தாட
கிரகங்கள் காத்திருக்கின்றன
புழுதிகளையும்
பிரளயமாக்க
விழி திற!
வெற்றி உனக்குமுன்
கொடியெடுத்துப் போகிறது
வருக இளைஞனே! வருக'


என்ற வரிகள் நம்பிக்கை முடமானவனை நன்னம்பிக்கை முனையாக தட்டி எழுப்புகிறது.

தொலைத்த கனவுகள்

இன்றைய இளைஞர்கள் வயதில் வாலிப விளையாட்டுகளிலும் திரைப்படச் சுருளிலும், கலர் கனவுகளிலுமே காலத்தை தொலைத்து விடுகின்றனர். மேலும் தொலைப்பதற்கு என்ன இருக்கிறது? தயங்காதே என்று தமிழன்பன்,

'சந்தனம் மணத்தைச்
சந்தைகளில் தேடுவதில்லை
தென்றல் குளிர்ச்சியைத்
தெருக்களில் பெறுவதில்லை
உன் வாழ்வை
உன்னைத் தவிர்த்து
வேறெங்கு தேடுகிறாய்'


என கேட்கும் பொழுது கவிஞரும் ஒரு சில காலங்களில் தன் வாழ்வை தொலைத்து விட்டுத்தான் பின்பு தேடிக்கண்டுள்ளார் என்பதை இவ்வரிகளில் காண முடிகின்றது. இவர் இளைஞர்களின் மனநிலையை உளவியல் பார்வைக் கொண்டு தெளிவுபடுத்துகிறார்.

ஏமாறாதே

வாழ்க்கையில் ஏமாறாமல் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலரே. ஏமாறியவர்கள் பல. எனவே இளைஞனைப் பார்த்து மேலும் சில நம்பிக்கை மழையைத் தூவுகிறார்.

'உன் கிழக்கில் கூட
அஸ்தமனம் தான்
விதைக்க மறந்தவனே
உனக்கேன் அறுவடை ஞாபகம்'


என்னும் போது ஊமை இளைஞனும் கண்ணீர் விடுகிறான். இனிநாம் ஏமாறலாமா? என தன்னைத்தானே வினா எழுப்பிக் கொள்கிறான்.

இளைஞனின் ஒற்றுமை

இன்றைய இளைஞர்களின் ஒற்றுமையும் முன்னேற்றமும் மேலோங்கிய நிலையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதனை கவிஞர் மீரா தம் கவிதைகளில் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். அவைகளில்,

'இந்திய இளைஞனே
காந்தி நேரு
அப்துல்கலாம் அடிகளார்
அருகா டேவீஸ் அருணா ஆசப்
இந்திரா சரோஜினி
இவர்களையெல்லாம்
நெஞ்சில் பச்சைக்குத்தி
நிறுத்துங்கள்'


என்று குறிப்பிடுகிறார். இவ்வரியைப் படிக்கும் ஒவ்வொரு இளைஞனின் இதயத்திலும் ஏதோ ஒன்று கனக்கிறது. மேலும் வாழப்பிறந்தவனுக்கும் சாதிக்கத் துடிக்கும் இளைஞனுக்கும் வானம், கிரகம், பூமி, கடல் இவையெல்லாம் ஏணிப்படிகளாக உள்ளது என்பதனை கவிஞன் தமிழன்பன்,

'உன்னுள் கடல்
கடலுள் நீ.
இந்தப் பெருமிதத்தோடு
எழுந்து நில்
உன் உச்சிக்கான
ஏணி கேட்டு
நாணிக் குனியும் '


என்று இளைஞனின் மனதில் நம்பிக்கைப் பாலை ஊட்டும் கவிஞரின் வரிகள் முடமானவர்களையும் முழு மனிதனாக்கும் என்பது உறுதி.

'இன்றைய
இளைஞர்கள்
இடி மின்னலையும்
காலடியில் வைப்பார்கள்'
என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை ஆகும்.


தொகுப்புரை:

21-ஆம் நூற்றாண்டின் இளைஞர்களைப் பூமிப்பந்தையே புரட்டிப்போடும் புத்தி கூர்மையுடையவர்களாக உருவாக்க தன்னம்பிக்கை கவிதைகள் பல வழிகளில் ஏணிப்படியாக இருக்கின்றன. இளைஞர்கள் ஒற்றுமையுடன் ஏமாறாமல் நம்பிக்கையோடு முன்னேற வேண்டும் என்று சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வலியுறுத்துகிறார்.



முனைவர் பூ.மு.அன்புசிவா
149,உறரிஸ்ரீ காடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்
கோயம்புத்தூர் -
641 007
பேச:
098424 95241.