கனடாவில் மரபுக் கவிதை வளர்ச்சி

கவிநாயகர், கலாநிதி வி. கந்தவனம்



விதை வடிவங்கள் பலவகை. அவற்றுள் இலக்கண விதிகளுக்கு அமையப் பாடப்படுவதையே மரபுச் செய்யுள் என்கின்றோம். செய்யுள் என்பது சீர்களாலும் அடிகளாலும் செய்யப்படும் ஒரு வடிவம். தொல்காப்பியம், நன்னூல், காரிகை போன்ற இலக்கண நூல்கள் செய்யுள் இயற்றும் முiறையை விளக்குகின்றன. அவற்றுக்கு அமையவே நம்முன்னோர் செய்யுள்கள் யாத்தனர்ளூ நூல்களை இயற்றினர். சங்கத்; தமிழ் நூல்கள் செய்யுள்களாலேயே செய்யப்பபெற்றன.

இந்தச் செய்யுள் ஆக்கத்திற் கற்பனை கலக்கும்பொழுது அது கவிதை ஆகின்றது. இது கவனிக்ககப்பட வேண்டியதொன்று. செய்யப்படும் செய்யுள்கள் எல்லாம் கவிதையன்று. கற்பனையும் விற்பன்னமும் சங்கமிக்கின்ற செய்யுட்களே கவிதைகளாகின்றன. கற்பனைக்குத் துணையாவன அணியிலக்கணம். அணியிலக்கண அறிவு ஒரு கவிஞனுக்கு இன்றியமையாதது.

கனடாவில் இலக்கண மரபறிந்த புலவர்களாக விளங்கிய ஈழத்துப்பூராடனார் என்ற புனைபெயரைக் கொண்ட இலக்கியக் கலாநிதி க.தா. செல்வராசகோபால் அவர்களும் கலாநிதி க.செ.நடராசா (நாவற்குழியூர் நடராசா)அவர்களும் காலமாகிவிட்ட காரணத்தால் அவர்களைப்பற்றி முதலிற் குறிப்பிடுதல் முறையாகும்;.

ஈழத்துப்பூராடனார்

ஈழத்துப்பூராடனார் பலவிதமான நூல்களை ஆக்கியிருக்கின்றார். அவற்றுள் செய்யுள் சார்ந்தவை மட்டும் 30க்கும் அதிகமானவை. அவற்றுள்,

1. தமிழழகி
2. ஈழத்துப் போர்ப் பரணி
3. மல்லிகைப் பந்தல்
4. சிந்தனைச் சரம்
5. பாலர் பாச்சரம்
6. தேனிறால் அறுபது
7. காதலி தந்த வாழ்வு
8. ஈழத்து இரட்டையர் இரட்டைமணிமாலை
9. புலவர்மணிக் கோவை
10. முதுமை முதிர்வு நான்மணி மாலை
11. தமிழ்ப் பள்ளி எழுச்சி
12. விபுலாநந்தர் பிள்ளைத் தமிழ்
13. விபுலாநந்தவியம்

என்பன பெயர் பெற்றவை.

அகவல், வெண்பா, குறட்பா, விருத்தம் போன்ற மரபுச் செய்யுள்களிலே தான்
சொல்லவரும் கருத்துக்களைத் தெளிவாகச் சொல்லவல்ல திறம் இவருக்கு
இருந்திருப்பதை இப்படைப்புகள் காட்டுகின்றன.

ஈழத்துப்பூராடனாரின் சிந்தனைச் சரம் ஒரு சிறந்த தொகுதி. பல்வேறு பொருளில் அவ்வப் போது பாடிய தனிப்பாடல்களின் தொகுப்பு இது. இதிலுள்ள ஒரு பாடல் பின்வருமாறு:

அணிபுனைந்து யாப்பென்னும் கச்சை தன்னில்
அழகான தனக்கருத்தை அடக்கிக் கட்டி
மணிபோன்ற இசைதொடையில் தேக்கி வைத்து
மயக்குகின்ற கவிப்பெண்ணே கவிஞர் தம்மை
பணியவைத்தே பலவெழிலைப் பாட வைத்தாய்
பாட்டாளி தரமுயர்த்த மறந்து விட்டாய்
கணிசமாய்க் காவியத்தில் புகுந்து கொண்டு
கற்பனையில் வாழ்ந்தழிய ஏவி விட்டாய்.

எண்சீர் விருத்தத்தில் ஆக்கப்பெற்றுள்ள இச்செய்யுள் கற்பனை வளத்தால் நல்லதொரு கவிதையாவதைக் கவனிக்கலாம்.

எனினும் காலத்துக்கேற்ற மாற்றங்களைத் தழுவிக்கொள்ளும் பரந்த மனப்பான்மையும் ஈழத்துப்பூராடனாருக்கு இருந்திருக்கின்றது. பாரதியார் பாடிய முறையைப் பின்பற்றி வசன கவிதைகளையும் அவர் எழுதியிருக்கின்றார். அவரது மல்லிகைப் பந்தர் முழுவதும் வசன கவிதைகளால் ஆக்கப்பட்டுள்ளது.

வெண்பாக்களை இயற்றும் முறையிலும் அவர் வேண்டுமென்றே தளைகளைப் புறக்கணித்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது.

அவரது கவிதைகள் பகுத்தறிவுச் சிந்தனைகள் உடையனவாகவும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவையாகவும் உள்ளன. சமுதாய ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் ஒவ்வாத வழக்குகளை, முக்கியமாகச் சாதிமத பேதங்களைப் புறந்தள்ளுவதற்கோ கண்டிப்பதற்கோ ஈழத்துப்பூராடனார் பின்னிற்கவில்லை.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் அதன் 10ஆவது நிறைவைக் கொண்டாடு முகமாக 20.12.2003 சனிக்கிழமை எடுத்த விழாவில் இலக்கியக் கலாநிதி க.தா. செல்வராசகோபால் அவர்களின் சேவைகளைப் பாராட்டிக் கௌரவித்தது.

கலாநிதி க.செ. நடராசா

இவர் சிறந்த ஒரு மரபுக் கவிஞர். தாயகத்திலே இலங்கை வானொலியின் தமிழ்ப்பிரிவின் நிருவாக அதிகாரியாக இருந்தவர். வானொலி வாயிலாகவும் மரபுக் கவிதையை வளர்த்தவர். இவரது 'கவிக்கற்பரசி' என்ற மரபுக் கவிதைத் தொகுதி ஒன்றைத் தமிழ்நாட்டிலே தமிழ்ப்பணியாற்றிவரும் காந்தளகம் என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கனடாவிலும் இவரது மரபுக் கவிதைகள் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.

நடராசா அவர்கள்
17.2.1994 காலமாகிவிட்டார். இவர் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் காப்பாளரில் ஒருவராதலால் அவரது மறைவுகுறித்து இரங்கற் கூட்டம் ஒன்றை இணையம் நடத்தி 'வானுறையுந் தெய்வம்' என்ற பெயரில் நினைவு மலர் ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

நாவற்குழியூர் நடராசா அவர்கள்; வெளியிடுவதற்குத் தயாராக வைத்திருந்த மற்றொரு நூல் 'உள்ளதான ஓவியம்' என்பது. இது
600க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட அரிய காவியம். இதனை கனடா எழுத்தாளர் இணையம் 1998 ஏப்பிரல் மாதத்தில் பிரசுரிக்கவும் அடுத்த மாதம் வெளியீட்டு விழா ஒன்றினை நடத்தவும் அவரது துணைவியார் தங்கராணி அவர்கள் உதவியும் ஊக்கமும் அளித்தார்.

பிற மரபுக் கவிஞர்

மேலும் தமிழ் இலக்கணம்கூறும் மரபுவழி கவிதைகள் புனைபவர்களாக பண்டிதர் சங்கரப் பிள்ளை குமரேசையா, பேராசிரியர் பசுபதி, பேராசிரியர் வே.ச. அனந்தநாராயணண், கலாநிதி நா.சுப்பிரமணியன், பண்டிதர் கலாநிதி ம.செ. அலெக்சாந்தர், இக்கட்டுரை ஆசிரியர் கலாநிதி வி. கந்தவனம், இரா. சம்பந்தன்;, அனலை இராசேந்திரம், சபா. அருள்சுப்பிரமணியம், பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம், தீவகம் இராசலிங்கம் ஆகியோரைக் குறிப்பிடுதல் வேண்டும்.

மூதறிஞர் பண்டிதர் ச.குமரேசையா

இவர் பல பத்திப் பாடல்களையும் ஊஞ்சற் பாடல்களையும் இயற்றியவர். வேலணை கிழக்குப் பெருங்குளம் முத்துமாரி அம்பாளுக்குத் தாம் பாடிய தலபுராணத்தை எனது தலைமையிற் கனடா கந்தசுவாமி கோயிலில் வெளியீடு செய்தவர்.

தாயகத்திற் செய்துவந்தது போலவே கனடாவிலும் பல ஆர்வலருக்குச் செய்யுள் இலக்ணம் கற்பித்தவர், கற்பித்தும் வருகின்றவர். இவரிடம் திரு. செல்லையா வரதராசா, திருமதி மனோன்மணி வரதராசா, திரு. முருகேசு மயில்வாகனம், திருமதி ஜெயதேவி சிவகுருநாதன், திருமதி செல்லத்துரை சிவபாக்கியம், திரு. நா. சிவராமலிங்கம் ஆகியோர் செய்யுள் இலக்ணத்தை முறையாகக் கற்றுள்ளனர். ஆர்வம் காரணமாக அச்சுவேலியூர் கணேசன் என்பாரும் இடைக்கிடை பண்டிதரிடம் பாடம் கேட்டிருக்கின்றார்.

இவர்களுள் புலவர் திரு. முருகேசு மயில்வாகனம் அவர்கள்
(1) விடியலைத் தேடி, (2) உறவுக் கோலங்கள் ஆகிய மரபுக் கவிதை நூல்களை வெளியிட்டிருக்கின்றார். கீதவாணி நடத்தும் கவியரங்கத்திலும் மரபுக் கவிதைகள் பாடிவருகின்றார்.

அச்சுவேலியூர் கணேசன் அவர்களும் சிறந்த மரபுக் கவிஞர். பண்டிதர் குமரேசையா அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதற்கு முன் வரிக்கவிதைகள் பாடிவந்தவர். அவற்றின் தொகுதி ஒன்றும் வெளியிட்டவர். ஆனால் இப்பொழு தெல்லாம் இவர் பாடுவது மரபுக்கவிதைகளே.

எனது தலைமையில் நடைபெறும் கீதவாணிக் கவியரங்கத்திலும் இணைந்துகொண்டு சுவைமிகு மரபுக் கவிதைகள் பாடிவருகின்றார்.


பேராசிரியர் முனைவர் பசுபதி

பேராசிரியர் முனைவர் பசுபதி அவர்கள் துரந்தைப் பல்கலைக்ழகத்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மின்னியல் கணினித்துறைப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். இன்றும் ஓய்வுநிலைப் பேராசிரிராக அப்பல்கலைக்கழகத்தில் ஆய்வுகள் செய்துவருகின்றார்.

ஒப்பற்ற தமிழ் அறிஞர்ளூ உன்னதமான பண்பாளர்ளூ இசையார்வம் மிக்கவர். எல்லாவற்றுக்கும் மேலாக யாப்பு இலக்கணத்தைக் கற்றறிந்தவர். இந்த இலக்கண நேசன் சிறந்த கவிஞருமாவர். இவரது கவிதைகள் பல தமிழ் இதழ்களிலும் இணைய மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன. கவிதை வகுப்புகள் நடத்தி மரபுக்கவிதையை வளர்த்து வந்தவர். தமது மாணவருக்கென்றே கவிதை எழுதிக் கலக்கு ... என்னும் நூலை எழுதியவர். கவிதை ஆர்வலருக்கு மிக விரைவாகவும் எளிய முறையிலும் கவிதைக் கலையைக் கற்றுக்கொள்ள உதவும் நூல் இது.

இந்நூலில் பசுபதி அவர்கள் தாமே இயற்றிக் காட்டியுள்ள உதாரணச் செய்யுள்கள் பல. நேரிசை வெண்பாவுக்கு உதாரணமாக பூதத்தாழ்வார், புகழேந்தியார், பாரதியார், பாரதிதாசன், கவிமணி ஆகியோரின் பாடல்களோடு தனது பாடல் ஒன்றையும் தந்திருக்கின்றார். அந்தப் பாடல் இது:

ட்டலி யெண்ணைய்நற் சட்டினி யிச்சைகள்
கெட்டதென்றே யெச்சரிக்கை யிட்டாளே - திட்டியெனக்
கில்லையில்லை யென்ற தலையாட்ட லிங்கென்றன்
இல்லதி லில்லாள் செயல்.



பேராசிரியர் முனைவர் வே.ச. அனந்தநாராயணன்

இவர் ஹாமில்டன் மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி அண்மையில் இளைப்பாறியுள்ளார்.

மதுரையில் வித்துவான் மீ.கந்தசாமிப் புலவரிடம் இவர் தமிழ் கற்றவர். தமிழ் இலக்கியத்திலும் செய்யுள் இலக்கணத்திலும் நிரம்பிய புலமையுள்ளவர். கவிதை புனைவதில் வல்லவர். இவரது கவிதைகள் பல தமிழ் இதழ்களிலும் இணைய மின்னிதழ்களிலும் வந்தவண்ணம் உள்ளன.
சந்த வசந்தம் குழுமத்தின் மின்மடலில் இவரது பிரதோச விரதச் செய்யுள்களை நான் இடைக்கிடை சுவைப்பதுண்டு. அவற்றுள் ஒன்று இது:

குவிக்குமென் கரமிரண்டின் ஊடே சென்று
கூத்தனே என்நெஞ்சத் தமர்ந்தாங்(கு) என்னைத்
தவிக்கவைத் திடும்வினைகள் கூட்டத்தை தைநீ
தகர்த்தழித் திட்டுன்றன் நினைப்பை நட்டால்
புவிக்குளே மாந்தர்நின் செயலைக் கண்டு
புகழ்ந்திடும் சொல்உன்னில் பாதி கொண்டாள்


செவிக்குளே செல்லும்போ(து) அவள்ம கிழ்ந்து
சிரிப்பதை நீகாணக் கிட்டும் வாய்ப்பே.
- சந்த வசந்தம்: 1.4.2015, பிரதோச நன்னாள்


லாநிதி நா. சுப்பிரமணியன்

இவர் பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் களனி வித்தியலங்காரப் பல்கலைக்கழகத்திலும் துணை விரிவுரையாளராகச் சிலகாலம் பணியாற்றியபின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்
1975 முதல் 2002 வரை 27 ஆண்டுகள் பல பதவிகள் வகித்துப் பிற்காலத்தில் இணைப் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் இருந்து தமிழை ஆய்வு செய்தும் செய்வித்தும் தமிழை வளர்த்த அறிஞர்.

சிறந்த சொற்பொழிவாளரும் பல நூல்களைப் படைத்தவருமாகிய இவ்வறிஞர் இக்காலத்திற் கனடாவிற் பலவிதமான தமிழ்ப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றார். தற்பொழுது வெளிவாரியாகப் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மனோன்மணிப் பல்கலைக்கழக மாணவருக்கு விரிவுரைகள் நிகழ்த்தி வருகின்றார்.

இவர் தமது பட்டப்படிப்புக்குச் செய்த ஆய்வு தமிழ் யாப்பு வளர்ச்சி என்பது. இந்நூலில் கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்கும் 19ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியின் தமிழ் யாப்பு வளர்ச்சியை அஃகி அகன்ற பார்வையில் ஆய்ந்திருக்கின்றார் ஆசிரியர். ஆய்வேட்டை ஆய்ந்த அறிஞர் அதனை உயர்தர ஆய்வு எனப் பாராட்டிப் பட்டத்தை வழங்கியிருப்பது தமிழிலும் தமிழ் இலக்கணத்திலும் இவருக்கு இருக்கும் புலமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

இவ்வித இலக்கணப் புலமையுள்ள இவர் தேவைகருதிச் செய்யுள்களும் இயற்றியிருக்கின்றார். ஆலயங்கள் சிலவற்றுக்கு ஊஞ்சற்பாட்டுப் பாடியிருக்கினார்.

எனது பாவாரம் என்ற நூலுக்கு இவர் எழுதிய அணிந்துரை ஒரு மரபுச் செய்யுளுடன் நிறைவுபெறுகின்றது. அது பின்வருமாறு:

தேவாரம் மற்றும் திருவா சகம்முதலாம்
பூவாரம் பூண்டு புளகமுறும் - கோவான
தில்லைப் பெருமான் திருக்கோண மாமலையான்
சொல்லும் பொருளின் சுவையாவான் - நல்கிவரும்
பேரருளில் தோய்ந்து பெருமையெலாம் பெற்றுள்ள
சீருடைய கந்த வனக்கவிஞ! - நீரவர்க்குச்
சிந்தை நிறையன்பைச் செந்தமிழ்ப்பா வாரமென
ஐந்து புலனடக்கி ஆர்வமுடன் - நந்தமிழர்
வாழ்வு சிறக்க வழங்கினீர் உங்களது
வாழ்நாட் பணியாய் அதுதிகழும் - நீள்புவியில்
சைவம் சிறக்கின்ற நாளெல்லாம் வாழிவீர்நீர்
ஐயமில்லை ஈசன் அருள்.

இது இலக்கணத்தின்படி பன்னிரண்டு அடிபெற்று வந்த பஃறொடை வெண்பா எனப்படும்.

எமது கவிதை வகுப்பு மாணவருக்கும் இவர் இலக்கியத்திறனாய்வு பற்றிய விளக்கவுரைகளும் அவ்வப்போது நிகழ்த்திவருகின்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.