தைப் பொங்கல்

 

கவிஞர் வி.கந்தவனம்


மிழ் மக்களின் வாழ்க்கைமுறை இயற்கை அன்னையின் அருள்வழிப்பட்டது. இயற்கையால் முன்னேறிய மனிதன் படிப்படியாக இயற்கைச் சூழலைப் பங்கப்படுத்தி, இன்று மனித வாழ்க்கைக்கே ஊறு விளைக்கும் அளவுக்கு நிலைமை முற்றிவிட்டதை உணர்ந்து, இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதைக் காண்கிறோம்.

இயற்கையின் முக்கியத்துவத்தைத் தமிழர்கள் அன்றே உணர்ந்தவர்கள். நெய்தல் நிலத்தின் தெய்வமாக வருண பகவானைப் பழந்தமிழர் வணங்கினர். பாலை நிலத்தவர் கொற்றவையுடன் கதிரவனையும் வழிபட்டனர். சிலப்பதிகாரத்தில் வரும் மங்கல வாழ்த்தில் திங்களும் ஞாயிறும் மாமழையும் போற்றப்படுகின்றன. திருக்குறளில் கடவுள் வாழ்த்தையடுத்து வான்சிறப்பு வலியுறுத்தப்படுகின்றது.

இன்றும் பலவகையான இயற்கை வழிபாடுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இவற்றுள் முக்கியமானது நவக்கிரக வழிபாடு. கிரகங்கள் சூரியனை மையமாகக் கொண்டவை.

சௌரம் என்பது சூரியனை வழிபடும் சமயம். தைப் பொங்கல் இவ் வழிபாட்டுடன் தொடர்புடையது. தமிழ்த் தை மாதப் பிறப்பில் வீட்டு முற்றத்தில் சூரியனுக்குப் பொங்கிப் படைக்கின்றோம். இது குறித்து இரண்டு விடயங்கன் சிந்திக்கத்தக்கன. தை மாதம் முதலாந் திகதி சூரிய வழிபாட்டுக்குரிய நாளானது எங்ஙனம்? இந்த வழிபாட்டில் பொங்கிப் படைக்கவேண்டியதன் நோக்கம் என்ன?

தை முதல் நாள் சூரியன் மகரராசியில் புகும் நாள். இது மகரசங்கிராந்தி அல்லது தைச்சங்கிராந்தி என்று அழைக்கப்படும். அதாவது, தென்னரைக் கோளத்தில் சஞ்சரித்த சூரியன் வடக்கு நோக்கித் தோன்றும் வகையி;ல் புவியின் சுழற்சி மாற்றம்பெறுங் காலத்தில் தை மாதம் வருகின்றது. வடக்கு நோக்கி வரும் சூரியனை வரவேற்கும் ஒரு வழிபாடாக இது அமைகிறது.

தமிழர் வகுத்த காலக் கணிப்பில் தை மாதம் உத்தராயண காலத்தின் ஆரம்பமாகும். உத்தராயணம் தேவர்களின் பகற் பொழுதாகையால் தை மாதம் அவர்கனது காலைப் பொழுது ஆகின்றது. அதனாலும் தை மாதம் முக்கியத்துவம் பெறுகின்றது.

கோலாலம்பூரில்
06.01.2001ல் நடைபெற்ற உலகத் தமிழ் அறிஞர்கள் மாநாடு ஒன்றில் தமிழ் தை முதலாந் திகதி தமிழ் மக்களின் வருடப் பிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டதையும் இந்த இடத்திலே குறிப்பிடுதல் வேண்டும்.

தை மாதம் முதலாந் திகதியே பண்டைத் தமிழ் மக்களின் வருடப் பிறப்புத் தினமாக முற்காலத்திற் கொண்டாடப்பட்டதென்றும் காலப்போக்கில் வருடப் பிறப்புச் சித்திரைக்கு மாற்றப்பட்டபின்னரும் பழைய தைக் கொண்டாட்டத்தை மக்கள் கைவிடாது தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்றும் இவர்கள் கருதுகின்றார்கள்.

தைமாதம் ஆண்டுப் பிறப்பு மாதமாக முற்காலத்தில் கொண்டாடப்பட்டுவந்தமைக்கு எவ்வித ஆதாரமும் பண்டைய இலக்கியங்களிலோ கல்வெட்டுகளிலோ இல்லை என்று முனைவர் பால சிவகடாட்சம் போன்ற ஆய்வாளர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் வலுவானவையாக உள்ளன என்பது எனது கருத்துமாகும்.

மேலும், சிவபெருமானின் நெற்றிக் கண் சூரியனைக் குறிப்பதால், சூரிய பொங்கல் சிவனுக்குரிய வழிபாடாகவும் கருதப்படுகின்றது. அதன் காரணமாகவும் சிவனைப் போற்றும் தென்னாட்டில் தைப் பொங்கற் கொண்டாட்டம் வளர்ந்தோங்கியிருத்தல் கூடும்.

இவ்விதம் பல காரணங்களை முன்வைக்கலாமெனினும், தைப் பொங்கல் பெரிதும் ஓர் உழவர் விழா என்பது கண்கூடு. மார்கழியும் தையும் முன்பனிக் காலம். வயல்களில் நெல் கதிர்கொள்ளும் காலம். மார்கழி என்றால் மாரி கழியும் மாதம் என்று பொருள். தை என்ற சொல்லுக்குரிய பொருள்களுள் ஒளி அல்லது வெளிச்சம் என்ற பொருளும் உண்டு. சூரிய ஒளி நெல் விளைச்சலுக்கு இன்றியமையாதது. அதனால் விளைச்சல் நன்கு அமைய வேண்டும் என்று சூரியனை வேண்டுவதற்குத் தை முதலாம் நாள் ஒரு பொது நாளாகத் தெரிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

தைப் பொங்கல் அடிப்படையில் ஒரு நன்றிப் பொங்கலாகவும் அமைகின்றது. தமிழர் நன்றியறிதலைப் பெரிதும் போற்றுபவர். தினைத்துணை நன்றிசெயினும் அதனைப் பனைத்துணையாகக் கொள்ளும் பண்பினர். தமிழர் பண்பாட்டில் மனிதர் செய்யும் உதவிகளை மறவாது இருத்தலைப்போலவே இயற்கை செய்யும் உதவிகளை மறவாது இருத்தலும் முக்கிமாகும்.

இயற்கை இராச்சியத்தின் இணையற்ற வேந்தன் சூரியன். அவன் இன்றி மழையில்லை.
மழையின்றி உழவில்லை. உழவின்றி உணவில்லை. உணவின்றி உயிர் வாழ்க்கை இல்லை. அவன் இன்றி அமையாது உலகம். அதனால் அவனுக்குப் பொங்கிப் படைத்து நன்றி தெரிவிக்கப்படுகின்றது.

தைப் பொங்கல் ஒரு வழிபிறக்கும் விழாவாகவும் அமைகின்றது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்னும் வழக்குத் தொடர், வயல் அறுவடைகள் வீடுகளுக்கு வர மக்களின் பொருளாதார நிலை உயரும் என்பதனையே முக்கியமாக உணர்த்தி நிற்கின்றது.

பொங்கற் பண்டிகை நான்கு நாட்களை உள்ளடக்கியது. பொங்கலுக்கு முதல்நாள் வீடு வளவுகள் துப்புரவாக்குதல் நடைபெறும். இதனால் தைவருதல் என்பதற்கு சுத்தஞ் செய்தல் என்ற பொருளும் வரலாயிற்று. இந்நாளிற் பொங்கலுக்கு வேண்டிய பானை, அரிசி, பாசிப்பயறு போன்ற பொருட்களையும் பிறவற்றையும் ஆயத்தஞ் செய்யும் அலுவல்களும் மேற்கொள்ளப்படும்.

பொங்கல் நாளில் வைகறை யாமத்திலிருந்தே இல்லங்கள் குதூகலிக்கத் தொடங்கி விடு;ம். குளித்து முழுகிப் புத்தாடை தரித்துச் சிவ வழிபாடு செய்வதுடன் கொண்டாட்டம் ஆரம்பமாகும். வீட்டு முன்றில் பெருக்கி சாணகத்தால் மெழுகப்பெற்று அலங்கரிக்கப் படும். அதில் பொங்கற்களம் அழகிய கோலங்களால் வரையறுக்கப்படும். இக் களத்தின் ஒரு புறத்தில் நீண்ட வாழை இலைகளில் நிறைகுடம் குத்துவிளக்குகள் வைத்தும் பால் பழங்கள் படைத்தும் கற்பூரம் சாம்பிராணிகள் கொளுத்தியும் பொங்கல் இனிதே நடைபெற வேண்டுமென முதலில் விநாயகப் பெருமானுக்கும் பின்னர் சூரிய பகவானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து களத்தின் மையத்தில் புதிய அடுப்பில் நீரும் பாலும் நிறைந்த புதுப்பானை ஏற்றப்படும். புதுப் பானை திரிபுண்டர சின்னங்களுடனும் மாவிலை தோரணத்துடனும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

சூரியன் உதிக்கும் நேரக் கணக்கில் பால் பொங்கவேண்டும் என்னும் கருத்துடனேயே ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். கிழக்குநோக்கிப் பால் பொங்கி வழியுமாயின் அது சிறந்த சகுனமாகக் கருதப்படும்.

பால் பொங்கும் நேரத்தில் குடும்பத்தவர்; சூழநின்று சூரியனை நோக்கித் தொழுவர். சிறுவர் சீனவெடிகளைக் கொளுத்தி ஆரவாரிப்பர். பால் பொங்கியதும் பொங்கலுக்கான பச்சை அரிசியில் ஒரு பிடியைக் கிள்ளிப் பொங்கற் பானையை மூன்றுமுறை சுற்றி எடுத்துப் பானையில் இடுவர். இக் கிரியை மூன்றுமுறை செய்யப்படும்.


பாலில் பச்சை அரிசியைப் பாசிப் பயற்றுடன் கலந்து பொங்குவது வழக்கம். இவை அவிந்துவரும் சமயத்தில் சர்க்கரை, முந்திரிகை வற்றல் முதலியவற்றைக் கலந்து பொங்கல் இனிமையாக்கப்படும். பொங்கிமுடிந்தபின் வாழையிலையில் பொங்கலைச் சூரியனுக்குப் படைத்து வழிபாடு செய்தபின் குடும்பத்தவர் எல்லோரும் கூட்டாக இருந்து பொங்கலைச் சுவைத்து மகிழ்வர்.

மூன்றாவது நாளில் மாடுகன்றுகள் வைத்திருக்கும் கமக்காரர் மாட்டுப் பொங்கல் பொங்குவர். பழங்காலத்தில் மாட்டுப் பண்ணைக்காரர் பெருஞ் செல்வந்தராக விளங்கினர். அதனால் மாடு என்ற சொல் செல்வம் என்ற பொருளைப் பெற நேர்ந்தது. பண்ணை மாடுகள் நோய்நொடி இன்றி இருக்கச் சூரியனை வணங்குந் தினமே மாட்டுப் பொங்கலாகும். தமிழ்நாட்டில் இப் பொங்கல் மாட்டுச் சவாரி, காளைகளை அடக்குதல் முதலாய விளையாட்டுகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

நான்காம் நாள் உறவினர் தரிசனம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலைவிழாக்கள் என்பன நடைபெறும். இக்காலத்திற் பல இடங்களில் தைப் பொங்கல் விழா சுருக்கம்
பெற்றுப் பொங்கிப் படைக்கும் முக்கிய நிகழ்வுடன் அல்லது மாட்டுப் பொங்கலுடன் முடிந்துவிடுவதுமுண்டு. பொங்கல் அன்று மாலையே கலை விழாக்களை நடத்திமுடிப் பதுமுண்டு.

தைப் பொங்கல் வீடுகளிலன்றிக் கோயில்களிலும் கொண்டாடப்படும் விழாவாகும்.

பொங்கல் என்னுஞ் சொல் அருமையானது. சொல்லுகின்ற வாயையும் நினைக்கின்ற மனத்தையும் இனிக்கச் செய்வது. பொங்கல் பல வகைப்படுமாயினும் தைப் பொங்கற் பண்டிகை தனித்துவம் வாய்ந்தது. உலகத்துக்கு உணவூட்டும் உழவர் விழா ஆதலாலும் தமிழர் வளர்த்த பழம்பெரும் விழா ஆதலாலும் இன்றும் மற்றைய விழாக்களிலும்பார்க்கத் தமிழ்கூறும் நல்லுலகெங்கணும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டுவரும் சிறப்பாலும் இது தமிழ் மக்களின் தலையாய விழாவாகின்றது.

பொங்கற் பானை பொங்கும்பொழுது வெறும் பால்மட்டும் பொங்குவதில்லை. பாலுடன் சேர்ந்து நன்றி பொங்குகிறது, அன்பு பொங்குகிறது, அறம் பொங்குகிறது. பொங்கல்
விழாவால் உறவு வளர்கிறது. ஒற்றுமை ஓங்குகிறது. தமிழர் பாரம்பரியமும் பண்பாடும் பேணப்படுகின்றன. இத்துணைப் பெருமைகள் நிறைந்த இத் திருநாளைக் கொண்டாடிப் பூரித்து வாழ்வோமாக!.
 

 

 

vinayagar28@yahoo.com

.