கனடாத் தமிழர்களின்; கலைப் பரிணாமம் - ஓரு நோக்கு

பேராசிரியர் இ.பாலசுந்தரம்
 

ழத்திலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்து வந்து கனடாவில் வதியும் தமிழ் மக்களின் எண்ணிக்கை தற்போது சுமார் மூன்றரை இலட்சமாகக் கணிப்பிடப்படுகிறது. இத் தொகையினரில் கலைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமானது. நடனம், வாப்பாட்டு, இசைக்கருவிகள், நாடகம், திரைப்படம், கட்டிடம், சிற்பம், ஓவியம், இலக்கியம், சிகை அலங்காரம், உடையலங்காரம்., சமையற்கலை என பல்வேறு துறைகளிலும் வல்லமை பெற்ற கலைஞர்கள் புலம்பெயர்ந்து வநது இங்கு தம் கலைப்பணியைத் தொடர்கிறார்கள். அவர்கள் இங்குள்ள இளந்தலைமுறையினருக்குப் பயிற்சியளித்து, அவர்களையும் கலைஞர் வரிசையில் சேர்த்து வருகின்றனர். இவ்வாறு நோக்கும்போது ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழரின் கலைப் பாரம்பரியமானது பரிணாம வளர்ச்சியடைந்து நிலையான ஓரிடத்தைப் பெறுவதற்குரிய சகல வாய்ப்புகளும் வசதிகளும் இங்கே காணப்படுகின்றன. அதேவேளை இவ்வளர்ச்சிக்குப் பல தடைக்கற்கள் திண்மைநிலை பெற்றுள்ளன.

கலைகள் வளர்ச்சியடைவதற்குக் கலைஞர்களின் கலாநிபுணத்துவத்தோடு பொருளாதாரம், தொழில்நுட்பம், அமைதியான சூழல், அரச உதவி, கலை நுகர்வோரின் ஈடுபாடு என்ற இன்னோரன்ன விடயங்கள் அவசியமானவை. கனடாவில் இவ்விடயங்களை நோக்கும்போது அவை யாவும் கலைஞர்களுக்குப் பக்க பலமாவே உள்ளன. இவற்றுக்கும் மேலாக கலைஞன் சுயமாக – சுதந்திரமாக இயங்க வேண்டும். அப்போதுதான் கலைஞன் பிரக்ஞை பூர்வமாகத் தனது கலைப் படைப்புக்களைத் தங்குதடையின்றி சமூகத்திற்கும்; வெளிப்படுத்த முடியும். கலைப் படைப்புக்களைச் சந்தைப்படுத்தல் அல்லது தமது கலைப் படைப்பை மேடைக்குக் கொண்டு வருதல் என்ற விடயங்களும் கனடாவிலே தங்குதடையின்றி இடம்பெற்றுக்கொண்டு வந்தபேதிலும், தமிழரின் கலைப் பாம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியை ஆராயும்போது அதன் வளர்ச்சிப் போக்கும், அதேவேளை அதன் பின்தங்கியநிலையும் அல்லது அந்நியமயப்பட்டநிலையும் வெளிப்படவே செய்கின்றன.

கனடாவில் தமிழர் பண்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டிருக்குப்போகும் ஊடகங்களில் பரதக்கலை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இ;வ்வகையில் பரதக்கலையை முதலில் ஆராய்ந்தால் ஒன்ராறியோ மாகாணத்தில் பெருந்தொகையினராகவும், பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேட்டா முதலிய மாகாணங்களில் சிறுதொகையிராகவும் பரதக்;கலையைப் பயில்வதில் மாணவர்கள் மிக்க ஆர்வம் காட்டி வருதல் யதார்த்தமாக நிலைமையாகும். நூற்றுக்கும் மேற்பட்ட நடன ஆசிரியர்கள் இங்கு தனித்தும் கூட்டாகவும் நடனப் பள்ளிகள் அமைத்து கலைப் பணிபுரிகின்றனர். நிறுவன அடிப்படையிலான நடனப் பள்ளிகளும் இயங்குகின்றன. பரதக்கலையில் நடனம், தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு என்ற மூன்று விடயங்களும் இணைந்துள்ளன என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

ஈழத்திலும் தமிழகத்திலும் மாணவர்கள் தமிழ்மொழி மூலம் நடனம் பயின்றார்கள். ஆனால் கனடாவில் பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவருக்கு ஆங்கிலம் மூலமாகவே பயிற்சி வழங்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். பெரும்பாலான மாணவர் நடனத்துக்குரிய தமிழ்ப் பாடல்களையும், பாடக் குறிப்புகளையும் ஆங்கிலத்தில் எழுதிக்கொள்கிறார்கள். பாடல்களின் பொருள் விளக்கம், அப்பாடல்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள், பாவங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தினூடாக விளங்கிக் கொள்கின்றனர். இத்தகைய மாணவர்களின் தமிழ்மொழியுணர்வு, பண்பாட்டுணர்வு எப்படி இருக்கும் என்பதை மதிப்பிடுதல் மிகவும் சிக்கலானது. கலைகள் பண்பாட்டைக் கட்டிக் காக்கும் ஊடகம். ஆனால் அந்தக் கலை தனது பாரிய பணியை விடுத்து வேறு திசையில் வேறு நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால் அக்கலையின் அவசியமும் அதன் பண்பாட்டு விழுமியமும் கேள்விக் குறியாகிவிடுகின்றன. இதனைச் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது.

பரதக்கலையை மாணவர் சுமார்
5 தொடக்கம் 10 ஆண்டுகள்வரை தொடர்ந்து பயில்கிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். இந்நடனப் பயிற்சிக்காகப் பெருந்தொகைப் பணத்தையும் நேரத்தையும் முதலீடு செய்கின்றனர். இறுதியாகப் பெருந்தொகைப் பணச் செலவுடன் அரங்கேற்றமும் செய்துகொள்கிறார்கள். அந்த அரங்கேற்றத்துடன் பெரும்பாலான மாணவர் பரதக்கலைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். தமிழகத்தில் அரங்கேற்றம் செய்த மாணவர் அண்ணாமலை, தஞ்சை முதலான பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பரதக் கலையில் பட்டப்படிப்பை மேற்கொண்டு அதனைத் தமது வாழ்வியல் கலையாகப் பின்பற்றக் கூடிய வாய்ப்பினையும் தகுதியினையும் பெறுகின்றனர். ஈழத்தில் இராமநான் நுண்கலைக் கல்லூர்p, விபுலாநந்தர் இசை நடனக் கல்லூரி ஆகியவற்றில் சேர்ந்து பட்டப் படிப்பை மேற்கொள்ள வாய்ப்புக் கிடைக்கின்றது. ஆனால் கனடாவில் ஒப்பீட்டளவில் பெருந்தொகையான மாணவர்கள் பல ஆண்டு நடனம் பயின்ற பின் அதனைப் பல்கலைக்கழகக் கல்வியாகத் தொடர வாய்ப்பின்றி இருந்தனர். இப்பொழுது அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கனடா வளாகம் இத்தகைய மாணவர்கள் பரதக்கலையில் B.A., M.A. பட்டம் பெறுவதற்குகுரிய வாய்ப்பினை வழங்கிவருகின்றது.

அடுத்ததாக, இசைக்கலையைப் பற்றி நோக்கும்போது தமிழிசை பயிலும் மாணவர்களுக்கு மொழிச் சிக்கல் இருப்பதை அவதானிக்கலாம். இசைக்கு மொழி உயிர்நாடியாகத் திகழ்கிறது. இருப்பினும் தமிழ்மொழியில் ஆளுமையற்ற பெருந்தொகையான மாணவர்; சங்கீதம் கற்கிறார்கள். ஓரு சில மாணவர் மேடைகளில் செந்தமிழில் நன்றாகவே இசைபாடுகின்றனர். ஏனைய மாணவர்களை நாம் குறைகூறுவதற்கில்லை. கம்போடியாவில் திருவெம்பாவைக் காலத்தில் அந்நாட்டு மக்கள் திருவெம்பாவைப் பாடல்களை அவர்களது மொழியில் எழுதிவைத்துக் காலம் காலமாகத் தமிழில் பாடிவருகின்றார்கள். தென்னாபிரிக்கத் தமிழர்களும், மற்றும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்று பிஜி. மொறிஸியஸ் முதலான இடங்களில் வாழும் தமிழர்களும் ஆங்கிலத்தில் எழுதிவைத்தே தமிழ்ப் பாட்டுப் பாடுகின்றனர் என்ற செய்தியினையும் இவ்விடத்தில் குறிப்பிடுதல் அவசியமாகிறது. கனடாவிலே தமிழ்ப் பிள்ளைகளுக்குக் கற்கைமொழியாகவும் தொடர்புமொழியாகவும் ஆங்கிலம் (பிரஞ்சு) விளங்குவதால் தமிழ்மொழியைச் சரளமாகவும் இலாவகமாவும் பேசும் வாய்ப்பு இளந்தலைமுறையினருக்கு இலலாதநிலை ஏற்படுகிறது. இப்பின்னணியும் இசைக்கல்விக்கு ஒரு பின்னடைவைக் கொடுக்கின்றது என்ற உண்மை நிலைமையைப் புறந்தள்ள முடியாது. ஈழத்துப் பிரபல சங்கீத வித்துவான்கள் இங்கே இசைத்தமிழ் போதிக்கின்றனர். ஆனால் அவர்களின் எத்தனை மாணவர்கள் ஆளுமைபெற்ற கலைஞர்களாக மேடைகளில் தோன்றுகிறார்கள்?

இகைச்கருவிகளைக் கற்பதில் மாணவர்கள் மிக்க ஆர்வம் காட்டுகின்றனர். மிருதங்கம், வயலின் புல்லாங்குழல், வீணை முதலான இசைக்கருவிகளை இவ்வரிசையில் குறிப்பிடலாம். மிருதங்கம் பயின்று அரங்கேற்றம் கண்ட மாணவர்கள் கலைமேடைகளிலே சாதனை படைத்துவருகின்றார்கள். அவர்களுக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்களின் திறமையை ஈண்டுப் பாராட்டாமல் இருக்கமுடியாது. இதுபோன்றே பெருந்தொகையான மாணவர்கள் ஹீபோர்ட், பியானோ முதலான மேனாட்டு இசைக்கருவிகளைக் கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனார். இவற்றைத் தனியார் இசைக் கல்லூரிகள் போதித்துவருவதோடு ஆண்டுவிழாக்களையும் நடத்துகின்றன. ஹீபோர்ட் இசைக்கருவி பயின்ற இளைய தலைமுறையினர் மிகவும் பாராட்டத்தக்க வகையில் ரொறன்ரோ நகரிலே கலைப்பணிகளில் தமது பங்களிப்பைச் செம்மையாகச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு வருகைதரும் தமிழகத்துப் பாடகர்களுக்கே பக்க வாத்தியம் வாசிக்கத் தக்க அளவுக்கு அவர்கள் அக்கலையில் வளர்ச்சிபெற்று விளங்குகிறார்கள்.

பாடகர்கள் குழுக்கள் என்ற அடிப்படையிபே ரொறன்ரோவிலே சில குறிப்பிடத்தக்க இசைக்குழுக்கள் மிகச் செம்மையான முறையில் பாடுந்திறனை வளர்த்து ஆண்டுதோறும் இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர். குறிப்பாக வானம்பாடிகள், பவதாரணி பாரதி கலைக்கோயில் இசைக்குழுவினர், சென்னை ரிதம் இசைக்குழுவினர், மாயா ரியூனர்ஸ், அக்கினி இசைக்குழுவினர் இளந்தலைமுறையினருக்குப் பயிற்சியளித்து அவர்களை பாடல்துறையில் மிளிரச் செய்துவருதல் குறிப்பிடத்தக்கதாகும். துமிழகத்திலிருந்து திரைப்பட பின்னணிப்பாடகர்களின் நிகழ்ச்சிகளும் கனடாவில் ஆண்டுதோறும் பெரும் பணச்செலவில் நடத்தப்பட்டு வருதலும் சிந்திக்கத்தக்கதாகும். தமிழகத்தில் ஜெயா தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சிகளில் கனடாவில் பிறந்த எமத இளையதலைமுறையினர் திரைப்பட இசைத்துறையில் சாதனை படைத்து வருவதும் நல்லதோல் எதிர்காலத்தைக் கோடிட்டுக்காட்டுகிறது.

கனடாவில் தமிழ் நாடகக் கலை மிகத் துரித கதியில் வளர்ச்சியடைந்து வருதல் பாராட்டத் தக்கதாகும். தமிழர் வகைதுறை வளநிலையம், மனவெளி கலையாற்றுக் குழு முதலியவற்றின் நாடக அரங்க நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் வளர்ச்சி நிலை அடைந்தே வந்துள்ளன. அதுமட்டுல்லாது நாடக மேடை ஏற்றங்களைத் தொடர்ந்து அவர்கள் நடத்தும் விமரிசனக்கரத்தரங்குகள் அவர்களை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திவருவதும் குறிப்பிடத்தக்கதாகும். நாட்டுக் கூத்துக்கலை நிகழ்ச்சிகளும் ஈங்காங்கே இடம் பெற்று வருதலையும் காணக்கூடியதாக உள்ளது.

திரைப்படக்கலையில் கனடாத் தமிழ்க்லைஞர்கள் இப்போது முனைப்பாக ஈடுபட்டு வருகின்றனர். தரமான சில திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. சில திரைப்படங்கள் கனடாத் தமிழ்க் கலைஞர்களின் படைப்பாகவும். தென்னியக் கலைஞர்களுடன் இணைந்த கூட்டுப்படைப்பாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. கனடாத் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் திரைப்படச் சந்தையில் தமிழகத்துத் திரைப்படங்களுடன் போட்டியிட்டுக் களைத்தநிலையில் காணப்படுகின்றனர். இந்நிலையை மாற்றியமைக்க வேண்டும். குறுந்திரைப் படத்துறையில் ஈடுபட்டுவரும் இளந்தலைமுறையினர் மிக வேகத்துடன் செயற்படுகின்றனர். அவர்களுக்குப் பலவகையிலும் ஊக்கமளிக்க வேண்டிய பொறுப்பு அனைத்துக் கனடாத் தமிழ்க்; கலைஞர்களுக்கும் உரியதாகும். கனடாத் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு இங்குள்ள திரைஅரங்குகளும், வீடியோ விற்பனை நிலையங்களும் உணர்ச்சி பூர்வமாகச் செயற்படுவார்களேயானால் நிச்சயம் தமிழ்த் திரைப்படக்கலை கனடாவில் எழுச்சி பெற வாய்ப்புண்டு. இங்கு வளர்ந்துவரும் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களைப் பொதுநிகழ்ச்சிகளுக்கு அழைத்து அவர்களுக்கு மதிப்பும் பிரபல்யமும் வழங்க வேண்டும். எமது நடிகர்களையும் தயாரிப்பாளர்களையும் மக்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது கலைப்படைப்புக்கள் வெளிவரும்போது ஆவலுடன் காத்திருந்து திரைப்படம் பார்க்கச் செல்லும்நிலை உருவாகும்.

கனடாத் தமிழ் திரைப்படக்கலை தனித்த முத்திரையுடன் வேகமாக வளர்ச்சிபெறுவதற்கு ரொறன்ரோவில் வாழும் செல்வந்தர்கள் முன்வருதல் அவசியமாகும். அத்துடன் இங்குள்ள ஆங்கிலத் திரைப்படக் கலைநுட்பத்தைப் பக்கத் துணையாக்கிக்கொள்ள வேண்டும். ரொறன்ரோவில் கடந்த இருபது ஆண்டுக்கால தமிழ் நாடக வரலாற்றின் மூலம் தரமான நடிகர்கள் உருவாகியுள்ளனர் பாராட்டுதலுக்குரியது. தமிழ்த் திரைப்படத் தொழில்நுட்பத்தில் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் மேலும் வளர்ச்;சியடைய வேண்டியுள்ளது. இங்குள்ள இசைத்தயாரிப்பாளர்கள் ஜனரஞ்சகமான முறையிலும் தொழில்நுட்பத்துறையிலும் வளர்ச்சி பெறவேண்டும். படத்தயாரிப்புக்குரிய பணம், சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பம் யாவற்றையும் கனடா மயப்படுத்திக் கூட்டுமுயற்சியாகத் திரைப்படத் தயாரிப்பு நிகழுமாயின் ரொறன்ரோவில் சிறந்த தமிழ்த்திரைப்படங்கள் வெளிவர வாய்ப்புண்டு. தமிழ்ப் பண்பாட்டைச் சீர்குலைத்துவரும் தமிழகத்துத் திரைப்படத்துறையின் மாயையைத் தகர்த்து, புதியதொரு திரைப்படப் பாதையை ரொறன்ரோ தமிழ்க் கலைஞர்கள் உருவாக்குவார்களா?

இறுதியாக ஒரு விடயத்தைக் குறிப்பிடுதல் அவசியமாகிறது. ரொறன்ரோவில் கோடை காலத்தில் நூற்றுக் கணக்கான கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இக் கலை நிகழ்ச்சிகள் வெறும் ஒன்றுகூடலுக்காகவோ அல்லது நிதி திரட்டும் நோக்கத்திற்காகவோ அமையக்கூடாது. இவ்விழாக்களால் பெரும்பொருள் விரயமும் நேரவிரயமுமே ஏற்படுகின்றன. விழாக்களின் குறிக்கோள்கள் சீரமைக்கப்பட வேண்டும். ஆண்டுதவறாமல் கலண்டர் அடிப்படையில் விழாக்ககள் நடத்துவதில் எப்பயனுமில்லை. 'வானவில்', 'இசைக்கு ஏது எல்லை', 'ரொறன்ரோவில் திருவையாறு' முதலான கலைநிகழ்ச்சிகள் போன்று கலைவளர்க்கும் அடிப்படையில் கலைவிழாக்கள் அமைய வேண்டும். இதற்குக் கலைஞர்களின் ஒத்துழைப்பும் கலைஞர்களைப் பேணும் மனப்பான்மையும் ஒருங்கு இணைதல் அவசியம். 'கலை கலைக்காகவே' என்ற கோட்பாட்டை விடுத்து கலை வாழ்வியலாக அமைய எல்லோரும் ஒன்றிணைதல் நலன் தருவதாகும்.