பட்டிமன்றம் வளர்த்த தமிழ்!

பேராசிரியர் இரா.மோகன
 

மிழுக்குச் சிறப்பு ''கரம் போன்றது, பேச்சுக் கலைக்குப் பட்டிமன்றம். இலக்கிய வழக்கில் இது 'பட்டி மண்டபம்' எனக் குறிக்கப்பெறுகின்றது. 'பட்டிமன்றம்' என்ற சொல், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், கம்ப ராமாயணம் ஆகிய பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் இச் சொல் பெயரளவில் இடம்பெற்றுள்ளது. மணிமேகலையில், 'பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்' என வருகின்றது; எனவே பட்டி மண்டபத்துக்கு என்று ஏதோ ஒரு நெறிமுறை அல்லது விதி இருந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. திருவாசகத்தில், 'பட்டி மண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே' எனக் குறிப்பிடுகின்றார் மாணிக்கவாசகர். இதனால் பட்டி மண்டபத்தில் ஏறுவதற்குத் தகுதி வேண்டும் என்பது புலனாகின்றது. கம்ப ராமாயணத்தில், 'பன்ன அரும் கலைதெரி பட்டி மண்டபம்' என இடம்பெற்றுள்ள குறிப்பு, அரிய கலைகளை ஆராய்வதற்கு உரிய இடம் பட்டி மண்டபம் என்பதை உணர்த்துகின்றது. இங்ஙனம் பட்டி மண்டபம் பற்றிய செய்திகள் பழந்தமிழ் இலக்கியங்களிலேயே இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்-தக்கது.

பட்டி மன்றம் தொடக்க காலத்தில் சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்ப ராமாயணம் என்றாற் போல் இலக்கியத்தைப் பொருளாகக் கொண்டு நடைபெற்றது. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் இப் போக்கிற்குத் தலைமை தாங்கினார். 'பட்டி மண்டபம்' என்ற தலைப்பிலேயே அவர் ஒரு நூலை (1963) வெளியிட்டுள்ளார்; அவரது 13 பட்டிமன்றத் தீர்ப்புகள் இந் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பட்டிமன்றத்தின் அடுத்த செல்நெறி (Trend) சமூகத்தைப் பற்றியதாக அமைந்தது; இந்நெறிக்குத் தலைமை தாங்கியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆவார். இக் காலகட்டத்தில் பட்டிமன்றம் சமூகம் பற்றிய சிந்தனைகளைப் பெரிதும் வெளிப்படுத்தியது. பட்டிமன்றத்தின் மூன்றாம் பரிமாணமாகக் குடும்பம் அமைந்தது. தமிழறிஞர் சாலமன் பாப்பையா இப்போக்கிற்குத் தலைமை தாங்கினார். கணவனா? மனைவியா?, தாயா? தாரமா?, மகனா? மகளா?, பிறந்த வீடா, புகுந்த வீடா? என்றாற் போல் குடும்பங்களின் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் நகைச்சுவையோடு பட்டிமன்றங்களில் விவாதிக்கப் பெற்றன. பட்டிமன்றத்தின் நான்காம் கட்ட வளர்ச்சி சினிமாவை மையமிட்டு அமைந்தது. இவ் வளர்ச்சி நிலைக்குத் திண்டுக்கல் லியோனி தலைமை தாங்கினார். கண்ணதாசனா, பட்டுக்கோட்டையா? பழைய பாடலா? புதிய பாடலா? என்றாற் போல் சினிமா தொடர்பான செய்திகள் பட்டிமன்றங்களில் அலசப் பெற்றன. பட்டிமன்ற வரலாற்றில் ஐந்தாம் கட்ட வளர்ச்சிப் போக்கு விழிப்புணர்வுச் சிந்தனை ஆகும். வாழ்க்கையில் முன்னேறப் பெரிதும் துணைபுரிவது திறமையா, அதிர்ஷ்டமா?, வாழ்க்கைப் பயணத்தில் திருமணம் சறுக்குப் பாதையா, திருப்பு முனையா?, சாலவும் நன்று எது? ஆலயம் தொழுவதா, நூலகம் செல்வதா?, வாழ்க்கையின் வரம் நண்பர்களா, நூல்களா?, எதிர்காலம் என்ற பெயரில் பெற்றோர்கள் குழந்தைகளை வதைக்கிறார்களா? விதைக்கிறார்களா?, என்றாற் போல் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டக்கூடிய தலைப்புக்களில் பட்டிமன்றங்கள் அமைந்தன. Information’ (செய்தி/தகவல்), Entertainment’ (பொழுதுபோக்கு) என்றும் இரண்டும் சேர்ந்த Info-tainment’ஆகப் பட்டிமன்றம் இக் காலகட்டத்தில வளர்ந்தது. என் தலைமையில் (பேராசிரியர் இரா.மோகன்) இயங்கிய அணி பெரும்பாலும் விழிப்புணர்வுச் சிந்தனைகளையே பட்டிமன்றங்களுக்குத் தலைப்புக்-களாகக் தந்தது.

பட்டிமன்ற வரலாற்றில் காரைக்குடி கம்பன் கழகமும், மதுரை அரசமரம் இசை இலக்கியச் சங்கமும் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, மதுரையைச் சுற்றியே பட்டிமன்ற நடுவர்களில் பெரும்பாலானோர் உள்ளனர். தமிழறிஞர் சாலமன் பாப்பையா, நகைச்சுவைத் தென்றல் கு.ஞானசம்பந்தன், முனைவர் இளசை சுந்தரம், தகைசால் பேராசிரியர் இரா.மோகன் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க பட்டிமன்ற நடுவர்கள் ஆவர். ஒருமுறை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவிடம் இப்படிக் குறிப்பிட்டார்: 'என் படத்திற்குக் கூட நான் இடைவேளை விடுகிறேன்; நீங்களோ தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக - இடைவெளியே விடாமல் - தொடர்ந்து பட்டிமன்றம் நடத்துகிறீர்களே, இது ஒரு பெரிய சாதனை தான்; வியப்புத்தான்.'

பட்டிமன்றம் கேட்பதிலே மதுரை மக்கள் தனி ஆர்வம் கொண்டவர்கள்; அமர்ந்து கொண்டு மட்டுமன்றி, மணிக்கணக்கில் நின்றுகொண்டே கேட்கும் பழக்கம் கொண்டவர்கள் அவர்கள். முன்பெல்லாம் கோயில் திருவிழாக்களில் பெரும்பாலும் பட்டிமன்றங்கள் நடத்தப்பெறும்; இப்போதோ திருமண வீடுகளில் கூட பட்டிமன்றங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தொலைக்காட்சியின் வருகை பட்டிமன்ற வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனையை ஏற்படுத்திவிட்டது; தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்றாற் போல் விழா நாட்களில் எல்லாம் பட்டிமன்றங்களை ஒளிபரப்புவது என்பது இன்று தொலைக்காட்சிகளில் இயல்பான நிகழ்ச்சி ஆகிவிட்டது. பட்டிமன்றம் சில நேரங்களில் பாட்டுமன்றமாகவும் மாறிவிட்டது.

'கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்பது போல் கடைக்கோடி மனிதனுக்கும் இதிகாசங்களின் மற்றும் தமிழ் இலக்கியங்களின் சுவையான செய்திகளைக் கொண்டு சேர்த்தது, மக்கள் இடையே நகைச்சுவை உணர்வை வளர்த்தது, விழிப்புணர்வை ஊட்டியது எனப் பட்டிமன்றங்கள் தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் 'பட்டிமன்றம் வளர்த்த தமிழ்' என்பது பல்வேறு பரிமாணங்களில் விரிவாகவும் முழுமையாகவும் ஆராயத்தக்க ஒரு பொருள் ஆகும்.