ஜல்லிக்கட்டு அவசியமா? – ஓர் ஆய்வு

முனைவர் இரா.செல்வி


ல்லிக்கட்டு வீர விளையாட்டு. தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. தமிழகத்தில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. இதைத் தடை செய்வது ஒட்டு மொத்த தமிழினத்தின் பாரம்பரியத்தை அவமதிப்பதுபோலாகும் என்பதுதான் ஜல்லிக்கட்டை ஆதரிப்போர் முன் வைக்கும் செய்தியாகும். தமிழராய்ப் பிறந்த யாவருக்கும் இது உடந்தைதான். ஆனால் காலங்கள் மாற மாற எத்தனையோ சமூகமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தோன்றிய எல்லா மரபுகளும் பின்னர் வந்த சந்ததிகளால் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆக்கப்பூர்வமான புது மரபுகள் தேவைப்படும்;போது தேவையற்ற பழமரபுகள் மீறப்படுகின்றன. சில சமயம் தேவையற்ற புதுமரபுகள் தோன்றவும் செய்கின்றன.

சங்ககாலத்தில் திருமணவாழ்வின் ஒரு நிகழ்வாக விளங்கிய ஜல்லிக்கட்டு 'ஏறுதழுவுதல்' என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டுள்ளது. முல்லை நிலத்தலைவியின் திருமணத்தின் பொருட்டு ஏறுதழுவுதல் நடைபெற்றது. முல்லை நிலத்தலைவியை விரும்பும் தலைவன் அவள் வீட்டில் வளர்க்கப்படும் காளையை அடக்கித்; தன்; வீரத்தை மெய்ப்பிப்பான். அவனுக்கு முல்லை நிலத்தலைவி மணம் செய்து கொடுக்கப்படுவாள். இந்தமரபு முன்பழந்தமிழ் இலக்கியங்களாகக் கருதப்படும் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு ஆகியவற்றில் காணலாகும் முல்லைத்திணைப்பாடல்களில் இடம்பெறவில்லை எனலாம்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான முல்லைப்பாட்டும் முன்பழழ்தமிழ் இலக்கியமாகும்.
103 அடிகள் கொண்ட இம் முல்லைப்பாட்டில் 22 முதல் 80 வரையிலான 57 அடிகளில் போருக்காக அமைக்கப்பட்ட பாசறை இருப்புப் பாடப்பட்டுள்ளது. ஆனால் ஏறுதழுவுதல் செய்தி இல்லை. இப்பாட்டை இயற்றிய நப்பூதனார் அவர்காலத்தில் ஏறுதழுவுதல் இருந்திருந்தால் அவசியம் பாடியிருப்பார். ஏறுதழுவுதல் வழக்கம் பற்றிய செய்திகள் எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில்தான் காணமுடிகிறது. அதன்பின் சிலப்பதிகார ஆய்ச்சியர்குரவை காதையில் அறியமுடிகிறது.

முல்லை நிலம் என்பது காடும் காடுசார்ந்த பகுதியாகும். இங்குவாழ்ந்த மக்கள் ஆநிரை மேய்த்து வாழ்ந்த இனக்குழுவினர். இவர்களது பண்பாட்டில் 'ஏறுதழுவுதல்'; பழக்கம் பேரரசு தோன்றியபிறகுதான் தோன்றியுள்ளது.

பின்பழந்தமிழ் நுலான கலித்தொகை நூல் பற்றிப் பலவித ஆய்வுக்கருத்துகள் நிலவுகின்றன. முதல் பாண்டியப் பேரரசு உருவான நிலையில் பாண்டியர்களின் ஆதரவோடு நிறுவப்பட்ட பிற்தமிழ்ச்சங்கப் புலவர்கள் பலரால் பாடப்பட்டதுதான் கலித்தொகைப்பாடல்கள் என்று அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். மேலும் முற்தமிழ்ச்சங்கத் தொகைநூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு ஆகியவற்றில் குறுநிலமன்னர்கள், மூவேந்தர்கள், வீரத்தலைவர்கள,; வள்ளல்கள் ஆகியோர்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் கலித்தொகையில் புராண, இதிகாசக் குறிப்புகளே உள்ளன. மேலும் மூவேந்தரின் மரபைப் போற்றவில்லை. மூவேந்தர்களில் மேம்பட்டவராகப் பாண்டியமன்னர்கள் புகழப்பட்டுள்ளனர். முல்லைக்கலிப்பாடல்களில் முல்லைத்திணைக்குறிய 'இருத்தல்' என்னும் உரிப்பொருள் இல்லை. பாண்டியர்கள் ஆதரவோடு பாடிய புலவர்கள் முந்தைய வீரயுக மரபைக் கைவிட்டு அவைக்களத்தில் வீற்றிருந்து மன்னர்களின் பெருமைகளைப் பாடியுள்ளனர். முல்லைக்கலியைப் பாடியவர் சோழமன்னன் நல்உருத்திரன். இவர் பாண்டியநாட்டில் வாழ்ந்தவர் எனத்தெரிகிறது. இவரது பாடல்களிலே பாண்டியநாட்டின் பெருமைதான் காணப்படுகிறது. என்பதான ஆய்வுக்கருத்துகளை முன்வைத்துள்ளனர் இதிலிருந்து ஏறுதழுவுதல் என்பது முதல்பாண்டிய பேரரசு தோன்றிய காலத்தில் உருவான ஒரு வீர விளையாட்டு என்பது தெளிவாகின்றது. ஆடவர்களின் வீரத்தை மெய்ப்பிக்கும் வீர விளையாட்டாகப் பாண்டியநாட்டு முல்லை நில மக்களால் இது உருவாகியுள்ளது. இதை நல் உருத்திரன் தனது கலித்தொகையில் பதிவு செய்துள்ளார் எனலாம்.

சொல்லப்போனால் ஏறுதழுவுதல் பழக்கம் ஆணாதிக்கத்தால் விளைந்த ஒன்றாகும். முன்பழந்தமிழர்களிடம் ஆண்மை என்ற தத்துவம் தோன்றியிருக்கவில்லை. பேரரசுகள் முழுமையாகத் தோன்றிய பின்பழந்தமிழர்களிடம்தான் ஆண்மை என்ற தத்துவம் கோலோச்சியது. ஆணாதிக்கம் மேலோங்கியது. அந்த ஆணாதிக்கத்தின் ஒரு வரவுதான் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு ஆகும்.

காளைகளை அடக்குபவன்தான் உண்மையான ஆண்மகனாகக் கருதப்பட்டான். ஏறு தழுவுதல் என்பது போர்க்களத்திற்கு நிகராகக் கருதப்பட்டுள்ளது. காளையின் கொம்புகளைக் கண்டு பின்வாங்கும் இளைஞனை மறுபிறவிலும் மணக்க விரும்பாதவர்கள் முல்லைநிலப் பெண்கள் என்பதைக் கலித்தொகை-முல்லைக்கலிப்பாடல்கள்; வழி அறியமுடிகின்றது. திருமண ஏற்பாடும் அதன்வழி நிகழ்ந்த ஏறுதழுவுதலும் பின்னாளில் நிலவுடமை ஆதிக்க சக்திகளால் நடத்தப்படும் வீரவிளையாட்டாக மாற்றம் அடைந்துள்ளது. இன்று அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் இடமாக, ஜல்லிக்கட்டுக் களம் நிலவுவதாக இக்கால இலக்கியப்படைப்பாளிகள் பதிவு செய்துள்ளனர்.

ராஜமய்யரின் 'கமலாம்பாள்' சரித்திரத்தில் தோற்றுப்போன காளையின் சொந்தக்காரரான ஜமீன்தார் தன் காளைக்குத்தான் பெரும் தண்டனை தருகிறார். காளையை நிறுத்தி உயிரோடு தோலுரிக்கச் சொல்கிறார்.

காளை என்பது ஆதிக்கசக்திகளின் அதிகாரமாகவுள்ளது. இந்த அதிகாரத்தை யாரும் அடக்கக் கூடாது. காளையை வளர்ப்பவர் தன் காளையை எவராலும் அடக்க முடியாது என்ற மனநிலையுடன் இருப்பார். அதை அடக்கிக் காட்டுகிறேன் என்று காளையை அடக்கவரும் வீரர்கள் சாவால் விடுவார்கள்.

சி.சு செல்லப்பா அவர்களின் 'வாடிவாசல்' நாவலில் வரும் ஜமீன்தார் தன் அதிகாரத்தின் அடையாளமாகத் தான் வளர்த்த காரிக் காளையைக் கருதுவார். அந்தக் காளையை அம்புலி என்ற வீரர் பிடிக்க முயன்று படுகாயம் அடைவாhர். உள்ளுக்குள் சீழ்ப் பிடித்து ஆறுமாதம் படுக்கையில் கிடந்து மாண்டு போவார். அவரது மகன் பிச்சி. வளர்ந்து பெரியவனாகித் தன் தந்தையின் சாவுக்குக் காரணமாக இருந்த காரிக்காளையை ஜல்லிக்கட்டில் அடக்கி வெற்றியுறுவான். தோற்றுப்போன காரிக்காளையால் தன் அதிகாரமும் கௌரவமும் அழிந்துபோனதாகக் கருதுவார் ஜமீன்தார். கோபத்தில் தான்வளர்த்த காளையை இரக்கமின்றித் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வார்.

இன்று ஜமீன் பரம்பரை இல்லை. அதிகாரம் இல்லை. சாதிப்பெருமையும் இல்லை. காளைகளைத் துன்புறுத்தாமல் தமிழினத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்றத்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என்கின்றனர்.

அதோடு ஆண்களைக் காளைகளோடு ஒப்பிடுகின்றார்கள் வீரத்தின் அடிப்படையில் ஒப்பிடுவதாகச் சொல்கிறார்கள். உண்மையில் வீரம் என்பது என்ன? காளைகளை அடக்குபவன்தான் சுத்தமான வீரனா? ஆண்மையாளனா? காளைகளை ஜல்லிக்கட்டில் அடக்காத இளைஞர்கள் வீரம் இல்லாதவர்களா? கடும் உழைப்பில் ஈடுபடுபவர் யாராக இருந்தாலும் வீரர்கள் என்பதுதானே உண்மை.

புறப்பொருள் வெண்பாமாலையில் 'பகட்டுமுல்லை' என்று ஒரு சொல்லாடல். வேளாளனை எருதோடு ஒப்பிட்டுக் கூறுவதுதான் பகட்டு முல்லை என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. வயல்வெளியில் நுகத்தடி பூண்டு உழைப்பது எருது. நடத்திச் செல்வதும் பாரம்தாங்குவதும் எருதின் தொழில். அதுபோல் குடும்பத்தை நடத்தியும் பிறருக்கு உதவிபுரிந்தும் வாழ்பவன் வேளாளன் என்று உழைப்பின் அடிப்படையில்தான் ஆணும் காளையும் ஒப்பிடப்பட்டுள்ளனர். இன்று கிராமப்புறங்களில் பல வீடுகளில் குடும்பச் சுமையைச் சுமப்பவர்களாகப் பெண்கள் இருக்கின்றார்கள். பெண்கள் மாடுபோல் பாடுபடுகின்றார்கள். ஆக பெண்களின் உழைப்பில் இருப்பதும் வீரம்தானே.

உடல் அடிப்படியில் பெண்கள் ஆற்றல் இல்லாதவர்கள் என்று தந்தைவழிச் சமூகத்தில் ஆணாதிக்கம் பல புனைவுகளை உருவாக்கியது. அதில் ஒன்றுதான் சிவன் சக்தி போட்டி நடனம். போட்டியில் சிவன் கால் தூக்கி ஆடி வெற்றியுறுகிறான். இறைவி பார்வதி கால் தூக்கி ஆட வெட்கப்பட்டு தோல்வியுறுகிறாள். இது ஆணாதிக்கப் புனைவு. இன்று சர்க்கஸ் கம்பனியில் எண்ணற்ற ஏழை பெண்கள் பார் விளையாட்டில் கால் தூக்கி விளையாடுகின்றனர். வெற்றி காண்கின்றனர். புராணச் செய்தியை வைத்துக் கொண்டு சிவன் பெரிதா? சக்தி பெரிதா? என்று பேசுவதும் சிவன்தான் பெரியவன் என்று விதண்டவாதம் புரிவதும் சரியில்லை.

ஆண்களோடு போட்டியிட்டுக் காவல் துறைப் பணியில் சேரலாம். திருடனைப் பிடிக்கலாம். ஆனால் எல்லா விசியத்திலும் ஆண்களுடன் போட்டிப் போடமுடியாது. ஜல்லிக்கட்டு ஆண்களுக்கே உரித்த வீர விளையாட்டு. இந்த விளையாட்டில் பெண்கள் கலந்து கொள்ள முடியுமா? என்று விதண்டவாதம் பேசுவோர் இருக்கின்றனர் மேலும் தன் மார்பில் பால்குடித்துக் கொண்டிருந்த சின்னஞ்சிறு பாலகனைப் போருக்கு அனுப்பினாள் சங்ககால வீரத்தாய். இவள் அல்லவா மறக்குடிப் பெண் என்று சங்ககாலப் பெண்களின் வீரம் குறித்துப் பெருமையுடன் போற்றுகின்றனர். சங்ககாலம் அடிக்கடி போர் நடை பெற்ற மன்னராட்சி காலம். தன் நாட்டு மன்னனுக்காக வீட்டில் இருந்த ஆண்கள் கட்டாயம் போருக்குச் சென்றே ஆகவேண்டும். அதனால் போரின் அவசியத்தை வலியுறுத்திப் புலவர்கள் பாடல்கள் புனைந்துள்ளனர்.

ஆடவரின் ஆளுமையாக வீரம் கற்பிக்கப்பட்டது. போரக்களத்தில்; ஆயிரம் யானைகளை வெட்டி வீழ்த்திய வீரனுக்குப் பரணிபாடினார்கள். ஏறுதழுவுதல் விளையாட்டில் காளைகளை அடக்கியவன்தான் ஆண்மைமிக்கவன் என்று புகழப்பட்டான.; சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் ஆநிரைகளைக் கவர்ந்து வெற்றிகண்ட வீர மறவர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. கொற்றவைக்குத் தங்கள் தலையைத் தாங்களாகவே அறுத்துப் பலி கொடுத்த செய்தி காணப்படுகிறது. இதைப் பாரம்பரியம் என்று பின்பற்றமுடியுமா? இரண்டு உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி முற்றுப்பெற்றுவிட்டது. மக்களாட்சியில் மக்கள் சமதர்ம வாழ்வியலுக்குப் போராடிவருகின்றனர். மன்னராட்சியில் பின்பற்றப்பட்ட பல வழக்கவழக்கள் மக்களாட்சிக்குப் பொருந்திவராது. கட்டிக்காப்பாற்ற வேண்டிய மரபு எது? விட்டுவிடவேண்டிய மரபு எது? என்று உலகில் பிறந்த மனித இனம் ஆராய்ந்து பார்த்துதான் ஆக்கப்பூர்வமான மரபுகளைமட்டும் காப்பாற்றிவருகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் குற்றமல்ல என்று நம் முன்னோர்களும் கூறியுள்ளனர்.

ஏறுதழுவுதல் என்ற வீரவிளையாட்டில் வெற்றி பெற்றவனைத்தான் சங்ககாலத் தலைவி மணந்தாள் என்று வீரயுக காலத்தைப் போற்றுகிறவர்கள். நடைமுறைத் தலைவிகளை எண்ணிப்பார்க்க மறந்துவிடுகின்றனர் வரதட்சிணை காரணமாகக் கல்யாணம் ஆகாத முதிர்கன்னிகளைப் பற்றி யோசிப்பதில்லை.

இன்றைய ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்குப் பெரும் சாபக்கேடாக வரதட்சிணை நிலவுகிறது. எந்தப் பெண்ணும் காளையை அடக்கித் தங்களை மணந்து கொள்ளுங்கள் எனக் கட்டளை இடவில்லை. வரதட்சிணை கேட்காமல் மணந்து கொள்ளுங்கள் என்றுதான் கோரிக்கை வைக்கின்றனர். அவர்கள் விரும்புவது வரதட்சிணை வாங்காமல் திருமணம் புரிய சம்மதிக்கும் ஆண்மகனைத்தான். அத்தகையவன்தான் சிறந்த மாவீரன்.

வரதட்சிணை என்ற பழக்கத்தால் பெண்கள் முதிர்கன்னிகளாக வாழும் அவலம். பெண் சிசுக்கொலை என்ற கொலைவெறி பாதகமும் உருவாகியிருக்கிறது. பெண்ணிற்கு எதிராக நடக்கும் இத்தகைய அநீதிகள் என்னும் காளைகளை அடக்கும் இளைஞர்கள்தாம் இன்றயகாலத்தின் சுத்தமாவீரர்கள். இத்தகையோரைத்தான் பெண்கள் மணக்கவும் சம்மதிப்பார்கள்.

நாங்கள் ஆண்கள்; மதிப்புமிக்கவர்கள். நாங்கள் உங்கள் பெண்களை மணக்கவேண்டும் என்றால் இலட்சக்கணக்கில் பொன் பொருள்தர வேண்டும் என்கிறார்கள். வரதட்சிணை குறைவாகக் கொண்டுவரும் பெண்களுக்குக் கொடுமை புரிகின்றார்கள். சங்ககாலத்தில் வரதட்சிணைக் கொடுமை இல்லை. ஆகவே நான் வரதட்சிணை வாங்கமாட்டேன் என்று கூறுவதுதான் உண்மையான வீரமரபாகும். ஜல்லிக்கட்டைப் பாரம்பரிய விளையாட்டு என்பவர்கள் இன்றைய சூழலில் அடக்கவேண்டியது பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் என்னும் காளைகளைத்தான்.

ஆனால் ஆண்மை என்ற தத்துவம் மேலோங்கிய காரணத்தால் பெண் இனத்தின் மீதும் ஒடுக்கப்பட்ட இனத்தின் மீதும் இயற்கை மீதும் வன்தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
உலகத்தில் 'ஆண்மை' நிற்கும்வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்படவேண்டும். அது அழியாமல் பெண்களுக்கு விடுதலை சாத்தியம் இல்லை. ஆண்மை தத்துவத்தால்தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கின்றார்கள். சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ஆண்மைக்கு உரிமையாக்கப்பட்டன. சுதந்திரமும் வீரமும் ஆண்மைக்குத்தான் உண்டென்று ஆண்மக்கள் முடிவுகட்டிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று தந்தை பெரியார் தனது 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூலில் கூறியுள்ளார். இதைத்தான் மேலைநாட்டுப் பெண்ணியவாதிகளும் முன் வைத்தனர். இந்த ஆண்மை பெண்விடுதலையை மட்டும் அல்ல ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சகல வன்முறைகளுக்கும் காரணமாக நிலவுகின்றது.

ஆகவேதான் காந்தி அடிகள் வலிமை பற்றிக் கூறுகையில் உடல்வலிமையினும் சிறந்தது மனோ வலிமை என்றார். ஆண்மை உடல்வலிமையை நம்புவது. இம்சை பண்பு கொண்டது. பெண்மை மனவலிமையை நம்புவது. அகிம்சை குணம் நிறைந்தது. சாத்வீக குணம் கொண்ட பெண்ணோ ஆணோ கோழைகள் அல்லர். வலிமைமிக்க மனோபலம் கொண்டவர்கள் ஆவார்கள். மனவலிமைதான் யாராலும் வெல்லமுடியாத வீரம் ஆகும். இந்த வீரத்தை மனிதர்கள் யாவரும் பின்பற்றும் நிலையில்தான் உலகில் போர் பூசல் தானாக ஒழியும். ஜல்லிக்கட்டும் யாரும் விரும்பாத ஒரு விளையாட்டாகத் தானாக மறைந்தும் போகும்.

காலம் மாறிவிட்டது. நாம் அடக்க வேண்டியது வாய்பேசாத அப்பாவி காளைகளை அல்ல. தீண்டாமை, பாலியல்வன்முறை, இலஞ்சம், வரதட்சிணை, ஊழல் போன்ற அராஜகக் காளைகளை. இதற்கு இளைஞர்கள் ஒன்று சேரந்து தீர்மானம் எடுக்கட்டும், நாளை மலரவிருக்கும் சமத்துவ உலகத்திற்காகக் குலுவை இடட்டும். பொங்கல் வைக்கட்டும்...


முனைவர் இரா.செல்வி
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை
பூசாகோ கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
- 641014
தமிழ்நாடு, இந்தியா


 

 

 

 

 

 

 

 

நன்றி: தி டிடெக்டிவ் ரிப்போர்ட் (ஜனவரி 1-15-2016)