விபுலானந்தரின் 'யாழ்நூலுக்கு' அடியெடுத்துக் கொடுத்தது ...

முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்

மிழர், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் அவர்கள் வாழ்வில் இசையும் இலக்கியமும் பெற்ற இடம் மிக உயரியது. செவியையே அளவு கோலாகக் கொண்டு மிகவும் நுணுக்கமான செய்யுள் வகைகளையும் அவற்றை இசையோடு பாடுவதற்குப் பக்க வாத்தியமாக அமைத்துக் கொண்ட இசைக் கருவிகளின் வகைகளையும் மனம் கொள்ள, வியப்பாக இருக்கிறது. 'தேவை கண்டு பிடிப்புக்களின் தந்தை' என்ற முதுமொழி தான் நினைவுக்கு வருகிறது.

சங்க காலத்தில், இசைக் கருவிகளைத் தோற் கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக் கருவிகள், மிடற்றுக் கருவிகள் என்னும் நான்கு பெரும் பிரிவுகளுள் அடக்கியிருந்தார்கள். இவற்றுள் விபுலாநந்த அடிகளாரைக் கவர்ந்தது 'யாழ்' என்னும் நரம்புக் கருவியாகும். இந் நரம்புக் கருவி பற்றிய ஆராய்ச்சி, ஒரு துறைசால் ஆராய்ச்சி அல்ல. இம் முயற்சி, இசை, இலக்கியம், அறிவியல் முதலிய பல்துறை சார்ந்த பட்டறிவு பெற்ற ஒருவரால் தான் சாத்தியமாகி இருக்கக் கூடும். ஒரு காலத்தில் பாணர்களால் பெரிதும் பயன் படுத்தப்பட்டு வந்ததும் இன்று வழக்கொழிந்து போனதுமான இந்த அற்புதமான இசைக் கருவியை அதன் பல்வேறு வடிவங்களையும் அவற்றின் பயன்பாடு பற்றிய விபரங்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது என்பது எமது அடிகளார் போன்ற பல்துறைசால் அறிவும், அயரா முயற்சியும் கொண்ட ஒருவரால் தான் சாத்தியமாகி இருக்கக்கூடும்.

நிலத்திற்கு ஒரு பண் வகுத்த தொல்காப்பியர், எல்லா நிலத்திற்கும் உரிய இசைக் கருவியாக யாழையே குறிப்பிடுகிறார். தொல்காப்பியத்திலும், பத்துப்பாட்டிலும், எட்டுத்தொகை நூல்களிலும், காப்பியங்களிலும், தேவாரங்களிலும், ஆழ்வார்கள் பாசுரங்களிலும் பேசப்பட்ட தமிழரின் அடையாளமான இந்த யாழ் என்னாயிற்று என்னும் தேடலின் விளைவே சுவாமி விபுலாநந்தரின் யாழ்நூலாகும். இவரை, இத் துறையில் முயன்று, இத்தகைதொரு சாதனை செய்யத் தூண்டிய, 'யாழ்' என்னும் அந்தத் தமிழ் இசைக்கருவி, சங்க காலத்தில் வாழ்ந்த எவரால், எவ்வாறு பயன் படுத்தப்பட்டது, அவர்களின் வாழ்வாதாரமாக இவ்வியாழ் எவ்வாறு இருந்தது போன்ற விபரங்களைத் தொட்டுப் பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.

எமது பாரம்பரியத்தை அறிவதற்கு இன்று எமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களுள் மிகவும் தொன்மை வாய்ந்தவை தொல்காப்பியமும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் தொகை நூல்களுமேயாகும். தொல்காப்பியர் காலத்தில், 'நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும்' பயின்று வந்த வழக்காறுகளுக்கு இலக்கணம் கூறும் பகுதியாகும் பொருளதிகாரமாகும். தொல்காப்பியம் கூறும் செய்யுளியலைப் பற்றுக் கோடாகக் கொண்டது அக்கால இயற்றமிழ். செய்யுளியலுக்கு இன்றியமையாதது இசைத்தமிழ். இவ்விசையையும் இலக்கியத்தையும் நிகழ்த்திக் காட்டுவது நாடகத் தமிழ். செய்யுள், இயல், இசை, நாடகம் ஆகிய நான்கும் தமிழுக்குச் சிறப்பாக அமைந்தவை. இவை பற்றிய உண்மைகள் காலம் காலமாகத் திருத்தியும் திரித்தும் கூறப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் இவை பற்றி எழுந்துள்ள விழிப்புணர்ச்சியையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

இங்கு, இக் கட்டுரையை, விரிவு அஞ்சி, சங்க, சங்க மருவிய கால இலக்கியங்களுக்கு மட்டுப் படுத்திக் கொள்கிறேன். இசை என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் இருந்த போதிலும்; 'வசப்படுத்துவது' என்னும் பொருள்; பொருத்தமாக அமைகிறது எனலாம். பாணர்களாலும் மன்னர்களாலும், பெருநிலக் கிளார்களாலும் இவ்விசை காலம் காலமாகப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. பாணர், பொருநர், கூத்தர், வயிரியர், கோடியர், விறலியர் என்று பல்வேறு வகைப்பட்ட இசைக்கலைஞர்கள் சங்க காலத்தில் வாழ்ந்து இசைக் கலையை வளப்படுத்தி இருக்கிறார்கள். 'பண்' அமைத்துப் பாடுவதால் இவர்கள் பாணர்கள் எனப்பட்டனர். பாணரும், புலவரும் இல்லாதிருந்தால் கட்டிடம், சிற்பம், ஓவியம் போன்ற ஏனைய கலைகளைப் போல இலக்கியக் கலையும் எமக்கு இல்லாது ஒழிந்திருக்கும். இசையும் இலக்கியமும் சங்க இலக்கியங்கள் என்னும் பெயரில் எமக்கு இன்று கிடைக்கக் காரணமானவர்கள் புலவர்களும் பாணர்களுமே. இவர்கள், இசையையும் இலக்கியத்தையும் அழிந்து விடாது கர்ணபரம்பரையாகப் பல நூற்றாண்டுகளாகக் காவி வந்திருக்கிறார்கள்.

பாணர், பாண்மகன் என ஆண்மக்களும் பாடினி, பாண்மகள் எனப் பெண்மக்களும் அழைக்கப் பட்டனர். பாணர்களில் இசைப்பாணர், மண்டைப் பாணர், யாழ்ப்பாணர் எனப் பல பிரிவினர் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் பற்றிய குறிப்புக்கள் பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருணராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம் போன்ற இலக்கியங்களில் சிறப்பாகக் கூறப்படுகிறது. அவர்கள் கையாளும் யாழின் அளவு கொண்டு சிறுபாணர் என்றும் பெரும்பாணர் என்றும் அழைக்கப்பட்டனர். 'இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ' செல்லும் பாணர்களைச் சிறுபாணாற்றுப்படையும் 'இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி' என்று பெரும்பாணாற்றுப்படையும் குறிப்பிடுகின்றன.

பெரும்பாணாற்றுப்படையில் பாணர்களது இயல்பும் அவர்கள் தழுவிச் செல்லும் யாழும் மிக அழகாக வர்ணிக்கப்படுகிறது. கொழுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது, பாணர்கள் தம் சுற்றம் சூழ இசைக்கருவிகளுடன் சென்று கொண்டிருக்கிறார்கள். வறுமை துரத்த, வழியில் எவ்விடத்திலும் தங்காது, தமது வயிற்றுத் தீ தணிப்பாருளரோ எனப் புரவலரைத் தேடி அலைகிறார்கள். அவர்களது வறுமையின் கொடுமையிலும் தாம் பற்றி வரும் இசைக் கருவிகளை மிகவும் கவனமாக உறையிலிட்டு மூடி மழையும் வெய்யிலும் தாக்காதவாறு பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.

'பாணன் பறையன் துடியன் கடம்பன் என்றின் நான்கல்லது குடியுமில்லை' என்கிறது புறநானூற்றுப் பாடல் ஒன்று. இங்கு இசை பாடும் பாணனுக்கு முதலிடம் கொடுக்கப் பட்டிருப்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. இசைக் கலைஞர் தம் கலைக்கு ஈடாக நாடும் ஊரும் பரிசாகப் பெற்றமையைப் புறநானூறு சிறப்புறக் கூறுகிறது.

முடியுடை மூவேந்தரும் பறம்புமலையை முற்றுக்கையிட்டுப் பாரியைப் படைப் பலத்தால் வெல்ல முயன்றும் முடியாதபோது, மூவேந்தர்களிடம் கபிலர் கூறியதாக வரும் புறநானூற்றுப் பாடல் ஒன்று இசை மன்னர்களால் போற்றப்பட்ட தன்மையை அழகுறக் கூறுகிறது.

'அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொள்
முரசின் மூவிரும் முற்றினும்
.......................
யானறிகுவன் அது கொள்ளும் ஆறே
சுகிர்புரி
நரம்பின் சீறியாழ் பண்ணி
விரைஒலி
கூந்தல் நும் விறலியர் பின்வர
ஆடினிர்
பாடினிர் செலினே
நாடும்
குன்றும் ஒருக்கீயும்மே.'

போரினால் வெல்ல முடியாத பாரியின் வீரத்தையும் இசையினால் வெல்லத்தக்க அவனது இசை ஆர்வத்தையும் சிறப்பித்துக் கூறுகிறது இப் பாடல். இசைக்காகப் பாரி மன்னன் பறம்பு மலையைச் சூழ இருந்த முந்நூறு ஊரையும் புலவருக்குப் பரிசாக ஈந்ததையும் தன் பாடல்களில் பதிவு செய்திருக்கிறார் கபிலர். சங்க காலத்தில் இசை அத்துணை பெருமதிப்பைப் பெற்றிருந்திருக்கிறது.

தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தனது வீரத்திற்கு நிகராகப் புலவர்களை மதித்தான்.

'ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி
மருதன் தலைவன் ஆக,
உலகமொடு
நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர்
பாடாது வரைக, என்நிலவரை'  என்பது பாடல்.

செந்நாப் புலவர் வாக்கிற்கு அத்தனை உயரிய இடம் கொடுத்து வஞ்சினம் கூறும் அளவுக்குப் புலவர்கள் சமூகத்தில் உயரிய தானத்தை வகித்தார்கள்.

மன்னனையும் மக்களையும் தம் இசையால் வசப்படுத்துவதைத் தமது தொழிலாகக் கொண்டு வாழ்ந்த கூட்டம் ஒன்று தமிழ் நாட்டில் அக் காலத்தில் இருந்திருக்கிறது. இசையும் இசைக் கலைஞர்களும் பெரிதும் மதிக்கப்பட்டு ஆதரிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தரித்திரத்தின் எல்லையில் இருந்ததையே சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இப் பாணர்களின் இயல்பு பற்றிப் பெரும்பாணாற்றுப்படை சிறப்பாக விளக்குகிறது.

'பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரம்
தேரும் பறவை போலக்
கல்லென்
சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென்
யாக்கைப் புலவுவாய்ப் பாண!'

பழுத்த மரத்தைத் தேடித் திரியும் பறவைகளைப் போல அரும்பசியோடு வாடி வருந்தும் சுற்றத்தோடு, உணவு தந்து தம்மை ஆதரிப்பாரைத் தேடி, அலைகிறான் பாணன். அவன், தன்னில் தங்கியிருக்கும் பெரும் சுற்றம், அடுத்த நேர உணவிற்கு வழியற்ற வறுமை, சுற்றத்தின் பசி போக்க முடியாத இயலாமை, என்று இத்தனையையும் காட்டி நிற்கும் அழகிய வரிகள் இவை. இது தான் சங்க இலக்கியம் காட்டும் பாணனது இயல்பு. சென்னைத் தெருக்களில் இன்றும் காணும் குறவர் சமூகம் ஞாபகத்திற்கு வருகிறது.

இத்தகைய பாணனால் பயன் படுத்தப்பட்ட இசைக் கருவிகள், மிடற்றுக் கருவி, குயிலுவக் கருவி என இருவகைப்படும். மிடற்றுக் கருவி என்பது இசை ஒலிகளையும் பாக்களையும் ஒருங்கே நிகழ்த்தவல்ல கருவி, அது மனிதனது மிடறு. இன்று நாம் இதனைச் சாரீரம், கண்டம், குரல் என்கிறோம். சிந்தாமணி ஆசிரியர் மிடற்றுக் கருவியை வீணை என்றே குறிப்பிடுகிறார்

இசைப் பாக்களின் இசையையும் பாணியையும் நிகழ்த்த வல்லதும் மனிதர்களால் செய்யப் பட்டதுமான கருவிகள் எல்லாம் குயிலுவக் கருவிகளாகும். குயிலுவம் என்பது குயிலுதல் அதாவது ஒலித்தல் என்னும் பொருள்படும். இவை மனிதனின் வாய், கை, விரல், கால் முதலிய உறுப்புக்களால் ஒலிக்கப் படுவன. மிடற்றுக் கருவி அல்லாத சகல இசைக் கருவிகளும் குயிலுவக் கருவிகளாகும்.

'பாடிய வாரத் தீற்றினின்றிசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகளெல்லாம்' என்று சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை குயிலுவக் கருவிகள் பற்றிக் கூறுகிறது. குயிலுவக் கருவிகள், தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி என நான்கு வகைப்படும். இக் கருவிகளில் குயிலுதலாகிய தொழில் செய்தல், மீட்டல், ஊதல், கொட்டல் என மூவகைப்படும். இவற்றில் நரம்புக் கருவி, இழுத்துக் கட்டப்பட்ட நரம்புகளை மீட்டுவதனால் இசையொலியை எழுப்பும். விரலால் மீட்டுபவை, குச்சியால் மீட்டுபவை, வில்லால் மீட்டுபவை என மீட்டுவது மூவகைப்படும்.

சங்க காலத்தில் யாழ், பறை, பதலை, தொண்டகம், ஆகுவீ, தட்டை, எல்லரீ, தடாரி, குழல், வயீர் (ஊதுகொம்பு), பாண்டில், சங்கு முதலிய குயிலுவக்; கருவிகள் கலை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இவ்விசைக் கருவிகளுள் யாழ் என்னும் நரம்புக் கருவி சங்க இலக்கியம் கூறும் மிகப் பழமை வாய்ந்த வாத்தியமாகும். சங்க இலக்கியங்களில் வில்யாழ், சீறியாழ், பேரியாழ் என்னும் யாழ் வகைகள்; பேசப்படுகின்றன.

தொல்காப்பியர் யாழின் பகுதியைக் கருப்பொருள் வகையில் ஒன்றாகக் கூறுகிறார்.

'தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி
யாழின் பகுதியொடு தொகை,
அவ்வகை
பிறவும் கருவென மொழிப' – தொல். அகத்திணையியல்.

யாழின் பகுதியின் பெயர், தொகை, முறை, பொழுதுரிமை என்பன இதிலிருந்து பிறக்கின்றன.

'அருளாயாதலோ கொடிதே இருள்வரச்
சீறியாழ்
செவ்வழி பண்ணி யாழநின்
காரெதிர்
கானம் பாடினேமாக'

என்னும் புறநானூற்றுப் பாடலில், மாலைக் காலம் வந்த அளவில் சீறியாழில் இரங்கற் பண்ணாகிய செவ்வழி என்னும் பண்ணில் வாசித்து உனது காட்டைப் பாடினோம், என்றமையால் முல்லை நிலமும் கார் காலமும் மாலைப் பொழுதும் செவ்வழிப் பண்ணிற்கு உரியன என்பதுவும் அது இரங்கற் பண் என்பதுவும் பெறப்பட்டன. இவ்வாறே ஐவகை நிலத்திற்கும் அவ்வவற்றிற்குரிய உரிப்பொருள், யாழ், பண், சிறுபொழுது முதலியன பாடல்களில் பயின்று வரக் காணலாம். நெய்தலுக்குரிய சிறுபொழுது எற்பாடு. இது விளரிப்பண் பாடுவதற்குரிய காலம். மாலையில் செவ்வழிப் பண்ணும் காலையில் மருதப்பண்ணும் வாசிக்க வேண்டும் என்பது இசைநூன் மரபு.

சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியரும் உரையாசிரியரான அடியார்க்கு நல்லாரும் தத்தம் உரைகளில் 'யாழ் நால்வகைப்படும்' என்றும் இந் நான்கு யாழுக்கும் உறுப்புக்கள் ஒன்றே போல் அமைந்திருக்கின்றன என்னும் பொருள்பட அவற்றின் உறுப்புக்களையும் கூறுகிறார்கள். பேரியாழ், மகரயாழ், சடகோபயாழ், செங்கோட்டுயாழ் (சீறியாழ்) என்னும் நான்குமே சிலப்பதிகார  காலத்தில் பெரு வழக்காக இருந்திருக்கின்றன். இவை பற்றி மணிமேகலை, பெருங்கதை, சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.

கல்லாடம் என்னும் நூல், நாரதயாழ், கீசகயாழ், தும்புருயாழ், மருத்துவயாழ், சகோடயாழ், மகதியாழ், கச்சபியாழ் என்னும் வேறும் சில யாழ் வகைகளைப் பற்றிக் கூறுகிறது. 1898 ஆம் ஆண்டு கந்தமுத்துப்பிள்ளை அவர்கள் இயற்றிய 'நடனாதி வாத்யரஞ்சனம்' என்ற நூலில்; திக்குச்சிகையாழ், வராளியாழ், வல்லகியாழ் என்ற வேறும் மூன்று யாழ்களையும் குறிப்பிடுகிறார் என்கிறார் டாக்டர் ..வரகுணன் அவர்கள் (யாழ்நூல் - பாணர்வழி). இப்படி யாழ் காலப்போக்கில் பலவாகப்; பெருகிப் பாவனையில் இருந்து, பின் மறைந்திருக்கின்றது.

 'பாடுபவன் தன் மிடற்றால் பாடிக்கொண்டே கருவியையும் இசைக்கவல்லதாயும்;, பண், சுதி, பாணி என்னும் மூன்றும் ஒருங்கே பிரதிபலிப்பதாயும், 12 சுரஸ்தானங்களையும் எல்லா ஸ்தாயிகளிலும் ஒருங்கே சுத்தமாய் நிலையாக அமையப் பெற்றதாயும்;, ஒவ்வொரு சுரத்திற்கும் உரிய சுரஸ்தானங்களின் அகநிலையையும் அவற்றின் புறநிலையையும் எளிதில் குயிலுவதற்கு ஏற்ற வசதியான 'கருவி அமைப்பை' உடையதாகவும் உள்ள வாத்தியக்கருவி யாழ் ஒன்றே. என்கிறார் டாக்டர் ..வரகுணன், (யாழ்நூல்பாணர் கைவழி). மேலே, கூறப்பட்ட யாழ்வகைகளில் முக்கியமானவையாகக் கூறப்பட்டவை வில்யாழ், பேரியாழ், மகரயாழ், சடகோபயாழ், செங்கோட்டுயாழ் (சீறியாழ்) ஆகும்;.

1. வில்யாழ்இதுவே ஆதி யாழ் என்று கருதுவதற்குப் போதிய ஆதாரங்கள் உள. இவ்வியாழ் பாணர்களால் கையாளப்பட்டதாகக் கூறப்படவில்லை. மாறாக, காட்டில் ஆநிரை காக்கும் இடையன் ஒருவனால் கையாளப்பட்டதாகக் கடைச்சங்கப் புலவரான கடியலூர் உருத்திரங் கண்ணனார்; பாடிய பெரும்பாணாற்றுப்படையில் கூறப்படுகிறது. பெரும்பாணாற்றுப் படை தவிர்ந்த வேறு எந்த நூலிலும் இவ்வியாழ் பற்றிக் கூறப்;பட்டதாகத் தெரியவில்லை. பரிபாடலில் இவ்வியாழ் பற்றிய சிறுகுறிப்பு ஒன்று உண்டு. இடையனின் கை வண்ணத்தாலும் இசை நுண்ணறிவாலும் செய்யப்பட்ட இவ்வியாழ் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் பகுதி படித்து இன்புறுதற்குரியது.

காட்டில் மாடு மேய்க்கும் இடையன் ஒருவன், செருப்பணிந்ததனால் வடுவான கால்கள், உரமேறிய கைகள், உறி காவிக்காவித் தழும்பேறிய தோள்கள், பால் மணக்கும் தலைமயிர், மாலை அணிந்த கழுத்து, அரையில் உடுத்த ஆடையின் தலைப்பு தொங்கும் தோள், புல்லாங்குழல் வாசிக்கிறான். பொழுது சாய்கிறது. அவன், தன் கைவண்ணத்தால் செய்த வில்யாழ் கொண்டு குறிஞ்சிப் பண் இசைத்தபடி ஆயர்குடியைக் கடந்து மாடுகளின் காப்பகமான தொழுவத்தை அடைகிறான் என்பது பாடல்.

6 சாண் நீளமும் 6 விரலுக்குக் குறையாத சுற்றளவும், உள்ளே தொளையை உடையதுமான குமிழமரக் கொம்புகளை வில்லாக வளைத்து, மரல் நாரில் திரித்த கயிற்றை நாணாகக் கட்டி ஒரே அளவான விற்கள் ஏழு தயாரிக்கப்பட்டு, பின் அவை ஏழும் ஒன்றாகப் பிணிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டது இவ் வில்யாழ். இவ் வில் ஏழும் ஒரே அளவினதாக இருந்த போதிலும் நாண்கள் தாழ்ந்தும் உயர்ந்தும் கட்டப்பட்டதனால் நாண்களின் நீள் அளவு வேறு பட்டிருக்கும். வேடன் கைவண்ணத்தில் அமைத்த வில்யாழ் ஏழு நரம்புகளைக் கொண்டதாய் குறிஞ்சிப் பண் இசைப்பதற்குரியதாக அமைந்திருந்தது. வில்யாழிலிருந்து எழுந்த ஓசையைப் பல்கால் வண்டுகள் தமது இனத்தின் ரீங்காரம் என்று கருதிக் காது கொடுத்துக் கேட்கும்.

'.....................................குமிழின்
புழற்கோட்டுத்
தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா
ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற்
பறவை கிளைசெத்து
ஓர்க்கும்
புல்லார்
வியன்புலம் போகி முள்ளுடுத்து
எழுகா
டோங்கிய தொழுவுடை வரைப்பில்' – பெரும்பாணாற்றுப்படை

'பல்காற் பறவை கிளை செத்து ஓர்க்கும்' என்னும் அடிகளுக்குச் சுவாமி விபுலாநந்தர் கொடுக்கும் விளக்கம் நோக்கத்தக்கது. 'வண்டின் இமிர்தல், அண்மையிலுள்ளோருக்கு மாத்திரம் புலப்படுதல் போல வில்யாழின் இசையும் மெல்லென்ற முரற்சியாய் அண்மையிலுள்ளாருக்கு மாத்திரம் புலப்படுவது. உள்ளே துளையுடைய குமிழங்கொம்பு, வில்யாழில் பத்தராகவும் கோடாகவும் அமைந்து நின்றதால் ஒலி பல்குதற்கு இடமில்லாது போயிற்று. பத்தர் என்னும் உறுப்பு தனியாக அமைந்து பெரிதாகுமிடத்து ஒலி பல்கும். வில்யாழுக்குப் பயன் படுத்திய குமிழங்கொம்பு இனிய ஓசை பெறுதற்கு இடமாயிருத்தல் கண்டு பத்தர் செய்வதற்கு அம் மரமே தக்கதெனக் கொண்டனர்.' – சுவாமி விபுலானந்தர், யாழ்நூல்.

2. பேரியாழ்: பேரியாழ் அதன் அமைப்பில் ஏனைய மூன்று யாழ்களை ஒத்திருந்த போதிலும் எண்ணிக்கையில் அதிக அளவு நரம்புகளைக் கொண்டிருக்கும். இது 21 நரம்புகளும் 1000 கோல்களும் கொண்டு விளங்கியதாக இசை நூல்கள் கூறுகின்றன. பேரியாழ் ஏனைய மூன்று யாழ்களை விட மிகப் பருமனாகத் தான் இருந்திருக்க வேண்டும். பேரியாழுக்கு 'பெருங்கலம்' என்ற பெயரும் உண்டு. பேரியாழ், 12 சாண் கோட்டையும், ஒரு சாண் வணரையும் (வளைவு), 12 சாண் பத்தரையும், அதற்கேற்ற ஆணிகளையும் திவவுகளையும் உந்தியையும் பெற்று ஆயிரங் கோல் (புரிநரம்புகள்) தொடுத்து இயல்வது. இவ்வரிய பேரியாழ் முதற் சங்க காலத்தில் வழக்கில் இருந்ததாகவும், முதற் கடல்கோளில் அழிந்து போனதாகவும் நூல்கள் வாயிலாக அறியக் கிடக்கிறது.

'பேரியாழினைப் பொறுத்தவரை, அதன் உருவம் நமது நாட்டில் கிடைக்கப் பெறவில்லை. கடல்கோளின் பின் தமிழர் கடல் கடந்து சென்று குடியேறிய நாடுகளில் இக் கருவியின் உருவத்தினைக் காணக்கூடியதாக உள்ளது' என்கிறார் சுவாமி விபுலாநந்தர். முதற் கடல்கோளை அடுத்து இடைச் சங்க காலத்தில் வேறு ஒரு பேரியாழ் இருந்திருக்கிறது. இந்தப் பேரியாழ் ஆதிப் பேரியாழை விடச் சிறியதாக இருந்திருக்க வேண்டும். பெரும்பாணாற்றுப்படையில் பாணர் பேரியாழைத் தம் கையில் எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்றதாகக் கூறப்படுகின்றது. எனவே இது முதற்சங்க காலத்தில் இருந்த பேரியாழை விடச் சிறிதாகவும் இலகுவாகக் காவிச் செல்வதற்கு வசதியான அளவினதாகவும் இருந்திருக்க வேண்டும் என்று துணியலாம். சுவாமி விபுலானந்தர் பேரியாழும் ஏனைய யாழ்களும் வில்யாழின் வளர்ச்சியே என்கிறார்.

யாழ் வாத்தியத்தின் அமைப்புப் பற்றி ஆற்றுப்படை நூல்கள் மிக விரிவாகக்; கூறுகின்றன. பொருணராற்றுப்படையில் கூறப்படும் யாழினை ஆராயும் போது, யாழின் அமைப்பு, இன்னிசையை வெளிக் கொணரும் வகையில் அமைக்கப்பட்ட அக் கருவி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட மரம், தோல் முதலிய உபகரணங்கள், அவற்றைப் பொருத்துவதில் கையாண்ட நுணுக்கங்கள், இவை பற்றிய பாணனின் அறிவு முதலியன படித்து இன்புறுவதுடன் அமையாது வியப்படையவும் வைக்கிறது.

'குளப்புவழி அன்ன சுவடுபடு பத்தல்
விளக்கு
அழல் உருவின் விசியுறு பச்சை
எய்யா
இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர்
ஒழுகிய தோற்றம் போலப்
பொல்லம்
பொத்திய பொதியுறு போர்வை
அளைவாழ்
அலவன் கண் கண்டு அன்ன
துளைவாய்
தூர்ந்த துரப்பமை ஆணி
எண்ணாட்
திங்கள் வடிவிற்று ஆகி
அண்ணா
வில்லா அமைவரு வறுவாய்ப்
பாம்பணைந்
தன்ன ஓங்கிரு மருப்பின்
மாயோள்
முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண்
கூடிருக்கைத் திண்பிணித் திவவின்
ஆய்
தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை
போகிய விரலுளர் நரம்பிற்
கேள்வி
போகிய நீள்விசித் தொடையல்
மணங்கமழ்
மாதரை மண்ணி அன்ன
அணங்கு
மெய்ந் நின்ற அமைவரு காட்சி
ஆறலை
கள்வர் படைவிட அருளின்
மாறுதலை
பெயர்க்கும் அருவின் பாலை'

என்று
பொருணராற்றுப்படையில் யாழ் வருணிக்கப்படுகிறது.

பத்தர் என்பது யாழில் குடம் போல் இருக்கும் பகுதி. அது இருபக்கமும் தாழ்ந்து நடுவில் உயர்ந்து, மானின் கால் தடம் போன்று அமைந்திருக்கும். பச்சை என்பது யாழ் மீது போர்த்தப் பட்டிருக்கும் தோல். சூலுற்ற சிவந்த பெண்ணின் வயிற்றில் ஐதாகப் படர்ந்திருக்கும் மயிர் ஒழுங்கு போன்று இரு பக்கமும் சேர்த்துக் கட்டப்பட்ட, தீப்பிழம்பை ஒத்த சிவப்பு நிறமுடைய தோல் போர்வையை உடையது. வளையில் வாழும் நண்டில் கண்களைப் போன்ற துளைகளின் வாயை மறைக்கும் ஆணிகளை உடையது.

அந்த அழகிய யாழின் கரிய தண்டு (மருப்பு) தலையெடுத்த பாம்பை ஒத்திருந்தது. அத் தண்டில், நெருக்கமாக வரிந்து கட்டிய (திவவு) வார்க்கட்டுகள், கரிய பெண்ணின் கையில் நெருக்கமாக அணியப்பட்ட வளையல்களை ஒத்திருந்தன. அவை நெகிழ வேண்டிய போது நெகிழ்த்தியும் இறுக்க வேண்டிய போது இறுக்கியும் கொடுப்பதற்கு ஏற்றாற் போல் அமைந்திருந்தது. தினையரிசியை ஒத்த அழகிய விரலால் மீட்டப்படும் நரம்பினைக் கொண்ட யாழ், அழகில் மணப்பெண்ணை ஒத்திருந்தது. அந்த யாழின் இசை கேட்டு, ஆறலைத்தலையும் சூறையாடலையும் தொழிலாகக் கொண்ட பாலைத் திருடர்கள் தமது தொழிலையே விட்டுவிடுமளவுக்கு பாலையாழின் இனிமை இருந்தது என்று பொருணராற்றுப்படை கூறுகிறது. பெரும்பாணாற்றுப் படையில் வருணிக்கப்படும் பேரியாழும் ஏறக்குறைய இதே மாதிரியான அமைப்பை உடையது.

பத்தர், தோற்போர்வை, ஆணி, வறுவாய், தண்டு, வார்க்கட்டு, நரம்பு முதலிய யாழின் உறுப்புக்களும், அவற்றினை அமைப்பதில் கலைஞன் காட்டிய சிரத்தையும், அறிவும், இசையில் அவனது ஞானமும் வியக்கற்பாலது. இம் மாதிரியான செய்தி பொருணராற்றுப்படையில் மட்டுமன்றி சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி முதலிய சங்க இலக்கியங்களில் விரிவாகக் கூறுப்பட்டிருத்தலைக் காணலாம். கணனி போன்ற நவீன சாதனங்கள் எதுவும் அற்ற அக்காலத்தில் எமது மூதாதையரிடையே இருந்த இசை பற்றிய அறிவு பிரமிப்பிற்குரியது.

சிறுபாணாற்றுப்படையில் யாழ் பற்றிக் கூறப்படும் பகுதியில், திவவு (வார்க்கட்டு) பற்றிய விளக்கம், கரிய குரங்கொன்று பாம்பின் தலையைப் பிடித்திருக்கிறது. அப்பொழுது அந்தப் பாம்பு ஒருக்கால் இறுகவும், ஒருக்கால் நெகிழ்த்தவும் அதன் கையைச் சுற்றுவது போல, யாழின் கரிய தண்டில் நெருக்கமாகச் சுற்றியுள்ள 'திவவு' நெகிழ வேண்டிய போது நெகிழவும், இறுக வேண்டிய போது இறுகவும் கூடிய முறையில் அமைந்துள்ளது. இந்த அளவுக்கு இந்த விடயத்தை வேறு எவ்வகையாலும் சிறப்பாகக் கூறியிருக்க முடியுமா என்பது சந்தேகமே.

3. மகரயாழ்:

'தீந்தொடை மகரவீணைத் தௌ;விளி எடுப்பித் தேற்றி' என, சீவகசிந்தாமணியிலும், 'தகரக் குழலாள் தன்னொடு மயங்கி, மகரயாழின் வான்கோடு தழீஇ' என, மணிமேகலையிலும், 'யாணர்க் கூட்டத்து யவனக் கைவினை மாணப் புணர்ந்ததோர் மகரவீணை' எனப் பெருங்கதையிலும், மகரயாழ் பேசப்படுகிறது. இவற்றின் மூலம் மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை ஆகிய நூல்கள் எழுந்த காலத்தில் மகரயாழ் வழக்கில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. பெருங்கதையில் 'யவனக் கைவினை மகரவீணை' என்று கூறப்படுவதால் மகரவீணை யவனரால் செய்யப்பட்டிருக்க வேண்டும், எனவே இவ்வீணை யவன நாட்டிலிருந்து வந்ததாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. யவனம் என்று குறிப்பிடப்படும் கிரேக்க நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் சங்க காலத்தில் வணிகத் தொடர்பிருந்ததற்கான சான்றுகள் ஏராளம் உண்டு.

இந்த யாழினது உறுப்புக்களும் ஏனைய யாழ்களை ஒத்ததாகவே இருந்திருக்க வேண்டும். நால்வகை யாழுக்கும் நரம்பு கொள்ளுமிடத்து 'பேரியாழிற்கு இருபத்தொன்றும் மகரயாழிற்குப் பத்தொன்பதும் சகோட யாழிற்குப் பதினான்கும் செங்கோட்டியாழிற்கு ஏழும் கொள்ளப்படும்' என்கிறார் அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில். காலப் போக்கில், இவ்வியாழ் அழிந்திருக்க வேண்டும்.

4. செங்கோட்டுயாழ், சீறியாழ்: இதன் கோடு செந்நிறமாக இருந்தமையால் இது இப் பெயர் பெற்றிருக்கலாம். யாழ் வகைகளுள் இதுவே மிகச் சிறிய யாழ். இதற்கு நரம்புகள் ஏழு.

'வணர்கோட்டச் சீறியாழ்' என சிலப்பதிதகாரம், நடுகற்காதையிலும் 'செந்திறம் புரிந்த செங்கோட்டியாழ்' எனப் புறஞ்சேரியிறுத்த காதையிலும் கூறியிருப்பதை நோக்குமிடத்து, இளங்கோவடிகள் காலத்தில், இவ்விரண்டும் இருவேறு கருவிகளாகக் கருதப்பட்டன என எண்ண வேண்டி இருக்கிறது. சிறுபாணாற்றுப்படையில் சீறியாழுக்குக் கோடும், திவவும், பத்தரும், போர்வையும், நரம்பும் என்னும் ஐந்து உறுப்புக்கள் கூறப்படுகின்றன. புறஞ்சேரியிறுத்த காதையில் 'செங்கோட்டியாழே செவ்விதிற் றெரியின், அறுவகை உறுப்பிற்றாகும் என்ப.' 'அவைதாம், கோடே திவவே யொற்றே............ தந்திரிகரமே நரம்போடாறே' என மேற்கோள் காட்டப்பட்டது. சீறியாழ் உறுப்புக்களுள் ஒன்றாகிய போர்வைத்தோல் செங்கோட்டியாழில் இல்லை என்கிறார் சுவாமி விபுலாநந்தர்.

'இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் செங்கோட்டு யாழைச் 'செங்கோடு' என்றும் 'வணர்கோட்டுயாழ்' என்றும் கூறி, நடுகற் காதையுள் 'வணர்கோட்டுச் சீறியாழ்' என்றும் கூறியிருப்பதை நோக்குகையில் இச் செங்கோட்டுயாழிற்கே சீறியாழ் என்ற மறு பெயரும் இருந்திருந்ததென விளங்கும்' என்கிறார் டாக்டர் . . வரகுணன் அவர்கள். சுவாமி விபுலானந்தரும் இது பற்றிக் குறிப்பிடுமிடத்து, 'பேரியாழின் பின் சீறியாழ் தோன்றியது, இதுவே செங்கோட்டியாழ் எனவும் படும்.' என்று குறிப்பிடுவதாக டாக்டர். வரகுணன் அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்.

இவ்வியாழ் மிகச் சிறியதாகவும் ஊர்ஊராகக் கொண்டு செல்வதற்கும் மிகவும் இலகுவாகவும் இருந்ததாலும் எப்போதும் இதனைப் பாணர் கையில் வைத்திருந்ததாலும் இதற்குக் 'கைவழி' என்றதொரு பெயரும் இருந்திருக்கிறது. 'கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி' – புறநானூறு 149 ஆம் பாடல். கைவழி, சீறியாழ் எனக் கடைச் சங்க காலத்தின் முற்பகுதியில் வழங்கப்பட்ட இச் சிறு யாழே கடைச்சங்க காலப் பிற்பகுதியில் செங்கோட்டுயாழ் எனப் பெயர் பெற்றிருக்கிறது என அறியக் கிடக்கிறது.

5. சகோடயாழ்: சிலப்பதிகார காலத்தில் தமிழ் நாட்டில் வழக்கிலிருந்த நால்வகை யாழ்களில் சகோடயாழும் ஒன்று. கேள்வி என்பது யாழ் கருவிக்குரிதொரு பெயர். 'ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி' எனவும் 'பிழையாமரபின் ஈரேழ் கோவை' எனவும் போற்றப்பட்ட சகோடயாழ் பல வழியிலும் சிறந்தது. அரங்கேற்று காதையிலும் வேனிற் காதையிலும் இக் கருவி இசைக்கப்படுகிறது.

'அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்
ஈரேழ்
சகோடமும் இடைநிலைப் பாலையும்'

என்று சகோடயாழ் சிலப்பதிகாரம் நாடுகாண்காதையில் பேசப்படுகிறது. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் கையிலிருந்தது இக்கருவி. இந்த யாழ் முத்தமிழ் வித்தகரான திருஞான சம்பந்தராலும் பாராட்டப்பட்டது.

இலண்டன் மாநகரப் பழம்பொருட்காட்சிச் சாலையிலுள்ள அமராவதிநகர்க் கல்லோவியத்தில் காட்டப்பட்டிருப்பது சகோடயாழ் என்றும், இந்த யாழை எடுத்து நிறுத்தினால் அதன் உயரம் மூன்றரை அடி இருக்கலாம் என்றும் கூறுகிறார் சுவாமி விபுலானந்தர். சகோடயாழ் பற்றிய விபரம் அதிகமாகக் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் இதன் உறுப்புக்கள் செங்கோட்டு யாழை ஒத்தவை என்று கூறப் படுகின்றது.

பண்டைக்காலத்தில் பெருவழக்காகப் பாவனையில் இருந்து பின் இலக்கியங்களில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் 'யாழ்', அதன் வகைகள், அவற்றின் பெருமை முதலியவற்றைப் பொது மக்களும் அறியும் வண்ணமாக இலகு நடையில் கூறமுயன்றிருக்கிறேன்.
 

முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்
விரிவுரையாளர்
,
அண்ணாமலைப்
பல்கலைக் கழகம்,
கனடா
வளாகம்.