நெஞ்சில் கொலுவிருக்கும் இரவிவர்மா ஓவியம்!

முனைவர் இரா.மோகன்



‘நகல்வல்லர்’ என்று ஓர் அழகுத் தொடர் திருக்குறளில் உண்டு. கெழுதகை நண்பர் கரு.அழ.குணசேகரனை நினைக்கும் போதெல்லாம் இந்தத் தொடரே என் நெஞ்சிலும் நினைவிலும் மோனையைப் போல் முன்னே வந்து நிற்கும். எப்போதும் சிரித்த முகத்துடனும் செம்மாந்த குரலுடனும் காணப்பெறுவது குணசேகரனின் தனிச்சிறப்பு.

தமிழ் கூறு நல்லுலகம் ஆசிரியர்-மாணவர் நல்லுறவுக்கு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையையும் ‘பதிப்பு வேந்தர்’ உ.வே.சாமிநாதையரையும் போற்றி உரைக்கும். இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க பிறிதொரு நல்லுறவு கவிஞர் மீராவுக்கும் அவரது அருமை மாணவர் குணசேரனுக்கும் இடையில் நிலவிய உறவாகும். கவிஞர் மீராவைக் குறித்துப் பேசும் போதெல்லாம் குணசேகரனின் நெஞ்சில் பெருமையும் பெருமிதமும் பொங்கித் ததும்பும்; அதே போல குணசேகரனைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் கவிஞர் மீராவின் உள்ளத்தில் ஒரு தந்தையின் பொறுப்புணர்வும் தாயின் தனியன்பும் களிநடம் புரிந்து நிற்கும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கரு.அழ.குணசேகரன் இயக்குநராகப் பொறுப்பில் வீற்றிருந்த நேரம். ஒரு முறை பேச்சு வாக்கில் ‘இதுவரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்பு வந்ததில்லை’ என்றேன். ‘அப்படியா? இது என் கவனத்திற்கு வரவில்லையே?’ எனக் கேட்டு வியப்புற்ற குணசேகரன் அந்தக் கணமே ‘உங்களையும் அம்மாவையும் ஒருசேரவே அறக்கட்டளைப் பொழிவுகளை ஆற்றுவதற்கு அழைக்கிறேன்’ என்று உறுதி அளித்ததோடு நின்றுவிடவில்லை; சொன்னாவாறே செய்தும் காட்டினார். ‘வா.செ.கு. (வா.செ.குழந்தைசாமி) என்ற ஆளுமையாளர்’ என்னும் பொருளில் நானும், ‘உ.வே.சா.வின் குறுந்தொகை உரைத் திறன்’ என்னும் பொருளில் துணைவியார் நிர்மலாவும் அறக்கட்டளைப் பொழிவுகள் ஆற்றுமாறு பணித்து, அவற்றை நூல்களாகவும் வெளியிட்டுப் பெருமை சேர்த்தார். வள்ளுவர் மொழியில் குறிப்பிட வேண்டும் என்றால் ‘வினைத் தூய்மையும் வினைத்திட்பமும் விளை செயல்வகையும் ஒன்றுசேர்ந்த ஆளுமையாளர் குணசேகரன்’ எனலாம்.

கரு.அழ.குணசேகரனின் தன்வரலாறு ‘வடு’ என்னும் பெயரில் வெளிவந்த சமயம். ஒரு முறை நேரில் சந்திக்க நேர்ந்த போது என் கருத்தை அவரிடம் வெளியிட்டேன்: “குணசேகரன்! தவறாக நினைக்காதீர்கள், என் தனிப்பட்ட கருத்து இது! வடுக்களை எல்லாம் தாங்கி – தாண்டி – நீங்கள் வாழ்வில் தடம் பதித்து விட்டீர்கள்; சாதனை படைத்து விட்டீர்கள். உங்கள் தன்வரலாற்று நூலுக்கு ‘வடு’ என்பதை விட, ‘வலி’ என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும். ‘வலி’ என்ற சொல் இதுவரை உங்களைத் தாக்கிய வலிகளையும் (துன்பங்களையும்) குறிக்கும்; துன்பத்திற்கே துன்பம் தந்து நீங்கள் முன்னேறியதற்கான வலிமையையும் (திறனையும்) சுட்டும்!” என் கருத்தினைத் தலையசைத்தும் முறுவலித்தும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார் குணசேகரன்.

தனிப்பட்ட உரையாடலின் போது குணசேகரன் அடிக்கடி வலியுறுத்திக் கூறும் ஒரு கருத்து உண்டு:
"Folklore" (நாட்டுப்புறவியல்) என்பது போல ‘Dalitlore’ (தலித்தியல்) என்று ஒரு புதிய துறை உருவாக வேண்டும். அந்தப் பெயரில் இதழ் ஒன்று வர வேண்டும்”. காலத்திற்கு ஏற்ற முறையில் புதிதாக – வித்தியாசமாக – சிந்திக்கும் திறன் படைத்தவர் குணசேகரன் என்பதற்கு இது ஒரு பதச்சோறு.

தம் குடும்பத்தினர் மீது குணசேகரனுக்கு எப்போதும் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் உண்டு. அவரது உடன்பிறப்பான திரு.கே.ஏ.கருணாநிதியை – இவர் அரசின் மீன்வளத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் – என்னிடம் ஒப்படைத்து ‘இவரை முனைவர் ஆக்குவது உங்கள் பொறுப்பு!’ என்று உரிமையுடன் கேட்டுக் கொண்டார். ‘அம்பாப் பாடல்கள், நெய்தல் பாடல்கள் – ஓர் ஒப்பீடு’ என்னும் பொருளில் ஆராய்ந்து அவர் முனைவர் பட்டம் பெற்ற போது குணசேரன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அண்மையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பிற்காக ஆளுநரிடம் ஒப்படைக்கப் பெற்ற பெயர்ப் பட்டியலில் குணசேகரனின் பெயருடன் என் பெயரும் இடம்பெற்றிருந்தது என்பதைச் செய்தித் தாள்கள் வாயிலாக அறிந்த போது வியப்பும் வேதனையும் ஒருங்கே உற்றேன். பல்கலைக்கழகம் அவரது பணிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நல்வாய்ப்பினைப் பெறவில்லை என்றே கூற வேண்டும். ‘தமிழ்நாட்டில் அரசியலைத் தவிர மற்ற எல்லாத் துறைகளிலும் அரசியல் இருக்கிறது’ என்று ஒரு முறை தமிழ்நாடு சட்டப் பேரவையின் மேனாள் தலைவர் திரு.பி.டி.ஆர். (பி.டி.பழனிவேல்ராஜன்) அவர்கள் கூறியது எவ்வளவு பொருள் பொதிந்த வாசகம் என்று பாருங்கள்!

கரு.அழ.குணசேகரனின் வாழ்வில் இருந்து இன்றைய இளைய தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படையான, முதன்மையான பாடம் இது: "தோன்றின் புகழொடு தோன்றுக!" என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு ஏற்ப இன்றைய இளைய தலைமுறையே! நீ எந்தத் துறையில் தோன்றினால் முத்திரை பதிப்பாயோ – சாதனை படைப்பாயோ – அந்தத் துறையில் தான் தோன்ற வேண்டும்; காலடி எடுத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தத் துறையின் பக்கமே தலை காட்டக் கூடாது! கரு.அழ.குணசேகரன் நாடகம், நிகழத்து கலை, திரைப்படம், நாட்டுப்புறவியல், நிறுவன மேலாண்மை எனத் தாம் தோன்றிய துறைகளில் எல்லாம் நினைவுகூரத்தக்க நல்ல பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டார்; வேதனைகளை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடி, சாதனையும் படைத்தார்! செவ்வியல் இலக்கியமான பதிற்றுப் பத்துக்கு உரை வரைந்த போதும் அதில் அவர் தமது தனித்தன்மையைப் புலப்படுத்தினார். மூதறிஞர் தமிழண்ணல் உள்ளிட்ட கொள்கைச் சான்றோர்கள் பலரது பாராட்டுக்களையும் குணசேகரனின் பதிற்றுப் பத்து உரை பெற்றது குறிப்பிடத்தக்கது.”

இப்போது நினைத்தாலும் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது எனக்கு! நூற்றுக்கணக்கான ஆளுமையாளர்களுடன் யான் இருக்கும் ஆயிரக்-கணக்கான நிழற்படங்கள் இருந்தாலும், என் கெழுதகை நண்பர் – எப்போதும் என் நலம் விரும்பியாகவே எனக்கு இருந்தவர் – கரு.அழ.குணசேகரனுடன் இருப்பது போல ஒரு நிழற்படம் கூட என் கைவசம் இல்லை; எவ்வளவோ தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அதனால் தான் என்ன, குணசேகரன்தான் என் நெஞ்சிலும் நினைவிலும் இரவிவர்மாவின் ஓவியம் போல என்றென்றும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றாரே!




முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.