ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்: 'ஒரு விஞ்ஞானிக்குள் ஒளிந்திருக்கும் மெய்ஞ்ஞானக் கவிஞர்!'

முனைவர் இரா.மோகன்



வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் சொல்லோவியத்தில், 'ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்: அலைநகரில் பிறந்து, பாரத ரத்தினமாய்த் தலைநகரில் சுடர் வீசித் திகழ்ந்த பச்சைத் தமிழர்; கலைந்த தலையும் கசங்கிய உடையும் இவருக்கு அடையாளம்; ஆயினும் இவரது நெருப்புச் சிறகுகளே இந்திய நாட்டுக்கு இரும்புக் கவசம்' (சிற்பி கவிதைகள்: தொகுதி 2, ப.1109). மாணவர்களின் உள்ளம் கவர்ந்த பேராசிரியர், அறிவியல் அறிஞர், மக்கள் குடியரசுத் தலைவர் என்றாற் போல் பன்முகப் பரிமாணங்கள் படைத்தவர் கலாம். எனினும், நெல்லை சு.முத்து குறிப்பிடுவது போல், 'அறிஞர் கலாமிற்குள் ஒரு கவிஞர் கலாம் உண்டென்று பலருக்குத் தெரிந்திராது' (அறிவியல் அறிஞர் அப்துல் கலாம், ப.138). ஓர் ஆற்றல்சால் கவிஞர் என்ற பரிமாணத்தில் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாமிடம் குடிகொண்டிருக்கும் ஆளுமைப் பண்புகளை அடையாளம் காண்பது இக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.

கலாமும் கவிதையும்:

'தமிழக மக்களுக்கு...' என்னும் தலைப்பில் 'அக்னிச் சிறகுகள்' தமிழ்ப் பதிப்பிற்காக எழுதிய முன்னுரையில், 'இன்னும் ஒரு ஆண்டில், தமிழக மக்களுக்கு ஒரு கவிதைத் தொகுப்பையோ அல்லது ஒரு விஞ்ஞானப் புத்தகத்தையோ வடிவமைக்க ஆண்டவன் அருள் புரிவானாக!' (ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ரூ அருண் திவாரி, அக்னிச் சிறகுகள்: சுய சரிதம், ப
.6) எனக் குறிப்பிட்டிருந்தார் அப்துல் கலாம். இத் தன்வரலாற்றுக் குறிப்பு, கவிதைக் கலையின் மீது அவர் கொண்டிருந்த தனிப்பட்ட பற்றைப் புலப்படுத்துவதாகும். மேலும், 'அக்னிச் சிறகு'களில் கலாம் உலகத்துச் சிறந்த கவிஞர்களின் வைர வரிகளை எல்லாம் நினைவு கூர்ந்து மேற்கோள் காட்டியிருக்கும் இடங்கள் பலவாகும்.

வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் எல்லாம் கவிதை எழுதுதல்

கலாம் தம் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் எல்லாம் கவிதை எழுதுவதை வழக்கமாகவும் வாடிக்கையாகவும் கொண்டிருந்தார். பதச்சோறு ஒன்று: இமராத் ஆய்வு மையத்தின் சார்பில் மூன்றாம் முறை அக்கினி ஏவுகணை 1989 மே 23 ஆம் நாள் காலை 7.30 மணி அளவில் வானில் உயர்ந்து எழுந்து பறந்து சென்றது. அன்று இரவு கலாம் தம் நாட்குறிப்பினில் எழுதிய கவிதை வரிகள் இவை:

'அக்கினி - மேல் நோக்கி ஏவியதோர்
தீக் கங்கு அல்ல்
தீங்கு அச்சுறுத்தலோ
திறம் காட்டவோ அல்ல.
அது - ஒவ்வொரு
இந்தியனின் மனதில் சுடரும் அக்கினி!
அதற்கு ஏவுகணை என்ற
பட்டம் சூட்டாதீர்;
ஏனெனில் இந்த நாட்டின்
கொழுந்து விட்டெரியும் தீபம் அது -
ஆதலினால் பிரகாசிக்கிறது'


(மேற்கோள்: நெல்லை சு.முத்து, அறிவியல் அறிஞர் அப்துல் கலாம்,
பக்.
118-119)

'அது ஒவ்வொரு இந்தியனின் மனதில் சுடரும் அக்கினி'; 'இந்த நாட்டின் கொழுந்து விட்டெரியும் தீபம்': கலாமின் கவிதை உணர்வையும் உள்ளத்தையும் படம்பிடித்துக் காட்டும் அற்புதமான வரிகள் இவை.


'வளர்ச்சி அடைந்த இந்தியா' உருவாக...

அப்துல் கலாமின் கருத்தில், இயற்கைச் செல்வங்கள் பலவற்றைப் பெற்றிருந்தும் இந்திய நாட்டில் வறுமை, வறுமை அடையாமல் இன்னும் இருந்து வருவதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று, நாட்டுக்கு இலட்சியம் இல்லாமை; இன்னொன்று, நீண்ட தொலைநோக்கு (Vision)  இல்லாமை. இந்தியா 'வளரும் நாடு' என்ற நிலையில் இருந்து, 'வளர்ந்த நாடு' என்னும் நிலைக்கு உயர்வதற்கு - பரிணாம வளர்ச்சியைப் பெறுவதற்கு, நாட்டுக்கு - குறிப்பாக, நாட்டு மக்களுக்கு இலட்சியமும் தொலைநோக்கும் இன்றியமையாதன. இவ் வகையில் 'வளர்ந்த இந்தியா' என்னும் இலட்சிய நோக்கம் நிறைவேறுவதற்குக் கலாம் சிறுகவிதை வடிவில் நாட்டு மக்களுக்கு விடுக்கும் அறைகூவல் இது:

'செல்வத்திற் கெல்லாம் தலையான செல்வம்
என்ன என்று உள்ளுக்
அது மாந்தரின் உள்ள எழுச்சியன்றோ...?
சக்திகளுக் கெல்லாம் பெரும் சக்தி
சிகரமாகும்.
பூமியிலும், விண்ணிலும், பூமியினடியிலும்
அணுச்சக்தி போன்றது மாந்தரின் உள்ள
எழுச்சி!'


(மேற்கோள்: அறிவியல் அறிஞர் அப்துல் கலாம், ப.
159)

கலாமின் கண்ணோட்டத்தில் சிறு குறிக்கோள் என்பது ஒரு குற்றம்; சாதனை புரிவதற்கு உயர்வான தொலைநோக்கு வேண்டும். அவரது அகராதியில் அதுவே ஆற்றல் வாய்ந்த ஒரு மந்திரம்; அல்லும் பகலும் இமைப்பொழுதும் நீங்காமல் அவரை ஆட்கொண்டிருந்த மந்திரமும் அதுவே. பொருளாதார பலமும் பாரம்பரிய நெறியும் சங்கமிக்கும் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா புது வடிவம் பெற வேண்டும். இக் கனவு நாட்டு மக்கள் அனைவரது வியர்வைப் பெருக்கிலேயே நிறைவேறும். 'வளர்ச்சி அடைந்த இந்தியா' என்னும் உயரிய தொலைநோக்கைச் சாதிப்பதற்கு வேண்டுவது அறிவு தீபமே. அதனை என்றும் அணையாத தீபமாக சுடர்விடச் செய்வதே இந்தியக் குடிமக்களின் - இளைய சமுதாயத்தின் - நோக்கமாக இருத்தல் வேண்டும். தொழில் நுட்பம், அறிவாற்றல், நாட்டுப் பற்று - இவற்றைக் கொண்டே அந்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இத்துணை விழுமிய சிந்தனைகளையும் தன்னகத்தே கொண்ட 'இளைய சமுதாயத்தின் இதய கீதம்' என்னும் தலைப்பில் அமைந்த கலாமின் கவிதை இதோ:

'இந்தியக் குடிமக்களில்
இளம் அங்கம் நான்.
தொழில் நுட்பம், அறிவாற்றல், என் தேச நேசம்...
இவையே என் அஸ்திரங்கள்.
சிறு குறிக்கோள் ஒரு குற்றம் என்பதை
உணர்ந்தவன் நான்.

என் வியர்வைப் பெருக்கில் நிறைவேறும்
உயர்வான தொலைநோக்கு
பொருளாதார பலமும் பாரம்பர்ய நெறியும்
சங்கமிக்கும் வளர்ச்சியடைந்த தேசமாக
புதுவடிவம் பெற வேண்டும் பாரதம்...
இதுவே அந்த தொலைநோக்கு.

நூறு கோடி மக்களில் ஒருவன் நான்.
நூறு கோடி ஆன்மாக்களில்
ஜுவாலை மூட்டும் ஒரே அஸ்திரம்
தொலைநோக்கு மந்திரம்;
என்னை ஆட்கொண்டிருக்கும்
மந்திரம் அதுவே.
ஜுவாலை பரப்பி எழுச்சியடைந்த
ஆன்மாவின் ஆற்றல் அபாரமானது,
அற்புதமானது, அளவிட முடியாதது.
இதற்கு ஈடிணை
இந்த பூமியில் இல்லை,
பூமிக்குக் கீழேயும் இல்லை;
மேலேயும் இல்லை.

'வளர்ச்சியடைந்த இந்தியா'
தொலைநோக்கைச் சாதிப்பதற்கு
அறிவு தீபத்தை என்றும் அணையா
தீபமாகச் சுடர்விடச் செய்வேன்'


(ஆ.ப.ஜெ.அப்துல் கலாம், எழுச்சி தீபங்கள், பக்
.222-223)

'பல்லாயிரக்கணக்கான இதயங்கள் இதை இசைக்கும் போது, வளர்ச்சியடைந்த இந்தியா என் கண்ணெதிரே காட்சி தருகிறது' என மொழிவார் கலாம்.

இறைவனிடம் வேண்டும் வரம்

கலாம் ஒருமுறை பாராளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது ஓர் உயரிய இலட்சியத்தைக் கேள்வியின் வடிவமாகக் கேட்டு, அந்த இலட்சியத்தை இந்தியாவின் 100 கோடி மக்களும் உழைத்து அடைய அருள்வாயாக என்று இறைவனிடம் சிறிய, பொருள் பொதிந்த கவிதை வடிவில் வேண்டினார். சிந்திக்கத் தூண்டும் செறிவான அக் கவிதை வருமாறு:

'நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா?

நான் தோண்டிக் கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?
நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா?

இறைவா, நூறு கோடி மக்கள்
இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும்,
இன்ப அமைதியையும்
உழைத்தடைய அருள்வாயாக!'


(ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் முன்னுரை, வெ.பொன்ராஜ்,
இளைஞர்கள் காலம், ப.
3)

'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்றாற் போல், 'நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்', 'நான் தோண்டிக் கொண்டே இருக்கிறேன்', 'நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்' எனக் குறிப்பிடுவது, அசைவிலா ஊக்கத்தோடு, தொய்வில்லாமல் ஒருவர் தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதைப் புலப்படுத்துவதாகும். இலட்சியத்துக்கு சிகரமும், அறிவுக்குப் புதையலும், இன்ப அமைதிக்குத் தீவும் மிகவும் பொருத்தமான உருவகங்கள். ஒரு மனிதன் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறுவதற்கு அடிப்படையாகத் தேவைப்படுவது இலட்சியம். நிலத்தின் ஆழத்தில் இருக்கும் புதையலைத் தோண்டி எடுப்பது போல அறிவும் ஆழ்ந்து கற்கக் கற்க வெளிப்படுவது. 'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு'
(396) என்னும் வள்ளுவர் வாக்கு இங்கே நினைவுகூரத் தக்கது. பெருங்கடலில் முயன்று நீந்தினால் எவரும் இன்ப அமைதி கொலுவிருக்கும் தீவினைச் சென்று சேரலாம். பாரத மணித்திரு நாட்டின் நூறு கோடி மக்களும் இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்து அடைவதற்கு அருள் புரிய வேண்டும் என இறைவனிடம் வேண்டுவது உழைப்பின் மீது கலாமுக்கு இருக்கும் இமாலய நம்பிக்கையை உணர்த்துகின்றது. மந்திரத்தால் மாங்காய் விழுவது போல் அல்லாமல், எதையும் தொலைநோக்குடன் திட்டமிட்டு, கடுமையாக உழைத்துப் பெற வேண்டும் என்பதே கலாம் வலியுறுத்தும் தாரக மந்திரம் ஆகும்.

ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் வாசித்த கவிதை

'தாய் மண்ணிலிருந்து ஒரு செய்தி' என்பது ஐரோப்பியப் பாராளுமன்றத்தில்
25.04.2007-இல் ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளைச் சார்ந்த 750 உறுப்பினர்கள் முன்னிலையில் நிகழ்த்திய சொற்பொழிவின் இறுதியில் கலாம் வாசித்த கவிதை ஆகும். அவரது சொற்களிலேயே அக் கவிதையை இங்கே காண்பது நன்று:

'அழகிய சூழ்நிலை
அழகிய மனங்களை உருவாக்குகிறது.
அழகிய மனங்கள்
புதுமையையும், படைப்பாற்றலையும் உருவாக்குகின்றன.
அதன் பயனாகவே
புதிய நிலப் பகுதிகளையும், சமுத்திரங்களையும்
கண்டறிந்த மனிதர்கள் உருவாயினர்.
பெரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை
ஏற்படுத்திய மனங்கள் தோன்றின.
எல்லாப் பகுதிகளிலும் அப்படிப்பட்டவர்கள் தோன்றினார்கள்
புதிய கண்டுபிடிப்புகளுக்கு
வழி பிறந்தது.
யாரும் அறிந்திராத கண்டமும், நிலப்பரப்பும்
கண்டறியப்பட்டன.
சென்றறியாப் பாதைகளினூடே
பயணங்கள் நடந்தன.
புதுப்பாதைகள் உருப்பெற்றன'


எனத் தொடங்கும் அக் கவிதை, காலப் போக்கில் மனிதர்களின் நல்ல மனங்களில் கெட்ட எண்ணங்கள் புகுந்ததையும், அதனால் வேண்டாத தீய விளைவுகள் ஏற்பட்டதையும் கோடிட்டுக் காட்டித் தொடர்கின்றது:

'நல்ல மனங்களில்
கெட்ட எண்ணங்களும் தோன்றின.
வெறுப்பு, யுத்தம் போன்றவற்றுக்கான
வித்துகள் உருவாயின.
பல நூறு வருட காலம்
யுத்தமும், ரத்தம் சிந்துதலும் நிகழ்ந்தன.
லட்சக்கணக்கான எனதருமைக் குழந்தைகள்
நிலத்திலும் நீரிலும் மடிந்தன.
தேசங்கள் பல கண்ணீர் சிந்தின.
ஏராளமானோர் துன்ப சாகரத்தில் ஆழ்ந்தனர்'.


'இதுவும் கடந்த போகும்!' என்னும் புத்தர் பெருமானின் அமுத மொழிக்கு ஏற்ப, இறுதியில் எல்லாத் துன்பங்களுக்கும் தீமைகளுக்கும் ஒரு முடிவு ஏற்பட்டது. 'ஐரோப்பிய யூனியன்' என்ற அமைப்பு தலையெடுத்தது. மனிதர்களின் எண்ணங்களில் மாற்றமும் விளைந்தது; செயல்களில் வேகம் பிறந்தது.

'அதன் பின்னர் கடைசியாக
ஐரோப்பிய யூனியன் என்ற
அமைப்பு தலையெடுத்தது.
மனிதர்களின் அறிவாற்றலை
தனக்கோ அல்லது பிறருக்கு எதிராகவோ
உபயோகிப்பதில்லை என்று
உறுதிமொழி எடுத்துக் கொண்டது
அவர்களின் எண்ணங்கள் ஒன்றுபட்டதும்
செயல்களில் வேகம் பிறந்தது.
ஐரோப்பாவை வளமாகவும், அமைதியாகவும்
வாழ்ந்திடச் செய்வதற்கென்று
ஐரோப்பிய யூனியன் தோன்றியது.
அந்த சந்தோஷச் செய்தி
எல்லா மக்கள் மனதையும் பற்றிக் கொண்டது'

எனப் பதிவு செய்யும் கலாம் தம் கவிதையை இப்படி நிறைவு செய்கின்றார்:

'ஓ, ஐரோப்பிய யூனியனே,
உனது குறிக்கோளை வழி நடத்து!
நாம் சுவாசிக்கும் காற்றைப் போல
அதை எங்கும் பரவிடச் செய்திடு!'
(திருப்பு முனைகள்: 'அக்னி சிறகுகள்':
இரண்டாம் பாகம், பக்
.139-140)

ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் கலாம் இக் கவிதையைப் படித்து முடித்ததும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் தங்களது உற்சாகமான வரவேற்பினை வெளிப்படுத்தினர்; எல்லோரும் எழுந்து நின்று கலாமுக்கு மரியாதை செலுத்தினர். இந் நிகழ்வு தம் மனதைத் தொட்டுவிட்டதாக 'அக்னிச் சிறகுகள்' இரண்டாம் பாகமான 'திருப்பு முனைகள்' என்னும் நூலில் பதிவு செய்துள்ளார் கலாம். 'மனித இனத்தின் கலாச்சார நாகரிக அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதற்கு மாறாக ஒன்றிணைந்து சங்கமிக்க வேண்டும்' என்பதே இக் கவிதை வாயிலாகக் கலாம் வலியுறுத்தும் செய்தி ஆகும்.

'பொங்கி எழுந்திடும் புதிய தமிழகம்!'

'புதியதோர் உலகம் செய்வோம்!' எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முழங்கியதைப் போல், அப்துல் கலாமும் 'கடின உழைப்பில், விஞ்ஞான உயர்ச்சியில், பொங்கி எழுந்திடும் புதிய தமிழகம்!' எனப் பெருமிதம் பொங்கப் பாடுகின்றார்; கனவு கண்டால் மட்டும் போதாது, கனவை நனவாக்கக் கடினமாக உழைத்து, செல்வம் சேர்த்து ஏழ்மையை விரட்டி, விஞ்ஞானத்தில் உயர்ந்து கணித மேதை ராமானுஜம் போல், சர் சி.வி.ராமன் போல் உயரிய விருதுகளும் பரிசுகளும் பெற்றுச் சிறக்க வேண்டும் என வழிகாட்டுகின்றார்:

'வள்ளுவன் போல் ஞால ஞானியைக் காண்போம்,
வள்ளுவன் அறநெறி உலகெங்கும் ஒலிக்கும்,
வாழ்வின் மறை அது; பெருஞ்செல்வம் கொடுக்கும்!

'அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்று ஆவதூஉம்' என்று
நமக்கென அளித்ததாம் சிலப்பதிகாரம்!
அது இளங்கோ அடிகளின் தத்துவ ஞானம்!

பாரதி போல் லட்சியக் கனவுகள் கண்ட
மகாகவி தோன்றுவர்; கனவு நனவாக்க
காவிரி கங்கை ஒன்றாய் இணைத்து,
சேது சமுத்திரம் எல்லாம் நிறைய
வணிகக் கப்பல் உலகெங்கும் செலுத்தி
செல்வம் சேர்ப்போம், ஏழ்மையை விரட்டுவோம்!...

ராமானுஜம் போல் கணித மேதைகள்
ராமன் போல் நோபல் பரிசுகள் பெறுவோர்
தமிழகம் முழுவதும் காண்போம்!

கடின உழைப்பில்
விஞ்ஞான உயர்ச்சி
பொங்கி எழுந்திடும்
புதிய தமிழகம்!'


(மேற்கோள்: அறிவியல் அறிஞர் அப்துல் கலாம், பக்
.150-151)

'ஓம் சக்தி' இதழில் விழுமிய, வாழ்வியல், தத்துவ, அறிவியல் தொழில் நுட்பச் சிந்தனைகள் மிளிரக் காலம் தீட்டிய எழுச்சிக் கவிதை இது!


'விஞ்ஞானிக்குள் ஒளிந்திருக்கும் மெய்ஞ்ஞானக் கவிஞர்!'


'பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி, அப் பனிமலர் எடுக்கவும் மனமும் நண்ணேன்' எனத் தனிப்பெருங் கருணை ததும்பி நிற்க மொழிவார் தாயுமானவர். அவரது அருள் நெஞ்சம் மலரின் ஊடும் இறைவனைக் கண்டு, அம் மலரைப் பறிக்கவும் இசையாது. 'இரு முதியவர்கள் வீதி வழியே சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவருள் ஒருவரின் கால் பட்டு வீதியிற் கிடந்த ஒரு மண்கட்டி உடைந்து போயது. அதைக் கண்ட மற்றவர் உடனே மூர்ச்சையானார். மூர்ச்சையடைந்த அவருக்கு உபசாரங்கள் செய்வித்து மூர்ச்சையைத் தெளிவித்து முன்னையவர், 'தாங்கள் மூர்ச்சையுற்றதற்குக் காரணம் என்ன?' என்று வினவ, அதற்கு அம் முதியவர் 'உம்முடைய காலினால் அவ்வழகிய மண் கட்டி உடைந்து உருக்குலைந்து போனதே காரணம்' எனக் கூறினார்' என்னும் இராமலிங்க சுவாமிகளின் கதையும் உயிர்க் கருணையின் மேன்மையை உணர்த்தும். இங்ஙனம் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் கருணை மனம் படைத்தவனே உண்மையில் கவிஞன் ஆவான்; உயரிய கவிஞனும் ஆவான். இக் கருணை மனத்தினைக் கலாம் இயல்பாகNவு பெற்றிருந்தார். இதனை மெய்ப்பிக்கும் ஓர் உண்மை நிகழ்ச்சி:

'இந்த இடத்தில் (குடியரசுத் தலைவரின் மாளிகையில் அமைந்த முகல் பூந்தோட்டத்தில்) ஒரு மல்லிகைச் செடி நட்டு வளர்த்தேன். ஒரு நாள் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்த போது இந்த இடத்துக்கு வந்தேன். மல்லிகைச் செடி சாய்ந்து தரையில் கிடந்தது. நல்ல வேளை மிதிக்கத் தெரிந்தேன். மனம் உடைந்து போனது. வேறு பாதையில் நடைப் பயிற்சி மேற்கொண்டேன்'.

பூக்களைப் பற்றிக் கலாம் எழுதி இருக்கும் கவிதை அற்புதமானது; கவிக்கோ அப்துல் ரகுமானின் சொற்களில் குறிப்பிடுவது என்றால், 'ஒரு விஞ்ஞானிக்குள் ஒரு மெய்ஞ்ஞானக் கவிஞனும் ஒளிந்திருக்கிறான்' என்பதைப் பறைசாற்றும் வகையில் அமைந்தது. பிள்ளைப் பூவும் அம்மாப் பூவும் உரையாடிக் கொள்ளும் பாங்கில் விளங்கும் அக் கவிதை இதோ:

'பிள்ளைப் பூ கேட்டது:
'அம்மா! நாம் ஏன் மலர்கிறோம்?'
அம்மாப் பூ சொன்னது:
'அதோ பார், மான் துள்ளுகிறது, மயில் ஆடுகிறது
அது போலவே நாம் மலர்கிறோம்.
பிரபஞ்ச இயக்கத்திற்கு இவை தேவை.
மனிதர்கள் நம்மைப் பார்த்து
மென்மையடைய வேண்டும் என்பதற்காகவே
நாம் மலர்கிறோம்''


(தி இந்து:
08.08.2015, .11)

மனித குலம் இயற்கையிடம் இருந்து - பறவைகள் மற்றும் விலங்குகளிடம் இருந்து, மலர்களிடம் இருந்து - கற்றுக் கொள்வதற்கு எத்தனையோ பாடங்கள் உள்ளன. இவ் வகையில், 'மனிதர்கள் மலர்களைப் பார்த்து மென்மைப் பண்பைக் கற்றுக்கொள்ள வேண்டும்' எனக் கருதுகிறார் கலாம்.

வாழ்த்துக் கவிதை:

20.12.2001 அன்று ய.சு.ராஜனின் 'வற்றாத ஊற்றுக்கள்' என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் நடைபெற்றது. அந் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி டாக்டர் கலாம் பாடிய வாழ்த்துக் கவிதை இது:

'இறைவா என் நண்பன் ராஜனைக்
கம்பன் போல் கவிதை பாட அருள்புரி!
வள்ளுவர் போல் வாழ்க்கை நெறிகளுக்கு
உயர்வு கொடுக்கும் உள்ளம்
குன்று போல் வளரட்டும்!
எண்ண எழுச்சிகள் பாரதி போல்
எரிமலையாக வெடிக்கட்டும்!
மக்களின் உள்ளங்களில்
ராஜன் குடிகொண்டு
இன்ப இயக்கம் மலரட்டும்!'


(மேற்கோள்: நெல்லை சு.முத்து, அறிவியல் அறிஞர் அப்துல் கலாம், ப
.146)

வாழையடி வாழை எனத் தொடர்ந்து வரும் தமிழ்க் கவிஞர் வரிசையில் கலாமின் உள்ளத்தில் தனிஇடம் பெற்றவர்கள் கம்பர், வள்ளுவர், பாரதி ஆகிய மூவரும் ஆவர். கவிதை பாடுவதில் கம்பர், உயர்ந்த வாழ்க்கை நெறிகளை உரைப்பதில் வள்ளுவர், எரிமலை போன்ற எழுச்சிமிகு சிந்தனைகளை மொழிவதில் பாரதியார் என இம் மூன்று கவிஞர்களிடமும் மேலோங்கி நிற்கும் மூன்று வேறு ஆளுமைப் பண்புகளை அடையாளம் காட்டும் கலாம், மக்களின் உள்ளங்களில் குடிகொண்டிருப்பவரே மாண்புமிகு கவிஞராக வரலாற்றில் முத்திரை பதிக்க முடியும் என்பதையும் உணர்த்துகின்றார்.

காலத்தை வென்று நிற்கும் கலாம்

'உலக வழக்கப்படி எனக்கு எந்த பரம்பரைச் சொத்தும் இல்லை; நான் எதையும் சம்பாதிக்கவில்லை; எதையும் கட்டி வைக்கவில்லை. என்னிடம் எதுவுமே கிடையாது. குடும்பம், மகன்கள், மகள்கள்... யாருமே எனக்குக் கிடையாது' (ப.370) என 'அக்னிச் சிறகுக'ளில் வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கும் கலாம், அதே நூலில் தம் உள்ளத்து வேட்கையும் இன்னது எனத் தெளிவுபடுத்துகிறார்:

'இந்த மாபெரும் நாட்டில்
நான் நன்றாகவே இருக்கிறேன்;
இதன் கோடிக் கணக்கான
சிறுவர் சிறுமிகளைப் பார்க்கிறேன்;
எனக்குள்ளிருந்து அவர்கள்
வற்றாத புனிதத்தை முகந்து
இறைவனின் அருளை
எங்கும் பரப்ப வேண்டும்,
ஒரு கிணற்றிலிருந்து
நீர் இறைக்கிற மாதிரி.'


கலாம் விரும்பியது போலவே, இந்தியத் திருநாட்டின் கோடிக்கணக்கான சிறுவர் - சிறுமியர், அவரது வாழ்வு மற்றும் வாக்கு இரண்டிலும் இருந்து ஒரு கிணற்றில் இருந்து நீர் இறைப்பது Nhல் வற்றாத புனிதத்தை முகந்து, இறைவனின் அருளை எங்கும் பரப்புவார்கள். ஆம்; 'காலம் கவிஞனைக் கொன்று விடும் - அவன் கவிதை காலத்தை வென்று விடும்!'.
 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021