பாரதியமும் பாவேந்தமும் சரிவிகிதத்தில் சேர்ந்தமைந்த கூட்டுக்களி

முனைவர் இரா.மோகன்


'புதுயுகன்' என்ற அழகிய புனைபெயரினைப் பூண்ட இளைய கவிஞர் டி.கே. இராமானுசன்; 'தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம்' என்பது போல், வழி வழியாகப் பாரம்பரியப் பெருமையும் பீடும் பெற்ற ஒரு தமிழ்க் குடும்பத்தில் புகழொடு தோன்றியவர். அவர் பெரும்புலவர் இராமானுசக் கவிராயரின் பெயரர்; பெரியவர் வேதாரண்யம் அ.வேதரத்தினத்தின் மருமகன். இங்ஙனம் இரண்டு செழித்த பாரம்பரியங்களைத் தன்னுள் பதிந்தும் பொதிந்தும் வைத்திருப்பவர் புதுயுகன். அவர் இலண்டன் மாநகரில் பணியாற்றி வரும் ஒரு கணிப்பொறியாளர். என்றாலும், அவர் மனத்தைக் கொள்ளை கொண்ட 'மென்பொருள்' கவிதையே. அவரது எழுதுகோல் கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம், ஆய்வு எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களில் படைப்புக்கள் பலவற்றை ஈன்று புறந்தந்துள்ளது. 'சமுத்திர சங்கீதம்' (2005) என்பது புதுயுகன் படைத்துள்ள புதினம்; 'ஆழ்கடலில் அழகிய அலைவரிசைக் காதல்' படப்பிடிப்பு. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு கண்ட உப்புச் சத்தியாக்-கிரகத்தினை அவர் ‘Air, Fire & Water’ (2010) என்னும் அழகான ஆங்கில நூலில் பதிவு செய்துள்ளார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (2010), கலிபோர்னியாவில் நடைபெற்ற தமிழ்ச் சங்க மாநாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கிய சிறப்புத் தகுதியும் புதுயுகனுக்கு உண்டு. காரைக்குடி கம்பன் கழகத்திலும் புதுச்சேரி ஆரோவில் தமிழ் மரபு மையத்திலும் 'காப்பியத்தில் பெரியவர்' கம்பரைக் குறித்துப் புதுயுகன் ஆற்றிய உரைகள் அவையினர் அனைவரையும் ஒரு சேர ஈர்த்தவை. அவரது புனைகதைப் பயணம் 'குமுதம்' இதழில் 'தாய்மை' என்ற குறுங்கதையில் தொடங்கியது; அது 'கல்கி', 'கணையாழி', 'தமிழரசி' முதலான இதழ்களின் வாயிலாகத் தொடர்ந்து நடை பயின்று வருகின்றது. அண்மையில் ஒரே மாதத்தில் (டிசம்பர், 2013) 'கதவு இல்லாத கருவூலம்', 'மடித்து வைத்த வானம்' என்னும் இரு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுச் சாதனை படைத்துள்ளார் புதுயுகன். தமிழ்ப் பதிப்புலகில் தடம் பதித்து வரும் மணிவாசகர் பதிப்பகம் இவ்விரு கவிதை நூல்களையும் கண்ணையும் கருத்தையும் கவரும் விதத்தில் சிறந்த முறையில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இனி, ஒரு பறபை; பார்வையில் புதுயுகனின் படைப்பாளுமை குறித்துக் காண்போம்.

பாரதியமும் பாவேந்தமும் சரிவிகிதத்தில் சேர்ந்தமைந்த கூட்டுக் களி

பாரதியார் வணங்கும் தமிழ்த் தாய் தன் மக்களைப் புதிய சாத்திரம் படைக்குமாறு வேண்டுவாள்; 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர்!' (பாரதியார் கவிதைகள், பக்.
166-168) என ஆணையிடுவாள். பாரதி கவிதா மண்டலத்தைச் சார்ந்த பாவேந்தர் பாரதிதாசன் தமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வார்; அதன் பன்முக வளர்ச்சி குறித்து ஆழமாகச் சிந்திப்பார்; 'செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்' என அறிவுறுத்துவார்; 'எங்கள் தமிழ் உயர்வு என்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம்; குறை களைந்தோம் இல்லை; தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்' எனத் தமிழர்க்கு அழைப்பும் அறைகூவலும் விடுப்பார். இவர்கள் இருவரது அடிச்சுவட்டில் நடை பயிலும் புதுயுகனோ பாரதியமும் பாவேந்தமும் சரிவிகிதத்தில் சேர்ந்த கூட்டுக் களியாக விளங்குகின்றார். 'செய்க உலகத் தமிழ்' என்னும் அவரது கவிதை தமிழ் வளர்ச்சி என்னும் நோக்கில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது ஆகும். ஒளவை மொழியில் 'சங்கத் தமிழ் மூன்றும் தா' என்றெல்லாம் வேண்டியது அந்தக் காலம். இன்றைய தேவை வேறு. சிலம்பும் வளையமும் தரித்த தமிழன்னை, 'வேண்டுதல் நிறுத்தி, வேண்டுவது செய்வாயா?' எனத் தீர்க்கமான குரலில் தமிழனை - தமிழினத்தை - கேட்கிறாள்; 'இனி கேட்காதே, கொடு' என அவனுக்கு அறிவுறுத்துகிறாள்; 'தனித்திறன் சிதையாத வண்ணம் உலக நோக்கில் உன்னுள் நோக்கு' என ஆணையிடுகிறாள்; 'உள்ளுர் கடந்து இனி, உலகத் தமிழ் செய்க் உலகைத் தமிழிலும் தமிழை உலகிலும் எழுதுக' என வேண்டுகோள் விடுக்கிறாள்.

'தனித்த தமிழ் மரபிற்காய் / செய்க ஓர் அகராதி
தமிழை ஏற்றுமதி செய்ய / ஏற்று மதி
சங்கத் தமிழ் அனைத்தும் தா / பிற மொழியில்
சங்கம் போல் இன்னும் தா / புதிய தமிழ்!'


                                          (மடித்து வைத்த வானம், பக்
.43-44)

எனத் தமிழன்னை உரைப்பதாகப் புதுயுகன் படைத்திருப்பது இங்கே மனங்கொளத் தக்கது. 'செய்க பொருளை' (திருக்குறள்,
759) என மனித குலத்திற்கு அறிவுறுத்துவார் வள்ளுவர்; அதுபோல, 'செய்க உலகத் தமிழ்' என இன்றைய இளந்தமிழனுக்கு அறிவுறுத்துகிறார் புதுயுகன்.

புதுயுகன் தம் 'கதவு இல்லாத கருவூலம்' என்னும் கவிதைத் தொகுப்பினைத் 'தமிழ் தனிச்சிறப்புக் கொண்ட செம்மொழி' என்று முதன்முதலில் முழங்கிய தமிழறிஞர் பரிதிமாற்கலைஞருக்குக் காணிக்கையாக்கி இருப்பது அவரது உள்ளத்தில் கொலு-வீற்றிருக்கும் ஆழ்ந்த தமிழுணர்வைக் காட்டுவதாகும்.

புதுயுகனின் கண்ணோட்டத்தில் காந்தியடிகள்


பெரும்புலவர் இராமானுசக் கவிராயர்
(1905-1985) 12,285 பாடல்களில் 'மகாத்மா காந்தி காவியம்' பாடினார். அவரது பெயரன் புதுயுகனோ 'குறுகத் தறித்த குறள்' போலக் காந்தியடிகளின் ஆளுமைப் பண்புகளைப் போற்றி - அவர் தம் வாழ்விலும் வாக்கிலும் உயிரினும் மேலாக மதித்துப் போற்றி வந்த விழுமியங்களை மையமாக வைத்து - 'அறத் தீ' என்னும் தலைப்பில் ஒரே ஒரு கவிதை பாடியுள்ளார். காந்தியடிகளைக் கருத்துப் படமாக (Cartoon)  வரைவது என்பது மிகவும் எளிது; கைத்தடி, கதராடை எனக் கோடுகள் இழுத்தால் வந்து விடும் உருவம் அவருடையது. வாய் மை, வாய்மை எனப் பலரும் கூறி வந்த வேளையில், வாழ்வு மை வாய்மை என உலகிற்குப் பறையறைந்து சொன்னவர் - சொன்னதோடு மட்டுமன்றி வாழ்ந்தும் காட்டியவர் - காந்தியடிகள், 'அவதார புருஷ குணம், சாதாரண மனுஷ மனம்' என்பது காந்தியடிகளின் ஆளுமையில் காணப்பெற்ற தனிப்பெரும் தகைமை. காந்தியடிகளைப் பற்றிய புதுயுகனின் கண்ணோட்டம் இது:

'அரிச்சந்திரன், பிரகலாதன், சிரவணன்
எல்லாம் கலந்த / இந்திய நிஜம் நீ.
மண்டேலா, சூகி, லூதர் கிங், ஒபாமா என
உலகம் தொடரும் / இந்திய புஜம் நீ
அகிம்சையால் ஐன்ஸ்டைனையும்
அசர வைத்த / இந்திய கஜம் நீ'


என்பது காந்தியடிகளுக்குப் புதுயுகன் சூட்டும் அரிய புகழாரம். இதில் முதல் வரிசையில் வரும் அரிச்சந்திரன், பிரகலாதன், சிரவணன் ஆகிய மூவரும் புராண மாந்தர்கள்; வாய்மை, பக்தி, பாசம் என்னும் உயரிய விழுமியங்களின் அடையாளங்களாகக் காலங்காலமாகப் போற்றப்படுபவர்கள். அடுத்த வரிசையில் வரும் மண்டேலா, சூகி, லூதர் கிங், ஒபாமா ஆகியோர் உலகளாவிய நிலையில் பேசப்பட்டு வரும் தலைவர்கள்; காந்தியடிகளின் வாழ்வு, வாக்கு ஆகியவற்றின் மீது மலையிலும் மாணப் பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள். மூன்றாவது வரிசையில் இடம்பெறும் ஐன்ஸ்டீன் அறிவியல் துறையில் தடம் பதித்தவர்; அவரையே அசர வைத்தது காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவம். காந்தியடிகளைப் பற்றிய ஐன்ஸ்டீனின் கருத்து உலகப் புகழ் பெற்றது. காந்தியம் என்பது உயிர்த் தத்துவம்; உயரிய விழுமியங்களின் களஞ்சியம். அது முற்றுப்புள்ளி அல்ல் இன்றளவும் உலகில் தொடர்ந்து வரும் - உயிர்ப்புடன் இயங்கி வரும் - பெருஞ்சக்தி; பேராற்றல். உள்ளுர்த் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஈர்த்த ஆளுமைக்குச் சொந்தக்காரர் காந்தியடிகள். 'எல்லாம் கலந்த இந்திய நிஜம்' - 'உலகம் தொடரும் இந்திய புஜம்' - 'அசர வைத்த இந்திய கஜம்' என்னும் அழகிய தொடர்களால் காந்தியடிகளின் தனிப்பெரும் ஆளுமைப் பண்புகளை முப்பரிமாண ஓவியமாகத் தம் கவிதையில் வரைந்து காட்டியுள்ளார் புதுயுகன்.

'கோடி ஆண்டுகளின் உண்மையை வார்த்து
லட்சம் ஆண்டுகளின் மனிதத்தைக் கோர்த்து
ஆயிரம் ஆண்டுகளின் கலாச்சாரம் சேர்த்து
நூற்றாண்டுகளின் அடிமைத்தனத்தை அறுத்த
எண்பதாண்டு அறக்கத்தி நீ,
என்றும் எரியும் அறத் தீ நீ!'


என 'எண்ணலங்காரம்' என்னும் உத்தியைக் கையாண்டு கோடி, லட்சம், ஆயிரம், நூறாண்டு, எண்பதாண்டு என இறங்குமுகமாக எண்களை நிரல்படுத்திக் கூறி - உண்மை, மனிதம், கலாச்சாரம், விடுதலை, அறம் என நிலைபேறுடைய விழுமியங்களையும் இயைபடுத்தி - காந்தியம் பற்றிய தம் கருத்தியலுக்கு மெருகு சேர்த்துள்ளார் கவிஞர். மேலும் அவர், ஒற்றை வரியில் மதிப்பிடுவது போல், 'என்றும் எரியும் அறத்தீ' என்றும் காந்தியத்தைச் சுட்டியுள்ளார்.

புதிய பொருண்மைகள்

பாட்டுக்கொரு புலவர் பாரதியாரின் வழியில் இதுவரை தமிழ்க் கவிதை உலகில் பேசாப் பொருளைப் புதுயுகன் பேசத் துணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது; வரவேற்க வேண்டியதும் கூட. அவ்வகையில் கவிஞர் படைத்துள்ள சில கவிதைகளை இங்கே காணலாம். இன்றைய தலைமுறையினருள் ஒரு சாரார், திரைப்பட மோகத்தில் வீழ்ந்து தங்கள் பொன்னான பொழுதுகளை எல்லாம் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். 'உனக்கு விசிறியறியாத நீ, உன் நட்சத்திரங்களுக்கு விசிறினாய், காலமெல்லாம்' எனத் திரை உலகில் வழங்கி வரும் 'விசிறி' என்ற சொல்லை அங்கதக் குறிப்புடன் கையாண்டு அத்தகையோரைச் சாடுகின்றார் கவிஞர். பிறிதொரு சாரார், பருவக் கவர்ச்சியையும் உணர்வுக் கிளர்ச்சியையும் காதல் எனத் தவறாகப் புரிந்து கொண்டு மயக்கத்தில் விழுந்து கிடக்கிறார்கள். இன்னொரு சாரார், நாளைய கனவுகளைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக்கொண்டு, இன்றைய நாட்களை ஏக்கத்திலும் கவலையிலும் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்; ஏன், கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூடச் சொல்லலாம். இராணுவமாய்த் தன்னுள் பரவிக் கிடக்கும் தன்னுடைய தனிப்பட்ட திறன்களைக் கண்டுகொள்ளாமல், பிறருக்காக அவற்றை ஒடுக்கிக் கொண்டு, ஒரு போலியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இன்றைய இளம் தலைமுறையினரை நோக்கிப் பொட்டில் அடித்தாற் போல் கவிஞர் கேட்டும் கூர்மையான கேள்வி இது:

'என்றேனும் ஒரு நாள்
நியாயமாய் நீ கொண்டாடியதுண்டா
                  - உன்னை நம்பி
                    உன்னுடனே வந்த
                    உன்னை?'
(கதவு இல்லாத கருவூலம், பக்
.67-68).

'என்று கொண்டாடுவாய் உன்னை?' எனக் கவிஞர் இக் கவிதைக்குச் சூட்டி இருக்கும் தலைப்பு சிந்திக்கத் தூண்டுவதாகும்.

மாணவன் 'பாஸ்', பரிட்சை 'பெயில்' என்னும் கவிதை இன்று நடைமுறையில் உள்ள நம் கல்வி முறை பற்றிய கவிஞரின் கூர்மையான விமர்சனம் ஆகும். நாடெங்கிலும் உள்ள கல்வியாளர்கள் ஒன்றுகூடித் தேர்வு முறை, வினாத்தாள் அமைப்பு ஆகியன குறித்து அடிக்கடி விவாதித்து வருகின்றனர்; அவற்றில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றியும் கலந்து பேசி வருகின்றனர். மனப்பாடப் பகுதி, கட்டாயப் பகுதி, தேர்ந்தெடுத்து எழுதும் பகுதி முதலான இன்றைய வினாத்தாளின் பகுதிகள் யாவும் மாணவர்களை நகல் எந்திரங்களாய் மாற்றிவிடுகின்றன் சுயமான தீர்வுகள், தனித்திறன், படைப்பாற்றல் ஆகியவற்றிற்கு மதிப்புத் தராமல் - உரிய இடமும் நல்காமல் - நினைவாற்றலுக்கு மட்டுமே முதன்மை தந்து அவர்களைப் பரிதாப நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.

'மாணவன் 'பாஸ்' ஆன
ஒவ்வொரு முறையும்
தேர்வுகள் 'ஃபெயில்' ஆகின்றன!'
(கதவு இல்லாத கருவூலம், ப.
49)

எனத் தமக்கே உரிய தனித்துவம் மிளிரும் மொழியில் இந்த அவலத்தைப் பதிவு செய்துள்ளார் கவிஞர். ஒட்டுமொத்த விளைவு? 'தலை எழுத்துக்களை எழுதுகின்றன / தேர்வுகள் / விதியை நிர்ணயிக்கின்றன / பரிட்சைகள்' என்கிறார் கவிஞர்.

படிப்பவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் பிறிதோர் அருமையான கவிதை 'இதய ஊர்வலம்'. வாழ்வில் எப்போதும் ஒருவர் உடனிருக்கும் போது அவரது அருமை தெரிவதே இல்லை; இழந்த பிறகு தான் - இல்லாத போது தான் - ஒருவரது இன்றியமையாமை புலனாகும். இது கட்டிய மனைவிக்கும் பொருந்தும். இந்தக் கசப்பான உண்மையைக் கவிஞர் இக் கவிதையில் உணர்த்தி இருக்கும் பாங்கு அற்புதத்திலும் அற்புதம். 'எதுஎது எங்கிருக்குன்னு / புரியாத என் கணவா / தனியா இருக்கையிலே / தத்தளிச்சு போயிருவே' என மனைவியின் கூற்றாகத் தொடங்கும் கவிதை, கணவனின் இயல்புகளைப் பட்டியல் இடுகின்றது. நண்பர் யார், பகைவர் யார் எனப் பகுத்தறியத் தெரியாமை, கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டுப் பிறகு வருந்துதல், குடும்பத்தின் வரவு செலவுக் கணக்கு குறித்து எதுவும் அறியாமை, தன் பிள்ளை படிக்கும் வகுப்பு எது என்று கூடத் தெரிந்து வைத்துக் கொள்ளாமை எனக் கணவனைப் பற்றிய மனைவியின் அப்பட்டமான படப்பிடிப்பாக வளர்ந்து செல்கின்றது. 'உத்தியோகக் கோபத்த / வாசலிலே விட்டு விடு / நான் இல்லா வீட்டில் / அத இறக்கி வைக்க வழி இல்ல' எனக் கணவனுக்குச் சொல்லிக் காட்டும் மனைவி கடைசியில் தன் கணவனுக்கு விடுக்கும் உருக்கமான வேண்டுகோள் இது:

'சொன்னதெல்லாம் கேட்டுதோ இல்லையோ
இதை மட்டுமாச்சும் சத்தமா சொல்லிட
சக்தி வேணும் என் குரலுக்கு
- 'உடம்பைப் பார்த்துக் கொள் என் அன்பா'!'
'புரியாத என் கணவா'
எனக் குத்தலோடு தொடங்கிய கவிதை, 'உடம்பைப் பார்த்துக்கொள் என் அன்பா!' எனக் கரிசனத்தோடு முடிவடைவது நோக்கத்தக்கது. இதனினும் மேலாக,

'உரக்கச் சொன்னாள் / தன் உடம்பை
நான்குபேர் தூக்கிய ஊர்வலத்தின் / உச்சியில் இருந்து'

                                                   (கதவு இல்லாத கருவூலம், ப
.62)

என்பதை அறிய நேரும் போது கவிதையைப் படிப்பவர் மனம் அதிர்ச்சியில் உறைகின்றது.
'வயதல்ல அனுபவம்' என்ற கவிதையும் புதிய பொருண்மையைப் பாடுபொருளாகக் கொண்டதாகும். 'இருவேறு உலகத்து இயற்கை'
(374) என்பது போல், மனிதருள் இரு வகையினர் உள்ளனர். ஒருவர், வயதானவர்; மற்றவர், அனுபவசாலி. முன்னவருக்கு, ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்; அவர் வெறுமனே காலத்தைக் கழிப்பார். அவ்வளவே. பின்னவரோ, ஒவ்வொரு நொடியும் - ஒவ்வொரு அடியிலும் - தம்மைப் புதுப்பித்துக் கொள்வார். 'வாழ்க்கையை மாற்றம்' என்பார் வயதானவர். அனுபவசாலியோ 'வாழ்க்கையை முன்னேற்றம்' என்பார். வாழ்வில் நிகழ்வுகளை நினைவுகளாகத் தமது மூளையின் மூலையில் வைத்திருப்பார் வயதானவர். நிகழ்வுகளின் சாற்றினை உள்வாங்கித் தம்மையே செதுக்கி வருவார் அனுபவசாலி. 'வயது, எண்ணிக்கை' என்பார் வயதானவர். அனுபவசாலியோ 'அனுபவம், எண்ணக் கை' என்பார். வாழ்க்கையின் முடிவில் இருட்டிற்குள் முடங்கித் தூங்கிப் போவார் வயதானவர். விடியலை எதிர்நோக்கி ஓய்வில் ஆழ்வார் அனுபவசாலி. கண்ணதாசன் புகழ்பெற்ற தம் திரைப்பாடல் ஒன்றில் 'என் நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு' (திரை இசைப் பாடல்கள்: நான்காம் தொகுதி, ப.382) எனக் குறிப்பிடுவது அனுபவசாலிக்குப் பொருந்தும். கவிதையின் தொடக்கத்திலும் முடிவிலும், 'அவர் வயதானவர் / இவர் அனுபவசாலி' (ப.59) என்னும் வரிகளைத் திரும்பத் திரும்பக் கவிஞர் கையாண்டிருப்பது நோக்கத்தக்கது. பாரதியாரின் மொழியில் குறிப்பிட வேண்டும் என்றால் வயதானவர், 'உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சி'; அனுபவசாலி. 'சுடர்விடும் அறிவு படைத்த நல்லதோர் வீணை'.

'உலக ஊனம்' என்னும் தலைப்பில் அமைந்த ஒரு வித்தியாசமான கவிதை. இன்று உலகில் - நாட்டில் - ஊரில் - தெருவில் - குடும்பத்தில் நாளும் அரங்கேறி வரும் கொடுமைகளைப் பார்க்கும் போது, 'விதியே விதியே மனிதச் சாதியை என்செயக் கருதி இருக்கின்றாயடா?' எனக் கேட்க வேண்டும் போல் தோன்றுகின்றது. ஈரானில் பாலியல் வன்கொடுமை, இலங்கையில் இனப்படுகொலை, உலகில், சாதி, மதம், நிறம், மொழி ஆகியவற்றின் பேரால் பெருகி வரும் பேதங்கள், தீவிரவாதம், பிரிவினைவாதம், பயங்கரவாதம், எதுவும் இல்லாவிட்டால் பிடிவாதம் என்றாற் போல் அடுக்கடுக்கான கொடுமைகள், பெருநகரங்களில் வாகன, தொழிற்சாலைப் புகைகளால் விளையும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடுகள் என உலக நிகழ்வுகள் பலவற்றையும் கண்டு, கேட்டு, உயிர்த்து ஐம்புலன்களுமே உணர்வற்றுப் போய்விடுகின்றன. என்றாலும், 'எப்படி இருக்கிறீர்கள்?' என்று யாரேனும் கேட்டால், 'சௌக்கியமாய் இருக்கிறேன்' என்று 'தவறாமல் பதிலளிக்கிறோம் - இத்தனை ஊனம் இருந்தும் ... ஒவ்வொரு முறையும்!' (கதவு இல்லாத கருவூலம், பக்.
30-31).


தனித்துவமான கவிதைமொழி


புதுயுகனின் படைப்பாளுமையில் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கூறு அவரது தனித்துவமான கவிதை மொழி ஆகும். நெஞ்சை அள்ளும் புதுப்புது உவமைகளும் உருவகங்களும் வித்தியாசமான சொல்லாட்சிகளும் படிமங்களும் இதுவரை எவரும் கையாளாத கற்பனைகளும் காட்சிகளும் அவரது மொழியில் அணிவகுத்து வரக் காண்கிறோம். 'கதவு இல்லாத கருவூலம்'இ 'மடித்து வைத்த வானம்' என்னும் இரு கவிதைத் தொகுதிகளின் தலைப்புக்களே கவிஞரின் படைப்பாற்றலுக்குக் காட்டியம் கூறி நிற்கின்றன. இயற்கையின் மீது - குறிப்பாக, வானத்தின் மேல் - கவிஞர் வைத்திருக்கும் 'வானளாவிய' பற்றினை இத் தலைப்புக்களைக் கொண்டே உய்த்துணர முடிகின்றது.

ஈழத்தைக் 'கண்ணீர்த் துளித் தீவு' எனச் சொல்லோவியமாகத் தீட்டுவார் கவிஞர் சிற்பி. அவரை வழிமொழிவது போல், புதுயுகன் மதிப்புமிகு ஈழத் தமிழரை 'ழகர சகோதரா' என விளிக்கிறார்; 'உன் கண்ணீர்த் துளியின் சின்னமோ, இலங்கை வரைபடம்?' (கதவு இல்லாத கருவூலம், ப
.85) என வினவுகின்றார்.

'அமெரிக்க நாட்டிற்குச் சென்று வந்து 'நயாகரா'வைப் பாடாத கவிஞன் இல்லை, 'நயாகரா'வைப் பாடாதான் கவிஞன் இல்லை' எனக் கூறும்; அளவிற்கு 'நயாகரா' பல்வேறு கவிஞர்களால் பல்வேறு கோணங்களில் பாடப்பெற்றுள்ளது. 'ஓ... நயாகரா!' (இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, பக்.
40-44) என்னும் தலைப்பில் கவிஞர் வைரமுத்துவும் நயாகரா குறித்து ஓர் அழகிய கவிதை பாடியுள்ளார். அதில் அவர், 'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் அருவியின் கண்ணும் உள' எனப் புதுக்குறள் ஒன்றைப் படைத்துள்ளார். 'நயாகரா' குறித்து இதுவரை பாடப்-பெற்றுள்ள கவிதைகளுள் புதுயுகனின் கவிதை மணிமகுடமாகத் திகழ்கின்றது.

'இமயம் நீரிலும் அமையும் -
அது நயாகரா!'

என்னும் கவிதையின் தொடக்கமே அசத்தலாக உள்ளது. 'யார் இந்தப் பேரழகி?' என வினவி, 'பச்சை, நீலம், வெண்மை என இவளது கூந்தலே இத்தனை அழகெனில் முகம் எப்படியோ? எந்தத் தேசம் சென்று எந்தப் பக்கம் பார்ப்பது?' என வியப்பின் விளிம்பிக்கே சென்று பாடுகின்றார் கவிஞர்.

'மையோ? மரகதமோ? மறிகடலோ? மழைமுகிலோ?' என இராமனின் அழியா வடிவ அழகினைப் பாடும்போது கம்பர் அடுக்கி வினவுவது போலப் புதுயுகனும், 'ஒரு வேளை பேய் பிடித்து விட்ட தண்ணீர் இங்கு புகை பிடிக்கிறதா?', 'இது தாய்மைத் தண்ணீரின் ஆண்மைத் தாண்டவமா? அல்லது நீர்மகனின் போர்முகமா?' என்றெல்லாம் அடுக்கடுக்காக வினவுகிறார். மொத்தத்தில், 'வேகம், பலம், அழகு, ஆக்ரோஷம், பிரமாண்டம் / என்ற ஐந்து தலை நாகம் நயாகரா' என்ற முடிவுக்கு வருகின்றார் கவிஞர். அவரது கண்ணோட்டத்தில் 'பொறாமை, வஞ்சம், புரளி, பேராசை / என்ற மனித அழுக்குகளை / அடித்து, துவைத்து, இடித்துக் கிழித்து / தூக்கி எறியச் சொல்கிறது நயாகரா'.


'நண்பரே, நயாகராவைப்
பாருங்கள் திறக்கப்படும்!'
(கதவு இல்லாத கருவூலம், பக்
.78-81)

என்ற கவிதையின் முடிவும் நல்ல ஓவியம் ஒன்றின் கண் திறப்புப் போல் அமைந்து பயில்வோரைப் பல கோணங்களில் சிந்திக்கத் தூண்டுகிறது.

'புதிதாய் பூப்பெய்த பெண் போன்ற
இளங்காலைப் பொழுது ...
எங்கு காணினும் இறைவனின் மதமாய்
மலர்கள் ...
பேரழகி ஒருத்தியின் மேலங்கி போல்
ஓடுகிறது அந்தச் சிற்றோடை ...'


என்றாற் போல் 'உலகின் சிறந்த கவிதைகள்' என்னும் கவிதையில் கவிஞர் கையாண்டிருக்கும் உவமைகள் அற்புதமானவை; தலைப்பே உணர்த்துவது போல் '(கவிதை) உலகின் சிறந்த உவமைகள்!'.

புதுயுகன் இசைக்கும் வித்தியாசமான தாலாட்டு


மக்கள் மொழியும் புதுயுகனுக்குக் கைவந்த ஒன்றே என்பதைப் பறைசாற்றும் கவிதை 'ஒரு குடிசையின் தாலாட்டு'.

'தரமா வாழ்ந்து காட்ட / தரை வந்த சூரியனே:
வரமா தான் வாய்ச்சவளே / குடிசை வீட்டு பொக்கிசமே!
உதட்டுப்பூ பூத்திடு நீ / உசிரில் பழுத்த பனிக்கனியே!'


எனத் தன் குழந்தையைத் தரை வந்த சூரியனாகவும் தனக்கு வாய்த்த வரமாகவும் பொக்கிசமாகவும் வருணிக்கும் குடிசைத் தாய்,

'வளவி பொம்ம எல்லாம் / விலை அதிகம் என் கண்ணே
நிலவு இலவசம்தான் / நீ சிரிக்க நான் தருவேன்'


எனப் பாடுவது அவளது எளிய வாழ்க்கை நிலையை உணர்த்துவது. இல்லாத வறிய சூழலில் வாழ்ந்தாலும்,

'என்ன செய்ய கை நீட்டி / எங்கும் கேட்க மனசில்ல
தன்மானம் தான் உனக்கு / அலங்காரம் என் மகளே!'


எனத் தன்மான உணர்வைக் குடிசைத் தாய் தன் குழந்தையின் நெஞ்சில் ஆழமாக விதைப்பது குறிப்பிடத்தக்கது.

'சொல்லாத ஆறுதல் கெழக்கில் / சாமி எழுதி இருக்கு
நல்லதாக ஒரு உலகம் / நமக்காக விடிஞ்சு இருக்கு!'


                                       (கதவு இல்லாத கருவூலம், பக்.
46-47)

என நம்பிக்கை ஊட்டும் விதத்தில் கவிஞர் பாடலை முத்தாய்ப்பாக முடிப்பது சிறப்பு

'நாளை உலகம் நல்லோரின் கையில்
நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்'


                        (மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், ப
.279)

என நிறைவடையும் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தாலாட்டுப் பாடல் இங்கே ஒப்புநோக்கத் தக்கது ஆகும்.

மெல்லிய நகைச்சுவை இழை

மெல்லிய நகைச்சுவை உணர்வு இழையோடி நிற்கும் கவிதை 'தபால் பாட்டியும் மின்னஞ்சல் பேரனும்'. தபால் பாட்டியாம்; மின்னஞ்சல் (e-mail) பேரனாம்; முக நூல் (Facebook) பே(ர்)த்தியாம். இம் மூவரும் தங்களுக்குள் உரையாடிக் கொள்வதாகக் கவிஞர் படைத்துள்ள சுவையான குறுங்கவிதை இது:

''தபால் தலை / தபால்காரன் / தபால் பெட்டி'
தம்பட்டம் அடித்தாள் தபால் பாட்டி
கேட்டிருந்தனர் / 'மின்னஞ்சல் பேரனும்' / 'முகநூல் பேத்தியும்'
'வேகச் சேவைக்கு என் தந்தி' / என்று பாட்டி சொன்னதுதான் தாமதம்
உருண்டு புரண்டு சிரித்தனர் / பேரனும் பேத்தியும்'


                                               (கதவு இல்லாத கருவூலம், ப.
36)

'ஜுலை
15 முதல் தந்தி சேவை நாட்டில் நிறுத்தப்படுகிறது' என்ற உண்மைச் செய்தியின் பின்னணியில் இக் கவிதையைப் படிக்கும் போது இனந்தெரியாத ஒரு சோக உணர்வால் நம் மனம் கனத்துப் போவது என்னவோ உண்மை! எண் வகை மெய்ப்பாடுகளின் வரிசையில் நகைச்சுவைக்கும் அவலச் சுவைக்கும் அடுத்தடுத்த இடத்தைத் தந்திருப்பது இங்கே கருத்தில் கொள்ளத் தக்கதாகும்.

சரி, கட்டுரையை எப்படி முடிப்பது? திரைப்படப் பாணியில் 'மற்றவற்றை வெள்ளித் திரையில் காண்க!' எனச் சொல்லி முடிக்கலாமா? அல்லது, கவியரசர் கண்ணதாசனின் வரிகளைக் கடன் வாங்கி, 'சொல்லில் வந்தது பாதி - நெஞ்சில் ததும்பி நிற்பது மீதி' என மேற்கோள் காட்டி முடிக்கலாமா? வானம்பாடி இயக்கத்தின் முதுபெரும் கவிஞர் - சாகித்திய அகாதெமி விருதினை இருமுறை பெற்ற ஒரே படைப்பாளி - சிற்பியோடு சேர்ந்து நாமும், 'மிக முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று! இன்றைய தமிழ்க் கவிதையின் தேய்ந்த தடத்தைப் புறக்கணித்துத் தனக்கேயான புதுப்பாணியில், புதிய பொருண்மைகளை அடையாளம் காண்கிறார் புதுயுகன் என்பதுதான் அது. அபூர்வமான அனுபவங்களையும், விசாலமான எல்லைகளையும் தன் தனித்துவமான கவிமொழியால் தொட இருக்கும் புதுயுகனுக்கு (என்) பாராட்டுகளும் வாழ்த்துகளும்' (கதவு இல்லாத கருவூலம், ப.
13) தெரிவித்துக் கொள்வோம்!.


 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021