தமிழுக்குக் கிடைத்துள்ள ஒரு புதுவகைப் புனைவு

முனைவர் இரா.மோகன்


'இ
ருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதை வடிவத்திற்கு-வகைக்கு-புதிய பரிமாணங்களைச் சேர்த்தவர்' என்ற பீடும் பெருமையும் ஈரோடு தமிழன்பனுக்கு உண்டு. மரபுக் கவிதையில் காலூன்றி, புதுக்கவிதையில் பீடு நடை பயின்று, ஹைகூ கவிதையில் தடம் பதித்து, சென்ரியு கவிதையில் உலா வந்து, சென்ரியு, லிமைரைக்கூ என்றாற் போல் கவிதைத் துறையில் சோதனை முயற்சிகளில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டு வருபவர் அவர். அவரது அண்மைப் படைப்பு 'பழமொன்ரியு'. தமிழ்ப் பழமொழியும் ஜப்பானிய சென்ரியுவும் இணைந்து உருவெடுத்த முதல் நூல் இது. கவிஞரின் சொற்களிலேயே குறிப்பிடுவது என்றால், 'தமிழ்ப் பழமொழியும் ஜப்பானிய சென்ரியுக் கவிதையும் காதல் மணம் புரிந்து பெற்றெடுத்த கவிதைப் பிள்ளை பழமொன்ரியு என்று சொல்லலாம்' (ஒரு கூடைப் பழமொன்ரியு, ப.
4). 2001-ஆம் ஆண்டில் தமிழின் முதல் சென்ரியு தொகுப்பான 'ஒரு வண்டி சென்ரியு'வைப் படைத்த கவிஞரின் எழுதுகோல், இப்போது 'ஒரு கூடைப் பழமொன்ரியு' தொகுப்பினைத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 'பழமொழிகளுக்கு ஒரு திருப்பம் கொடுத்து, ஒரு சிறு மாற்றம் கொடுத்து, அல்லது ஒரு பார்வைத் திரிபைப் புகுத்தி அவற்றுக்குப் புத்தொளி பற்ற வைக்கும் முயற்சி இந்நூலில் நடந்துள்ளது. கொஞ்சம் குத்தலாய், கொஞ்சம் குதர்க்கமாய், கொஞ்சம் தர்க்கமாய்-பழமொழிகளை மாற்றிப் போட்டால் சென்ரியுவாக அவை சிலிர்க்கின்றன் சிந்திக்க வைக்கின்றன் சிரிப்பை அள்ளி வீசுகின்றன' (ஒரு கூடைப் பழமொன்ரியு, ப.9) எனக் கவிஞரே நூலுக்கு எழுதிய முன்னுரையில் பழமொன்ரியு வடிவம் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நூலைக் கவிஞர் மூன்று நாள்களில் எழுதி முடித்திருப்பது சிறப்பு. 'இந்நூலில் உள்ள கவிதைகளைச் செதுக்கி எடுக்க வாய்ப்பு உண்டு' (ப.
9) என்னும் முன்னுரைக் குறிப்பு – ஒப்புதல் வாக்குமூலம் – அவரது படைப்புள்ளத்தின் பெற்றியைப் புலப்படுத்துவதாகும்.

முயற்சியை உயர்த்திப் பிடித்தல்

'முயற்சி திருவினை ஆக்கும்' என்ற வள்ளுவர் வாசகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் தமிழன்பன். 'வாழ்வில் முயற்சி உடையார் உயர்ச்சி அடைவார்' என்பதே அவரது தாரக மந்திரம். முயற்சியை உயர்த்திப் பிடிக்கும் வகையில் கவிஞர் படைத்துள்ள ஒரு பழமொன்ரியு:

'கடவுளை நம்பினார் கைவிடப்
பட மாட்டார் கடவுளை நம்பி
முயற்சியை விட்டார் முன்னேற மாட்டார்.'
(176)

'கடவுளை நம்பினார் கைவிடப் படமாட்டார்' என்னும் பழமொழியை எடுத்தாளும் கவிஞர், 'கடவுளை நம்பி முயற்சியை விட்டார் முன்னேற மாட்டார்' என ஆணி அறைவது போல் அடித்துக் கூறுவது நோக்கத்தக்கது.

'ஜாண் ஏறினால் முழம் சறுக்கும்' என்பார்கள். கவிஞரோ அப் பழமொழி கூறும் சிந்தனைக்கு ஒரு திருப்பம் தந்து இங்ஙனம் மொழிகின்றார்:

'ஜாண் ஏறினால் முழம் சறுக்கும்;
ஏறிக் கொண்டே இரு; முழம் ஏறி
உச்சிக்கு நீ போவாய், சத்தியம்.'
(174)

இமைப் பொழுதும் சோராமல் - இடையில் வரும் இடையூறுகளைப் பற்றிக் கவலையும் கொள்ளாமல் - தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தால், உறுதியாக உச்சியை அடைந்து விடலாம், இது சத்தியம் என அறுதியிட்டு உரைக்கின்றார் கவிஞர்.

'கிட்டதாயின் வெட்டென மற' என்பது ஆன்றோர் வாக்கு. கவிஞரோ தம் பழமொன்ரியு ஒன்றில்,

'வெட்டென மறந்ததை அடையலாம்
விடாமல் துரத்திட நினைத்தால்'
(179)

எனப் படிப்பவர் நெஞ்ச வயலில் நம்பிக்கையை விதைக்கின்றார்.


முற்போக்குச் சிந்தனைகளின் ஆட்சி


தமிழன்பன் தம் வாழ்விலும் வாக்கிலும் 'பகுத்தறிவுப் பகலவன்' எனச் சிறப்பிக்கப் பெறும் தந்தை பெரியாரையும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையும் தம் இரு கண்ணெனப் போற்றி வருபவர். எனவே அவரது அனைத்துக் கவிதைப் படைப்புக்களிலும் முற்போக்குச் சிந்தனைகளின் ஆட்சியைப் பரக்கக் காணலாம். பழமொன்ரியு கவிதைகளிலும் ஆங்காங்கே கண்மூடிப் பழக்க வழக்கங்களுக்கும் பிற்போக்கான பத்தாம்பசலிச் சிந்தனைகளுக்கும் எதிராகக் கவிஞரின் குரல் ஓங்கி ஒலித்திடக் காண்கிறோம். ஓர் எடுத்துக்காட்டு,

'ஏற்றப்பாட்டுக் கில்லை
எதிர்ப்பாட்டு; எதிர்ப்பாட்டு எவரும்
பாடாவிட்டால் ஏற்றமில்லை.'
(122)

'சகட்டு மேனிக்கு' எல்லாவற்றையும் கண்மூடி ஏற்றுக் கொண்டு போவதிலோ, எதற்கும் 'ஆமாம், சாமி!' போடுவதிலோ இல்லை ஏற்றம் - முன்னேற்றம்; கொடுமைக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும், தீமைக்கு எதிர்ப்பாட்டு பாட வேண்டும், அப்போது தான் வாழ்வில் ஏற்றம் காண முடியும்; சமுதாயத்தில் முன்னேற்றமும் ஏற்படும் என்பது கவிஞரின் முடிந்த முடிபு.

'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது' என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. இப் பழமொழிக்கு எதிராகக் கவிஞர் தம் பழமொன்ரியு ஒன்றில் எழுப்பி இருக்கும் மாற்றுச் சிந்தனை சுவையானது.

'கழுதை தேய்ந்து
கட்டெறும்பானது; கட்டெறும்பு
வளர்ந்தும் கழுதை ஆகவில்லை.'
(2)

'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது' என்றால், 'கட்டெறும்பு வளர்ந்து கழுதை ஆக வேண்டும் அல்லவா? ஆகவில்லையே?' என வினவுகின்றார் கவிஞர்.

'கொல்லன் தெருவில் ஊசி விற்கலாமா?' என்று கேட்டால், விற்கலாம் என்கிறார் தமிழன்பன். அதற்கு அவர் கூறும் தகுதிப்பாடு சிந்திக்கத் தூண்டுவது.

'கொல்லன் தெருவில் ஊசி
விற்கலாம்; புதிதாய் இருந்தால் கம்பன்
தெருவிலும் கவிதை விற்கலாம்.'
(218)

புதிதாய் இருந்தால் – தரமும் திறமும் கைவசம் இருந்தால் – கொல்லன் தெருவில் ஊசி விற்கலாம்; 'கவிப் பேரரசர்' எனச் சிறப்பிக்கப் பெறும் கம்பன் தெருவிலேயே கவிதை விற்கலாம்; கடையும் விரிக்கலாம்.

'உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியாது' என்பது பழமொழி. தமிழன்பன் இப் பழமொழியில் ஒரு மாற்றம் செய்து, அதன் பொருளில் புத்தொளி பாய்ச்சியுள்ளார். அவரது கண்ணோட்டத்தில்,

'உலை வாயையும் மூடலாம்,
ஊர் வாயையும் மூடலாம்; புலன்களை
மூடி அடக்கமாய் இருந்தால்'
(31)

இன்றியமையாது வேண்டப் பெறுவது புலனடக்கமே, புலனடக்கம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்; செய்து முடிக்கலாம் என்பது கவிஞரின் கருத்து.

சமூக அவலங்களின் சாடல்கள்


இன்றைய சந்தை நிலவரப்படி தக்காளியில் இருந்து தங்கம் வரை, வெங்காயத்தில் இருந்து வெள்ளி வரை விலையை வாசிக்க முடியுமே தவிர, எதையும் காசு கொடுத்து எளிதாக வாங்கிவிட முடியாது; அந்த அளவிற்கு விலைவாசி உயர்வு ஏழை எளியவர்களையும் நடுத்தரக் குடும்பத்தினரையும் இன்று ஆட்டிப் படைத்து வருகின்றது. அரசியலாரும் தமது தேர்தல் அறிக்கையில் கவனமாக, 'விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம்' என்கிறார்களே ஒழிய, 'விலைவாசியைக் குறைப்போம்' என ஒருபோதும் உறுதியளிப்பது இல்லை. இதனை நினைவுபடுத்தும் விதத்தில் கவிஞர் படைத்துள்ள ஒரு சுவையான பழமொன்ரியு இதோ:

'வெண்கலக் கடையிலே யானை
புகுந்தது; விலையைக் கேட்டதும்
கப்! சிப்! வெளியேறி விட்டது.'
(145)

வெண்கலக் கடையிலே புகுந்த யானை, விலையைக் கேட்டதும் வாயே திறக்கவில்லையாம்! 'கப்சிப்' என்று பேசாமல் கடையை விட்டே வெளியேறி விட்டதாம்!

இடமறிதல், காலமறிதல், வலியறிதல் போல இன்றைய மனிதன் அறிந்து கொள்ள வேண்டுவன இரத்த அழுத்தம்
(Blood Pressure) , நீரிழிவு (Diabetics), கொழுப்பு (Cholesterol) என்னும் மூன்றும் ஆகும். 'தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும்' என்னும் பழமொழியின் தொடர்ச்சியாகக் கவிஞர் நகைச்சுவை உணர்வோடு கூறுவது வருமாறு:

'தான் ஆடாவிட்டாலும்
தன் சதை ஆடும்; உடனே
கொழுப்பைக் குறைக்க வேண்டும்.'
(132)

'குஞ்சி அழகும், கொடுந்தானைக் கோட்டழகும், மஞ்சள் அழகும், அழகு அல்ல் நெஞ்சத்து, 'நல்லம் யாம்' என்னும் நடுவுநிலைமையால், கல்வி அழகே அழகு'
(14:1) என்பது நாலடியார். ஆனால், இன்று கல்வி வணிகம் ஆகிவிட்ட கொடுமை; 'விலை போட்டு வாங்க வா, முடியும் கல்வி' என நிலவும் சமூக அவலம். இதனை வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் அங்கதக் குறிப்போடு தம் பழமொன்ரியு கவிதை ஒன்றில் மென்மையாகச் சாடியுள்ளார் தமிழன்பன்.

'கல்வி அழகே அழகு!
காசு கொடுத்துப் பட்டம் வாங்கும்
அழகை விடவா அது அழகு?'
(81)

என்பது கவிஞர் தொடுக்கும் கேள்விக் கணை

'வட்டி யாசை முதலுக்குக்
கேடு; இலஞ்ச ஆசை
வாழ்க்கைக்கே வெட்கக் கேடு!'
(104)

என்பது கையூட்டுக்கு எதிரான கவிஞரின் உரத்த சிந்தனை.


பெண்ணியச் சிந்தனைகள்


தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., மாயூரம் வேதநாயகர், கவியரசர் பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் வரிசையில் இணைந்து ஈரோடு தமிழன்பனும் பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்வுச் சிந்தனைகளைத் தம் பழமொன்ரியு கவிதைகளில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். இவ் வகையில் குறிப்பிடத்தக்க சில கவிதைகளை இங்கே காணலாம்.

'சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை' என ஆண் குழந்தைக்கு உயர்ந்த இடத்தினைத் தரும் இன்றைய சமுதாயம், பெண் குழந்தைக்குத் தரும் இடம் தாழ்வானது; 'ஆம்பளைச் சிங்கம்' என ஆண் குழந்தையையும், 'பொட்டைக் கழுதை' எனப் பெண் குழந்தையையும் சுட்டும் உலக வழக்கும் இங்கே நிலவி வருகின்றது. மேலும், ஆண் குழந்தை என்றால் 'ஆஸ்திக்கு'; பெண் குழந்தை என்றால் 'ஆசைக்கு'. பேர் சொல்ல மட்டுமன்றி, இறந்தால் கொள்ளி வைக்கும் உரிமையும் காலங்காலமாக ஆண்களுக்கே உண்டு; பெண்களுக்கு அவ்வுரிமை இல்லை.

'கொள்ளி வைக்க ஒரு பிள்ளை
வேணுமாம்; ஒரு பெண் வைத்தால்
எரிய மாட்டாயா நீ?'
(51)

எனக் கவிஞர் தம் பழமொன்ரியு ஒன்றில் மனித குலத்தை நோக்கிக் தொடுத்திருக்கும் கேள்விக் கணை கூர்மையானது; கார சாரமானது.
இதே போல, பெண்களுக்கு எதிராகச் சமுதாயத்தில் வழங்கு வரும் பிறிதொரு பழமொழி – இல்லை, பழிமொழி – 'உண்டி சுருக்கல் பெண்டிர்க்கு' அழகு என்பது. இதனைத் தம் பிறிதொரு பழமொன்ரியுவில் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்கி-யுள்ளார் தமிழன்பன்.

'உண்டி சுருக்கல் பெண்டிர்க்கு
அழகு; தொப்பை பெருக்கல்
ஆணுக்கு அக்மார்க் அழகோ?'
(18)

என்னும் பழமொன்ரியு இவ் வகையில் குறிப்பிடத்தக்கது.

'ஆறிலும் சாவு(ம்) நூறிலும் சாவு(ம்)
அம்மா வயித்திலே பொண்ணா
இருக்கையிலும்தான் சாவு!'
(40)

என்னும் பழமொன்ரியு பெண் சிசு கொலை என்னும் சம கால அவலத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றது.


நகைச்சுவையின் பரிமாணங்கள்


மக்கள் நாவில் காலங்காலமாக வழங்கி வரும் தமிழ்ப் பழமொழிகளுக்குச் சுவையான ஒரு திருப்பம் தந்து, ஒரு சிறு மாற்றம் கொடுத்து, அல்லது ஒரு பார்வைத் திரிபைப் புகுத்தி அவற்றுக்குப் புத்தொளி பாய்ச்சும் முயற்சியைத் தமிழன்பன் இந்நூலில் பரவலாக மேற்கொண்டுள்ளார். இம் முயற்சியில் அவருக்கு நகைச்சுவையின் பரிமாணங்களான கேலியும் அங்கதமும் எள்ளலும், கேலியும் கிண்டலும், குத்தலும் நக்கலும், நையாண்டியும் பகடியும் பெரிதும் கைகொடுத்துள்ளன. இவ் வகையில் மனங்கொள்ளத்தக்க சில பழமொன்ரியு கவிதைகள் இதோ:

'கழுதை கெட்டால் குட்டிச்சுவர்
கெடாமல் இருந்தால் அதுக்குப்
பாராளு மன்றமா?'
(14)

'கும்பிடப் போன தெய்வம் குறுக்கே
வந்தது; கும்பிடக் கோயிலுக்குப்
போகாதே என்றது.'
(27)

'பரணியில் பிறந்தவன் தரணி
ஆள்வான்; தரணி போதாது
பரணிப் பட்டியலில் கோடிப் பேர்.'
(108)

'அவசரம் என்றால் அண்டாவிலும்
கை நுழையாது; அப்படியே நுழைந்தாலும்
ஒன்றுமே தட்டுப்படாது.'
(112)

'வயிற்றிலே பாலை வார்த்தது போல்
அப்படியே தேநீர் போட்டுக் கொடுத்தால்
எப்படி இருக்கும்? ஆகா!'
(121)

'பருத்தி புடைவையாய்க் காய்த்தாலும்
என்ன பயன்? ஓரங்களில் அழகு
ஜரிகை இருக்குமா சொல்லு?'
(140)

'மணலைக் கயிறாய்த் திரிக்கிறது;
வானத்தை வில்லாய் வளைக்கிறது;
தேர்தல் அறிக்கை சரியாய் இருக்கும்.'
(163)

'பெண் என்றால் பேயும் இரங்கும்
ஆனால் ஆண் பேய் என்றால்
இரங்கவே இரங்காது எப்போதும்.'
(166)

இங்ஙனம் நகைச்சுவையின் பல்வேறு பரிமாணங்களையும் தம் பழமொன்ரியு கவிதைகளில் பாங்குறப் பயன்படுத்தியுள்ளார் தமிழன்பன்.

படிப்பவர் இதழ்களில் குமிண் சிரிப்பைத் தோற்றுவிக்கும் பழமொன்ரியு கவிதைகளைப் படைக்கும் வல்லமையும் கைவரப் பெற்றவராகத் தமிழன்பன் விளங்குகிறார். ஓர் எடுத்துக்காட்டு:

'எறும்பு முட்டை கொண்டு
திட்டை ஏறியது; எதிரில்
சுங்கத் துறை அதிகாரிகள்.'
(1)

எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறியதாம்; எதிரில் பார்த்தால் சுங்கத் துறை அதிகாரிகளாம்! எறும்புக்கு வந்த சோதனையைப் பாருங்கள்!

'ஆறின கஞ்சி பழங்கஞ்சி' என்னும் பழமொழிக்குச் சற்றே மெருகு சேர்த்து, சென்ரியு ஆக்கி, அதில் மெல்லிய நகைச்சுவையை அள்ளித் தெளித்துள்ளார் கவிஞர்.

'ஆறின கஞ்சி பழங்கஞ்சி;
அதுவே சூடான சூப்பு
சொகுசான நட்சத்திர விடுதியில்.'
(4)

நம் ஊர்ப் பழங்கஞ்சி – அதுவும் ஆறின கஞ்சி – சொகுசான ஐந்து நட்சத்திர விடுதியில் சூடான சூப்பாகப் பரிணாம வளர்ச்சியைப் பெற்று விடுகின்றதாம்!


குதர்க்கமும் தர்க்கமும்


குதர்க்கத்திற்கும் தர்க்கத்திற்கும் சற்றே வேறுபாடு. தமிழன்பனி;ன் பழமொன்ரியு உலகில் குறும்பான குதர்க்கமும் உண்டு; சிந்திக்க வைக்கும் தர்க்கமும் உண்டு.
'உப்பிட்ட வரை உள்ளளவும் நினை;
அந்த உப்பு உள்ள அளவா?
உப்பிட்டார் உள்ள அளவா?'
(11)


என்பது குதர்க்கத்தின் அடிப்படையில் பிறந்த ஒரு சுவையான பழமொன்ரியு. புதுமைப்பித்தன் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்னும் தம் முத்திரைக் கதையில், 'ஆயுள் சந்தா' என்றதும், 'பத்திரிகையின் ஆயுளா? சந்தாதாரரின் ஆயுளா?' எனக் கேட்பது இங்கே ஒப்புநோக்கத்தக்கது.

படிக்காத மேதையும் உண்டு; படித்த முட்டாளும் உண்டு. எவ்வளவு படித்திருக்கிறோம் என்பது முக்கியம் அன்று, படித்ததில் இருந்து எதைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதே முக்கியம்.

'எட்டும் இரண்டும் தெரியாப்
பேதை நாலும் இரண்டும்
கற்றால் மேதையாய் விடுவானா?'
(99)

என்னும் கவிஞரின் கேள்வி – சிந்தனை – தருக்க நெறி சார்ந்தது. 'எட்டினோடு இரண்டும் அறியேனையே' (திருவாசகம்: திருச்சதகம், பா.
49) என்னும் திருவாசகப் பாடல் அடி இங்கே நினைவுகூரத் தக்கது. 'நாலும் இரண்டும்' என்பது இலக்கிய உலகில் நாலடியாரையும் திருக்குறளையும் குறிக்கும். 'நாலும் இரண்டும்' கற்பதால் மட்டும் ஒருவன் மேதையாகி விட முடியாது; எதுவாயினும் கசடறக் கற்று, கற்ற வழி நிற்பவரே மனிதராக மதிக்கப் பெறுவர்.


முகம் காட்டும் தமிழ்ப் பேராசிரியர்


கவிஞருக்குள்ளே வீற்றிருக்கும் தமிழ்ப் பேராசிரியர் அவ்வப்போது மூன்றாம் பிறையாய் முகம் காட்டி நிற்கும் இடமும் இத்தொகுப்பில் உண்டு. பதச்சோறு:

'சுக்குக்கு மிஞ்சின மருந்தில்லை;
சொல்வதைக் கேள் ஐயன்
குறளுக்கு மிஞ்சின நூலும் இல்லை.'
(53)

'வணக்கம், வள்ளவ' படைத்த எழுதுகோல், இப் பழமொன்ரியு வடிவையும் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவாக, ஒரு கருத்து: கவிஞரே குறிப்பிடுவது போல், 'தமிழ்ப் பழமொழிகளுக்கு சென்ரியுத் தன்மை இயல்பாகவே உண்டு... இப் பழமொன்ரியு நூலில், பழமொழிகள் சென்ரியுத் தன்மையில் இலக்கியத் தகுதியடைவதைப் படிப்பவர்கள் உணரலாம்... நம் ஹைகூ கவிஞர்கள் இம் மரபைப் பின்பற்றலாம். தமிழ்ப் பழமொழிகள் போலவே, தமிழ்ச் சொலவடைகளும், விடுகதைகளும் சென்ரியுவாக மாறக் காத்திருக்கின்றன' (ப.9). இளம் ஹைகூ கவிஞர்கள் இவ் வகையில் மூத்த கவிஞர் தமிழன்பனின் அடிச்சுவட்டில் தொடர் ஓட்டத்தை மேற்கொள்ளலாம்.


 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021