பிரபஞ்சன் சிறுகதைகளில் சமுதாயமும் திருமண உறவுகளும்

முனைவர் பூ.மு.அன்புசிவா



முதாயத்தைக் காட்டும் ஒளிவிளக்கக் கருவூலம் இலக்கியம். மக்களின் வாழ்வியலை அறிந்துகொள்ள படைப்பாளியின் ஆற்றல்மிகு படைப்புகள் துணைபுரிகின்றன. பிரபஞ்சன் சமுதாய நிகழ்ச்சிகளைச் சிறுகதைகளில் படம் பிடித்துக்காட்டியுள்ளார். காதல், திருமணம், கல்வி, பிறரை ஏமாற்றுதல், குழந்தைகளின் நிலை போன்ற சமுதாயக் கருத்துக்கள் இவரது சிறுகதைகளில் சிறப்பாக இடம் பெற்றுள்ளன. அதனைக் காண்பதாக இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமுதாயம் - விளக்கம்

மனிதனின் வாழ்வு சமுதாய சூழல்களில் உருவாகின்றது. தனிமனிதனின் உள்ளத்தையும் அவனைச் சார்ந்த சமூகத்தின் நிகழ்ச்சிகளையும் விளக்குவது 'சமூகவியல்' எனப்படுகிறது. சமுதாயம் என்பது மக்கள் கூட்டம் ஆதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். மனிதர்களின் கூட்டமைப்பு சமுதாயம் எனப்படுகிறது. 'சமுதாயம் என்னும் சொல்லுக்கு மக்களின் திரள்'
1 என்று தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

'சமூகம் கூட்டம், திரள், சமுதாயம்-கூட்டம்,சங்கம் பொதுவானது. மக்களின்திரள், பொருளின்திரளஇ; உடன்படிக்கை'
2 என்று கழகத்தமிழ் அகராதி கூறுகிறது. 'ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நீண்டகாலமாக ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக மக்கள் கூட்டம் ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பே சமூகம்'3 என்று கலைக்களஞ்சியம் கூறுகிறது. சமுதாயம் என்பது மனித இனத்தின் சமூகப்பொருளாதார அரசியல் ஈடுபாடுகளினால் தொடர்புகளினால் இயங்கிவரும் ஓர் அமைப்பாகிறது. இவ்வமைப்பு, 'ஒரு குறிப்பிட்ட நாகரிக அமைப்பிற்குள் இயங்கிவருகிறது என்றும் சமூகவியலார் குறிப்பிடுகின்றனர்'4 என்கிறார் சு.சக்திவேல். 'குடும்பம்,சாதி,தொழில் சார்ந்த குழுக்கள், சமய அமைப்புகள், சங்கங்கள் இவற்றின் தொகுதியே சமூகம';5 என்கிறார் ந.வேதமணி மணுவேல். 'சமுதாயம் என்பது சமுதாய உறவு முறைகளால் பின்னப்பட்ட ஒரு வலை'6 என்கிறார்

சி.இ.மறைமலை. 'சமுதாயம் என்பது உறவு நிலைகளின் அமைப்பு முறை, மனிதஇனத்தில் காணப்படும் உறவு நிலைகளின் அமைப்பு முறையே, ஒரு முறைமையே, ஒரு பாணியே சமுதாயம் எனப்படும்'
7 என்கிறார் க.பாஸ்கரன். 'மக்கள் கூடி வாழும் இடம் பல குடும்பங்கள் சேர்ந்த அமைப்பு சமுதாயம் என்று அழைக்கப்படுகிறது'8 என்கிறார் சுகி.சிவம். ஒவ்வொருவரின் நன்மைக்காகவும் ஒன்று கூடி வாழும் தனி மனிதர்களைக் கொண்ட ஓர் அமைப்பு சமுதாயம் எனப்படுகிறது. 'மனிதன் தன்னந்தனியாக வாழ்பவன் அல்ல கூடிவாழும் இயல்புடையவன். முனித வாழ்வு சமுதாய சூழல்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. மனிதனின் ஆளுகை சமுதாயத்தின் மீதும்,சமுதாயத்தின் ஆளுகை தனிமனிதன் மீதும் இறுகப்படிந்து ஒன்றையொன்று பற்றிக்கொண்டே இருக்கின்றன'9 என பா.முருகேசுவரி கூறுகிறார். தனித்தனிக் குடும்பஙகள் இணைந்து குழுவாயின. அக்குழுக்கள் ஒரேயிடத்தில் தங்கியபோது ஊர் உருவானது. புல ஊர்கள் சேர்ந்தபோது நாடு உருவானது,நாகரிகச் சமூகம் உருவான வரலாற்றின் சுருக்கமே இது. மனித இனக்குழு தங்களுக்குள் விதிமுறைகளை வகுத்துக்கொண்டும்,உறவு முறைகளால் பின்னப்பட்டும் வாழ்கின்ற அமைப்பு முறை சமுதாயம் எனப்படுகிறது. மனிதனின் ஒரு சமூக உயிரிமை மனிதனின் வாழ்க்கை சார்ந்திருத்தலை அடிப்படையாகக்கொண்டு அமைந்துள்ளது. திருமணம் இல்லறத்தின் நுழைவாயிலான திருமணம் என்பது சமுதாயத்தில் இன்றியமையாத இடத்தைப்பெறுகின்றது. 'திருமணம'; என்பது தற்போது சமுதாயத்தின் ஒரு தகுதியாகக் கருதப்படும் தேவை எனப்படுகிறது. 'திருமணம'; என்ற சொல் திரு10மணம் எனப் பிரிக்கப்படுகிறது. மணம் என்பதே தமிழரின் பழைய மரபு 'ஒரு கன்னிப் பெண்ணின் கூந்தலிலே மலர் சூட்டி அவளை ஊரும் உறவும் அறியத் தன் மனத்திற்கு இனியவளாக வாழ்க்கைத் துணைவியாக ஒருவன் ஏற்றுக்கொள்வதனாலேதான் மணம் திருமணம் என்னும் பெயர்கள் அச்சடங்கிற்கு ஏற்பட்டன'.10 என்கிறார் சசிவில்லி. 'ஒரு பாதியாகிய பெண்ணும், மற்றொரு பாதியாகிய ஆணும் ஒன்று சேர்வதையே திருமணம் என்பர்'11 என ந. சுப்புரெட்டியார் கூறுகிறார்.

'மணம் என்பது மணமக்களின் மனமொத்தது. வாழ்வு முழுவதும் மணம் பெற்றுத் திகழ்வதற்கு ஏதுவான நிகழ்ச்சியை மணம் என்று பெயரிட்டமை ஏற்புடைத்ததாகிறது'12 என்கிறார் சரவண ஆறுமுக முதலியார்.

'மணம் என்பது மனிதனின் பாலியல் விருப்பங்களை நிறைவு செய்யும ; பொருட்டு ஏற்படுத்திக்கொள்வது'
13 என்று உலகச் சமுதாய அறிவியல் கூறுகிறது. 'திருமணம் என்பது ஓர் ஆடவனும் ஒரு பெண்ணும் வாழ்வதற்காகச் சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட வினை முறையாகிறது'14 என்கிறார் ந.காந்தி. 'மணம் மனிதனின் உயிரியல் பால் உணர்வை நிறைவு செய்வதற்கு மட்டும் அமையாமல் சமுதாயத்தில் ஒருவனைப்பண்பாட்டு உறுப்பினராக ஏற்றுக்கொள்ளவும் வகைசெய்கிறது'15 என வாழ்வியல் களஞ்சியம் கூறுகிறது.

'திருமணம் இரண்டு தனிப்பட்டவர்களுக்கிடையே நடைபெறும் உடன்படிக்கையன்று.

இரண்டு குழுக்களிடையே இணைப்பை, நெருக்கத்தை ஏற்படுத்தும் உறவுத்தளை என்பது நியதி'16 என்கிறார் சசிவல்லி. 'விவாகம் அல்லது திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச்செய்து கொள்ளும் காரியம';
17 என்கிறார் பெரியார் ஈ.வே.ரா. 'மனித இனம் தன்பால் உந்துதலை ஒரு நிறுவன அமைப்பிற்குள் நிறைவு செய்துகொள்ள ஏற்படுத்திய முறையே திருமணம், உயிர் பாலூட்டிகளிடமும் பிற கீழின விலங்குகளிடமும் பாலுறவு ஓர் உயிரியல் செயலாக மட்டுமே திகழ்கிறது. ஆனால் மனிதர்கள் அடிப்படையில் சமுதாய பண்பாட்டு விலங்காதலால் அவ்வுயிரியல் செயலைத் 'திருமணம'; என்னும் நிறுவனச் செயலாக்கி அவர்கள் தம் உள உயிரியல் உந்துதல்களை நிறைவு செயது; கொள்கின்றனர்'18 என்கிறார் சீ.பக்தவத்சலபாரதி.

இரு மணங்களின் இணைவு திருமணம். திருமணம் சமுதாயத்தில் நடைபெறும் முக்கிய

நிகழ்ச்சி, இதனை ஆயிரம் காலத்துப்பயிர் என்பர். அறங்களில் சிறந்தது இல்லறம். ஆணும்

பெண்ணும் இணைந்து இல்லறம் நடத்துவதன் தொடக்கவிழாவாகத் திருமணம் அமைகின்றது.

மணத்த்தின் தோற்றம் தொடக்கக் காலச் சமுதாயத்தில்
(Primitive Society)  கட்டுப்பாடற்ற

புணர்ச்சியும், குழுமணமும் தோன்றியது. பின்னரே ஒருவன், ஒருத்தியை மணம் செய்து கொள்ளும் சிறந்த பண்பு கால் கொண்டது. 'மனிதனின் படிநிலை வளர்ச்சியில் தொடக்ககாலச் சமுதாய அமைப்பில் கட்டுப்பாடற்ற புணர்ச்சி நிலவிய குழுமணத்தை முதல் மணம் என்றும்,தொடர்ந்து பல பெண்களை ஓர் ஆடவன் மணம் செய்து கொள்ளுதலும், பின்னர் ஒருவன் ஒருத்தியை மணம் செயது; கொள்ளுதலும் போல்வன தோன்றி வளர்ந்தன'19 என்கிறார் மார்கர். மனித சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கட்டம் திருமணம்இ திருமணத்தையொட்டி உறவுமுறை தொடங்குகிறது. விரும்பியவர்கள் விரும்பியவர்களோடு சேர்ந்து வாழ்ந்த ஓர் அமைப்பில் திருமணம் என்ற சமூக அமைப்பு உருவாகவில்லை. தொடக்க காலத்தில் பெண்களின் உடைமையாக நிலம் இருந்தது. பின்னர் நிலவுடைமை ஆண் சமுதாயத்திற்கு மாற்றம் பெற்றவுடன் ஆண் சமுதாயம் முதன்மை பெறத்தொடங்கியது. மணத்தில் சடங்குகளின் தோற்றம் பற்றி,

'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப'
20 என்கிறார் தொல்காப்பியர்.

உலகியல் வழக்கில் காதல் வாழ்வுபொய்த் தோற்றம் பெற்றதும், கரணம் என்ற நிலை தோன்றியது. மனித இன வரலாற்றை நோக்கினால் இவ்வுண்மை புலனாகிறது.

மண வகைகள்

'மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்'
21

என்கிறார் தொல்காப்பியர்.

ஆரியரின்பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம்,

பைசாசம் என்னும் எண்வகை மணங்களைக் குறிப்பிடுகின்றார். இதில் காந்தருவ மணம் என்பதை மட்டுமே ஐந்திணை ஒழுக்கத்திலும், மற்ற மண வகைகளைக் கை;ககிளை, பெருந்திணைகளிலும் கூறியுள்ளார்.

'இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்'
;
22

என்கிறார் வள்ளுவர்.

நான் வேறு பெண்களைக் காதலிப்பவனல்லன். இந்தப்பிறப்பில் உன்னை விட்டுப்பிரிந்து வேறெங்கும் போய்விடமாட்டேன் என்றேன். அதற்கு அவள் இந்தப் பிறப்பில் பிரியமாட்டே னென்றால் இனிவரும் பிறப்புக்களில் நான் அவளை விட்டுப் பிரிந்து விடுவேனோ என்று வருந்தி நிறையக் கண்ணீர்விட்டு அழுதுவிட்டாள் என மணமக்களின் பிணக்கத்தைக் கூறுகிறார். மானிடவியல் பேரறிஞர்கள் பலவகை மணங்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். தகுதிகாண் மணம் ஒருவன் தான் விரும்பும் பெண்ணைத்திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் அவள் வீட்டில் பல மாதங்கள் தங்கிச் சமுதாயப் பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். இதில் பெண்ணின் பெற்றோர் நிறைவடைந்தால் பெண்ணைத் திருமணம் செய்து தருவர். நிறைவடையாவிட்டால் பெண்ணைத் தர மறுத்துவிடுவர். இவ்வகை மணம் அசாமிலுள்ள குக்கிப் பழங்குடிகளிலேயே காணப்படுகிறது.

கடத்த்தல் மணம் ஒருவன் தான் விரும்பிய பெண்ணை மணக்கத்தடை ஏற்பட்டால் பெண் ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்வான். இது கோண்டு, நாகர் போன்ற பழங்குடிகளின் திருமண முறையாகிறது.

தேர்வுத் திருமணம்

விழாக் காலங்களில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு ஆண்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அவனுக்குப் பிடித்த பெண்ணை மணந்துகொள்வது. இது பில்லர் பழங்குடிகளின் திருமண முறையாகக் காணப்படுகின்றது. விலை கொடுத்த்த மணம் மணமகன் மணமகளுக்குப் பணம் கொடுத்துத் திருமணம் செய்து கொள்வதைக் குறிக்கின்றது. பணி செய் மணம் மணமகன் மணப்பெண் இல்லத்தில் தங்கிக் குடும்பப் பணிகள் அனைத்தையும் செய்வான். சில மாதங்கள் தொடங்கிச் சில ஆண்டுகள் கூட இருக்கலாம். இந்தியப் பழங்குடியினரான கோண்டுகளிடையே இத்திருமணமுறை உள்ளது. பரிமாற்ற்றத் திருமணம் மணமகன் மணமகளை வேற்றுக் குடும்பத்திலிருந்து பெறும்போது அதற்காகத் தன் சகோதரி அல்லது தன் குடும்பத்துப்பெண்ணை அக்குடும்பத்திற்குத் தருவது. ஆப்பிரிக்கப் பழங்குடிகளான 'திவ்'இனத்தில் இம்முறை பின்பற்றப்படுகிறது. உடன் போக்கு மணம் மணமக்கள் காதலர்களாக வாழ்ந்து மணம் செய்யப்புகும் போது தடை ஏற்பட்டால் வேறு இடத்திற்கு ஓடிச்சென்று மணம் செய்து வாழ்வர். சில காலத்துக்குப் பின்னர் மீண்டும் சமூகத்தோடு சேர்ந்து விடுவர். இம்முறை பழங்குடிகளிலும், இந்துச் சமுதாயத்திலும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக உள்ளது. இவ்வுடன்போக்கு மணம் பண்டு ஒழுக்கமாகவே கொள்ளப்படுகிறது. இதைத் தழுவி வள்ளி; திருமணத்தில் இம்முறை பின்பற்றப்படுகிறது.

திருமண வகைகள்

திருமண நிகழ்வானது உலகம் முழுவதும் ஒரே வகையாக நடைபெறவில்லை பல

வகைகளில் நடைபெறுகின்றன. மணமுடிக்கிறத் துணைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து

திருமணதத்தை,

1. ஒரு துணை மணம்.

2. பல துணை மணம் என இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றனர்.

ஒரு துணை மணம்

ஒருவனுக்கு ஒருத்தியாக மணம் புரிந்து வாழ்வதே ஒரு துணை மணம். இது பெற்றோர், உறவினர், பொதுமக்கள் போன்ற அனைவரும் கலந்து கொண்டு செய்துவைக்கும் முறைப்படியான திருமணமாகிறது. ஒரு துணைமணமாகிய ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையே உயர்ந்ததாகத் தமிழ் மண்ணில் கருதப்படுகிறது.

'ஒரு துணை மணத்தைக் கொடுப்பக் கொள்வது' என்று கூறுகிறது'23 தொல்காப்பியம். 'உடைமைச் சமூகத்தின் உச்சக்கட்டம் ஒரு துணை மணமாகிறது'24 என்கிறார் ஆறு.இராமநாதன். 'பலதார மணக்குடும்பத்தில் இல்லாத பெண்களின் சுதந்திரமும், சமத்துவமும், சுயமரியாதையும் ஒருதாரமணக் குடும்பத்தில் இருப்பதால் இம்மணமுறை சிறப்பாகக் கருதப்படுகிறது'25 என்கிறார் க.சண்முகசுந்தரம்.

பல துணை மணம்

ஓர் ஆடவனோ, ஒரு பெண்ணோ ஒன்றிற்கு மேற்பட்ட துணைகளை மணம் செய்து கொள்வது பல துணைமணம் எனப்படுகிறது. இது இரு வகைப்படுகிறது. பல கணவ மணம்

ஒரு பெண் ஒன்றிக்கு மேற்பட்ட ஆடவரை மணந்து வாழ்வது பல கணவ மணமாகிறது.

பல மனைவி மணம்

ஒரு ஆடவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது பல மனைவி மணமாகிறது.

இதனைச் சமூகம் விரும்புவதில்லை. பிரபஞ்சன் சிறுகதைகளில் பெற்றோர்கள் நிச்சயிக்கும் ஏற்பாட்டு மணம், மறுமணம், உடன்போக்கு மணம்,காதல் மணம் போன்ற திருமணங்கள் நிகழ்வதாகக் கூறுகிறார்.

ஏற்ப்பாட்டு மணம்

பருவமடைந்த ஆணின் பெற்றோரும்,பெண்ணின் பெற்றோரும் அவர்களின் உறவினர்களும் கலந்து முடிவெடுத்து நல்ல நாளில் அவர்களுக்குத் திருமணம் நடத்துவது ஏற்பாட்டு மணமாகிறது. இம்மணம் ஆணின் அல்லது பெண்ணின் விருப்பம் அறிந்துகொள்ளாமல்,பெரியோர்கள் விரும்பியவாறு செய்யப்படுவது. திருமணத்திற்குப் பின் நிகழும் நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்துவதை,

'மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தன்நறு முகையொடு வெண்நூல் சூட்டி
தூஉடைப் பொலிந்து மேவாத்துவன்றி
மழைபட்டன்ன மணல்வலி பந்தா
இழை அணி சிறப்பின்,பெயர் வியர்ப்பு ஆற்றி,
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்
உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்பருவி'
26

என்கிறது அகம்.

சங்ககாலத் தமிழர்களின் திருமணத்தில் சாத்திரப்படியும் இசட்டப்படியும் சப்தபதிச் சடங்கு முக்கியத்துவம் பெற்றது. சிலப்பதிகாரத்திலும், அதற்குப்பின் வந்த தமிழ் இலக்கியங்களிலும் சப்தபதிச்சடங்கு கூறப்படுகிறது. சப்தபதிச் சடங்கு என்பது மணமக்கள் மணவறையில் ஏழடி வைத்துத் தீயை வலம் வரும் சடங்கு சப்தபதிச் சடங்காகிறது. இதனைச் சிலப்பதிகாரத்தில் வேதம் ஓதி,அக்கினி வளர்த்து, மாமுது பார்ப்பான் மறைமவழிப்படித் திருமணம் நடப்பதைக் காணமுடிகிறது. திருமணத்திற்குப் பின் மணமக்களைப் பள்ளியறையில் விட்டு இளம் பெண்கள் அவர்களை வாழ்த்துகின்றனர். இதனை,

'இப்பா லியத்து இருந்திய வாள்வேங்கை
உப்பாலைப் பொற்கோட்டு உழையதா,எப்பாலும்
செருமிகு சினவேற் செம்பியன்
ஒரு தனி ஆழி உருட்டுவோ னெனவே'
27. என்ற பாடல் கூறுகிறது.

மணமகன் வீட்டார் பெண் கேட்டுச்செல்லும் மரபு இருந்ததைப் பெரியபுராணத்தில் சுந்தரர் திருமணம், புனிதவதியார் திருமணத்திலும் காணமுடிகின்றது. இது ஏற்பாட்டு மணத்துக்குச் சான்றாகிறது. பிரபஞ்சன் 'காலம் இனி வரும'; 'வனம் போனவன் கதை' 'கல்யாண அழைப்பும் கால் பவுன் காசும'; போன்ற கதைகளில் ஏற்பாட்டு மணத்தைப் பற்றிக்கூறுகிறார். 'காலம் இனிவரும'; என்ற கதையில் பிரபு-சத்யாவின் திருமணம் ஏற்பாட்டு மணமாக நடைபெறுகிறது. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு,குலமுறை வழக்கத்திற்கேற்ப ஊரை அழைத்துப் பல சடங்குகள் செய்து, மந்திரங்கள் முழங்க, அம்மிமிதித்து, அக்னி சாட்சியாக மணமக்களுக்குத் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப்பின் மணமக்களைப்

பள்ளியறையில் விடுகின்றனர். சத்யா மனதில் நினைக்கிறாள. ; இதனைப் 'பத்துமணிக்கு நேரம் நன்றாக இருப்பதாக கணித்து அவளை அந்த அறைக்குள் தள்ளினார்கள்,பெண்கள் வயது வித்தியாசம் இன்றி வெட்கம் இல்லாமல் விரசமாகச் சிரித்தார்கள்'
28. என்கிறாள் சத்யா. திருமணத்தன்று மணமக்களுக்கு நல்ல நேரத்தில் சாந்திமுகூர்த்தம் நடைபெற்றதைக் காட்டுகிறார் ஆசிரியர். மேலும் திருமணத்திற்கு வந்திருக்கும் பெண்கள் மணமக்களைக் கேலி பேசிச் சிரித்து மகிழும் நடைமுறையையும் , பெரியோர்கள் ஆசியுடன் திருமணம் நடந்ததையும் எடுத்துக் காட்டுகிறார்.

'வனம் போனவன் கதை' என்ற சிறுகதையில் சுப்ரமணியின் தாய் சுப்ரமணிக்குத் திருமண ஏற்பாடு செய்கிறாள். சுப்ரமணி,செங்கேணியின் திருமணம் பெரியோர்களால் நிச்சயித்து, செங்கேணியின் வீட்டு வாசலின் முன்பு உறவுக்காரர்கள் சுற்றம் சூழ அமர்ந்திருக்கிறார்கள். மற்ற பெண்கள் பெண்ணுக்குப் பட்டுப்புடவை உடுத்தி அலங்காரம் செய்து அழைத்து வருகின்றனர், திருமணம் நடைபெறுகிறது. திருமணநாளன்று இரவில் அவள் அறைக்குள் செல்கிறாள்'29 என்கிறார் ஆசிரியர்.

இக்கூற்றிலிருந்து பெரியோர்கள் ஆசியுடன் திருமணம் நடைபெற்றது என்பதையும், மணமக்கள் பள்ளியறைக்குச் செல்வதையும் இக்கதையில் பிரபஞ்சன் எடுத்துக்காட்டுகிறார். பிரபஞ்சன் 'கல்யாண அழைப்பும் கால் பவுன் காசும'; என்ற சிறுகதையில் திருமணம் பற்றிக்

கூறுகிறார். சிலப்பதிகாரத்தில் கோவலன் , கண்ணகி திருமணத்தில் நன்கு அலங்கரித்துக் கொண்ட இரு பெண்கள் யானை மீதமர்ந்து நகர்முழுவதும் பவனிவந்து மக்கள் அனைவருக்கும் திருமணச்செய்தி அறிவிக்கின்றனர். மாநாய்கனும், மாசாத்துவனும ; பெருஞ்செல்வர். அதனால் உறவினர்களுக்கேயன்றி ஊரார் அனைவருக்கும் தம்மக்கள் திருமணச ; செய்தியை அறிவித்தனர். இதனை

'யானே யெருத்தத்து அணியிழையார் மேலிரீ,
மாநகர்க்கு ஈந்தார் மணம்'
30 என்கிறார் இளங்கோவடிகள்.

இக்கருத்திற்கேற்ப பிரபஞ்சன் சிறுகதையில் ராஜபாண்டியின் தந்தை கண்ணப்பர். திரைப்பட நடிகர். அதனால் அவருடைய நண்பர் வரதுவுக்கு நாடகக் கம்பெனியில் வேலைவாங்கிக் கொடுக்கிறார். பின்னர் வரது பணக்காரராக ஆகிவிடுகிறார். ராஜபாண்டியின்

தந்தை கண்ணப்பர் சொத்தை இழந்தவுடன் இறந்துவிடுகிறார். ராஜபாண்டி வறுமையில் இருப்பதால் வரதுவிடம் உதவி கேட்டு வருகிறான். வரதுவும், ராஜபாண்டியும் பேசிக்கொண்டிருக்கின்றனர். வரது பழைய நினைவுகளை நினைத்துவிடடு; ராஜபாண்டியின் தந்தைக்குத் திருமணம் நடந்ததைக் கூறுகிறார். பின்னர் ராஜபாண்டிக்குத் திருமணம் நடந்ததைக் கூறுகிறார்.

'உன் கல்யாணம் மட்டும் எப்படி? ஒவ்வொரு கல்யாணப் பத்திரிகையோடவும், கால் பவுன் காசுகொடுத்து அழைச்சது உங்க அப்பா. கால்பவுன் காசுகள் உங்க வீட்டுல குவிஞ்சிருந்ததை, நான் கண்டேனே,உன் தோப்பனாரை விடவும் பணக்காரர்கள் நிறையபேர் இருக்காங்கதான். ஆனா எத்தனை பேருக்குக் கொடுக்கனும்னு தோணும். அதுதான் விசயம்'31 என்கிறார் வரது. ராஜபாண்டியின் தந்தை பெருஞ்செல்வர். அவர் மகன் திருமண அழைப்பிதழோடு கால் பவுன் காசு வைத்துக்கொடுத்து அழைக்கிறார். இது அவரின் கொடை உள்ளத்தைக்காட்டுகிறது. மகனின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது என ஊரார் வியக்கும்படி நடத்தியதை அவருடைய செல்வந்தரின் உயர்ந்த நிலைக்குச் சான்றாகிறது. அவர் மகன் மீதுள்ள அன்பையும் வெளிப்படுத்திக் காட்டுகிறார். இன்னும் ஒரு சில சாதியினர் திருமண அழைப்பிதழோடு அவரவர் தகுதிக்கேற்ப ஒரு ரூபாய்,பதினொரு ரூபாய் எனச் சுருள்வைத்து மாமன் முறை உள்ளவர்களுக்கு அழைக்கும் வழக்கம் காணப்படுகிறது. சுருள்வைத்தால் திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்னும் முறையைக் காட்டுகிறார் ஆசிரியர். பிரபஞ்சன் இக்கதையில் திருமணத்தில் 'சுருள்வைக்கும் மரபு' இருக்கிறதை வெளிப்படுத்திக்காட்டுகிறார்.

மறுமணம்


கணவன் அல்லது மனைவி இறந்தபின் அல்லது மணவிலக்குச் செய்த பின்பு செய்யப்படும் மணம் 'மறுமணம்' எனப்படுகிறது. கணவனை இழந்த பெண் மறுமணம் செய்து

கொள்வதாகத் தாழ்வாகக் கருதப்படுகிறது. இதில் ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. குழந்தை இல்லை என்று வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொள்ளும் வழக்கமும் காணப்படுகிறது. எந்தக்காரணமும் இல்லாமல் பல பெண்களை மணம்புரிந்ததாக கம்பராமாயணத்தில் தசரத மன்னன் காட்டப்படுகிறார். பலதாரமணம் நிலவிய காலத்தில் தசரதன் பட்டத்தரசியர் மூவரையும் மணம் புரிந்தார். இராவணனுக்கு தானியமாலை, மண்டோதரி என்னும் இருஅரசிகளும், எண்ணற்ற உரிமைமகளிரும் இருந்தனர். குடிமக்களிலும் பலமணம் புரிந்துகொண்டவர்கள் இருந்தார்கள். இராமனது திருமணத்தில் கலந்துகொள்ள அயோத்தியிலிருந்து புறப்பட்ட ஆடவரும் ,பெண்டிரும் சேனையாற்றின் கரையில் தங்கினர். அவர்களிடையே நிகழும் ஊடலைப் பற்றிக் கம்பர் கூறுகிறார். ஒருவன் தன் மனைவியர் இருவருள் ஒருத்தியின் முன்நின்று அவள் பெயரைச் சொல்லாமல் மாற்றாள் பெயரைச் சொல்லிவிட்டான். அவ்வளவுதான் அதனைக்கேட்ட அவள் நானினாள,; விம்மினாள். பூவினை எடுத்து மோந்தாள். அது பொசுங்கிப் போய்விட்டது. இக்காட்சியை,

'தைக்கின்ற வேல் நோக்கினள் தன்னுயிர் அன்ன மன்னன்
மைக்கொண்ட கண்ணாள் எதிர் மற்றவள் பேர் விளம்ப
மெய்க்கொண்ட நாணம்தலைக் கொண்டிட விம்மி,மென்பூக்
கைக்கொண்டு மோந்தாள். உயிர்ப்புண்டு கரிந்த அன்றோ'
32

என்கிறார் கம்பர்.

'பத்து மாசம் சுமசுமக்க
பரிசுதந்த நேசனமய்யா
என்னை விட்டுட்டு
இளையதாரம் கட்டுனியே'
33

என்ற நாட்டுப்புறப்பாடல் கூறுகிறது.

பிரபஞ்சன் 'யாசுமின் அக்கா' என்ற சிறுகதையில் மறுமணத்தைப்பற்றிக் கூறுகிறார்.

ஜெகான்பாயின் மனைவி யாசுமின், இவர்களுக்கு ஹஜீரு என்ற மகள் இருக்கிறாள். ஜெகான்பாய் மகள் ஹஜீரு சிறுவயதாக இருக்கும்பொழுது வெளிநாட்டில் பொருளீட்டுவதற்காகப் பிரிந்து செல்கிறார். மனைவியை உடன் அழைத்துச் செல்லவில்லை.

'முந்நீர் வழக்கம் மகடூ உவோடு இல்லை'
34 என்கிறார் தொல்காப்பியர். அதனால் கடல் கடந்து செல்லும் வழக்கம் பெண்களுக்கு மறுக்கப்பட்டது. ஜெகான்பாய் சில ஆண்டுகள் கழித்துத் திரும்பிவருகிறார். சிறிது நாட்களுககுப் பின் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விடுகிறது. அவர் படுக்கையில் இருக்கும் பொழுது பாத்திமா என்ற பெண்ணின் பெயரைக் கூறுகிறார். யாசுமின் இதனைத் தன் அத்தையிடம் கேட்கச் செல்கிறாள். அத்தை வெளிநாட்டில் ஜெகான்பாய் வீட்டிற்கு அருகில் இருந்தவள.; இப்பொழுது வந்திருக்கிறாள். யாசுமின் அத்தையிடம் கேட்கிறாள். அத்தை ஒரு விசயம் விளஙக் ணும். நீங்க அந்த தேசத்துல இருந்தவ. எங்க ஹஜீரு அத்தாவுக்குப் பாத்திமான்னு யாரேனும் உறவினர் இருந்தார்களா என்று கேட்கிறாள்.

'பாத்திமா தானேடி உனக்குத் தெரியாதா? அங்க பாத்திமாவை நிக்காஹ் பண்ணி இருந்துச்சு, உன் வீட்டுக்காரரு. உனக்குத்தெரிஞ்சிருக்கணும்னு நெனைச்சேனே. என்ன நடந்துச்சுன்னே எனக்குத் தெரியாது. அப்புறம் தலாக் பண்ணிடுசசு; தம்பி. சொத்து பணம் கொடுத்துத்தான்.'
35 என்கிறாள் அத்தை. ஜெகான்பாய் வெளிநாட்டிலிருந்தபோது அங்குள்ள பெண்ணின் அழகில் மயங்கி அவளை மறுமணம் செய்து கொண்டதைக்காட்டுகிறார். தனக்கு மனைவியும் மகளும் இருக்கும்போதே மற்றொரு பெண்ணை மறுமணம் செய்து கொள்கிறார். இரு மனைவியருக்கும் போதியசொத்துக்கொடுக்கிறார். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியால் குறைவில்லாமல் இருக்கின்றனர். ஆனால் பாத்திமாவை விவாகரத்து செய்தது அவருடைய நல்ல எண்ணத்தை நசுக்குகிறது. பெண்கள் அழகான பூக்கள். அவர்கள் ரசிக்கப்படவும், நுகரப்படவும் மட்டுமே ஜென்மம் எடுத்த பூக்கள். பணிவதிலே மகிழ வேண்டிய பூக்கள் என்று காமநோக்கத்தை வெளிப்படுத்துகிறார்.பெண்களின் உணர்வுக்கு மதிப்புக்கொடுப்பதிலi; ல. மாறாக உணர்வுகள் நசுக்கப்படுகின்றன என்கிறார் பிரபஞ்சன். சங்க இலக்கியங்கள் தொடங்கி இக்காலம் வரை மறுமணம் நடைபெறுகிறது என்பதையும், பெண்களை நன்னெறியில் வாழச் செய்ய வேண்டும் என்பதையும், வெளிப்படுத்திக்காட்டுகிறார்.

'அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர்இருள் உய்த்துவிடும்'
36

என்கிறார் வள்ளுவர்.


இக்குறளுக்கேற்ப அடக்கமுடைய மனப்பான்மை தேவை என்பதையும், இக்குணம் இல்லையென்றால் இருளில் தள்ளிவிடும் என்பதையும் காட்டுகிறார். இல்லறம் தடையின்றிச் செழிக்கவும்,மனைவியின் சீரடியைப் பணிந்து இரத்தலும், மனைவி அன்பும், மதிப்பும் கணவன் மீது கொள்ளச்செய்வது இல்லற வாழ்க்கை தடையில்லாமல் நிகழ அடித்தளமாக இருக்கிறது என்பதைப் பிரபஞ்சன் இக்கதையில் படைத்துக்காட்டுகிறார்.

உடன் போக்கு மணம்

காதலர்கள் திருமணத்திற்குத் தடை ஏற்பட்டால் வேறு இடத்திறகு; ஓடிச்சென்று மணம்

செய்து கொள்வர். இதனை 'உடன்போக்கு மணம'; என்று அழைப்பர். தொல்காப்பியர் களவு மணம் புரிந்த தலைவன், தலைவனும் உடன்போக்குச்சென்று மணம் புரிந்ததைக் காட்டுகிறார்.

'ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப்
பிரிதல் அச்சம் உண்மை யானும்
அம்பலும அலரும் களவு வெளிப் படுக்குமென்று
அஞ்சவந்த ஆங்கிரு வகையினும்
நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்
போக்கும் வரையும் மனைவிகட்டோன்றும்'
37

என்கிறார் தொல்காப்பியர்.

'காதலன் காதலி உறவுநிலை ஊராருக்கும், பெற்றோர்க்கும் தெரிந்துவிட்ட நிலையில்

ஊரலர், வெறியாட்டு நொதுமலர் வரைவு, இற்செறிப்பு போன்றவற்றிலிருந்து விடுபட இரண்டு வழிகள் உள்ளன.ஒன்று நிகழ்ந்தால் மற்றொன்று நிகழாது. இரண்டில் ஒன்றே களவு நாடகத்தின் இறுதிக்காட்சி என்பர்'38 என்கிறார் வ.சுப.மாணிக்கம்.

இதில் உடன்போய்த் திருமணம் புரிந்துகொள்வதை நாட்டுப்புற மக்கள் 'ஓடிப்போதல்'என்று குறிப்பிடுவர். ஊருக்கும் உறவினர்க்கும் தெரியாமல் மணம் செய்து கொள்ள ஓடிப்போகும் காதலன்,காதலியிடம் சந்தைக்குச் சென்று சட்டிபானை வாங்குவதாகப் பாவனைகாட்டிவிட்டு ஊரைவிட்டு ஓடிவிடலாம் என்கின்றான்.

'சந்தைக்கு போவமடி
சட்டி பானை வாங்குவோமடி
சந்தை கலையுமுன்னே
தப்பிடுவோம் ரெண்டு பேரும்'
39

என்று நாட்டுப்புறப்பாடல் கூறுகிறது.

காதல்

காதல் மனிதனது பருவ காலங்களின் வசந்தப்பாடல். ஆண்-பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும், அவற்றின் வாழ்வுக்கும், வலிமைக்கும் அடிப்படையாக விளங்குவது காதல். காதல் ஓர் ஆன்ம உணர்வு, காதல் உணர்வு அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இலக்கியப் படைப்புகளில் காதல் பாடுபொருள்களில் இன்றியமையாத இடத்தைப் பெற்றிருக்கிறது.

'கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்'
41

என்கிறார் வைரமுத்து.

உலகில் உயிர்கள் தோன்றிய போதே காதலும் தோன்றியிருக்க வேண்டும். காதல் கொள்ளாத மனிதரே இல்லை. ஆதாம் ஏவாள் தொடங்கி இன்றுவரைக் காதலை உயிராகக் கருதுகின்றனர். அது உயிர்களிடத்தில் அன்பையும், அருளையும் உருவாக்குகின்றது. தொல்காப்பியர் காதலுக்கு இலக்கணம் வகுத்திருக்கின்றார். இனப் வேட்கை மனத்தொடு

பொருந்தி வருவது.

'எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவதற்ற ஆகும்'
42

என்கிறார் தொல்காப்பியர்.

திருமணத்திற்கு முன் உண்டாகும் களவுக்காதலைச் சிறப்பாகக் காட்டுகிறார் தொல்காப்பியர். மகாபாரதத்தில் பாஞ்சாலி, உத்தரை ஆகியோரின் திருமணமும், இராமாயணத்தில் சீதையின் திருமணமும் போட்டியால் தீர்மானிக்கப்பட்டது. சிவதனுசால் நிச்சயிக்கப்பட்ட சீதையின் திருமணத்தைக் காதல்மணமாகக் கம்பர் காட்டுகிறார். போட்டியில்

சீதை காதல் வயப்பட்டதை

'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்'
43

என்கிறார் கம்பர்.

கற்பினும் சிறந்தது காதல் . காதல் ஒழுக்கமாகிய களவினைத் துய்த்தபின் கற்பின்

பயனை நாடுதலே சிறப்பு. இக்காதலை,

'செவ்விது செவ்விது செவ்விது காதல்'
44

என்று பாரதியார் கூறுகிறார்.

'காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல்,சாதல்,சாதல்'
45

என்கிறார் பாரதியார்.

காதலின் சிறப்பைப் பிரபஞ்சன் சிறுகதைகளில் கையாண்டு வெறற் p கண்டுள்ளார்.

காதலர் சந்திப்பு

காதல் உயர்வானது. எல்லோரிடம் வேறுபாடின்றி உணர்வுகளின் வழியே உதித்தெழும்

ஓர் ஒப்பற்றநிலை. காதல் ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்பக் காதலின் தன்மை அமைகிறது. காதலர் ஒன்றே இன்புறுவதற்கு நிலைக்களமாக இருந்ததால் சமுதாயம் காதல் ஒழுக்கத்திற்கு இடமளிக்கின்றது. காதலர்கள் பிறர் அறியாமல் சந்தித்து மகிழத் தனியான இடங்களைத் தேர்வு செய்கின்றனர். திருவிழாக்கள் , ஆற்றங்கரை,நீராடும் இடம், வயல், கோவில், பொட்டல் காடு போன்ற இடங்களில் சந்திக்கின்றனர்.

'சீட்டி அடிக்காதய்யா
செல்லச் சத்தம் போடாதய்யா
தண்ணிக்கு நான் வாரேன்
தலைவாசல்ல காத்திரய்யா'
46

என்ற பாடல் காதலர்கள் சந்திப்பதனைக் காட்டுகிறது.

உச்சிவேளையான மதியம்,பொழுதிறங்கும் நேரம்,நடுச்சாமம் போன்ற காலங்களில் காதலர்கள் சந்திக்கின்றனர் இச்சந்திப்பு உரையாடவும், உறவாடவும் வாய்ப்பாக அமைகின்றது.

தொகுப்புரை:

மக்கள் குழுக்கள் 'சமூகம்'எனப்படுகிறது. இல்லற வாழ்விற்குத் திருமணம் தொடக்கமாக அமைகிறது. ஒருதார மணமே உயர்வாகக் கருதப்படுகிறது. ஏற்பாட்டு மணமே சமுதாயத்தில் ஆதரவு பெற்று விளங்குகிறது. பலதார மணம் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. பருவம் வந்த ஆண்களும், பெண்களும் காதலிக்கின்றனர். காதல் நிறைவேறும் போது காதலர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். பெற்றோர்களின் ஒப்புதல் கிடைக்காவிட்டால் காதலர்கள் உடன்போக்குச் செல்கின்றனர். காதலர்கள் உடன்போக்குச்சென்று திருமணம் புரிவதைத் தன்னுடைய 'ஓடிப்போனவள் திரும்பியபோது' என்னும் சிறுகதையில் பதிவு செய்துள்ளார்.

'இப்படியாக ஒரு  ஜீவிதம்', 'இராமலிங்கசாமி ஜி.வி.ஐயர் மற்றும் நான், 'தர்மம்' போன்ற கதைகளில் அரசு அலுவலர்கள் சமூதாயத்தால் மதிக்கப்படுகின்றனர். இன்றைய கல்வி வளர்ச்சியின் காரணமாகவும்,சமூக அமைப்பு என்ற நிலைகளிலும் அரசுப்பணி விரும்பப்படுகிறது. ஏழை-பணக்காரன் என்று வாழ்க்கைத் தரத்தைக் காட்டும் வகையில் உணவு,உடை,இருப்பிடம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. சமுதாயத்தில் பஞ்சாயத்துமுறை காணப்படுகிறது. நகரத்தின் மக்கள் நிலையில் மக்கள் அந்தந்த இடத்திற்குத்தகுந்தாற் போல பழக்கவழக்கங்கள், பேச்சுகளை மாற்ற வேண்டும.; நகரங்களில் மக்களுக்கு நியாயத்தைத் தீர்மானிக்கமுடியாது எனறு; சமுதாயச் சூழ்நிலையாக எடுத்துக்காட்டியுள்ளார்.


அடிக்குறிப்புகள்:

  • 1. தமிழ்ப் பேரகராதி, ப.682.
     

  • 2. கழகத் தமிழ் அகராதி,ப.429.
     

  • 3. கலைக்களஞ்சியம்,தொகுதி-4 ,ப.477.
     

  • 4. சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.245.
     

  • 5. நா. வேதமணி மனுவேல், சமூக உளவியல், ப.21.
     

  • 6. சி.இ.மறைமலை, இலக்கியமும் சமூகவியலும்,ப.72.
     

  • 7. க.பாஸ்கரன், சமுதாயத்தத்துவம்,ப.28.
     

  • 8. சுகி.சிவம், வாழ்வியல் சிந்தனைகள், ப.110.
     

  • 9. பா.முருகேஸ்வரி, தெற்கத்திப்படைப்புலகம் ஆய்வுக்கோவை , ப.376.
     

  • 10. சசிவல்லி,தமிழர்திருமணம், ப.7.
     

  • 11. ந.சுப்புரெட்டியார்,இல்லறநெறி, ப.7.
     

  • 12. சரவண ஆறுமுக முதலியார்,தமிழர் திருமணமுறைகள் கட்டுரை, ப. 351.
     

  • 13. International Encyclopaedia of the social science,vol,XP.2.
     

  • 14. க.காந்தி,தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்,ப.33 .
     

  • 15. வாழ்வியல் களஞ்சியம், தொகுதி -1,ப.67.
     

  • 16. சசிவல்லி,தமிழர் திருமணம்,ப.8.
     

  • 17. ஈ.வே.ராமசாமி,பெரியார் சிந்தனைகள், பாகம் -1,ப.184.

  • 18. சீ.பக்தவத்சலபாரதி,பண்பாட்டுமானிடவியல், ப. 368.
     

  • 19. L.H.Margar Ancient Society,P.P. 393 -395.
     

  • 20. தொல்காப்பியம்,பொருளதிகாரம்,களவியல்,நூற்பா எண்.120.
     

  • 21. தொல்காப்பியம், கற்பியல்,நூற்பா எண்.1.
     

  • 22. குறள் எண்.1315.
     

  • 23. தொல்காப்பியம்,கற்பியல், நூற்பா எண்.193.
     

  • 24. ஆறு.இராமநாதன்,நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தமிழர் வாழவ் pயல், ப. 2.
     

  • 25. க.சண்முகசுந்தரம்,திருநெல்வேலி நாட்டுப்புறப்பாடல்களில் சமுதாய அமைப்பு, ப.123.
     

  • 26. அகம் , பாடல் எண்.35.
     

  • 27. ம.பொ.சி.சிலப்பதிகாரத்திறனாய்வு,மங்கலவாழ்த்துப்பாடல் எண்.65,68.
     

  • 28. பிரபஞ்சன்,காலம் இனிவரும்,ப.62.
     

  • 29. பிரபஞ்சன்,வனம் போனவன் கதை, ப.268.
     

  • 30. ம.பொ.சி.சிலப்பதிகாரத்திறனாய்வு,மங்கலவாழ்த்துப்பாடல் எண்.43-44.
     

  • 31. பிரபஞ்சன்,கல்யாண அழைப்பும் கால்பவுன் காசும்,ப.153.
     

  • 32. கம்பராமாயணம் , பாடல் எண்.909.

  • 33. ஜி.வசந்தா,தஞ்சை மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள்,ப.30.

  • 34. தொல்காப்பியம்,பொருளதிகாரம்,நூற்பா எண். 37.
     

  • 35. பிரபஞ்சன் யாசுமின் அக்கா, பக்.110-111.
     

  • 36. குறள் எண்.121.
     

  • 37. தொல்காப்பியம், நூற்பா எண்.221.
     

  • 38. வ.சுப.மாணிக்கம்,தமிழ்க்காதல்,பக்.82-83.
     

  • 39. ஜி.வசந்தா, தஞ்சை மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள்,ப.26.
     

  • 40. பிரபஞ்சன்,ஓடிப்போனவள் திரும்பியபோது,ப.89.
     

  • 41. வைரமுத்து,கம்பன் குடும்பம் முதல் கடவுள் வரை ,ப.47.
     

  • 42. தொல்காப்பியம்,பொருளியல்,நூற்பா எண்.219.
     

  • 43. கம்பர், கம்பன் குடும்பம் முதல் கடவுள் வரை ,ப.67.
     

  • 44. பாரதியார்,தனிப்பாடல் அந்திப்பொழுது,பரிபாடல் ஆய்வுக்கோவை,ப.87.
     

  • 45. பாரதியார்,பாரதியார்கவிதைகள்,ப.286.
     

  • 46. ஜி.வசந்தா,தஞ்சைமாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள்,ப.21.


     

பண்டைத் தமிழரின் சமயமும் வழிபாடுகளும்
பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா
149,Aரிஸ்ரீ காடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர்
- 641 007
பேச
:098438 74545.