செந்தமிழ்ச் செல்வம்

செந்தமிழ்ச் செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


இந்தத் தலைப்பிலே எழுத வேண்டும் என்று என்மனம் இசைந்தமைக்கு முக்கிய காரணம் செந்தமிழ் நமக்கெல்லாம் செல்வம் என்பதால் மட்டுமல்ல, தமிழ்மொழியின் பெயரைச்சொல்லி தாயகத்தைவிட்டுவந்த பலர் தமிழின் தொன்மையைத் தெரியாமல், தமிழின் மென்மையை உணராமல், தமிழின் செழுமையை அறியாமல் தமிழ்மொழியைப்பற்றி மிகவும் தாழ்வாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களே அதற்காக, தமிழ் மொழியின் அருமை பற்றிச் சில வார்த்தைகளை உரைக்கவேண்டும் என்று என் உள்ளத்தில் ஏற்பட்ட உந்துதலால் இந்தத் தலைப்பை எடுத்துக்கொண்டேன்.

பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்துஓர் என
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்


என்று வில்லிபாரதத்திலே விதந்துரைக்கப்பட்டது நம் தொல்லியல் மொழி.

தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியே ! என் முததமிழே –புத்திக்குள்
உண்ணப்படும் தேனே


என்று தமிழின் இனிமைக்குச் சான்று கூறுகிறது தமிழ்விடுதூது.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று சான்றுரைத்தான், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல்வேண்டும் என்று சூழுரைத்த பாரதி.

அத்தகைய நம் இன்பத்தமிழுக்கு, எழில்மிகு தமிழுக்கு, சுந்தரத்தமிழுக்கு, நம் சொந்தத் தமிழுக்கு பிறமொழிகளால் ஏற்பட்ட தாக்கம் கொஞ்சநஞ்சமல்ல.

'இயற்கையாலும் மாந்தப் பதர்களாலும் பெருங்கேடுகட்கு உட்பட்டதும், வெளிநாட்டுக் குறும்பர்களாலும் உள்நாட்டு எத்தர்களாலும் மிகுதியும் முறைகேடு செய்யப்பட்டதுமான ஒரு மொழி தமிழைப்போல இப்பரந்த உலகெங்கணுமே இல்லை' என்று பல்லாண்டுகளுக்கு முன்னரே சொல்லி வைத்தார் தேவநேயப் பாவாணர் அவர்கள்.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆரியமொழியின் கூரிய தாக்குதலுக்கு உட்பட்டுவருகிறது தமிழ் மொழி. அறுநூறு ஆண்டுகளாக உருதுமொழியின் உறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. நூற்றி ஐம்பது ஆண்டுகளாக ஆங்கில மொழியினது அடிமைப்படுத்தலுக்கு ஆட்பட்டுவருகிறது.
50 ஆண்டுகளாக இந்திமொழியினதும், 50 ஆண்டுகளாக சிங்கள மொழியினதும் ஆட்சி அதிகார அச்சுறுத்தல்களுக்கு தாக்குப் பிடித்து வருகிறது. இத்தனை இடர்கள் வந்தபோதும் இன்னும் தனித்துவத்துடன்; வாழ்ந்து வருகிறது, மேலும் வளர்ந்து வருகிறது தமிழ்மொழி.

அதனால்தான், கத்துக் கடல்பறித்தும் கல்லாதான் தீவைத்தும்
குத்துவடமொழியின் கூர்பட்டும்-இத்தனைக்கும்
வாடாத செந்தமிழின் வரலாறு கேட்டபின் ஆடாதகால் ஆனைக்கால் என்று பாடாமல் பாடிவைத்தார் உணர்ச்சிக்கவிஞர் காசி. ஆனந்தன் அவர்கள்.

தமிழ்மொழி பல்வேறு மொழிகளின் தாக்குதல்களுக்கு உட்பட்டு வந்திருந்தாலும், தமிழை அழிக்க நினைத்தவர்கள் ஆரியர்கள். அதற்கான திட்டங்களை வகுத்தவர்கள் ஆரியர்கள். வடமொழியோடு கலந்து சிதைத்தவர்கள் ஆரியர்கள்.

தமிழ்மொழியை அழிக்கின்ற ஆரியர்களின் அக்கிரமம் இன்றுநேற்று ஆரம்பமானதல்ல. என்றைக்கு ஆரியர்கள் தமிழ்நாட்டில் காலடியெடுத்துவைத்தார்களோ அன்றைக்கே ஆரம்பமானது அது. இளிச்சவாயர்களாக இருந்த தமிழ் மன்னர்கள் இந்தப் பெருச்சாளிகளிடம் ஏமாந்தார்கள்.

கல்வித்தெய்வத்துக்குக் காணிக்கையென்றுசொல்லி கணக்கற்ற தமிழ் ஓலைச்சுவடிகளை அக்கினியிலேபோட்டு எரித்திருக்கிறார்கள் ஆரியர்கள்.
காலத்தால் அழிந்துபோன பண்டைய நூல்களைவிட இத்தகைய கயமைத்தனத்தால் அழிக்கப்பட்ட நூல்களே அதிகம் என்கின்றார்கள் அறிஞர்கள்.
எந்த ஒரு வடமொழி நூலையாவது அப்படி ஓமகுண்டத்தில் போட்டு எரித்தார்களா? கடவுளுக்கு சமஸ்கிருதம்தான் விளங்கும் என்று கடவுளையே கேவலப்படுத்துகின்ற ஆரியர்கள் சமஸ்கிருத நூல்களையல்லவா அக்கினி குண்டத்தில் போட்டு அர்ச்சனை செய்திருக்க வேண்டும்? தமிழ்நூல்களை எரித்த சாம்பல்தான் கடவுளுக்குப்பிடிக்குமா? சமஸ்கிருத நூல்களை எரித்த சாம்பல் கடவுளுக்குக் கசக்குமா?

தமிழிலிருந்த அரிய நூல்களை, தமிழிலிருந்த அறிவு நூல்களை, தமிழிலிருந்த தத்துவநூல்களை, வைத்திய நூல்களை- வடமொழியிலே மொழிபெயர்த்துவிட்டு மூலத் தமிழ்நூல்களை, எண்ணற்ற ஏட்டுச்சுவடிகளை தீயிட்டுக்கொழுத்தி யிருக்கிறார்கள் அந்தத் தீயவர்கள்.

சங்ககாலத்திற்குப்பின்னர் ஆட்சிக்குவந்த தமிழ் மன்னர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டார்கள். மக்களையும் நாட்டையும் காப்பதற்கான வீரத்தை இழந்தார்கள் சிலர்,
விவேகத்தை இழந்தார்கள் வேறு சிலர். வேண்டாத கேளிக்கைகளில் வீழ்ந்து தம்மையே இழந்தார்கள் மற்றும் சிலர். அதனால் தமிழ்ப்பண்பாட்டுக்குப் புறம்பான களப்பிரரகள் தமிழகத்தின் தென்பகுதியைக் கைப்பற்றினார்கள், தமிழர்களல்லாத பல்லவர்கள் வடபகுதியைக் கைப்பற்றினார்கள்.

தமிழ் மொழியையும், தமிழ்ப்பண்பாடுகளையும் வெறுத்தவர்கள் தமிழ்நாட்டை ஆட்சிசெய்தார்கள். ஆரியப் பிராமணர்கள் அரசியல் செல்வாக்கோடு விளங்கினார்கள்.
மந்திரம் என்று சொல்லி அவர்கள் செய்த தந்திரங்களுக்கெல்லாம் அந்த மன்னர்கள். இணங்கினார்கள். மக்களோ மன்னரை எதிர்க்கத் தயங்கினார்கள். ஏழைத் தமிழ்ப்புலவர்களோ எதுவும் செய்யமுடியாமல் அடங்கினார்கள். அதனால் ஆயிரக்கணக்கான ஏட்டுச் சுவடிகளை அக்கினியில் போட்டு அழித்தார்கள்.

இவ்வாறு கயமையால் அழிந்தவை ஏராளம். காலத்தால் மறைந்தவை ஏராளம். செல்லரித்துச் சிதைந்தவை ஏராளம். தேடுவாரற்றுப் புதைந்தவை ஏராளம். இத்தனையையும் தாண்டி இப்போது கிடைக்கப்பெறுகின்ற நூல்களை மட்டும் எடுத்துக்கொண்டாலே, எந்தமொழியிலும் இல்லாத அளவுக்கு இலக்கியங்கள் தமிழ்மொழியிலே குவிந்து கிடக்கின்றன.

படிப்பதற்கும், படித்ததை எண்ணிச் சுவைப்பதற்கும் மட்டுமே பல மொழிகள் இலக்கியங்களைக் கொண்டுள்ளன. ஆனால் வையத்துள் வாழ்வாங்கு வாழவழிகாட்டுவன தமிழ் இலக்கியங்கள்.

அணுவைத்துளைத்து ஏழ்கடலைப்புகட்டிக் குறுகத்தறித்த குறள் என்று ஒளவையாரால் புகழப்படும் திருக்குறளுக்கு நிகரான ஓர் அறிவுநூல், திருக்குறளுக்கு நிகரான ஓர் இலக்கியம், திருக்குறளில் சொல்லப்படாத வாழ்க்கை நெறிகளைக் கூறுகின்ற ஒரு நீதிநூல் எந்தமொழியிலாவது இருக்கிறதா? இல்லையென்று சொல்கிறார்கள் மேல்நாட்டறிஞர்கள். அதனால்தான் எண்பதுக்கு மேற்பட்ட மொழிகளிலே திருக்குறளை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

எழுத்துக்கும், சொல்லுக்கும், பொருளுக்கும் இலக்கணம் வகுத்து ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னாலே எழுதப்பட்ட தொல்காப்பியம் செந்தமிழ் மொழிக்கு மட்டுமே உரிய சிறப்பல்லவா?

செக்ஸ் செக்ஸ் என்று இப்பொழுது அலைகின்றார்களே. அந்த செக்ஸ் என்பதை அக்குவேறு ஆணிவேறாக அலசி, எப்படி ஒரு ஆணும்பெண்ணும் உறவுகொள்ளவேண்டும் என்பதை மட்டுமல்ல எப்படியெல்லாம் கொள்ளக்கூடாது என்பதையும் ஆணித்தரமாக அறியத்தருகின்ற நூல்கள், சுகாதார சிந்தனையுடன் சொல்லுகின்ற நூல்கள், விஞ்ஞானபூர்வமாக விளம்புகின்ற நூல்கள், இலக்கிய நயத்துடன் இயம்புகின்ற நூல்கள் இன்பத்தின் உச்சத்தை எட்டும் வழிகளை எடுத்துரைக்கின்ற நூல்கள், எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தமிழில் எழுதப்பட்டுள்ளன. அந்தநூல்களை வாசித்தால் அட இப்படியெல்லாம் இருக்கிறதா என்கின்ற ஏக்கத்தைவிட, எப்படியெல்லாம் ஆராய்ந்து தக்கவகையில் நமது முன்னோர்கள் தந்திருக்கிறார்கள் என்கின்ற ஆச்சரியமே நமக்கு அதிகமாகின்றது.

நோயற்றவாழ்வுக்கு வழிகாட்டும் பண்டைய நூல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. நோய்க்கு வைத்தியம் சொல்லும் நூல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.
கவின்கலையை உலகுக்குக் காட்டியவர்கள் தமிழர்கள். கட்டிடக்கலை வல்லமையை நிலை நாட்டியவர்கள் தமிழர்கள். அதற்காக அரும்பெரும் நூல்களையே ஆக்கிவைத்தார்கள் அன்றைய தமிழர்கள்.

சங்கத் தமிழ் இலக்கியங்கள் என்று சொல்லப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்பவற்றில் அடங்குகின்ற,

'முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடுநல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து'


என்று சொல்லப்படுகின்ற பத்துப்பாட்டு நூல்கள்,

'நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை'


என்று சொல்லப்படுகின்ற எட்டுத்தொகை நூல்கள்,

மேலும்,

'நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவைபழமொழி- மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைநிலைய வாம்கீழ்க் கணக்கு'


என்று சொல்லப்படுகின்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்


சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, என்கின்ற ஐம்பெருங் காப்பியங்கள்

சூளாமணி, நீலகேசி, உதயணகுமாரகாவியம், யசோதராகாவியம், நாககுமாரகாவியம், என்னும் ஐஞ்சிறு காப்பியங்கள்

தித்திக்கும் தேன்பாகாய் இனிக்கின்ற, செந்தமிழ்ப் பழச்சாறாய்ச் சுவைக்கின்ற
எண்ணும்போதே நெஞ்சில் இன்பத்தைப் பொழிகின்ற
பன்னிரு திருமுறைகள்

பன்னீராழ்வார்கள் பக்திச்சுவை சொட்டச்சொட்டப் பாடிவைத்துள்ள நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

தமிழர்களின் நுண்ணறிவை வெளிப்படுத்துவன என்று மேல்நாட்டறிஞர் ஜி.யு.போப் அவர்களால் விதந்துரைக்கப்பட்ட

உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம்- வந்தவருட்
பண்புவினா போற்றி கொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் முற்று என்று சொல்லப்படுகின்ற
பதினான்கு மெய்கண்ட சாஸ்திரங்கள்.


தமிழ்மொழியின் இனிமைக்குச் சான்றாக விளங்கும் கம்பராமாயணம்.

தெவிட்டாத  தெள்ள முதாய் மணக்கின்ற கிறீத்தவ இலக்கியமான தேம்பாவணி

ஒப்பற்ற இஸ்லாமிய இலக்கியமான சீறாப்புராணம்

பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம், அரிச்சந்திரபுராணம்,  நைடதம், நளவெண்பா, பரணிகள், உலாக்கள், பள்ளுகள், அம்மானைகள், அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள், வள்ளலார் திருவருட்பாக்கள், கோவைகள், குறவஞ்சிகள், கலம்பகங்கள், சித்தர்பாடல்கள், எத்தனை எத்தனை இலக்கியங்கள்? எத்தனை எத்தனை அறிவுச் செல்வங்கள்?

இவற்றைவிட பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின்னர் பாரதியென்றும், பாரதிதாசனென்றும் இன்றுவரை தோன்றியுள்ள தனித்துவம் மிக்க தமிழ்ப் புலவர்க
ள் கணக்கிட முடியாத எழுத்தாளர்கள் எமக்களித்த தமிழ் இலக்கியங்கள் இலட்சக்கணக்கில் குவிந்து கிடக்கின்றன.

எனவே என்னருமைத் தமிழர்களே!
தமிழ்மொழி நம் தாய்மொழி.
அமிழ்தினும் இனிய மொழி. அழகுமொழி.
உலகத்து மொழிகளுக்கெல்வாம் மூத்தமொழி.
ஒப்பற்ற இலக்கியங்களை யாத்த மொழி.
அது உயர்தனிச் செம்மொழி.
அதுவே நம் மொழி.
அந்த மொழி செழிப்படைய சிந்தைகொள்வோம். செயலாற்றுவோம்

வீடுகள் தோறும் தேன் மொழிபேசுவோம் கூடி
விளையாடுவோம் தமிழ் உரையாடுவோம்
ஆடுவோம் நண்பர்கள் கூடுவோம் தமிழர்கள்
அவைவோரும் தமிழினில் உரையாடுவோம்

வாழ்க தமிழ். வணக்கம்


 




srisuppiah@hotmail.com