இனிக்கும் இலக்கணம்

முனைவர் நிர்மலா மோகன்

னது நீண்ட கால ஆசிரிய அனுபவத்தில் நான் கண்டுணர்ந்த உண்மை இது: மாணவர்கள் இடையே இலக்கிய வகுப்பிற்குக் கிடைக்கும் வரவேற்பு, இலக்கண வகுப்பிற்குக் கிடைப்பதில்லை. இலக்கணம் என்றதுமே முகத்தைச் சுளிப்பதும், எட்டிக் காயாய் நினைப்பதும் மாணவர்களிடம் காணப்பெறும் பொதுவான ஓர் இயல்பு ஆகும். என்றாலும், ஒரு தேர்ந்த ஆசிரியர் முயன்றால் இலக்கண வகுப்பையும் இலக்கிய வகுப்பினைப் போல் சுவையாக மாற்றிவிட முடியும்; எளிய, இனிய, புதிய, நடைமுறை சார்ந்த, சுவையான திரைப்பட உதாரணங்களைக் காட்டி, இலக்கணத்தையும் மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்க வைக்க முடியும்; வகுப்பறையில் பதுமைகளைப் போல் வெறுமனே உட்கார்ந்தே இருக்காமல், உயிரோட்டமாகவும் மகிழ்ச்சியாகவும் மாணவர்களைப் பங்கேற்கச் செய்ய இயலும். என் வகுப்பறை அனுபவத்தில் நான் கையாண்டு வெற்றி பெற்ற கற்பித்தல் உத்தி முறையையே இக் கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


இலக்கணம் இனிக்க...

இலக்கணத்தை இனிமையாகவும் எளிமையாகவும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்குக் கண்ணதாசனும் பட்டுக்கோட்டையாரும் மருதகாசியும் வாலியும் வைரமுத்துவும் பெரிதும் கை கொடுப்பர். பதச்சோறு ஒன்று: 'பசியட நிற்றல்' (பசி வருத்தவும் உண்ணாது இருத்தல்), 'கண்துயில் மறுத்தல்' (கண்கள் உறங்க மறுத்தல்) எனத் தொல்காப்பியம் சுட்டும் களவுக் காலக் காதல் மெய்ப்பாடுகளைக் கூட, கவிஞர் கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகளைக் கொண்டு மாணவர்கள் மனங்கொள்ளுமாறு எளிமையான முறையில் பின்வருமாறு விளக்கலாம்:


'பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது!
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது!'


அந்தாதி

அந்தம் ஆதியாக – ஓர் அடியின் முடிவே அடுத்த அடியின் தொடக்கமாக – தொடுப்பது 'அந்தாதி'. 'அந்தம்' என்றால் முடிவு; 'ஆதி'; என்றால் தொடக்கம். இதற்கு இன்றைய திரைப்படப் பாடல்களில் இருந்து எத்தனையோ எளிய, பொருத்தமான உதாரணங்களை எடுத்துக்காட்டலாம். 'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' எனத் தொடங்கி 'பலே பாண்டியா' படத்திற்காக கண்ணதாசன் எழுதியிருக்கும் புகழ்பெற்ற பாடலில் இடம்பெற்றிருக்கும் பின்வரும் வரிகள் அந்தாதி நலம் பொருந்தியவை:

'(பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்)
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்!'


'மூன்று முடிச்சு' படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 'வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள், நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள், நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்' என்ற முத்திரைப் பாடல் முழுக்க முழுக்க அந்தாதியில் அமைந்த ஓர் அற்புதமான பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுக்குத் தொடரும் இரட்டைக் கிளவியும்

'பாம்புபாம்பு' என்பது அடுக்குத் தொடர்; 'பாம்பு' எனப் பிரித்தாலும் இது பொருள் தரும். 'சலசல' என்பது இரட்டைக் கிளவி; 'சல' என்று பிரித்தால் இது பொருள் தராது. இது தான் அடுக்குத் தொடருக்கும் இரட்டைக் கிளவிக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு. இதனைக் கவிஞர் வைரமுத்து 'ஜீன்ஸ்' படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் தமக்கே உரிய தனித்தன்மை துலங்க நயமாகப் புலப்படுத்தியுள்ளார்:

'சலசல சலசல இரட்டைக்கிளவி
தகதக தகதக இரட்டைக்கிளவி
உண்டல்லோ... தமிழில் உண்டல்லோ?
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
ஒன்றல்லோ... ரெண்டும் ஒன்றல்லோ?'


உவமை அணி

உவமை என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல். தெரிந்த ஒன்றைக் கொண்டு தெரியாத பிறிதொன்றை விளக்கித் தெளிவு-படுத்துவதற்கும், அழகுணர்ச்சி தோன்ற ஒன்றை எடுத்துரைப்பதற்கும் இலக்கியங்களில் உவமைகள் கையாளப்படுகின்றன. இலக்கியத்தை அழகுபடுத்தும் முதல் அணி என்றும் காலத்தால் மிகவும் முற்பட்ட தாயணி என்றும் போற்றப்படும் இவ்வுவமை அணியினை இன்றைய திரைப்படப் பாடல்கள் சிறப்பாகவும் சுவையாகவும் பயன்படுத்தியுள்ளன.

'குடும்பத் தலைவன்' திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதிய ஓர் அற்புதமான பாடல்: திருமணமாம், திருமணமாம்! தெருவெங்கும் ஊர்வலமாம்! ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்!... அவள் கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம்! ஒரு கூடை நிறையப் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்! மாலை சூடும் அந்த மணமகளின் பருவ அழகினை ஐந்து அருமையான உவமைகளை அடுக்கிக் கையாண்டு படம்பிடித்துக் காட்டுவார் கண்ணதாசன்:

'சேர நாட்டு யானைத் தந்தம்
போல் இருப்பாளாம்! – நல்ல
சீரகச் சம்பா அரிசி போல
சிரித்திருப்பாளாம்!...
செம்பருத்திப் பூவைப் போலக் காற்றில்
அசைந்திருப்பாளாம்!
செம்புச் சிலை போல உருண்டு
திரண்டிருப்பாளாம்! – நல்ல
சேலம் ஜில்லா மாம்பழம் போல்
கனிந்திருப்பாளாம்!'


மணமகளின் நிற அழகிற்குச் சேர நாட்டு யானைத் தந்தம், சிரிப்பழகிற்குச் சீரகச் சம்பா அரிசி, ஒயிலாக நடந்து வரும் நடையழகிற்குக் காற்றில் அசைந்திருக்கும் செம்பருத்தி பூ, உருண்டு திரண்டு இருக்கும் கட்டான உடலழகிற்குச் செம்புச் சிலை, ஓட்டுமொத்தமாகத் ததும்பி நிற்கும் பருவ எழிலுக்கு சேலம் ஜில்லா மாம்பழம் என இப் பாடலில் கவிஞர் கையாண்டிருக்கும் உவமைகள் அருமையும் எளிமையும் அழகும் ஆற்றலும் பொருந்தியவை.

'தமிழ்த் திரைப்பாடல்களில் உவமை நயம்' என்பது தனி நூலுக்கு உரிய ஒரு சிறந்த பொருள் ஆகும்.

தற்குறிப்பேற்ற அணி

இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சியில் கவிஞர் தம் கற்பனையை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்திலும் கம்ப ராமாயணத்திலும் தற்குறிப்பேற்ற அணி பயின்று வரக் காணலாம். 'காவியத் தாயின் இளைய மகன்' எனச் சிறப்பிக்கப் பெறும் கவிஞர் கண்ணதாசனும் தம் திரைப் பாடல்களில் தற்குறிப்பேற்ற அணியைத் திறம்படப் பயன்படுத்தியுள்ளார். சான்றாக, 'தாயைக் காத்த தனயன்' என்னும் படத்திற்காகக் கண்ணதாசன் படைத்திருக்கும் வெற்றிப் பாடலின் தொடக்க வரிகளை இங்கே சுட்டிக் காட்டலாம்:

'மூடித்திறந்த இமையிரண்டும் 'பார் பார்!' என்றன!
முந்தானை காற்றில் ஆடி 'வா வா!' என்றது!'


இமை இரண்டும் மூடித் திறப்பது இயல்பு. இது காதலனைப் பார், பார் என்பது போல் இருக்கின்றதாம். இதே போல் முந்தானை காற்றில் ஆடுவது என்பதும் இயல்பாக நிகழ்வது தான். இது வா வா என்று காதலியை நோக்கி அழைப்பது போல் உள்ளது எனக் கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக் கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.

ஐய அணி

கவிஞர் தாம் கருதிய ஒரு பொருளின் அழகினை மகிழ்வுடன் எடுத்துரைக்கும் போது, அதனைக் கற்போர் அதிசயிக்கும் வண்ணம் சொல்லுவது அதிசய அணி. 'ஐய அணி' என்பது அதிசய அணியின் ஒரு வகை ஆகும். 'தெய்வப் பெண்ணோ? மயிலோ? கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே!' என்னும் பொருளைத் தரும் திருக்குறள் காமத்துப் பாலின் முதல் குறட்பா ஐய அணியில் அமைந்தது.

'மாஞ்சோலைக் கிளிதானோ? மான்தானோ?
வேப்பந் தோப்புக் குயிலும் நீதானோ? - இவள்
ஆவாரம் பூதானோ? நடை தேர்தானோ?
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ?'


எனக் 'கிழக்கே போகும் ரயில்' படத்திற்காக கவிஞர் முத்துலிங்கம் பாடி இருக்கும் பாடல் ஐயவணிக்கு நல்ல உதாரணம் ஆகும்.

பின்வருநிலை அணி

கவிஞர் கண்ணதாசனுக்குப் பின்வருநிலை அணியில் மிகுந்த ஆர்வம் உண்டு. சொற் பின்வருநிலை அணி, சொற்பொருள் பின்வருநிலை அணி என இவ்வணியின் இரு வகைகளையும் திறம்படக் கையாண்டு அவர் படைத்துள்ள திரைப்பாடல்கள் பலவாகும்.

ஒரு சொல்லை ஒரே பொருளில் பல முறை கையாளுவது சொற் பின்வருநிலை அணி ஆகும். 'பாசம்' என்னும் படத்திற்காகக் கண்ணதாசன் எழுதிய பாடலில் இவ்வணி நயமாக இடம்பெற்றிருக்கக் காண்கிறோம்:

'ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன்!...
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு
வாடுகிறேன்!...'

'தேன்', 'காய்', 'ஊர்', 'வளை' முதலான சொற்களை ஒரே பொருள் தரும் விதத்தில் பல முறை கையாண்டு கண்ணதாசன் படைத்துள்ள பாடல்கள் திரை உலகில் தடம் பதித்தவை ஆகும்.

முரண் அணி

ஒன்றற்கொன்று மாறுபட்ட சொல்லும் பொருளும் வரத் தொடுப்பது முரண் அணி. இலக்கண நூலார் இதனை 'விரோத அணி' என்பர்.

'இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்'


என 'ஒருதலை ராகம்' படத்திற்காக டி.ராஜேந்தர் எழுதிய பாடலில் முரண் அணி சிறப்பாக இடம் பெற்றிருப்பதைக் காணலாம். தாய் குழந்தைக்காகப் பாடுவது தாலாட்டு; கவிஞரோ 'இது குழந்தை பாடும் தாலாட்டு' என்கிறார். பூபாளம் காலையில் பாடப்பெறுவது; கவிஞரோ, 'இது இரவு நேர பூபாளம்' என்கிறார். இதே போல 'இது மேற்கில் தோன்றும் உதயம்' என்றும், 'நதியில்லாத ஓடம்' என்றும் பாடுவது அழகிய முரண்கள் ஆகும்.

அருமையும் எளிமையும் அழகும் ஆற்றலும் புதுமையும் பொருத்தமும் வாய்ந்த திரைப்பாடல்களைக் கையாண்டு தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க முற்பட்டோம் என்றால், நம் வகுப்பறைகளில் மன மகிழ்ச்சியும் நிறைவும் களிநடம் புரிந்து நிற்கும் என்பது நெற்றித் திலகம்.

 

முனைவர் நிர்மலா மோகன்
தகைசால் பேராசிரியர்
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
காந்திகிராமம்
(94436 75931)