இன்றைய இளைஞர்களின் இளமைக் காலச் சிக்கல்கள்

பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா

ரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற ஒளவையின் வாக்கு மனிதனை மேன்மைப்படுத்துகின்றது. 'இட்டார் பெரியோர், இடாதோர் இழி குலத்தோர்' என்பது மனிதத்துவத்தை அடையாளம் காட்டுகின்றது. தொல்காப்பியர் மரபியல் உயிர்ப்பாகுபாடு பற்றி வகுத்த நூற்பாவில் ஒன்று முதல் ஐந்து வரை உற்றறிவது, நா, மூக்கு, கண், செவி ஆகியவற்றைக் கூறி ஆறாவது அறிவுக்கு 'அவற்றொடு மனனே' (நூ.1526) எனக் கூறுகின்றார். மேற்கூறப்பட்ட ஐந்துடன் மனத்தாலும் அறியும் திறன் உடையவர்கள் மனிதர்கள் எனத் தொல்காப்பியர் இதன் மூலம் அடையாளப் படுத்துகின்றார். மேற்குறிப்பிட்ட மனித வாழ்க்கைப் பருவங்களில் இளமைப் பருவத்தில் உள்ள சிறுவர்களின் நிலையைப் பற்றி மட்டும் இக்கடடுரையில் ஆராயப்பட உள்ளது.

பூவுலகில் உயிரினங்களுக்குக் கடவுள் அளித்த பிறவியில் மனித பிறவியே சிறந்த பிறவி. எல்லா உயிரினங்களுக்கும் மேலாகக் கருதக்கூடியதும் இப்பிறவியே என்பது பரவலான கருத்தாகும். சமுதாயத்தில் ஒருமைப்பாட்டுடன் தான் பெற்ற மக்களுடனும், தன் உடன் பிறந்தவர்களுடனும் ஒன்றிணைந்து வாழக்கூடியவன் மனிதனே. விலங்குகள் இனத்தில் இத்தகைய ஒற்றுமை இருப்பதில்லை. தான் ஈன்றகுட்டிகளாக இருந்தாலும், ஒரு குட்டி இருக்கின்ற நிலையில் இன்னொரு குட்டிபிறக்கும் பொழுது, முதலில் ஈன்ற குட்டியின் மீது பாசம் காட்டாது விரட்டிவிடும் இயல்பினை உடையது. மனிதன் அவ்வாறு வாழ்வதில்லை. குடும்பம் என்ற கட்டமைப்பில் தன் குடும்ப உறுப்பினர்களுக்காகவே வாழ்கின்ற இயல்புடையவன். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடுமையாக உழைக்கின்றான். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக வாழும் சிறந்த பண்புடன் திகழ்கின்றான்.

தனித்து இயங்காமல் பிற மனிதர்களோடு தோழமையும் உறவும் கொண்டே தன்னையும் சமுதாயத்தையும் மேம்படுத்தும் நிலையில் மனிதன் உள்ளான். வேற்றுமைகளைக் கருதாமல் மனித உறவுகளைப் பேணும் அன்பும் பண்பும் மாட்சிமையும் மனித சமுதாயத்தில் காணப்படுவதனால்தான் மனிதஇனம் அழியாமல் காக்கப்படுகின்றன.

இத்தகைய மனிதஇனம் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வளர்ச்சி நிலையை அடைகின்றது. வளர்ச்சிக்குத் தகுந்தவாறு பல்வேறு பருவங்கள் பகுக்கப்பெற்றுள்ளன.

பருவங்கள்

மனித வாழ்வுக்காலத்தை நான்கு பருவங்களாகப் பகுக்கலாம். ஆவை

  • குழந்தைப் பருவம்

  • இளமைப்பருவம்

  • வாலிபப்பருவம்

  • நடுத்தரவயதுப்பருவம்

  • முதுமைப் பருவம்


ஆகியவை ஆகும். இத்தகைய பருவங்களைச் சுட்டும் பாடல்கள் கீழ்வருமாறு:

'பாலன் இளையன் விருத்தன் எனநின்ற காலங் கழிவன கண்டும் அறிகிலார்'( திருமூலர் 1
,திருமந்திரம், பா. 181)

'பாலனாய்க் கழிந்தநாளும் பனிமலர்க் கோதைமார்தம்
மேலனாய்க் கழிந்தநாளு மெலிவொடு மூப்புவந்து
கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன'
( அப்பர், பா.
67 : 9)

'பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும்
காளையாந் தன்மை செத்தும் காமுறு மிளமை செத்தும்
மீளுமிவ் வியல்பு மின்னே மேல்வரு மூப்பு மாகி
நாளுநாட் சாகின் றாமல் நமக்கு நாமழாத தென்னோ'
( குண்டலகேசி, பா.
9)

'குழவியு மாய்மோக மோகித குமரணு மாய்வீடு காதலி
குலவனு மாய்நாடு காடொடு தடுமாறிக்
குனிகொடு கூனீடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட'
( திருப்புகழ், ப.
558)

'இளமைக்க ணூல்கற்றுக் காளைக்க ணின்பம்
உளமொத்த நல்லாளோ டுண்டு – வளமை
விடலைக்க ணோற்று முதுமைக்கட் சார்பு
விடன்மக்கள் பொற்பின் மிதப்பு'
(பாண்டியனார், அழகியது, ப.
170)

வௌவேறு காலகட்டங்களில் பாடப்பட்ட மேற்காட்டிய பாடல்கள் மனித வாழ்வின் நான்கு பருவங்களைப் புலப்படுத்துகின்றன. இவற்றில் அப்பர், அருணகிரிநாதர், பாண்டியனார் ஆகியோர் பாடல்கள் குறிப்பிட்ட பருவங்களுக்குரிய முதன்மைச் செயல்களையும் பொருந்திக் காண்பிக்கின்றன. 'மேற்காட்டிய இலக்கியச் சான்றுகள் வாழ்வின் படிநிலைகளைக் கோடிட்டுக் காட்டுகின்றனவேயன்றி ஒவ்வொரு பருவத்திற்குரிய கால எல்லையை அறுதியிட்டு கூறவில்லை.'( இரா.நிர்மலா, தமிழ் இலக்கியத்தில் மூப்பும் இறப்பும், ப.
10)

இளமைப்பருவம்

இளமைப் பருவம் என்பது குழந்தைப் பருவத்தினின்றும் வளர்ச்சியடைந்த பருவம் ஆகும். இது தாயின் அரவணைப்பிலிருந்து சிறிது விலகி தளர்நடையிடும்பருவம். இன வேறுபாட்டை உணராது ஆண், பெண் அனைவரையும் சமமாகக் கருதிப் பழகும் பருவம் எனலாம். வீட்டின் சிறையை விட்டு வெளியுலகை இரசிக்கத் துடிக்கும் பருவம். எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி அன்புள்ளத்துடன் பழகும் இனிமையான இளமைப்பருவம் இந்தப் பாலபருவம், கல்வி கற்பதற்கு மிகவும் உகந்த பருவம்.

இதனால்தான் 'இளமையில் கல்' என்று புலவர்கள் கூறிச் சென்றனர். இப்பருவத்தில் அறிந்து கொள்ளும் கருத்துக்கள் சிறுவர்களின் மனதில் எளிதில் பதியும். பெரியவர்களான பிறகும் மறந்து போகாமல் நினைவில் நிற்கும் என்பது உண்மை. இச்சிறு பருவத்தில் கற்பவன் வாழ்வுதான் முதுமையில் வளமையானதாக அமையும். அவ்வாறன்றி இளவயதில் கற்கக்தவறுபவன் வாழ்வு எதிர்காலத்தில் மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கும். கற்றல் என்பது வெறும் எழுத்தறிவை மட்டும் குறிப்பதில்லை. மனிதனின் நற்பண்புகளையும், நல்லொழுக்கத்தையும் குறிக்கின்றது. இக்கருத்தை,

'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா' என்னும் பழமொழி உணர்த்தும். இளமைப்பருவம் குறித்து வாழ்வியற் களஞ்சியம் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது. 'வாழ்க்கை பற்றிய தெளிந்த கண்ணோட்டத்தினைப் பெறாத நிலையில், வாழ்க்கையின் பொறுப்பினை, கடமையினை உணர்ந்து அதற்கேற்பச் செயல்படத் தொடங்குவதற்கு முன்னதாக அமையும் இப்பருவத்தினரை, வயதினரை சிறார் எனக் கொள்ளலாம்'(வாழ்வியற் களஞ்சியம், தொகுதி -
4, ப.490) இந்த இளமைப் பருவம் குறித்து தொல்காப்பியம் முதல் இக்கால இலக்கியம் வரை இடம்பெற்றுள்ள செய்திகள் பருந்துப் பார்வை நோக்கில் இங்கு பதிவு செய்யப்படுகின்றன.

தொல்காப்பியத்தில் சிறுவர் பாடல்கள்

சிறுவர்கள் பற்றிய பாடல்கள் தொல்காப்பியர் காலந்தொட்டு இருந்ததாகக் கூறப்படுகின்றது.

'ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்
தோன்றுவது கிளர்ந்த துணிவினாலும்
என்றிருவகைத்தே பிசிவகை நிலையே'
( தொல். பொருள். ப.
488)

என்று 'பிசி' என்னும் இலக்கிய வகைப்பற்றிக் குறிப்பிடுகிறது. இங்கே 'பிசி' என்பது விடுகதையைக் குறிப்பதாகும். விடுகதைகள் பாட்டிமார்கள் குழந்தைகட்குச் சொல்வதாகும் அவை பாடல் வடிவமாகவே அமைந்திருக்கும் ஆதலால் பாட்டிகளும் குழந்தைகளுமே 'குழந்தைப் பாடல்களின் முதற்படைப்பாளிகள்' என்பது மிகவும் பொருந்தும். பிசி என்பதற்கு புதுச்செய்திகூறல், விடுகதைசொல்லுதல் ஆகிய பொருட்களும் இருப்பதை சு. சண்முகசுந்தரம் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

'பிசி என்ற சொல்லை ஆராய்ந்து சுருக்கம் நுட்பம் ஆகிய பொருள் சிறப்புக்குரியது என்றும் கூறுகிறார். மேலும் பிசி என்பது கல்லாரிடையே பெரும்பான்மையும் வழங்கி அதாவது சமுதாய வழக்காற்றில் இருந்து படிப்படியாக இலக்கிய வடிவமும் பெற்றிருக்க வேண்டும். இன்று கலையியலில் நொடிக்கதை, விடுகதை என்றும் அறிவியலில் நொடிக் கணக்கு என்றும் விளங்குவன இவ்விலக்கிய வகையின் வளர்ச்சியே ஆகும் என்றுரைக்கின்றார்' (சு.சண்முகசுந்தரம், நாட்டுப்புற இலக்கிய வரலாறு, ப.
155)

சங்க காலம்

சங்க இலக்கியத்தில் அகநானூறு என்னும் தொகைநூல் ஒன்றில் மாற்றூர்கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் என்னும் புலவர் 54வது பாடலில் தாய் ஒருத்தி தன் மகனுக்கு உணவு ஊட்டுவதாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அப்பாடலில்

'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவர்த் திங்கள்
பொன்னுடைத் தாலி யென்மகன் ஒற்றி
வருகுவை யாயின் தருகுவென் பால்'
(சோமசுந்தரனார், அகம். பா
.54)

எனத் தாய் மகனுக்கு நிலவைக்காட்டி சோறு ஊட்டுகிறாள். நிலாவே நீ வந்தால், உனக்கு இந்தப் பாலைத் தருவேன் என்பது இப்பாடலின் பொருளாக அமைந்துள்ளது. மேலும் நிலாவினை வருக என விளித்து. தம் புதல்வர்க்குக் காட்டும் செயல் தாயார்க்குச் சிறந்த இன்பத்தைத் தந்தது என்பதனை

'ஐய, திங்கட் குழவி வருகென யான்நின்னை
அம்புலி காட்டல் இனிது'


(மு.வரதராசனார், கலித்தொகை, பா.
80) என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

சிற்றிலக்கியம்

பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் காப்புப்பருவம் நீங்கலாக எஞ்சிய பருவங்கள் அனைத்தும் குழந்தையை விளித்துப் பாடுவனவாக அமைந்திருக்கும். ஆனால் அம்புலிப்பருவம் ஒன்று மட்டும் குழந்தையோடு விளையாடுவதற்கு நிலாவை விளிப்பதாகப் பாடப்பெற்றுள்ளது. அம்புலி என்னும் சொல் நிலாவினைக் குறிக்கும். மற்ற பருவங்களைப் பாடுவதைக்காட்டிலும், அம்புலிப்பருவம் பாடுவதே அரிய செயல் என்பர் அறிஞர் ஒளவையார்.

'காசினியில் பிள்ளைக் கவிக்கு அம்புலி புலியாம்' (சா.வளவன், பிள்ளைத் தமிழின் தோற்றமும் வளர்ச்சியும், ப.
61) என்று ஒளவை கூறியதாக சா.வளவன் கூறியுள்ளார்.

'அம்புலிப் பருவம் பாடுதற்கு அரியதாக இருப்பதற்குக் காரணம் நிலாவினைக் குழந்தையோடு விளையாட அழைக்கின்றபோது இன்சொல், வேறுபாடு, கொடை, ஒறுப்பு (சாம, பேத, தான, தாண்டம்) ஆகிய நான்கு வகையால் அழைப்பதாகப் பாடல்கள் அமைய வேண்டும் என்னும் மரபேயாகும். இவ்வாறு அழைக்கின்றபோது, பாட்டுடைத் தலைவர்க்கும், சந்திரனுக்கும் உள்ள ஒப்புமையைச் சிலேடை அமையப்பாடுவதுண்டு. பாட்டுடைத் தலைவரினும் சந்திரனுக்கு இழிவு தோன்ற பாடுதலும், ஆடவந்தால் சந்திரன் நன்மை அடையமுடியும் எனப் பாடுதலும். வராவிடின் சந்திரனுக்கு இன்னல் தோன்றும் எனப் பாடுவதும் பிள்ளைத்தமிழ் இலக்கிய மரபுகளாக போற்றப்பெற்றுள்ளன.' (சா.வளவன், பிள்ளைத் தமிழின் தோற்றமும் வளர்ச்சியும், ப.
61)

நாட்டுப்புற இலக்கியம்

விடுகதை, குழந்தைகளுக்கு அறிவு புகட்டும் வாயிலாகச் செயல்பட்டு வருவதாலும், குழந்தைகளாலேயே பெரும்பாலும் பயின்று பாதுகாக்கப்பட்டு வருவதாலும், விடுகதைகளைக் குழந்தை இலக்கியத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளலாம். விடுகதைகள் நாட்டுப்புற வாய்மொழி இலக்கிய வகைகளுள் ஒன்றாக இருந்து வருகின்றது. செவி வழியாகப் பரவுவதே இதன் பண்பாகும். விவரித்த தன்மைக்கு விடை காண்பதே இதன்செயல்பாடாகும். சிறுவர் ஒருவருடன் ஒருவர் விளையாடும்போது விடுகதை கூறி விளையாடிக் கொள்வது அக்கால வழக்காகும்.

விடுகதையின் வகைகளுள் ஒன்றாக சொல்விளையாட்டு பயின்று வருகின்றது. ஒரு சொல் அல்லது அதன் பகுதி பற்றிய குறிப்பைக் கொண்டு ஊகித்துக் காண முயலும் விளையாட்டே சொல்விளையாட்டு. ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பொருளைக் குறிக்க, இணைத்துப் பார்க்கும்போது முழுமையான விடையினை ஊகித்தறிய முடியும், சான்றாக,

'முதலெழுத்தை நீக்கிவிட்டால்
மன்னன் பெயராம்
நடுவெழுத்தை நீக்கிவிட்டால்
நல்லதொரு மிருகமாம்
கடையெழுத்தை நீக்கிவிட்டால்
உள்ளாக மயக்கம்தரும்
மூன்றெழுத்தைக் கூட்டிவிட்டால்


புண்ணிய நகரமாகும். (விடை: மதுரை)' (சு.சக்திவேல், நாட்டுப்புறவியல், ப.
86)

இதில் மன்னன் பெயர் துரை என்ற பெயரைக் குறிக்கும். மிருகம் என்பது மரை (மான்) என்ற விலங்கினத்தைக் குறிக்கும். மயக்கம் தருவது என்பது மது என்பதாகும். முழுப்பெயர் பாண்டிய மன்னன் ஆட்சி செய்த மதுரை நகரமாகும்.

இக்கால இலக்கியம்

இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில் கீழ்வரும் பாடல்கள் அமைகின்றன.

'ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்'
(பூவண்ணன், குழந்தை இலக்கிய வரலாறு, ப.
13)

என்று வள்ளியப்பா கூறுவதாக பூவண்ணன் குறிப்பிடுகின்றார். இதே கருத்தை வலியுறுத்தி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் 'இன்று சிறுவர்கள் நீங்கள் இனி இந்த நாட்டை ஆளப்பிறந்தீர்' என்று கூறுகிறார்.

அகராதி

'பிறப்பிற்கும் பருவவயதிற்கும் இடைப்பட்ட வயதினை
உடையவர்களைச் சிறுவர்கள்'
(The New Lexicon Webeter’s Dictionary of the English Language, P. 170)  என்று லெக்சிகன் அகராதியும்
'வயது வந்த நிலையை அடையும்முன் இருபாலரும் உள்ள வயதைச் 'சிறுவா'; என்று த.ஆக்ஸ்போர்டு ரெபரென்ஸ் அகராதியும்'
; ( Suean Le Rouxced, The Oxford reference Dictionary, P. 152)

'சைல்டு (Child)  என்பதற்குக் குழந்தை, சிறுவன், மகவு, மகன், மகள் என்று சிதம்பரனாதன் செட்டியாரால் வெளியிட்டுள்ள ஆங்கில – தமிழ் அகராதியும்' (அ.சிதம்பர நாதன் செட்டியார், ஆங்கில – தமிழ் அகராதி, ப. 175) பல்வேறு விதமாக சிறுவர் என்னும் சொல்லிற்கு விளக்கம் தந்துள்ளன.

நகைச்சுவை

உலகில் உள்ள உயிரினங்களில் சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனிதஇனம் தான். மனம் படைத்தவன் மனிதன். மனிதன் தனது ஆறாவது அறிவைப் பயன்படுத்தி பகுத்தறிந்ததன் வாயிலாகவே சிரிக்கவும் கற்றுக்கொண்டான். மனஅழுத்தத்தில் இருந்து விடைபெற்று மகிழ்ச்சி பெறுவதற்கான மருத்துவ சிகிச்சை நகைச்சுவை எனக் கூறினால் மிகையாகாது. நகைச்சுவையை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. நகைச்சுவை மனிதர்களிடம் பழகும்போது நல்ல நட்பு உருவாகும். எனவே நாளிதழ்களும் நகைச்சுவைத் துணுக்குகளைத் தந்து வாசகர்களை ஈர்க்கின்றன.

நாளிதழ்கள் கேளிச்சித்திரத்தில் ஒரு முக்கிய கருத்தை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த உணர்வுடன் உருவாக்குகின்றன. நகைச்சுவை மட்டும் உள்ள துணுக்குகளும் வெளிவருகின்றன. இத்தகைய நகைச்சுவைத் துணுக்குகள் அண்மைக் காலச் செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. சிறுவர்களுக்கான இதழ் 'சிறுவர் மணியில்' கடி என்ற பகுதியில் நகைச்சுவை இடம்பெற்றுள்ளன. இதில் சிறப்பான கடிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பெற்றுள்ளன. சான்றாக 'உங்க செல்போனை ஏன் பல்டாக்டர் கிட்ட காட்டறீங்க? ப்ளுடூத் இருக்கான்னு செக் பண்ணத்தான்' (சிறுவர்மணி,
10.12.2007)

கட்டுரை

மாணவர்களுக்கு உபயோகமுள்ள நற்பண்புகளை வளர்க்கக் கூடிய வகையில். உண்மையான செய்தியைத் தகுந்த ஆதாரத்துடன் வரைபடத்தின் துணை கொண்டு, அனைத்து கோணங்களிலும் அறிவு பூர்வமாகவும், நுட்பமாகவும், ஆராய்ந்து சரியான மொழிநடையில் கருத்துக்களை வழங்குவது கட்டுரையாகும். சான்றாக,

சிறுவர் மலரில் 'ஒழுக்கத்தால் உயர்ந்த கன்பூசியஸ்' என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளன.

'சீனா என்றதும் உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவர் நினைவுக்கு வருவது போல், சீனாவின் வழிகாட்டியும் தத்துவ மேதையுமான கன்பூசியஸ் பெயரும் நினைவுக்கு வர வேண்டும். மக்கள் தொகைப் பிரச்சினையால் சீனா திணறினாலும் அவர்களின் முன்னேற்றத்துக்கு கன்பூசியஸின் தத்துவமும் ஒரு காரணம். அவர் மக்களுக்கு ஒழுக்க நெறியையும் உயர்ந்த பண்புகளையும் கற்றுக்கொடுத்தவர். அவர் ஒழுக்கத்துடனுடம் வாழ்ந்தவர் அவர் மறைந்தாலும் அவருடைய ஒழுக்க நெறியால் வாழ்கிறார். ஒழுக்கம் உயிரைவிட மேலானது, ஒழுக்கமே வெற்றியைத் தரும் என்று போதித்த கன்பூசியஸின் வாழ்க்கை வரலாறு சிறுவர்களுக்கு ஒரு வாழிகாட்டியாக அமைகின்றது' (சிறுவர்மணி,
08.12.2003)

இவ்வாறு சிறுவர் இதழ்கள் பொழுதுபோக்குச் சாதனமாக மட்டுமல்லாமல், பொது செய்திகளை இருந்த இடத்தில் இருந்தே அறிந்து கொள்வதற்கும், சிறுவர்கள் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும் நேரத்தை வீணடிக்காமல் உபயோகமான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கும் உறுதுணையாக அமைகின்றன. ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ள நூல்களில் சிறுவர்களின் இளமைக்காலம் பற்றிய தகவல்கள் பரவலாகக் காணப்படுகின்றன. மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைமாந்தர்கள் அரிதிப்பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டில் வாழ்பவர்களே, வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் சிறுவர்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் இப்பகுதியில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

இளமைக் காலச் சிக்கல்கள்

இளையவர்கள் என்றாலே இன்பம் நிறைந்தவர்கள். துன்பத்தின் நிலை என்னவென்று அறியாதவர்கள். இவர்கள் வெண்மை உள்ளமும், விளையாட்டு குணமும் படைத்தவர்கள். கள்ளங்கபடமில்லாத தன்மையைப் கொண்டிருப்பவர்கள். இப்பருவம் அன்பிற்காகவும், அரவணைப்பிற்காகவும் மட்டும் ஏங்கும் பருவம் என்பது இயற்கை ரீதியான உண்மை. ஆனால் இக்குணாதிசியங்களில் பிறந்த பெண் குழந்தைகள் தங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றும் அவலநிலையை ஆசிரியர் தன்னுடைய கதைகளின் வாயிலாக எடுத்தியம்பியுள்ளார்.

சிறுமிகள் அனுபவிக்கும் சிக்கல்கள் பின்வருமாறு உரைக்கப்பட்டுள்ளன...

  • குழந்தைத் தொழிலாளர் நிலை

  • காலத்தின் மாற்றம்

  • தந்தையின் மதுப்பழக்கம்

  • பாலியல் ரீதியான இன்னல்கள்

  • கல்வி வசதியின்மை

  • பாலின வேறுபாடு

பாதுகாப்பின்மை

உலகத்தைப் புரிந்து கொள்வதற்குத் தெரிந்த கொள்ளும் முன்னரே உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகிய அப்பாவிச் சிறுமிகளின் அவலத்தை வெளிக்கொணரும் விதமாக, சிலகதைகளில் குழந்தைத்தொழிலாளராகச் சிறுவர்களைக் காண்பித்துள்ளார்.

குழந்தைத் தொழிலாளர் உருவாவதற்கான காரணங்கள்

குழந்தைத்தொழிலாளர் உருவாவதற்கான முதன்மையான காரணம் வறுமை தான். இதனால் வீடுகளில் பெற்றோர்களுக்கு உதவியாக பணியில் ஈடுபடுவதும், உயிர் வாழ்வதற்காக வெளியிடங்களில் வேலை செய்வதும் குழந்தைத்தொழில் ஆகும். வறுமையின் காரணமாக கல்வியுரிமை மறுக்கப்பட்டு திறன் வளர்ப்புஉரிமை இல்லாமல் போகின்றது. உழைத்து உழைத்துச் சிறுவர்களின் உடற்கூறு வளர்ச்சி இல்லாதத் தன்மை ஏற்படுகின்றது.

பிற காரணங்களாவன,


'குடும்பக் கடன்சுமை, படிப்பறிவில்லாத பெற்றோர், காலச்சார ரீதியில் பணிகளில் குழந்தையின் பங்கேற்பாக எதிர்பார்க்கப்படுவது, குடும்பத்தில் அதிகப்படியான குழந்தைகள், இருப்பிடமின்மை, சூழலுக்கு ஏற்புடைமை இல்லாத தரமற்ற கல்வி போன்ற காரணங்களாலும் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகின்றனர். நாட்டின் முறைச்சாரா பொருளாதாரம் பெரும்பாலும் குழந்தை உழைப்பைத் தான் உள்ளடக்கியுள்ளது' (டெக்கான் கிரானிக்கள், மனித உரிமைகளுக்கான குழந்தைகளின் குரல் இதழ்,
13.02.2008.) என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தந்தையின் மதுப்பழக்கம்

ஒரு குடும்பத்தின் வருவாயைப் பெருக்குவதும், வருமானம் இல்லாமல் குடும்பத்தை வறுமையில் தவிக்கவிடுவதும் அக்குடும்பத்தலைவனையேச் சேரும். வீட்டின் தலைமையாக செயல்படுபவர் தந்தை. இத்தகைய நிலையில் தந்தை என்பவர் மனைவி குழந்தைகளைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமால், நண்பர்களுடன் இணைந்து மது அருந்துவதையே வாழ்க்கையாகக் கொண்டிருப்பின் அவ்வீட்டு நிலை எத்தகைய பாதிப்பை அடையும் என்பதை 'அழகுமாயம்' கதை எடுத்துரைக்கின்றது.

'அழகுமாயம்' கதையில் இசக்கியின் (சிறுமி) தந்தை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார். தான் சம்பாதிக்கும் வருவாயை நண்பர்களுடன் சேர்ந்து குடித்தே செலவளிக்கிறார். இதனால் குடும்பம்வறுமை நிலையை அடைகின்றது. அதுசமயம் ஊர்க்கோவில் திருவிழா ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. கரும்புக்கட்டு, மிட்டாய்கடை என ஊர் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப் படுகின்றது. இசக்கி இவற்றை எல்லாம் கண்டு உள்ளம் பூரிக்கிறாள். சிறுமி பருவத்திற்கே உரிய இன்பத்தில் திளைக்கிறாள். தந்தையிடம் சென்று 'பத்தரகாளியாத்தா திருவிழா வருதுல்N;ல? கரும்புக்கட்டு எடுக்கணும்லேய்யா? துரும்புக்கே துப்புல்லே, கரும்புக்கட்டுக்கு எங்க போறது?' எனக் கூறுகின்றான்.

வீட்டின் பொறுப்பை ஏற்கும் தந்தையே பொறுப்பற்று செயல்படுவதினால் இசக்கி தன்னுடைய குழந்தைப் பருவத்திற்கு உரிய இயல்பான ஆசையைக்கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாதவளாய் இருக்கிறாள். பிள்ளைகள் பெற்றோர்களிடம் சிறு வயது பருவத்தில் என்ன எதிர்பார்ப்பார்கள்? தான் கேட்கும் திண்பண்டங்கள் வாங்கித்தர வேண்டும் ஆசைப்படுகின்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கி விளையாடி மகிழவேண்டும் என்றுதானே எண்ணுவார்கள்.

அவர்கள் எண்ணத்தில் பிழையில்லை. அவர்களின் விருப்பங்கள் நியாயமானது. எனினும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததினால் இச்சிறிய ஆசை கூட நிராசையாகிவிடுகின்றது. இந்நிலை பல குடும்பங்களில் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைவது நம்நாட்டில் பெருகி வரும் மதுக்கடைகள். அவற்றிற்கு அடிமையாக இருக்கும் மனிதர்களே ஆவர். இன்றைய சமுதாயத்தில் நாகரீக வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைவது மனதிற்குள் மகிழ்ச்சியைத் தந்திருப்பினும் நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு மாற்றம்பெற்று மேலைநாடுளின் கலாச்சாரம் மிகுதியான அளவில் பின்பற்றப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது.

உணவு வகைகள், ஆடை அலங்காரப் பொருட்கள், பழக்க வழக்கம் என அனைத்தும் அந்நிய நாட்டு கலாச்சாரத்தின் மீது கொண்ட மோகத்தினால் மாறிக்கொண்டே வருகின்றது. அவர்களைப்போல் அன்றாடம் மது அருந்துவதும் இன்று ஒரு பழக்கமாகிவிட்டது. அன்றைய கால நடைமுறையில் விழாக் காலங்களில் மட்டும் ஆண்கள் மது அருந்துவது வழக்கமாக இருந்தது. இன்றைய நிலை அப்படியில்லை. மது அருந்துவதை கௌரவமாகக் கருதுகின்றனர். உயர்ந்த விலை வகையைச் சார்ந்த மதுபானம் அருந்துவதில் செல்வந்தர்கள் பெருமை கொள்கின்றனர்.

அன்றைய காலகட்டங்களில் மதுவை ஒழிக்கவேண்டும் என்பதற்காக தென்னை, பனை மரங்களை வெட்டினர். அதனால் ஓரளவிற்கு மது ஒழிந்தது. இன்றளவில் மது உற்பத்தி மரங்களை ஒருபுறம் வெட்டினாலும், மற்றொருபுறம் 'டாஸ்மாக்'
(Tasmac)  என்ற பெயரில் மதுபானக்கடைகள் பல்கிப் பெருகிக் காணப்படுகின்றன. அரசும் இதற்கு அங்கீகாரம் அளித்து வருகின்றது. மக்களின் வேலை வாய்பிற்காக மதுபானக் கடைகள் திறக்கப்பட்டாலும், வேலை வாய்ப்புப் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைவு. குடிக்கு அடிமையாக இருக்கும் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கின்றது. மக்களின் நலன் காக்க வேண்டிய அரசே, மக்களின் வாழ்க்கை பாதிப்பதற்குக் காரணமாக இருப்பது மிகவும் வருந்தத்தக்க செயலாக இருக்கின்றது. நம் நாட்டின் ஏராளமான குடும்பங்கள் வறுமை நிலை அடைவதற்கும்.

நம் நாட்டுப் பெண்கள் இளம் வயதிலேயே விதவை நிலையில் இருப்பதற்கும், மதுப்பழக்கமே முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. எனவே, அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்துவதில் அக்கறை கொள்ளுதல் வேண்டும். இசக்கியின் தந்தையைப்போன்று குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தைகள் சமூகத்தில் பெரும்பான்மையான அளவில் பல்கிப்பெருகிக் காணப்படுகின்றனர். இவ்வாறு முற்றிலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளவர்கள் கல்வியறிவற்றவர்களாகவும், பொருளாதார வசதி குறைந்த கூலி வேலை செய்து பிழைப்பவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் கடுமையாக உழைப்பதனால், உடல் வலியைப் போக்கும் மருந்தாக எண்ணி மதுவை அருந்துகின்றனர். அப்பழக்கமே அவர்களை அடிமையாக்கி விடுகிறது. மனைவி குழந்தைகளைப்பற்றிய அக்கறையின்மைக்கு உந்துதலாகவும் அமைகிறது. இதனால் குழந்தைகளின் கல்வியைப் பற்றிச் சிந்திக்காமல் சிறுவயதிலேயே வேலையில் ஈடுபடுத்துகின்றனர்.

பாலியல்

'பாலியல் என்னும் சொல் ஆண், பெண் பகுப்பைக் குறிக்கப் பயன்படுகிறது. அச்சொல் ஆங்கிலத்தில் 'செக்ஸ்' என்னும் சொல்லாக விளங்குகிறது. அச்சொல்லுக்குத் தமிழ் அகராதியில் பால் வேறுபாடு, பால் வேறுபாட்டுத்தன்மை. பால் வேறுபாட்டுணர்வு என்னும் பொருள்களைத் தருகின்றன'( க.சிவகணேசன், தி.ஜானகிராமன் படைப்புகளில் பாலியல் சிக்கல்கள், ப.
75)

பாலுறவு

ஆண், பெண் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, இருவரின் விருப்பத்துடன் உடல் மற்றும் உள்ளம் ரீதியிலான உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் உறவுமுறையே பாலுறவு என அழைக்கப்படுகின்றது. இது மனித வரலாற்றின் இயற்கையான நிகழ்வாகும். ஒரு ஆண் பெண்ணின் மீது வைத்திருக்கும் அகத்துணர்வு காதலாகவும், காதலே கனிந்து காமத்தின் உணர்வு மிகுந்து புறம்சார்ந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கையில் பாலுறவாகவும் கூறப்படுகின்றது. இவ்வுறவு முறையில் ஆண், பெண் இருவரில் ஒருவருக்கு விருப்பம் இல்லாமல் உறவுமுறை தோன்றும் பொழுது, அங்கு வன்முறை உருவெடுக்கின்றது. மிகுதியான அளவில் பெண்ணின் விருப்பமின்றியே இப்பாலியல் வன்முறை நடைபெற்றுவருகின்றது.

இது கன்னிப்பெண்களுக்கு மட்டும் நிகழ்வதில்லை. பருவம் எய்தாத சிறுமிகளுக்கும் நிகழ்ந்து வருகின்றது என்பதை ஆட்டுக் கம்பும் பூ மொட்டும், முற்றுகை போன்ற கதைகள் எடுத்துரைக்கின்றன.

பாலியல் ரீதியான இன்னல்கள்

'ஆட்டுக் கம்பும் பூ மொட்டும்' கதையில் செந்தட்டியின் தந்தை ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். ஆடு மேய்க்கச் சென்ற இடத்தில் இரத்தம் கக்கி இறந்துவிடுகிறார். அதன் பிறகு தாய் மட்டும் உழைத்து குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலையில், செந்தட்டி ஆடுகளை மேய்க்கச் செல்கிறாள். ஆட்கள் யாருமற்ற வனத்தில் தனக்குத் துணையாகவும் ஆடுகளை விரட்டுவதற்கு உதவியாகவும் மாரிமுத்து (வாலிபன்) இருக்கிறான். என மனதிற்குள் மகிழ்கிறாள். அவனே செந்தட்டிக்குப் பகைவனாக மாறுகிறான்.

பாலியல் இன்னல்கள் அனுபவித்த ஒவ்வொரு பெண்ணும் பாலியலுக்குக் காரணமானவர்களைப் பற்றிய உண்மையை எடுத்துக்கூறி, அவர்களுக்குக் கடுமையான அளவில் பாடம் புகட்டுதல் அவசியம். பெண் பேதை, அவளை விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்ட ஆண்களுக்கு, பெண் தைரியமானவள் அவளிடம் நெருங்கினால் ஆபத்து என்னும் சிந்தனை வருதல் வேண்டும். அப்பொழுதே பெண்கள் பாலியல் இன்னல்களிலிருந்து விடுபடமுடியும். அறியாமையால் தவறு செய்யும் ஆண்களை சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்தது அந்தக்காலம். விழிப்புணர்வு நிறைந்த சமுதாயத்தில் பேதமைக்கு விடைகொடுத்து வழி அனுப்பும் காலம் இது. இத்தகைய கருத்தை ஒத்தமைந்த செய்தி கீழ்வருமாறு.

'பெண்ணினமே
தண்ணிமையாய் அல்ல...
தணலினமாய் வாழ்வதுதான்
காலத்தின் நிர்பந்தம்.'
(அ.ஈஸ்டர்ராஜ், கவிஞர் பழநிபாரதியின் கவிதைகள் ஓர் ஆய்வு, ப.
7)
என்று கவிஞர் பழநிபாரதி பெண்கள் தண்ணிமையாய் இருந்து அணைக்கப்படுவதைக் காட்டிலும், நெருப்பாய் இருந்து எரிய வேண்டும் என தமது புரட்சிக் கருத்தை
முன்வைக்கிறார்.

பெண்கல்வி மறுப்பு

பெண்கல்வி மறுக்கப்படுவதை பெரியார் அவர்கள் கீழ்வருமாறு உரைக்கின்றார். 'பெண்களுக்குக் கற்றுக் கொடுப்பதெல்லாம் குழந்தை பராமரிப்பு, வீட்டுச் சமையல் வேலை முதலிய வேலைகளைச் செய்யத்தான் கற்றுக் கொடுப்பது வழக்கம். சிறு பருவம் முதலே அவர்களை ஆண் குழந்தைகளிடம் இருந்து பிரித்து வைக்கவேண்டுமென்று கருதுவதால் பொதுப்பள்ளிக் கூடங்களுக்கு அவர்களை அநேகமாய் அனுப்பவே மாட்டார்கள். மற்றபடி குழந்தைப் பருவத்தில் யாருக்காவது சங்கீதம், பாட்டு முதலியவை கற்றுக்கொடுக்கப் பட்டாலும் அவை அப்பெண்ணின் வாழ்க்கையில் சிறிதும் பயன்பட சந்தர்ப்பம் இருப்பதே கிடையாது' (மணிமேகலை அரசு, பெரியார் ஈ.வே.ரா. சிந்தனையில் பெண்கள், ப. 75.) என்று விளக்குகின்றார்.

இவர்தம் கூற்றின் வழி பெண்கள் கல்வி வீட்டைப் பற்றியும், பெண்களின் பல திறமைகள் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் இருந்த நிலை நன்கு வெளிப்படுகின்றது.

மேலும் இன்றைய நிலையில் பெண்கள் அதிகம் கல்வி கற்பதனாலும் இன்னல்கள் ஏற்படுகின்றன. உயர்கல்வி கற்பதனால் பெற்றோர்களுக்கு ஏற்படும் மிகுதியான செலவு. அதிகம் படித்துவிட்டதனாலும், வேலை வாய்ப்பில் உயர்ந்த பதவி வகிப்பதனாலும் வரன் தேடுவதில் ஏற்படுகின்ற சிக்கல். அதற்கு ஏற்றார் போல் அளிக்கப்படுகின்ற வரதட்சணை பிரச்சினை இவற்றிற்கெல்லாம் மேலாக திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியிடையே ஏற்படுகின்ற கருத்து வேற்றுமை. மனைவி கணவனைவிட அதிகமான அளவில் ஊதியம் பெறின் அதனால் உருவாகும் சிக்கல். என பல்வேறு இன்னல்களில் சிக்கித் தவிக்கின்றாள் என்பதை அறியலாம்.

தொகுப்புரை:

ஏழ்மைக் குடும்பங்களில் பிறந்து. வறுமையின் கொடுமையில் வளர்ந்த சிறுமிகள், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்கள் எவருமற்ற சூழலில். தாய் மட்டும் உழைக்கும் உழைப்பில் வாழ்ந்து அவரும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிறுமிகளே குடும்பச் சுமையை ஏற்று தீப்பெட்டி ஆலைகளில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலைக் காண்பிக்கப்பட்டுள்ளது. (அரும்பு, மைதானம்) மதுவின் பிடியில் மயங்கித் திளைக்கும் தந்தையின் தீயப்பழக்கத்தினால், அவர்களை நம்பி வாழும் குழந்தைகள் தங்களின் சிறிய சிறிய விருப்பங்களைக் கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாமல், ஏமாற்றமடையும் துன்பகரமான நிலை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (அழகுமாயம்) ஒரு சில கொடிய மனிதாபிமானமற்ற மனிதர்கள். குமரிப் பருவத்தினை அடையாத குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களை பாலியல் இன்னல்களுக்கும், பாலியல் வன்முறைக்கும் உட்படுத்தும் மிகக் கொடுமையான சூழல் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (முற்றுகை) கல்வி கற்கின்ற வயதில் காடுகரைகளில் ஆடு மேய்த்து வருந்தும் சிறுமிகள். அவர்களை ஒத்த வயதினையுடைய சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்து, நம்மால் கல்விச்சாலைக்குச் செல்ல இயலவில்லையே என ஏங்கித் தவிக்கும் நிலையும் சுட்டப்பட்டுள்ளது. (ஆட்டுக்கம்பும் பூ மொட்டும்) அன்னையின் ஆதரவின்றி தந்தை வளர்ப்பில் வளரும் குழந்தைகள் வீட்டு வேலைகள் செய்து வருந்துவதுடன். பணித்தளங்களில் அவர்களை அறியாமல் செய்யும் குற்றத்திற்குத் தண்டிக்கப்படும் துன்பமான செயலும் எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. (சிபிகள்) குடும்பத்தில் முதல் பெண்ணாக பிறக்கும் பெண்குழந்தைகள் தாய் வேலைக்குச் சென்றவுடன் வீட்டு வேலைகள் செய்தும், உடன்பிறந்தவர்களைக் கவனித்துக்கொண்டும், மாடுகள் மேய்த்தும் வருந்துவதுடன் இளம் வயதிலேயே முதிர்ச்சியான பருவத்தினை எய்துகின்றனர் என்பதும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா
149, ஹரிஸ்ரீகாடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர்
- 641 007
பேச:
098438 74545.